Published:Updated:

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

கால்நடைத.ஜெயகுமார், படங்கள்: பா.அருண்

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

'நான் பல வருஷமா ஆடுகள வளத்துட்டு வர்றேன். ஆனா, நோய்த்தாக்குதல், விற்பனைனு பெருசா விழிப்பு உணர்வு இல்லாததால சொல்லிக்கிற மாதிரி லாபம் கிடைக்கல. ஆனா, 'பசுமை விகடன்’ மூலமா பல பண்ணைக்காரங்களோட அனுபவங்களையும், கால்நடை மருத்துவர்களோட ஆலோசனைகளையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, என் பண்ணையில பல செலவுகளைக் குறைச்சு லாபத்தை அதிகமாக்கிட்டேன்' என்று சிலாகிக்கிறார், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்.

நமக்கு ஏற்றது நாட்டு ரகம்தான்!

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

துள்ளி விளையாடும் குட்டிகளைப் பிடித்து ஆடுகளிடம் பால் புகட்டிக் கொண்டிருந்த சுரேஷிடம் பேசினோம். 'வசதியில்லாததால பத்தாவதுக்கு மேல படிக்க முடியல. பொழப்புக்காக சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரம்பிச்சேன். அதோட ரெண்டு வெள்ளாட்டுக் குட்டிகளையும் வளர்த்துட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல ஆடு வளர்ப்புல ஆர்வம் அதிகமாச்சு. அதுபத்தி விசாரிச்சப்போ... அதுல நல்ல வருமானம் கிடைக்கும்னு சிலர் சொன்னாங்க. உடனே, போயர், சிரோஹினு வெளிமாநில ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனா, ஆடுகள் சரியா வளரலை. அதுகளை என்னால பராமரிக்கவும் முடியாததால... சேலம் கருப்பு, கன்னினு நாட்டு ரக ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். அதெல்லாம் நம்ம சீதோஷ்ண நிலையைத் தாங்கிட்டு நோய்கள் இல்லாம வளர்ந்துச்சு.

அறிவிப்பு கொடுத்த அறிமுகம்!

அந்த சமயத்துலதான் ஒரு நண்பர் மூலமா, 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுல தண்டோரா பகுதியில வெளியாகுற கால்நடை சம்பந்தமான பயிற்சிகள் எல்லாத்துலயும் கலந்துக்க ஆரம்பிச்சேன். அதன் மூலமாத்தான் காட்டுப்பாக்கம் கே.வி.கே தலைவர் குமரவேல், தஞ்சாவூர் மரபுசார் மூலிகை மருத்துவப் பேராசிரியர் டாக்டர்.புண்ணியமூர்த்தி மாதிரியான விஞ்ஞானிகளோட அறிமுகம் கிடைச்சது. என் பண்ணையில ஆடுகளுக்கு என்ன பிரச்னைனாலும் இவங்க ரெண்டு பேருக்கும் போன் பண்ணிடுவேன். அவங்க சொல்ற வைத்தியத்தைத்தான் செய்வேன். இப்போவரைக்கும் ஆடுகளுக்கு இயற்கை முறையிலதான் வைத்தியம் பாத்துட்டிருக்கேன். எப்போவாவதுதான் கால்நடை மருந்தகங்கள்ல வாங்குற மருந்தைப் பயன்படுத்துவேன்.

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

இப்போ சேலம் கருப்பு, கன்னி, செம்பொறை, காஞ்சிபுரம் நாட்டு ஆடுகள்னு மொத்தம் 35 ஆடுகள் இருக்கு. அதோட 4 கறவை மாடுகளும், ஒரு ஜோடி வண்டி மாடும் இருக்கு. கன்னி ரகத்துல ஆட்டுக்கிடா வெச்சிருக்கேன். இந்த கிடா மூலமா கிடைக்கிற குட்டிகள் ஆரோக்கியமாவும், நல்லா வளர்த்தியாவும் இருக்கு. ரெண்டு வயசுல 30 கிலோ எடை இருக்குற கிடாவைத்தான் பொலிக்குப் பயன்படுத்துவேன். வளர்ப்புக்கு ஆடு வாங்கும்போது 2 பல் (ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் வயது) போட்ட ஆடுகளாத்தான் பாத்து வாங்குவேன். குட்டிகளா வாங்குனா வேலைக்கு ஆகாது'' என்ற சுரேஷ், பராமரிப்பு முறைகள் பற்றி சொன்னார்.

செலவுகுறைந்த மேய்ச்சல் முறை!

'இப்போ ஆட்டுப் பண்ணைனாலே எல்லாரும் பரண் முறையைத்தான் தேர்ந்தெடுக்குறாங்க. ஆனா, அதுக்கு லட்சக்கணக்குல செலவாகும். நான் அந்த மாதிரி இல்லாம மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறேன். திருக்கழுக்குன்றம் கோவில் மலையும், ஏரிப் பகுதிகளும்தான் என்னோட ஆடுகளின் மேய்ச்சலுக்கான ஆதாரம். காலையில பத்தரை மணிக்கு கொட்டகையை விட்டு ஆடுகள் கிளம்பி... காட்டுல இருக்கிற பல வகையான இலைதழைகளை மேய்ஞ்சிட்டு சாயந்தரம் அஞ்சு மணிக்கு திரும்பிடும். பன்னெண்டு மணியில இருந்து ஒரு மணிக்குள்ள ஒரு முறை, மூன்றரை மணியில இருந்து நாலரை மணிக்குள்ள ஒரு முறைனு ரெண்டு தடவை தண்ணி வைப்போம். குட்டிகளை காலையிலயும் சாயந்திரமும் பால் குடிக்க விடுவோம். பால் பத்தாத குட்டிகளுக்கு பசும்பாலைக் காய்ச்சி ஆறவெச்சுக் கொடுப்போம். பிறந்து 45 நாள் வரைக்கும் இதுபோல பால் கொடுத்தால் போதும். அப்பறம் அதுகளே இலைதழைகளைச் சாப்பிட ஆரம்பிச்சிடும்.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள்ல கோமாரி தடுப்பூசி போட்டுடுவோம். ஒவ்வொரு சீஷனுக்கு வர்ற நோய்களுக்கும் ஏத்த தடுப்பூசிகளைச் சரியா போட்டுடுவோம். ஆடுகளுக்கு அடிக்கடி கழிச்சல் வரும். புழுக்கை, உருண்டை உருண்டையா இல்லாம பொதபொதனு சாணியைக் கரைச்ச மாதிரி வரும். அப்படி இருந்தா கழிச்சல்னு அர்த்தம். குடற்புழு இருந்தாத்தான் இப்படி வரும். முறையா குடற்புழு நீக்கம் பண்ணிட்டா கழிச்சல் வராது. ஆடுங்க சரியா மேயலைனா உடம்புக்கு ஏதோ கோளாறுனு அர்த்தம். அதைக் கண்டுபிடிச்சு வைத்தியம் பாத்துடுவேன். மூணு மாசத்துக்கு ஒரு தடவை உண்ணி, பேனுக்கான இயற்கை வைத்தியம் செஞ்சுடுவேன்' என்றவர், நிறைவாக வருமானம் பற்றிப் பேசினார்.

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

செலவு

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

10 ஆயிரம்! வரவு

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

3 லட்சம்!

'ரெண்டு வருஷத்துக்கு 3 ஈத்துங்குற கணக்குல குட்டிகள் கிடைக்கும். பெரும்பாலும் எட்டு மாசம் குட்டிகளை வளர்த்து விற்பனை செய்வேன். சராசரியா ஒரு குட்டி 3 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். போன தடவை 30 குட்டிகளை விற்பனை செய்தேன். அதுக்கு முந்தின முறை 28 குட்டிகளை விற்பனை செய்தேன். இப்போ 20 குட்டிகள் கொட்டகையில இருக்கு.

35 ஆடுகள்ல இருந்து 70 குட்டிகள் கிடைக்குது. ரெண்டு வருஷத்துக்கு மூணு ஈத்து மூலமா, 210 குட்டிகள் கிடைக்குது. வருஷத்துக்கு 100 குட்டிகள்னு வெச்சுக்கிட்டா... விற்பனை மூலமா 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஆட்டுக்கு, தடுப்பூசி, நாட்டு வைத்தியம், பராமரிப்புனு வருஷத்துக்கு 270 ரூபாய் செலவு ஆகும். 35 ஆடுகளுக்கும் சேர்த்து 9 ஆயிரத்து 450 ரூபாய் செலவு. எங்கப்பாவே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போறதால தீவனச் செலவு இல்ல. மூணு லட்ச ரூபாய்ல 10 ஆயிரம் ரூபாய் செலவு போக, மீதமுள்ள மொத்தப் பணமும் லாபம்தான். ஆனா, உழைப்பும், அனுபவமும் இருந்தால்தான் இந்த லாபம் கிடைக்கும்' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் சுரேஷ்.  

தொடர்புக்கு,

சுரேஷ், செல்போன்: 9578885728

நோய்களும் தீர்வுகளும்!

வெள்ளாடுகளுக்கு வரும் முக்கியமான நோய்களுக்கான, இயற்கை முறை வைத்தியம் பற்றி தஞ்சாவூர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மரபுசார் மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் புண்ணியமூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே...

ஆடு வளர்ப்பில் அற்புத லாபம்!

குடற்புழு நீக்கம்!

2 அங்குல நீள சோற்றுக் கற்றாழையில் முள்ளை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அப்படியே சாப்பிடக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளுக்கு ஓர் அங்குலம் போதுமானது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பேன், உண்ணி நீங்க!

50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து நசுக்கி... அதோடு நான்கு ஓமவள்ளி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, ஆட்டின் மேல் பூசி நன்கு காயவிட வேண்டும். பிறகு, தேங்காய் நாரால் பிரஷ் செய்து கழுவி விட வேண்டும். மழைக்காலம், ஈரப்பதமான சூழல்களில் இதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இந்த அளவு ஓர் ஆட்டுக்கானது.

வயிறு உப்புசம்!

வெற்றிலை-3, தரமான மிளகு-10, பெருங்காயம்-5 கிராம், இஞ்சி-50 கிராம், சீரகம் அரை ஸ்பூன் ஆகியவற்றை நன்றாக அரைத்து, நாட்டுச் சர்க்கரை-50 கிராம் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து... இரண்டு வேளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது ஓர் ஆட்டுக்கான அளவு.  

கோமாரி நோய்!

தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து... அதோடு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் தனியாகத் துருவி அரைத்த கலவையோடு சேர்த்து, 50 கிராம் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் வராமல் தடுக்க ஒரு முறை கொடுத்தால் போதுமானது. நோய் வந்து விட்டதென்றால் தொடர்ந்து 5 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.

சளித்தொல்லை!

துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி; ஆடாதொடா, தூதுவளை தலா ஒரு இலை; மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் ஆகியவற்றைக் அரைத்து... அதோடு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.

தொடர்புக்கு: டாக்டர்.புண்ணியமூர்த்தி, செல்போன்: 9842455833

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு