Published:Updated:

நெல், சோளம், கோதுமை...

பல்கலைக்கழகத்தின் பயனுள்ள அறிமுகங்கள்!அறிமுகம்காசி.வேம்பையன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல், மக்காச்சோளம், கரும்பு எனப் பலவிதமான பயிர்களில் இதுவரை 792 ரகங்களை விவசாயிகளுக்காக அறிமுகம் செய்து வைத்துள்ளது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். இதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் உழவர் தின விழாவில் புதிய ரகங்களையும், கருவிகளையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் பல்கலைக்கழகம், இந்த 2015-ம் ஆண்டில் ஏழு புதிய பயிர் ரகங்களையும், இரண்டு பண்ணைக் கருவிகளையும் அறிமுகம் செய்துள்ளது!

டி.கே.எம் - 13 ரக நெல்

வயது : 130 நாட்கள்.

மகசூல் : 5,938 கிலோ / ஹெக்டேர்.

சிறப்புகள்:

காவிரி டெல்டா பகுதியில் தாளடிப் பட்டத்தில் பயிர் செய்ய ஏற்றது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பட்டத்தில் (ஆகஸ்ட்செப்டம்பர் மாதங்களில் விதைப்பு) பயிரிட ஏற்றது. நடுத்தரமான உயரத்துடனும், அதிகமான தூர்களுடனும் சாயாத தன்மையுடனும் இருக்கும். கோ (ஆர்) 49 மற்றும் பி.பீ.டி 5204 ரகங்களைக் காட்டிலும் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 9 ஆயிரத்து 50 கிலோ வரை மகசூல் கொடுக்கக்கூடியது.

நெல், சோளம், கோதுமை...

இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய், துங்ரோ வைரஸ் நோய், செம்புள்ளி மற்றும் இலைஉறை அழுகல் நோய் ஆகியவற்றின் தாக்குதல்களை மிதமாகத் தாங்கி வளரும் திறன் கொண்டது. கோ (ஆர்) 49, பி.பீ.டி ஆகிய நெல் ரகங்களைக் காட்டிலும் பூச்சி, நோய்களை அதிகமாகத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

அரிசி, மத்திய சன்ன ரகமாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். நெல்லுக்கு நல்ல அரவைத்திறனும், முழு அரிசி காணும் திறனும் உண்டு. இந்த ரகம், சமைத்தவுடன் பி.பீ.டி ரகத்தின் சாதம் போலவே இருப்பதால், விவசாயிகளின் மத்தியில், நல்ல வரவேற்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சி.ஆர்-1009 சப் -1 ரக நெல்

வயது : 155 நாட்கள்.

மகசூல் : 5,759 கிலோ/ஹெக்டேர்

சிறப்புகள்:

பயிர் இனப்பெருக்க வழிமுறைகளில் ஒன்றான 'அறிமுகம்’ என்ற வழிமுறையில் வளர்ப்பு செய்து தேர்வு செய்யப்பட்ட ரகம். காவிரி டெல்டா போல தண்ணீர் தேங்கும் பகுதிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற சிறந்த நெல் ரகம். நடவு செய்து 15 நாட்கள் வரை நீரில் முழ்கி இருந்தாலும் அதைத்தாங்கி வளரக்கூடியது. நீண்டகால ரகமாக இருந்தாலும், அதிகமான மகசூல் கொடுக்கக்கூடியது. இதுவரையில் 54 இடங்களில் அனுசரணை ஆராய்ச்சித் திடல் அமைத்து, பரிசோதனை செய்ததில் 15 இடங்களில் ஹெக்டேருக்கு 6 ஆயிரம் கிலோவுக்கு மேல் மகசூல் கிடைத்துள்ளது.

நெல், சோளம், கோதுமை...

இலைப்புள்ளி நோய், குலைநோய், புகையான் மற்றும் வெண்முதுகுத் தத்துப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதலை மிதமாகத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

அரிசி, குட்டையாகவும் பருமனாகவும், அதிக அரவைத்திறனுடனும் முழு அரிசியாக மாறும் திறனுடனும் இருக்கும். அதிக மாவுச்சத்து இருப்பதால், இட்லி தயாரிப்பதற்கு மிகச் சிறந்த ரகம்.

தமிழ்நாட்டில் சம்பா பருவத்துக்கும், நீண்டகால ரகங்கள் சாகுபடி செய்யும் பகுதிக்கும் ஏற்றது.

இந்த ரகத்தை சி.ஆர் 1009 நெல் ரகத்துக்கு மாற்று ரகமாக பயிரிடப் பரிந்துரைக்கப்படுகிறது.

எம்.டி.யு- 6 ரக நெல்

வயது : 110-115 நாட்கள்.

மகசூல் : 6,118 கிலோ/ஹெக்டேர்.

சிறப்புகள்:

குறுகிய கால ரகம். இறவையில் ஹெக்டருக்கு 6 ஆயிரத்து 118 கிலோ (ஏ.டீ.டி 43 ரகத்தைவிட 9.8 சதவிகிதமும், ஏ.டீ.டி (ஆர்) 45 ரகத்தை விட 10.2 சதவிகிதமும் அதிக மகசூல்) மகசூல் கொடுக்கக்கூடியது. ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் சோதனையின்போது, அதிகபட்சமாக ஒரு ஹெக்டேரில் 9,338 கிலோ நெல் மகசூல் தந்துள்ளது. நீண்ட சன்ன ரக அரிசியைக் கொண்டுள்ள இந்த ரகம், சிறந்த சமையல் பண்புகளை உடையது. பச்சரிசியாகப் பயன்படுத்துவதற்கும், பொங்கல், அவல் போன்றவற்றைத் தயாரிப்பதற்கும் ஏற்றது.

நெல், சோளம், கோதுமை...

இலைச் சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான், பச்சைத் தத்துப்பூச்சி, வெண்முதுகுப் பூச்சி ஆகியவற்றின் தாக்குதல்களை மிதமான அளவுகளில் தாங்கி வளரக்கூடியது.

சொர்ணவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பட்டங்களிலும், குறுகிய கால ரகங்கள் சாகுபடி செய்யும் பகுதிகளிலும் பயிரிட ஏற்ற ரகம்.

கே-12 ரக சோளம்

வயது : 95 நாட்கள்.

மகசூல் : 3,123 கிலோ/ஹெக்டேர்.

சிறப்புகள்:

மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்த ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்விளைச்சல் தரவல்லது. குளிர்கால மானாவாரி கரிசல் நிலப் பகுதிகளுக்கு ஏற்றது. தற்சமயம் சாகுபடியில் இருக்கும் கே8 சோளத்தைவிட 22.4 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியது. சோதனையில், அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரத்து 300 கிலோ மகசூல் கொடுத்துள்ளது. மானாவாரியில் அதிக தானிய மகசூலும், அதிக அளவு தீவன மகசூலும் (ஹெக்டேருக்கு 11.9 டன்) கொடுக்கக்கூடியது.

நெல், சோளம், கோதுமை...

வறட்சியை நன்கு தாங்கி வளரும் தன்மையும், குருத்து ஈ, தண்டுத்துளைப்பான், அடிச்சாம்பல் நோய் போன்றவற்றின் தாக்குதல்களைத் தாங்கி வளரும் தன்மையும் கொண்டது. தென் மாவட்டங்களில் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது இந்த ரகம். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தும்போது நன்கு செரிமானமாகும் தன்மையும் கொண்டது.

கோ.டபிள்யு - 3 ரக கோதுமை

வயது : 95-100 நாட்கள்.

மகசூல் : 4,076 கிலோ/ஹெக்டேர்

சிறப்புகள்:

வெலிங்டனில் உள்ள இந்திய வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரகம், மலை மற்றும் மலைச் சார்ந்த தமிழக மாவட்டங்களில் நல்ல மகசூல் கொடுக்கக்கூடியது. தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் இந்த கோதுமை ரகத்தைப் பயிரிடலாம். குறுகிய கால வயதுடைய இந்த கோதுமை ரகங்கள், 95 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

நெல், சோளம், கோதுமை...

குளிர்காலத்தில், பருவமழை அதிக அளவு இல்லாதபோது விவசாயிகளுக்கு இந்த ரகம் ஒரு மாற்றுப்பயிராக அமையும். கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட 131 பரிசோதனைகளில் இதன் சராசரி மகசூல்... ஹெக்டருக்கு 4 ஆயிரத்து 76 கிலோ. நிலையான உயரம், சாயாத செடிகள் முதலிய பண்புகளைப் பெற்றுள்ளது. தானியத்தில் 11% புரதச்சத்தைக் கொண்டுள்ளது. பல வகையான துரு நோய்களுக்கான எதிர்ப்புச் சக்தியையும் கொண்டுள்ளது.

கொத்தவரை, தென்னை வீரிய ஒட்டு ரகம், டிராக்டரால் இயங்கும் மஞ்சள்கரணை விதைக்கும் கருவி, டிராக்டரால் இழுக்கப்படும் இருசக்கர டிரெய்லருக்கு திரவ ஆற்றலால் நிறுத்தும் கருவி ஆகியவற்றைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு