Published:Updated:

‘‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வளருது!’’

பலன் கொடுக்கும் பாரம்பர்ய ரகம்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஸ்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"இயற்கை விவசாயத்தை மட்டுமில்ல... விவசாயிகள் மத்தியில் புதிய தேடல், சுயசார்பு, தன்னம்பிக்கையையும் பசுமை விகடன் வளர்த்தெடுத்துக்கிட்டே இருக்கு. 'வேளாண் விரிவாக்கம்’கிற சொல்லை தமிழக வேளாண்துறை அதிகமா பயன்படுத்தினாலும், அந்தப் பணியை பசுமை விகடன் தீவிரமா செயல்படுத்திட்டு இருக்கு. எல்லாருமே நவீன நெல் ரகங்களை நோக்கி ஓடிட்டு இருந்த சமயத்துல, பசுமை விகடன்தான் பாரம்பர்ய நெல் ரகங்களை நோக்கி கவனத்தைத் திருப்பிவிட்டுச்சு. இதை பரவலாக்கினதோட மட்டுமில்லாம... வழக்கத்தில் இல்லாத, அக்கம்பக்கத்து விவசாயிகள் இதுவரை பார்க்காத பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிப்பிடிச்சு சாகுபடி செய்யணும்கிற உணர்வையும் ஏற்படுத்திக்கிட்டிருக்கு. இப்ப நான் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்குற பாரம்பர்ய நெல் ரகமான 'ராஜமுடி’, எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் காவிரி டெல்டாவுல சாகுபடி செஞ்சது இல்லை'' வார்த்தைக்கு வார்த்தை பசுமை விகடனுக்குப் பெருமை சேர்க்கிறார் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலூகா, சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ராஜேந்திரபாபு. ராஜமுடி என்கிற பாரம்பர்ய நெல் ரகத்தை வெற்றிகரமாக சாகுபடி செய்துவருவதன் மூலமாக, மற்ற விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துவருகிறார் இந்த ராஜேந்திரபாபு!

‘‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வளருது!’’

சுமார் 5 அடி உயரத்தில் செழிப்பாக ராஜமுடி ரக நெல் விளைந்து நிற்கும் தன் வயலில், மலர்ந்த முகத்தோடு நின்றபடி பேசத் தொடங்கினார் ராஜேந்திரபாபு.

ராஜா வீட்டு அரிசி!

''5 ஆண்டுகளா விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இது வண்டல் மண் பூமி. எனக்கு மொத்தம் 15 ஏக்கர் நிலம் இருக்கு. இந்த ஆண்டு சம்பா பருவத்துக்கு ஒரு ஏக்கர்ல ராஜமுடி, 4 ஏக்கர்ல சி.ஆர்-1009, 5 ஏக்கர்ல பாப்பட்லா, மீதி பரப்புல சொர்ணமசூரி இதையெல்லாம் சாகுபடி செஞ்சிருக்கேன்.

2012-ம் ஆண்டு கர்நாடாகாவுல நடைபெற்ற பாரதிய கிசான் சங்கத்தோட மாநாட்டுக்குப் போயிருந்தேன். அங்க, ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, விவசாயப் பொருட்கள் கடை போட்டிருந்தாங்க. அங்கதான் ராஜமுடி விதைநெல் 50 கிராம் கிடைச்சுது. கர்நாடகாவை ஆண்ட மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவங்க மட்டுமே இதைச் சாப்பிட்டாங்களாம். அதனாலதான் இப்படி பேர் வந்ததா அங்கவுள்ள விவசாயிகள் சொல்றாங்க. இது மருத்துவ குணம் நிறைஞ்சது. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடியது. அவல், புட்டு, கொழுக்கட்டை, சீடை, முறுக்கெல்லாம் செஞ்சு சாப்பிட்டா... அருமையா இருக்கும். இட்லி, வடகம், பழைய சாதத்துக்கும்கூட அற்புதமா இருக்கும்'' என்று இதன் பெருமை பேசிய ராஜேந்திரபாபு, சாகுபடி அனுபவத்தையும் பகிர்ந்தார்.

33 சென்ட், 490 கிலோ!

''எனக்குக் கிடைச்ச 50 கிராம் ராஜமுடி விதைநெல்லை, முதல்கட்டமா 3 சென்ட் பரப்புல சாகுபடி செஞ்சு, 18 கிலோ மகசூல் எடுத்தேன். போன ஆண்டு சம்பாவுல 33 சென்ட் நிலத்துல ஒற்றை நாற்று நடவு முறையில சாகுபடி செஞ்சேன். 490 கிலோ மகசூல் கிடைச்சுது. இதை அரிசியா விற்பனை செஞ்சா... குறைவான விலைதான் கிடைக்கும்கிறதால, பெரும்பகுதி நெல்லை அவலா மாத்தி, கிலோ 90 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். மீதியை அரிசியாக்கி, வீட்டுல பலகாரம் செய்றதுக்கு வெச்சுக்கிட்டோம்.

ராஜமுடி ரகத்தோட வயசு 135 நாள். கதிர்கள் வரத் தொடங்கிய பிறகு, தரையில இருந்து சுமார் ஒன்றரையடி உயரம் வரைக்கும் தண்டுப்பகுதியில கருஞ்சிகப்பு நிறம் தோன்றும். தண்டுகள் நல்லா திடமா இருக்கும். இதுக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமா தண்ணீர் கொடுத்தாலே போதும்.

15 நாட்கள் வரைக்கும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை, வெள்ளத்தைத் தாக்குப்பிடிக்கிறதோட... நோய், பூச்சித் தாக்குதலையும் சமாளிச்சு சிறப்பா வளருது. இதோட நெல், சன்னரகம். நெல், அரிசி ரெண்டுமே சிகப்பு நிறத்துல இருக்கும்.

‘‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வளருது!’’

செலவைக் குறைக்கும் நேரடி விதைப்பு!

இந்த ஆண்டு செலவைக் குறைக்கிறதுக்காக, நேரடி விதைப்பு முறையிலயே சாகுபடி செஞ்சுட்டேன். கடந்த ஆண்டைவிட வாளிப்பாகவும் திடமாவும் அதிகளவுல தூர்கள் வெடிச்சி, நோய், பூச்சித்தாக்குதல் இல்லாம வெற்றிகரமா விளைஞ்சி, இப்ப கதிர்கள் வந்துட்டு இருக்கு. பயிரோட வளர்ச்சியும் வேகமா இருக்கு. கடந்த ஆண்டு நடவு முறையில சாகுபடி செஞ்சப்ப களை அதிகமா இருந்துச்சு. இப்ப நேரடி விதைப்பு முறையில கொஞ்சம்கூட களைத் தொந்தரவே இல்லை.

இந்தப் பகுதிகள்ல நிலத்தடிநீர் உப்பா இருக்கிறதுனால, மழைநீரையும் ஆற்றுநீரையும் நம்பித்தான் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கோம். பாரம்பர்ய நெல் ரகங்களைப் பொறுத்தவரைக்கும் மழைப்பொழிவை எதிர்பார்த்து, நேரடி விதைப்பு செஞ்சுட்டு, அடுத்த, 40 நாட்களுக்கு பிறகு ஆத்துத்தண்ணியைப் பாய்ச்சினா... சிறப்பா இருக்கும்ங்கறது எங்களோட அனுபவம். இளம்பயிரா இருக்கும்போது, ஆத்துத்தண்ணியைப் பாய்ச்சினா, வயல்ல உள்ள சின்னச்சின்ன மேடு, பள்ளங்கள்ல கூட தண்ணீர் தேங்கி நின்னு பயிரை பாதிக்கும். மழைப்பொழிவு மூலமா வயலுக்கு தண்ணீர் கிடைச்சா, அது மண்ணுக்குள்ள இறங்கி இஞ்சிடும். இதுக்கு ஏற்ப திட்டமிட்டுதான் இந்த முறை ராஜமுடி நெல்லை நேரடி விதைப்பு செஞ்சேன். மூணாவது நாள் மழை பெய்துச்சு. அதுக்குப் பிறகு 10 நாள் கழிச்சி மறுபடியும் மழை. அடுத்த ஒரு மாசத்துக்கு மழையே இல்லை. ஆனாலும் கூட பயிர்  செழிப்பா வளர்ந்துடுச்சு. 42-ம் நாள் ஆத்துநீர் கிடைச்சுது. அதை பாய்ச்சினேன். பிறகு... காய்ச்சலும் பாய்ச்சலுமாக 15 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சிட்டு இருக்கேன். இப்ப பயிரோட வயசு 100 நாள் ஆகுது. இன்னும் 30, 40 நாட்கள்ல அறுவடைக்குத் தயாராகிடும்'' என்று சொன்ன ராஜேந்திரபாபு, தன்னுடைய சாகுபடித் தொழில்நுட்ப அனுபவத்தைப் பாடமாகத் தொகுத்து வழங்கினார்.

