Published:Updated:

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

Published:Updated:

வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடி பற்றிப் பார்த்து வருகிறோம். வாழை நடவுக்கான நிலம் தயாரிப்பு, நடவு முறைகள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து, வாழையைத் தாக்கும் பூச்சிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் பகிர்ந்து கொள்கிறார், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி பால. பத்மநாபன்.

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

'வாழையைத் தாக்கக்கூடிய பூச்சிகள் எவை?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தமிழகத்தில், 30 வகையான பூச்சிகள் வாழையைத் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில், அசுவிணி, கிழங்குக் கூன்வண்டு, தண்டுக் கூன்வண்டு, மாவுப்பூச்சி போன்றவை முக்கியமானவை.'

'வாழையில் அசுவிணியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?''

''அசுவிணிப் பூச்சிகள் வாழை மரங்களில் உள்ள சாறை உறிஞ்சக்கூடியவை. இவை, நச்சுயிரி தாக்கப்பட்ட மரங்களில் உள்ள சாறை உறிஞ்சிவிட்டு, அடுத்த மரத்துக்குச் செல்லும்போது... முடிக்கொத்து நோய் பரவுகிறது. முடிக்கொத்து நோய் தாக்காமல் இருக்க வேண்டுமானால், அசுவிணியைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். முடிக்கொத்து நோய் தாக்கிய மரங்களில் இருந்து கன்றுகளைத் தேர்வு செய்யக்கூடாது. இயற்கை முறையில், 'வெர்டிசீலியம் லெக்கானீ’ (Verticillium lecanii)  என்ற பூஞ்சணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் கலந்து... இலைப் பட்டைகளுக்கு இடையில் நன்கு தெளித்துவிட வேண்டும். 'பெவேரிய பாஸியானா’ (Beaveria bassiana)  என்ற திரவ வடிவ பூஞ்சணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 3 மில்லி என்ற கணக்கில் கலந்து, வாழைமரப் பட்டைகளில் தெளித்தும் அசுவிணியைக் கட்டுப்படுத்தலாம்.''

'கூன்வண்டுத் தாக்குதலை எப்படிக் கட்டுப்படுத்துவது?''

வாழையைத் தாக்கக்கூடிய முக்கிய பூச்சிகளில் மிகவும் முக்கியமான பூச்சிகள், தண்டுக் கூன்வண்டு மற்றும் கிழங்குக் கூன்வண்டு ஆகியவை. இந்த வண்டுகள், கன்றுப் பருவத்திலிருந்து அறுவடை வரையிலும் தாக்கக்கூடியவை. இவற்றின் மூலம், 85 சதவிகிதம் வரை இழப்பு ஏற்படுகிறது. பூவன், நெய்பூவன், சிறுமலை, விருப்பாச்சி, நேந்திரன், கற்பூரவல்லி, ரொபஸ்டா, செவ்வாழை போன்ற அனைத்து ரகங்களையும் இவை தாக்குகின்றன.

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

கூன்வண்டுகள் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத் தேர்வு செய்து நடுவதன் மூலம் ஓரளவு சமாளிக்கலாம். கன்றுக் கிழங்குகளின் வேரை நீக்கி, மேற்புறம் சீவிவிட்டு, விதைநேர்த்தி செய்து நடவு செய்யவேண்டும். வண்டுகள் மற்ற மரங்களுக்குப் பரவுவதைத் தடுக்க, களைகளையும், காய்ந்த சருகுகளையும் நீக்கி, தோட்டத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அறுவடை முடிந்த மரங்களின் தண்டுப்பகுதியை 30 சென்டி மீட்டர் நீளத்துக்கு வெட்டி, இரண்டாகப் பிளந்து... பிளக்கப்பட்ட பகுதி தரையை நோக்கி இருக்குமாறு ஒரு ஏக்கருக்கு 40 இடங்களில் 'தண்டுப்பொறி’ வைக்க வேண்டும். இந்தப் பொறியில் இருந்து வெளிவரும் வேதிப் பொருட்கள் காற்றில் பரவி மற்ற இடங்களில் உள்ள கூன்வண்டுகளைக் கவர்ந்து இழுக்கும். பிறகு அவற்றைச் சேகரித்து அழித்து விட வேண்டும்.

'காஸ்மோலியூர்’ என்ற கிழங்குக் கூன்வண்டு இனக்கவர்ச்சிப் பொறியை, ஒரு ஹெக்டேருக்கு 5 பொறிகள் என்ற கணக்கில் வைப்பதன் மூலம் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மறக்காமல் மாதத்துக்கு ஒரு முறை இனக்கவர்ச்சிப் பொறியை மாற்ற வேண்டும். அல்லது 'பெவேரிய பாஸியானா’ என்ற பூஞ்சணத்தை, தண்டுப்பொறி, வட்ட வடிவத் தட்டுப்பொறி அல்லது கிழங்குப் பொறி ஆகியவற்றில் ஒரு பொறிக்கு 20 கிராம் வீதம் தூவி வைப்பதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.''

'தண்டுத்துளைப்பான் கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்ன?'

''வாழையில் ஏற்படும் மகசூல் இழப்பைக் குறைக்கவும், அதிக மகசூல் பெறவும் தண்டுத்துளைப்பான் கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். பொதுவாக கூன்வண்டுகள் அதிக சேதத்தை விளைவிப்பதில்லை. பெண்வண்டு, வாழைத்தண்டைத் துளைத்து முட்டைகளை இடும். முட்டைகள் பொரிந்து வெளிவரும் புழுக்கள், ஐந்து மாத வயதுக்கு மேல் உள்ள வாழை ரகங்களைத் தாக்குகின்றன. மிக அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாவது நேந்திரன், கற்பூரவல்லி, விருப்பாச்சி, மொந்தன் ஆகிய ரகங்கள்தான். வண்டுகள், புழுக்கள் தாக்கிய மரங்களின் இலைகள், சிறிது சிறிதாக பசுமை குன்றி, மஞ்சள் நிறமாக மாறும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது 'வாடல் நோய்’ தாக்கிய மரம் போலவும் தோற்றமளிக்கும். பாதிக்கப்பட்ட மரத்தைப் பார்த்தால், கூன்வண்டினால் ஏற்படுத்தப்பட்ட துவாரங்களையும், அதன் வழியே வெள்ளை நிற பிசின் வடிதலையும் காணலாம்.

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

மரத்தில் உள்ள காய்ந்த இலைகளையும் சருகுகளையும் அவ்வப்போது அகற்றுவதன் மூலம், கூன்வண்டுகளால் சேதம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஓர் அடி நீளமுள்ள வாழை மரத்தை இரண்டாகப் பிளந்து, பிளந்த பகுதி மண்ணில் இருக்குமாறு தண்டுப்பொறி வைத்தும் கவர்ந்து அழிக்கலாம். கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க, நீளவாக்கில் வெட்டப்பட்ட தண்டுப்பொறி, வட்ட வடிவத் தட்டுப்பொறிகளில் 'பெவேரிய பாஸியானா’ பூஞ்சணத்தை ஒரு பொறிக்கு 10 மில்லி வீதம் தடவி விடுவதன் மூலம் கூன்வண்டுகளை மிக எளிதில் அழிக்கலாம்.

'ஹெடிரோரேப்டைட்டிஸ் இண்டிகா’ (Heterorhabditis indica) என்ற நூற்புழுவை (பொறி ஒன்றுக்கு 10 மில்லி வீதம்) தோட்டத்தில் நேரடியாகவோ அல்லது கூன்வண்டுகளைக் கவர்ந்து அழிக்கப் பயன்படும் தண்டுப்பொறி, வட்ட வடிவ தட்டுப்பொறிகளில் தடவி வைப்பதன் மூலமாகவோ கூன்வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.'

''மாவுப் பூச்சியை எப்படி கட்டுப்படுத்துவது?''

''வெண்ணிறமான மாவு போன்ற பொருளை தன் உடம்பின் மீது போர்த்திக் கொண்டுள்ள 'சக்கேரோகாக்கஸ் சக்காரி’ மற்றும் 'பிளானோகாக்கஸ் சிட்ரை’ என்ற இரண்டு வகை மாவுப்பூச்சிகள்... வேர், காய் மற்றும் உச்சிப் பகுதிகளில் கூட்டமாக இருந்துகொண்டு சாறை உறிஞ்சுகின்றன. இதனால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, காய்களின் அளவு சிறுத்தும், தரம் குறைந்தும் காணப்படுகிறது. இதனை உயிரியல் முறைப்படி கட்டுப்படுத்த... 'கைலோகோரஸ் நைக்ரிடஸ்’ எனும் பொறிவண்டு அல்லது 'கிரிப்டோலேமஸ் கார்னியஸ்’ எனும் ஒட்டுண்ணி இவைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.''

கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா!

'வயல்வெளிப் பள்ளி!’ என்ற இந்தத் தொடரில் தமிழ்நாட்டின் முக்கிய பயிரான நெல், வாழை ஆகிய இரண்டு பயிர்களின் விதை முதல் அறுவடை வரை உள்ள பலவிதமான தொழில்நுட்பங்களை கேள்விபதில் வடிவத்தில் பாடமாகக் கொடுத்திருந்தோம். இந்த இரண்டு பயிர்கள் பற்றி விவசாயிகளுக்கு இருந்த சந்தேகங்கள் ஓரளவுக்காவது நீங்கி இருக்கும் என நம்புகிறோம். மேலும், புதியதாக விவசாயத்தில் தடம் பதிப்பவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும். 15 இதழ்களாக பதில்களைப் பகிர்ந்து கொண்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், முன்னோடி விவசாயிகள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இப்போதைக்கு இந்தப் பள்ளிக்கு சற்று விடுமுறை விடப்படுகிறது.

-முற்றும்

காசி.வேம்பையன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism