Published:Updated:

பணம் வளரும் பண்ணைக்குட்டை!

மீன் வளர்ப்பில் ஆண்டுக்கு `1,75,000 கு.ஆனந்தராஜ், படங்கள்: அ.நவின்ராஜ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ளமான நிலத்தில் கூட வருமானம் எடுக்க முடியாமல் பலர் திணறும் சூழ்நிலையில்... பயனற்றுக் கிடந்த நிலத்தில், தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே உழைத்து, மீன் வளர்ப்பு மூலமாக நல்ல வருமானம் பார்த்து வருகிறார், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள பாப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி.

 ஒரு காலைவேளையில் மீன்களுக்குத் தீவனம் இட்டுக் கொண்டிருந்த பெரியசாமியைச் சந்தித்தோம்.

பணம் வளரும் பண்ணைக்குட்டை!

பாதை காட்டிய பசுமை விகடன்!

''எனக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. கரும்புதான் முக்கிய வெள்ளாமை. என் நிலத்துல கொஞ்சம் தாழ்வான பகுதி. அதுல அதிகளவு தண்ணி ஊறிக்கிட்டே இருந்தது. அதனால, அந்த நிலத்தில நெல் விதைச்சேன். அறுவடை சமயத்துல, மயில்கள் வந்து பெருமளவு நெல்லை காலி பண்ணிடுச்சு. அதனால அந்த நிலத்துல வேற பயிர் எதுவும் பண்ணாம சும்மா வெச்சிருந்தேன். 'பசுமை விகடன்’ வெளிவந்ததுல இருந்து, தொடர்ந்து படிச்சிக்கிட்டு வர்றேன். என்னதான் 30 வருஷத்துக்கு மேல நான் விவசாயம் செஞ்சுக்கிட்டிருந்தாலும், இந்த எட்டு வருஷத்துல பசுமை விகடன் மூலமாதான் அதிகம் கத்துக்கிட்டிருக்கேன். இயற்கை விவசாய முறைகளை நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்துல நஷ்டத்துல போயிக்கிட்டிருந்த என்னோட பண்ணையம் இன்னிக்கு லாபத்தோட இயங்குறதுக்கு காரணம், இந்தப் புத்தகத்துல படிச்ச பண்ணைக்குட்டை மீன் வளர்ப்புப் பத்தின செய்திதான்' என்று சொன்ன பெரியசாமி, தொடர்ந்தார்.

பயன் கொடுத்த பண்ணைக்குட்டை!

'அரசாங்கத்தோட இலவசப் பண்ணைக் குட்டை திட்டத்துல ஒரு வருஷத்துக்கு முன்ன இங்க குட்டை வெட்டினோம். இது தண்ணி அதிகமா ஊறுற இடம்கிறதால, ஊறுற தண்ணியை பாசனத்துக்குப் பயன்படுத்திக்கலாங்கிற எண்ணத்துல இருந்தேன். அந்த சமயத்துல பசுமை விகடன்ல பண்ணைக்குட்டையில் மீன் வளர்க்கலாம்ங்கிற தகவலைப் படிச்சேன். அப்பறம்தான்

10 சென்ட் நிலத்துல மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். தண்ணீர் ஊறிக்கிட்டே இருக்குறதால தண்ணி பத்தின பயமே இல்லை. அதிக தண்ணி ஊறினாலும் குழாய் மூலமா தோட்டத்துக்குப் போயிடும். மேட்டூர் டேம்ல இருக்கற மீன் விதைப் பண்ணையில் இருந்து ரோகு, கெண்டை, மிர்கால் ரகங்கள்ல ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, குட்டையில விட்டேன். இதுக்கு முந்நூறு ரூபாய் செலவாச்சு. இப்போ மீன் எல்லாம் நல்லா வளர்ந்திருக்கு. தேவைப்படுறவங்க தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க'' என்றவர், மீன் வளர்க்கும் தொழில்நுட்பங்கள் பற்றிச் சொன்னவற்றைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.

மூன்று மாதங்கள் கவனம்!

பணம் வளரும் பண்ணைக்குட்டை!

பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பில் முதல் மூன்று மாதங்களுக்கு மிக அதிக கவனம் தேவை. மீன்கள் சிறியதாக இருப்பதால், அவற்றைச் சாப்பிடுவதற்காக மீன்கொத்தி, நீர்காகம், கொக்கு மற்றும் நீர்வாத்து ஆகியவை அடிக்கடி வரும். அவை தண்ணீரில் உள்ள மீன்களைச் சாப்பிட்டு விடும். முதல் மூன்று மாதங்கள் வரை பறவைகளின் நடமாட்டத்தை கவனித்து விரட்ட வேண்டும். சுற்றி மீன் வலை வேலி அமைத்தால், பாம்புகளிடம் இருந்தும் மீன்களைக் காப்பாற்றி விடலாம்.

மீன்கள் அதிக எடை வந்தால்தான் நல்ல லாபம் கிடைக்கும். அதனால், தினமும் சரியான அளவில் தீவனங்களைக் கொடுத்து வரவேண்டும். குஞ்சுகளை விட்ட முதல் மூன்று மாதங்களுக்கு... தினமும் கடலைப் பிண்ணாக்கு 100 கிராம் மற்றும் தவிடு 50 கிராம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து புட்டுப் பதத்தில் பிசைந்து, காலை எட்டு மணிக்கு மிதக்கும் உணவுத் தட்டில் வைத்து விட வேண்டும். அதோடு, தினமும் ஒரு கூடை பசுஞ்சாணத்தைப் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் தூவி விட வேண்டும். நான்காவது மாதத்திலிருந்து மகசூல் வரை... தினமும் மக்காச்சோள மாவு 100 கிராம், 50 கிராம் தவிடு எனப் பிசைந்து தீவனமாகக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மாட்டுச் சாணத்தையும் தூவி வர வேண்டும். மார்க்கெட்களில் இலவசமாகக் கிடைக்கும் முட்டைக்கோஸ் தழைகள் மற்றும் காலிஃபிளவர் தண்டு, பலவித கீரைகள் ஆகியவற்றையும் மீன்களுக்கு உணவாக அளிக்கலாம்

கோடைகாலத்தில் உதவும் ஆகாயத்தாமரை!

மே - ஜூன் மாதங்களில் கடுமையான வெயில் காரணமாக சில பண்ணைகளில் மீன்கள் இறக்க நேரிடலாம். இதைத் தவிர்க்க... ஆகாயத்தாமரையை கொஞ்சம் பறித்து குளத்தில் போட வேண்டும். அவை உடனே வளர ஆரம்பிக்கும். இச்செடியின் அடியில் மீன்கள் பதுங்கி வெப்பத்தை சமாளித்துக் கொள்ளும். தவிர ஆகாயத் தாமரை இலைகளை மீன்கள் விரும்பி சாப்பிட்டுக் கொள்கின்றன. ஓர் ஆண்டு முடிந்ததும், வளர்ந்த மீன்களை விற்பனை செய்துவிட்டு, குட்டையைச் சுத்தம் செய்து குஞ்சுகளை வாங்கி விடலாம்!

அதிகபட்ச செலவு

பணம் வளரும் பண்ணைக்குட்டை!

20 ஆயிரம்!

வளர்ப்பு முறைகளைச் சொன்ன பெரியசாமி, வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.  

''10 சென்ட் குட்டையில் ஆயிரம் மீன்கள் விட்டா, பறவை தின்னது, செத்தது, சேதாரமானது போக... 750 மீன்கள் இருக்கும். ஒரு வருஷத்தில் ஒவ்வொரு மீனும் சராசரியா ரெண்டு கிலோ எடையில இருக்கும். ஒரு கிலோ 130 ரூபாய்னு தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. மொத்தமா விற்பனை செய்றப்போ 1,500 கிலோவுக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதிகபட்சமா 20 ஆயிரம் ரூபாய் செலவு போக... ஒரு வருஷத்துல ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்ற பெரியசாமி நிறைவாக,

''ஆற்றுப்பாசன நிலங்கள்ல நீர் ஊறுற பகுதிகள்ல இந்த பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பைச் செய்யலாம். இது மூலமா குறைஞ்ச செலவுல நிறைவான லாபம் பாக்க முடியும். என்னைப் பார்த்து, எங்க மாவட்டத்துல பல விவசாயிங்க பண்ணைக்குட்டையில மீன் வளர்ப்பை ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி பண்ணைக்குட்டையைப் பராமரிச்சாலே போதும்... வருஷக் கடைசியில கை நிறையக் காசு பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.

 தொடர்புக்கு,

பெரியசாமி,

செல்போன்: 9976302584

நானும் பசுமை விகடனும்

டாக்டர் விவசாயி!

'மீத்தேன் தொடர்பான தொடருக்காக ஒரு வருஷமாத்தான் பசுமை விகடன் வாங்கிட்டு

பணம் வளரும் பண்ணைக்குட்டை!

இருக்கேன். ஆனா, ஒட்டுமொத்த புத்தகமுமே என்னை வசியப்படுத்திடுச்சு. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பக்கத்துல இருக்கும் லெட்சுமி நாராயணபுரம்தான் எனக்குச் சொந்த ஊர். எங்க தாத்தா விவசாயம் செஞ்சப்ப வயல்வெளிகள்ல ஓடி விளையாடியிருக்கேன். மாடுகள் மேய்ச்சிருக்கேன். மாடுகளை மேயவிட்டுட்டு மரத்தடியில படுத்து தூங்கியிருக்கேன். அதுக்கப்பறம் மன்னார்குடிக்கு குடும்பத்தோட வந்துட்டோம். கிட்டத்தட்ட 40 வருஷமா மன்னார்குடியிலதான் இருக்கோம். அதோட மருத்துவத் தொழில்ல இருக்குறதால, வயல், ஆடுமாடுகளையெல்லாம் சுத்தமா மறந்துட்டேன். இப்போ, பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், சின்ன வயசு நினைவுகள் எல்லாம் நிழலாடிட்டுருக்கு. இயற்கை விவசாயம், சிறுதானியம், பாரம்பரிய நெல் ரகங்கள் மேல எனக்கு ஈர்ப்பும் உண்டாக்கிடுச்சு. முதல் கட்டமா ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம்னு இருக்கேன்'' என்கிறார், டாக்டர் பாரதிச்செல்வன்.

 முதல்வர் விவசாயி!

''என்னுடைய அண்ணன் நீண்ட நாட்களா பசுமை விகடன் படிக்கிறார். ஆரம்பத்துல அதை நான் பெருசா எடுத்துக்கல. எதார்த்தமா ஒருநாள் எடுத்துப் பார்த்துக்கிட்டிருந்தேன். அதுல விவசாயத்தை பற்றியும், உயிர் உரங்களை பற்றியும் கட்டுரைகள் இருந்துச்சு. நான் படிச்சது எம்.எஸ்.சி தாவரவியல்ங்கறதால, ஆர்வம் அதிகமாகி பசுமை விகடனைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.

பணம் வளரும் பண்ணைக்குட்டை!

கடந்த மூணு மாசத்துக்கு முன்னவரைக்கும் தனியார் பள்ளியில மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு தாவரவியல் ஆசிரியரா வேலை பார்த்தேன். பசுமை விகடன்ல படிச்ச பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தேன். நானும் கத்துக்கிட்டேன். இதுநாள் வரை எங்களோட நிலத்துப் பக்கம் போகாம இருந்த என்னை, பசுமை விகடன்தான் ஊக்கம் கொடுத்துப் போக வெச்சுது' என்கிறார், தர்மபுரியிலிருக்கும் சமுதாயக் கல்லூரியின் முதல்வர் ராமகிருஷ்ணன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு