Published:Updated:

தினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி!

மாற்றம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. 'பசுமை விகடன்’, கடந்த எட்டு ஆண்டு காலமாக இதைத்தான் செய்து வருகிறது! பசுமை விகடன் மூலமாக சம்பங்கி விவசாயத்தில் கால்பதித்த ஒரு விவசாயி, 'மீன்பிடிக்கக் கற்றுக்கொடு’ எனும் ஒப்பற்ற கோட்பாட்டை தானும் கையில் எடுக்க, சக விவசாயிகள் சிலரும் தற்போது சம்பங்கி விவசாயிகளாக தெம்போடு நடைபோடுகின்றனர்!

மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் தரும் சம்பங்கியையும் சிறிது இடத்தில் நடவு செய்வார்கள். பெரும்பாலும் ரசாயன முறையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த சம்பங்கியை, இயற்கை முறையில் விளைவித்து அதிக வருமானம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர், திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து.

மென்பொருள் பொறியாளரான மருதமுத்து, பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். நவம்பர் 25, 2011-ம் தேதியிட்ட இதழில் 'சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி’ என்ற தலைப்பில் இவரைப் பற்றிய கட்டுரை வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இவரது தோட்டத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். இப்படி வந்தவர்களில் பலர், இன்றைக்கு வெற்றிகரமான சம்பங்கி சாகுபடியாளர்களாக விளங்குகிறார்கள். இயற்கை வழி சம்பங்கி சாகுபடிப் பரப்பு, பல நூறு ஏக்கர்களுக்கு விரிவடைந்திருக்கிறது.

தினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி!

கட்டுரை வெளியாகி மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில்... 'இப்போது எப்படி இருக்கிறது மருதமுத்துவின் சம்பங்கி சாகுபடி?’ என்ற கேள்வியோடு மீண்டும் அவரைச் சந்தித்தோம். நாம் முதலில் சென்றபோது, இருந்ததை விட அதிகப்பரப்பில் பூத்துக்குலுங்கி வரவேற்றது, சம்பங்கி.

''சாஃப்ட்வேர் இன்ஜினீயர்ங்கிறதைவிட, 'சம்பங்கி விவசாயி’னுதான் பெருமையா சொல்வேன். இயற்கை மேலயும், விவசாயத்துலயும் இருந்த ஆர்வம் காரணமா, நல்ல லாபம் தந்துக்கிட்டு இருந்த தொழிலை விட்டு, சென்னையில் இருந்து திண்டுக்கல் வந்தேன். 'நிரந்தர வருமானத்துக்கு என்ன பண்றது?’னு யோசிச்சப்ப, கை பிடிச்சு வழிகாட்டுனது, பசுமை விகடன்தான். சம்பங்கி சாகுபடி தொடர்பான ஒரு கட்டுரையை வாசிச்சிட்டு, அந்த விவசாயியை நேர்ல பார்த்து பேசுறவரைக்கும் சம்பங்கி பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

விவசாயிகளுக்கு இலவச ஆலோசனை!

அதுக்குப்பிறகு, தமிழ்நாட்டுல இருக்கற பல சம்பங்கி விவசாயிகளைச் சந்திச்சு என்னோட பல சந்தேகங் களைத் தீர்த்துக்கிட்டேன். விவசாயத்துல இறங்கும்போது, எதுவுமே தெரியாது. நானும், என் மனைவியும் பசுமை விகடன்ல படிச்ச தொழில்நுட்பங்கள் இருக்கற தைரியத்துலதான் இதுல இறங்கினோம். ஆரம்பத்துல 60 சென்ட்ல ஆண்டுக்கு ரெண்டரை லட்சம் லாபம் கிடைச்சதை எங்களாலயே நம்ப முடியல.

2011-ம் வருஷம் எங்களப் பத்தின கட்டுரை பசுமை விகடன்ல வெளியான பிறகு தினமும் நிறைய விவசாயிகள் தோட்டம் தேடி வந்து சந்தேகம் கேட்க ஆரம்பிச்சாங்க. 'நாம ஒவ்வொரு தகவலுக்காக எப்படி அலைஞ்சிருக்கோம்... அது மாதிரி எந்த விவசாயியும் கஷ்டப்படக் கூடாது’னு முடிவு செஞ்சு, அத்தனை விவசாயிகளுக்கும் விளக்கம் சொல்றதோட, பொருளாதார வசதியில்லாத சில விவசாயிகளுக்கு விதைக்கிழங்குகளை இலவசமாகவே கொடுத்து விட்டோம். இன்னிக்குவரைக்கும் விவசாயிகள் தோட்டத்துக்கு வந்துக்கிட்டுதான் இருக்காங்க'' என்று பூரிப்புடன் சொன்ன மருதமுத்துவை இடைமறித்துப் பேசினார், அவருடைய மனைவி வாசுகி.  

பலர் வாழ்வை மாற்றிய சம்பங்கி!

தினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி!

''சம்பங்கியில நாங்க செஞ்ச சின்னச்சின்ன தவறுகளை அனுபவத்துல உணர்ந்து சரி செஞ்சுக்கிட்டதால, இப்ப சம்பங்கி விவசாயத்தைப் பத்தின முழுமையான புரிதல் வந்திருக்கு. பல்வேறு சோதனைகளை செஞ்சு பார்த்ததுல, மகசூல் இழப்பு, பொருளாதார நஷ்டம் எல்லாத்தையும் நல்லாவே புரிஞ்சுக்கிட்டோம். நாங்க தெரிஞ்சுக்கிட்ட விஷயத்தை விவசாயிகளுக்குச் சொல்றப்ப அவங்க அடையுற சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எங்களோட ஆலோசனையோட சம்பங்கி விவசாயம் செஞ்சு, மாசா மாசம் கணிசமான வருமானம் பாத்துட்டு இருக்கற விவசாயிகள் நூத்துக்கும் மேல இருப்பாங்க'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

இந்தத் தம்பதியின் ஆலோசனை பெற்று, வெற்றி நடைபோடும் சில விவசாயிகளைத் தேடிப் பயணித்தோம்.  

தினமும் பணம்!

நத்தம் அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன்...

''பரம்பரையா விவசாயம்தான். மா, மிளகாய், கொய்யானு வருஷம் முழுக்க விவசாயம் நடந்துட்டே இருக்கும். அப்பதான் மருதுமுத்து தோட்டத்தைப் பாத்துட்டு வந்து, நாங்களும் அரை ஏக்கர்ல இயற்கை முறையில சம்பங்கி நடவு செஞ்சோம். பெருசா பண்டுதம் இல்ல. பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம தினமும் வருமானம் கொடுத்துக்கிட்டிருக்கு சம்பங்கி. சராசரியா மாசம் 15 ஆயிரம் ரூபாயில இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைச்சுடும். எங்க வீட்டு ஆளுங்களே வேலையைப் பாத்துக்கிறதால பெருசா செலவு இல்லை. பூவை பறித்து மதுரை மார்க்கெட்டுக்குத்தான் அனுப்புறோம். கொய்யா, மா எல்லாம் வருஷ வெள்ளாமையா இருந்த நேரத்துல, தினமும் வருமானம் கொடுத்த சம்பங்கி பொருளாதார ரீதியா ரொம்பவே உதவியா இருக்கு. மத்த எந்த வெள்ளாமை செஞ்சாலும், அரை ஏக்கர்ல மட்டுமாவது சம்பங்கி சாகுபடி செஞ்சிட்டா... அந்த விவசாயி எதைப் பத்தியும் கவலைப்படத் தேவையில்லை'' என்கிறார், வீரப்பன் அனுபவம் பொங்க.

பாதை காட்டிய பசுமை விகடன்!

மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள விஜயநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்விழி பவுன்ராஜ்...

''நான் பசுமை விகடனோட தீவிர வாசகி. என்னோட கணவர் மருத்துவரா இருந்தாலும், விவசாயத்துல ரொம்ப ஆர்வமா இருப்பாரு. இது மொத்தம் 14 ஏக்கர் தோட்டம். காடா இருந்த இந்த இடத்தை என் கணவர்தான் தென்னை, நெல்லி, எலுமிச்சைனு வெச்சு தோப்பா மாத்தினாரு. திடீர்னு அவரு இறந்துட்டாரு. ஆஸ்பத்திரியை வேற டாக்டரை வெச்சு பாத்துட்டு இருக்கோம். ஆனா, அவரு நேசிச்ச விவசாயத்தை நானே தொடர்ந்து செய்யணும்ங்கிற எண்ணத்துல விவசாயத்துல இறங்கினேன். இங்க இருக்கற ஒவ்வொரு மரத்துலயும், செடிகொடிகள்லயும், மண்ணுலயும் என் கணவர் உலாவுறதா நினைக்கிறேன். அந்த உணர்வு எனக்கு ஊக்கத்தைக் கொடுக்குது. அதனால, விவசாயத்தை விடக்கூடாதுனு நினைச்சு செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

எனக்கு துணையா விவசாய ஆலோசனை சொல்றது பசுமை விகடன்தான். ஒரு வேகத்துல விவசாயத்துக்கு வந்துட்டாலும், இங்க வேலை செய்றவங்களுக்கு கூலி மாதிரியான செலவுகளை, தோட்டத்து வருமானத்துல இருந்து கொடுக்க முடியாம திணறினேன். இதை எப்படி சரி செய்யலாம்னு யோசிச்சப்பதான், மருதமுத்து சாரோட சம்பங்கி கட்டுரையைப் படிச்சேன். உடனே அவங்க தோட்டத்துக்குப் போய், அதைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, கையோட சம்பங்கி நடவைத் தொடங்கிட்டேன். ஆரம்பத்துல பக்கத்துல கிடைச்ச நாட்டுச் சம்பங்கி விதையை வாங்கி, 60 சென்ட் இடத்துல நடவு செஞ்சேன். மருதமுத்துவாசுகி தம்பதி வழிகாட்டுதலோட சாகுபடி செஞ்சதுல நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. முழுக்க இயற்கை முறையிலதான் விவசாயம்.  

தினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி!

இப்ப, 40 சென்ட் இடத்துல வீரிய ரகமான பிரஜ்வல் ரகத்தை நடவு செஞ்சிருக்கேன். ஒரு வருஷம் ஆச்சு. ரெண்டும் மகசூல் கொடுத்துக்கிட்டிருக்கு. சராசரியா ஒரு ஏக்கர்ல இருந்து தினமும் 10 கிலோ அளவுக்கு பூ கிடைச்சிடுது. ஒரு கிலோ குறைஞ்சபட்சம் 50 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 300 ரூபாய் வரைக்கும் பூ போட்டுக்கிட்டிருக்கோம். சராசரியா மாசத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைச்சிடுது. இந்த வருமானத்தை வெச்சு, செலவுகளை சமாளிச்சு தோட்டத்தைப் பராமரிச்சிக்கிட்டு இருக்கேன். இங்க இருக்கற எல்லா விவசாயமும் என் கணவர் பண்ணியிருந்தாலும், நான் சுயமா செஞ்சது சம்பங்கி சாகுபடிதான். அதுக்கான ஊக்கத்தைக் கொடுத்த பசுமை விகடனுக்கும், மருதமுத்து தம்பதிக்கும் என்னோட நன்றி'' என்று நெகிழ்கிறார், வேல்விழி.

வெற்றி பெற்ற கன்னி முயற்சி!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மல்லி கிராமத்தைச் சேர்ந்த காமினி கிரிதரன்...

''எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ஆர்வம் அதிகம். என்னோட கணவர் சிவகாசியில பிரிண்டிங் பிரஸ் வெக்சிருக்காரு. நான் வீட்டுலதான் இருக்கேன். பசுமை விகடனை வரிவிடாம படிச்சிடுவேன். அதுல வர்ற கட்டுரைகள் விவசாய ஆர்வத்துக்கு தூபம் போட்டுகிட்டே இருந்துச்சு. எங்களுக்குச் சொந்தமான இந்த நிலம் தரிசாத்தான் கிடந்துச்சு. இதுல விவசாயம் செய்யலாம்ங்கிற எண்ணம் வந்தப்ப, பசுமை விகடன் மூலமா மருதமுத்து அண்ணாவைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு... கணவரோட போய் அவரு நிலத்தைப் பாத்து ஆலோசனைக் கேட்டுட்டு வந்தோம். வந்ததும் இந்த இடத்தை சுத்தம் பண்ணி விவசாயத்தை ஆரம்பிச்சோம்.

தினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி!

இது மணல் கலந்த களிநிலம். ரொம்பப் பேரு, 'இந்த மண்ணுல சம்பங்கி வராது’னு சொன்னாங்க. ஆனா, அண்ணன் கொடுத்த தைரியத்துல துணிஞ்சு இறங்கி... ஒரு ஏக்கர்ல சம்பங்கியை நடவு செஞ்சோம். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வந்தவங்க கூட, 'இங்க சம்பங்கி வராது’னு சொன்னாங்க. ஆனாலும், இயற்கை முறையில சாகுபடி செஞ்சதால சம்பங்கி வளர்ந்து மகசூல் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. தினமும் ஒன்றரை கிலோ அளவுக்கு பூ வருது. இனிமேதான் மகசூல் அதிகரிக்கும். இப்ப செடியைப் பாக்குறவங்க ஆச்சரியமா பாக்குறாங்க. சம்பங்கி வயலை சுத்தியும் அகத்தியையும்  ஊடுபயிரா அங்கங்க கொத்தமல்லியையும் நடவு செஞ்சிருக்கோம். இது விவசாயத்துல எங்க கன்னி முயற்சி... நிச்சயம் பாஸாயிடுவோம்ங்கிற நம்பிக்கை நிறைய இருக்கு.

ரெண்டு ஏக்கர்ல குதிரைவாலி சாகுபடி செஞ்சிருக்கோம். உழுது விதைச்சதோட சரி, வேறெந்த இடுபொருளும் போடல... பயிர் அருமையா விளைஞ்சு நிக்குது. பக்கத்து விவசாயிங்க எல்லாம் ஆச்சர்யமா பாத்துட்டுப் போறாங்க. குதிரைவாலியை சாப்பிடுறதுக்காக ஏகப்பட்ட தேன்சிட்டுகள் இங்க வருது. இதையெல்லாம் பாக்குறதுக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்த பசுமை விகடனுக்கும், மருதமுத்து அண்ணாவுக்கும், என்னோட அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையா இருக்கற என் கணவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்'' என்கிறார், காமினி கிரிதரன்.

இது ஒரு சோறு பதம்தான். வாழையடி வாழையாக இவர்களைப் பின்பற்றி இன்னும் பல வெற்றி விவசாயிகள் அணிவகுத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

நானும் பசுமைவிகடனும்

தினம் தினம் பணம்... சம்பங்கி... சாமானியனின் வங்கி!

குடும்பத்தலைவி விவசாயி!

சசிகலா, பவானி, குடும்பத்தலைவி:

''நாங்க விவசாயக் குடும்பம் கிடையாது. இரும்புக்கடை வெச்சுருக்கோம். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பெட்டிக்கடைக்கு சாமான் வாங்கப்போகும்போது அங்கு தொங்குற புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். அப்படித்தான் பசுமை விகடனையும் படிச்சேன். அதுல இருந்த கட்டுரைகள் உபயோகமாக இருந்தது. குறிப்பா, சிறுதானியங்களைப் பத்தி முழுமையா தெரிஞ்சிக்கிட்டேன். தொடர்ந்து மூலிகை பத்தின தகவல்கள் எல்லாம் எங்களை போன்ற நகரவாசிகளுக்கும் பயனுள்ளதா இருந்துச்சு. அப்புறம் என்ன? 'இந்த இதழ் பசுமை விகடன் வந்தாச்சு’னு கடைக்காரரே கூப்பிட்டு சொல்றாருனா பாருங்களேன் என்னோட பசுமை ஆர்வத்தை.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு