Published:Updated:

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18

மீத்தேன் எமனை அழித்தொழிப்போம்..!போராட்டம்கு.ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே.குணசீலன்

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18

மீத்தேன் எமனை அழித்தொழிப்போம்..!போராட்டம்கு.ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே.குணசீலன்

Published:Updated:

"இந்த மண்ணையும் மக்களையும் காக்க, என் உயிரைக் கொடுத்தாவது மீத்தேன் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவேன்'' என்று சூளுரைத்தார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கனமழையிலும் கிராமம் கிராமமாகச் சென்று மீத்தேன் திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டார். கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தில் உருவெடுத்துக் கொண்டிருந்த மீத்தேன் எரிவாயுக் கிணற்றை, மக்களோடு இணைந்து அடித்து நொறுக்கி, சமாதி கட்டினார்.

2013 டிசம்பர், 29 அன்று தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் நம்மாழ்வார் ஐயாவை சந்தித்தேன்.

''மீத்தேனை எப்பாடுபட்டாவது விரட்டி அடிச்சுடணும்ய்யா. விடக்கூடாது''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வார்த்தைகள் மட்டும்தான் அன்று அவரிடம் இருந்து வந்தன. அடுத்த நாள் இரவு, அவர் இறந்த செய்தி என் நெஞ்சில் இடியாய் இறங்கியது. போராட்டக் களத்திலேயே உயிர்நீத்தார், தியாகச்செம்மல்.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18

அவர் தொடங்கிய மீத்தேன் எதிர்ப்பு யுத்தம், பல போராளிகளை உருவாக்கியிருக்கிறது. புதிய படைகளைக் கிளர்ந்தெழ வைத்திருக்கிறது. பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, டெல்டா புலிகள், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு, கடலூர் மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு உள்ளிட்ட இயக்கங்கள்...  என பல அமைப்புகள் களத்தில் சுழல்கின்றன. பல்வேறு அரசியல் இயக்கங்கள், விவசாயச் சங்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இத்தகையப் போராட்டங்களின் காரணமாக, 'தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ நிறுவனத்துக்கு மீத்தேன் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட உரிமம், மீண்டும் புதுப்பிக்கப்படாமல் விடப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. என்றாலும், தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

ஓ.என்.ஜி.சி கிணறுகள் அனைத்துமே மீத்தேன் கிணறுகள்தான்!

''மக்கள் எதிர்ப்பின் காரணமாக, வெளிப்படையாகச் செயல்பட வாய்ப்பில்லாத 'தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ நிறுவனம், பொதுத்துறை + தனியார்துறை=கூட்டாண்மை (PPP- PUBLIC PRIVATE PARTNERSHIP) என்ற பெயரில் மத்திய அரசு கடைபிடிக்கும் குறுக்குவழிக் கொள்கையைப் பயன்படுத்தி... ஒ.என்.ஜி.சி நிறுவனத்தோடு கூட்டுச்சேர்ந்து காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதற்கான பணிகள் நடக்கின்றன'' என்று அதிர வைக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

''கோனோக்கோபிலிஃப்ஸ் என்ற அமெரிக்க பெரு நிறுவனத்துடன் சேர்ந்து காவிரி டெல்டாவில் மீத்தேன் இருக்கும் இடங்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்துள்ளது ஒ.என்.ஜி.சி நிறுவனம். தற்போது, காவிரி டெல்டாவில் ஒ.என்.ஜி.சி அமைக்கக்கூடிய அனைத்து கிணறுகளுமே மீத்தேன் கிணறுகள்தான். இதுதவிர, தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் காவிரி டெல்டாவில் அனுமதி பெற்றுள்ள இடங்களில், அந்நிறுவனத்துடன் கைகோத்தும் ஒ.என்.ஜி.சி மீத்தேன் எடுக்கப் போகிறது'' என்று சொல்லும் ஜெயராமன், ''இவர்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், மீத்தேன் எமனை ஒழிக்கும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை'' என்று சூளுரைக்கிறார்.

ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கக் கூடாது தமிழக அரசு!

மீத்தேன் எதிர்ப்புக் கூட்டங்களில் உரையாற்றும், காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ''மீத்தேன் வாயு எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய, எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தமிழக அரசு. மூன்று மாதங்களில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், 16 மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆய்வு நடந்ததா என்றே தெரியவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படும்’ என அறிவித்தார், ஜெயலலிதா. காவிரி டெல்டா மக்களும் மகிழ்ச்சியில் திளைத்து, வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதற்கு நன்றிக்கடன் செலுத்தாமலே இருக்கிறது அ.தி.மு.க' என்று வருத்தப்படுகிறார்.

அதேசமயம், இதனால் சோர்ந்து உட்கார்ந்துவிடவில்லை மணியரசன். ''பணம், பதவி, புகழ் உள்ளிட்ட எந்த ஒரு ஆதாயத்துக்காகவும் தமிழ்நாட்டில் வாழும் எந்த ஒரு நபரும் மீத்தேன் திட்டத்துக்குத் துணை போய் விடக்கூடாது. வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஒதுங்கி இருக்கவும் கூடாது. மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு காவிரிப் பாசனப் பகுதியை நாம் பறிகொடுத்தால், நம்முடைய அடுத்தடுத்த தலைமுறைகள் நம்மை காறி உமிழும். 'நம் முன்னோர்கள் கோழைகளாகவும், முட்டாள்களாகவும் இருந்தார்கள்’ என தற்போதைய தமிழ்நாட்டு மக்களை இழிவாகத்தான் பார்ப்பார்கள், எதிர்கால தமிழ்நாட்டு மக்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. இதனைத் தடுத்து நிறுத்துவது, நம்முடைய தலையாயக் கடமை'' என்று பொங்கி வெடிக்கிறார்.

வலிமைமிக்க ஆயுதம்!

இத்தகையோரின் கைகளில் வலிமை மிக்க ஆயுதமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன, பசுமை விகடனில் இதுவரை வெளியான 'மீத்தேன் எமன்’ தொடரின் கட்டுரைகள் என்பது... என்னளவில் பெரும்திருப்தியைக் கொடுக்கிறது. ஆம், இவர்களின் போராட்டத்துக்கு அணில் பங்காக அமைந்திருக்கின்றது இந்த முயற்சி!

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18

மீத்தேன் எடுக்க ஆரம்பித்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதற்கு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட கிராமங்களிலேயே உயிர்சாட்சிகளாக இருப்பவர்களை முதன்முதலாக வெளியுலகுக்குக் கொண்டு வந்ததே இந்தத் தொடர்தான். புதைந்து கிடந்த அவலங்களையும், துயரங்களையும், திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவங்களையும் படம் பிடித்துக் காட்டியதும் இந்தத் தொடர்தான்.

'மீத்தேன் திட்டத்தை ஆதரிக்கிறார்களா... எதிர்க்கிறார்களா?’ என்றே புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அமைதி காத்த கம்யூனிஸ்டுகளை உலுக்கி எடுத்ததும், இந்தத் தொடர்தான். இதையடுத்து கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள்ளேயே சூடான விவாதங்கள் அனல் பறந்தன. இப்போது இவர்களும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.இன்னும் பல அரசியல் அமைப்புகளும் களத்தில் நிற்கின்றன.தற்போது பொங்கிக் கிளம்பியிருக்கும் இந்த எதிர்ப்பே... மீத்தேன் எமனை ஆட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் அனைத்துக் கட்சிகளுமே கைகோத்தால்?

கழகங்கள், காங்கிரஸ்கள், கம்யூனிஸ்டுகள், காவிகள், தலித் இயக்கங்கள்... என்று அரசியல் ரீதியில் பலவாகப் பிரிந்துகிடக்கும் தோழர்களே! அடிப்படையில் நீங்கள் அனைவருமே மக்கள்தானே!

அரசியலை விட வாழ்க்கை முக்கியம், வாழ்வதற்கு பூமி முக்கியம்! அதற்காகவாவது அரசியல் 'கரை’களைத் தகர்த்து இந்த டெல்டா பூமியைக் காப்பாற்ற கரம் கோப்பீர்களா?!

முற்றும்

குலைநடுங்க வைக்கும் கீழவாஞ்சூர்... எல்லாம் கரி மயம்!

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18

இங்கே நிலக்கரி தோண்டப்பட்டால், நிலைமை என்னவாக இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணம்... கீழவாஞ்சூரின் தற்போதைய சோகம்தான்!

நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, கீழவாஞ்சூர். இது, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அடங்கிய பகுதி. இக்கிராமத்துக்கு அருகே உள்ள துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சுற்றியுள்ள கிராமங்களும் பெரும்துயரத்தில் சிக்கித் தவிக்கின்றன. வயல், வாய்க்கால், சாலை, தெரு என எங்கு பார்த்தாலும் நிலக்கரித் துகள்கள்தான் வியாபித்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான பனை மரங்கள் மொட்டையாகக் காட்சி அளிக்கின்றன. மழைக்காலங்களில், குடியிருப்புப் பகுதிகளில் கருப்பாறு ஓடுகிறது.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா 18

''நாங்க சாப்பிடுற சாப்பாட்டுலகூட கரித்தூள் படிஞ்சிடுது. என்னதான் மூடி வெச்சாலும், சாப்பிடும்போது திறந்துதானே வைக்கணும். துணி துவைச்சிக் காயப்போட முடியாது. நாங்க துப்புற எச்சில் கூட கரியாத்தான் வெளிய வருது. ஆடுமாடுகள் நீர்நிலைகள்ல தண்ணீர் குடிக்க முடியல, மேய்ச்சலுக்குப் போக முடியல. எல்லாமே கரியா கிடக்கு. எங்க கிராமத்துல பெரும்பாலானவங்களுக்கு சுவாச நோய்கள் உண்டாகிடுச்சு. குறிப்பா, குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க.

இதையெல்லாம்விட பெரிய கொடுமை... நிலக்கடலை செழிப்பா விளைஞ்ச இந்த மண், இப்ப கரித்தூள் படியுறதுனால பாழாகிக் கிடக்கு. ஊர் பெண்கள் பலரும் துப்புரவுத் தொழிலாளர்களா வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. ஆண்கள், சுமை தூக்கும் தொழிலாளிகளா மாறிட்டாங்க.'' என்று சொன்ன பாலாஜி, முருங்கை மரத்தில் இருந்து கீரையைப் பறித்துக் காட்டினார். அதில் பச்சைநிறத்தை கொஞ்சமும் பார்க்க முடியவில்லை.

நிலக்கரி இறக்குமதிக்கே இப்படியென்றால்... காவிரி டெல்டா முழுவதும் பரவலாக நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்டப்பட்டால்?