சாகுபடி இப்படித்தான்!

'2 சால் புழுதி உழவு ஓட்டி, ஏக்கருக்கு 2 டன் மாட்டு எரு போட்டு, மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும். அடுத்த சில நாட்களில் கண்டிப்பாக மழைபொழியும் என்பதற்கான அறிகுறிகளை, அப்போதைய தட்பவெப்ப நிலையை வைத்து ஓரளவு கணித்து 12 கிலோ ராஜமுடி நெல் விதையையும், ஒன்றரை கிலோ நரிப்பயறு விதையையும் ஒன்றாகக் கலந்து, வயல் முழுவதும் பரவலாகத் தெளிக்கவேண்டும். நரிப்பயறு தழைச்சத்தாகப் பயன் அளிக்கும். அடுத்த சில வாரங்களில் மீண்டும் மழைப்பொழிவு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். 42-ம் நாள் அரை லிட்டர் மீன் அமிலத்தோடு, அரை லிட்டர் தண்ணீர் கலந்து பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு துளை இட்டு வாய்மடையில் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 43-ம் நாள் 50 கிலோ செறிவூட்டப்பட்ட உரம் தெளிக்க வேண்டும். கதிர் வரும்வரை இதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை செறிவூட்டப்பட்ட உரம் 50 கிலோ தெளிக்க வேண்டும். 52 மற்றும் 72-ம் நாள் தலா 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசனநீரோடு கலந்துவிட வேண்டும்.

135-140 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராக இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 18 மூட்டை (60 கிலோ) ராஜமுடி நெல் மகசூலாகும். இதனை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, சணல் சாக்கில் 20 மணிநேரம் வைத்திருந்து, அதன் பிறகு, 3 மணி நேரம் நிழலில் உலர்த்தி, மெஷினில் கொடுத்து அரைத்தால்... 540 கிலோ அவல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு சராசரியாக 90 ரூபாய் வீதம் மொத்தம் 48,600 ரூபாய் விலை கிடைக்கும். செலவுபோக, சுமார் 30 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாகக் கையில் மிஞ்சும்’ என்றார்.

தொடர்புக்கு,

ராஜேந்திரபாபு, செல்போன்: 9976602006

செறிவூட்டப்பட்ட உரம்

50 கிலோ மாட்டு எருவோடு, தலா அரை லிட்டர் மீன் அமிலம், பஞ்சகவ்யா, கால் லிட்டர் திரவ நுண்ணுயிரி, 5 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ பாசிப்பயறு மாவு, 2 லிட்டர் பழக்கரைசல் இவற்றை ஒன்றாகக் கலந்து, 5 நாட்கள் நிழலில் வைக்க வேண்டும். தினமும் இதனை நன்கு கிளறிவிட வேண்டும். இதில் அதிகளவில் நுண்ணுயிரிகள் பெருகி இருக்கும். இதுதான் செறிவூட்டப்பட்ட உரம். இதை, 6ம் நாளில் இருந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இது, ஒரு ஏக்கர் நெற்பயிருக்குப் போதுமானதாக இருக்கும்.

பஞ்சகவ்யா, மீன் அமிலம், திரவ நுண்ணுயிரி உள்ளிட்டவற்றைத் தனித்தனியாகத் தெளித்தால் செலவு அதிகமாகும். மேலும் செறிவூட்டப்பட்ட உரமாகத் தயாரித்தால் வீரியம் அதிகமாகி, கூடுதல் பலன் கொடுக்கும் என்பது ராஜேந்திரபாபுவின் அனுபவப் பாடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு