Published:Updated:

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

Published:Updated:

ழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்து, அறுவடைக்குக்கூட கட்டுபடியாகாத நிலை வருவது வாடிக்கை. இதுபோன்ற சோக நிலைமை, இந்த ஆண்டு மரவள்ளி விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. விளைச்சல் நன்றாக இருந்தும் கட்டுப்படியான விலை கிடைக்காததால், விளைந்த கிழங்குகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி கால்நடைகளுக்குத் தீவனமாகப் போட்டு வருகிறார்கள், விவசாயிகள். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது.

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

வேற வெள்ளாமை தெரியாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைப் பற்றி நம்மிடம் பேசினார், சேலம் மாவட்டம் கருமாபுரம் விவசாயி கே.செங்கோட்டையன்.

''நான் 6 ஏக்கர்ல மரவள்ளி போட்டிருக்கேன். 10 மாச வெள்ளாமை. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். விளைச்சல் நல்லா இருக்கு, ஆனா, விலைதான் இல்லை. போன வருஷம் கிலோவுக்கு 14 ரூபாய் வரை கிடைச்சுச்சு. இந்த வருஷம்4 ரூபாய்க்கும் கீழே வந்துடுச்சு. அறுவடை செலவுக்குக் கூட கட்டுப்படியாகாது.

மழை இல்லாததால மண்ணுல ஈரமில்லை... அதனால ஆளுங்களை வெச்சு பிடுங்க முடியாது. பொக்லைனுக்கு மணிக்கு 700 ரூபாய் வாடகை கொடுத்துத் தோண்டுறேன். அப்படியே செடியை விட்டா நிலம் கெட்டுப்போகும். அறுவடை பண்ணி மாடுகளுக்குக் கொடுத்தது போக, மிச்சத்தை வந்த விலைக்கு வித்துட்டு, நிலத்தைப் பக்குவம் செய்யணும். அடுத்த போகமும் இதே மரவள்ளிக்கிழங்கைத்தான் நடணும். என்ன செய்ய... எங்களுக்கு வேற வெள்ளாமை தெரியாது. அடுத்த வருஷமாச்சும் கட்டுப்படியாகிற விலை கிடைக்கும்னு நம்பித்தான் விதைக்கணும்'' சோகம் ததும்புகிறது, செங்கோட்டையனின் வார்த்தைகளில்.

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

கூட்டுறவுக் கொள்முதல் மையங்கள் தேவை!

பூச்சம்பட்டியைச் சேர்ந்த நல்லம்மாள், ''அதிகமா தண்ணி தேவைப்படாத வெள்ளாமை. விலையும் ஒரளவு கிடைக்கும். அதனாலதான், இந்தப்பக்கம் கிழங்கை அதிகமா நடுறாங்க. விற்பனைக்கு ஜவ்வரிசி கம்பெனிக்காரங்களத்தான் நம்பி இருக்கணும். அவங்களும் நேரடியா எடுத்துக்க மாட்டாங்க. புரோக்கர் மூலமாத்தான் வாங்குவாங்க. இந்த மாதிரி விலை இல்லாத சமயத்துல புரோக்கர்கள்கிட்ட கெஞ்சிக் கூத்தாடித்தான் கிழங்கை வித்தாக வேண்டிய சூழ்நிலை. நான் மூணு ஏக்கர்ல போட்ட மரவள்ளியும் நல்லா விளைஞ்சுடுச்சு. விலை இல்லாததால... வீணா தண்ணி பாய்ச்ச வேண்டாம்னு அப்படியே விட்டாச்சு. கூட்டுறவு கரும்பாலைகளை அரசாங்கமே நடத்துற மாதிரி, இந்த சேகோ ஃபேக்டரிகளையும் அரசாங்கமே தொடங்கணும். அதற்கு கூட்டுறவுக் கொள்முதல் மையங்கள் மூலமாக விவசாயிகளிடம் மரவள்ளியை வாங்கணும். அப்பொழுதுதான் இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்கும்'' என்றார்.

தண்ணியில்லாம தவிக்கிறோம்!

சேகோ ஆலைகள் கருத்தை அறிந்துகொள்வதற்காக, சேலத்தில் இயங்கி வரும் ஒரு சேகோ நிறுவனத்தின் நிர்வாகி சுந்தரத்திடம் பேசினோம். ''இந்தப் பகுதியில ஐம்பதுக்கும் மேற்பட்ட சேகோ ஃபேக்டரிகள் இருக்கு. இங்க மரவள்ளி மூலமா உற்பத்தி செய்யப்படுற 'ஸ்டார்ச்’, உணவுப் பயன்பாட்டுக்கும், தொழிற்சாலை சார்ந்த பயன்பாட்டுக்கும் போகுது. சேகோ ஃபேக்டரிகள் இயங்க அதிகமா தண்ணி வேணும். தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகும். ரெண்டு வருஷமா கடுமையான வறட்சி நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சு போச்சு. பெரும்பாலான கம்பெனிகளுக்கான நீர் ஆதாரம் நின்னு போச்சு. வெளியில இருந்து காசு கொடுத்து லாரி லாரியா தண்ணீரை வாங்கி ஃபேக்டரியை ஓட்ட முடியல. அதனால, நிறைய ஃபேக்டரிங்க நின்னு கிடக்கு. அதனாலதான் விளைஞ்ச கிழங்கு தேங்கிப்போச்சு.

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

மரவள்ளிக்கிழங்கைப் பொறுத்தவரை அறுவடை செய்த உடனே ஃபேக்டரிக்கு கொண்டு போகணும். கொஞ்சம் காலதாமதம் ஆனாலும், அதுல இருக்கிற ஸ்டார்ச் தன்மை குறைஞ்சு போயிடும். தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சா மறுபடியும் எல்லா ஃபேக்டரியும் ஓட ஆரம்பிச்சிடும்'' என்றார்.

உற்பத்தி பெருகிவிட்டது... என்று புள்ளிவிவரங்களை அடுக்கி, பெருமைத் தேடிக்கொள்ளும் அரசுகள்... இந்த உற்பத்தியால் ஒரு பைசா பிரயோஜனமும் இல்லாமல் இப்படி ஓடாய்த் தேயும் உழவர்களை எப்போதுதான் கண்டுகொள்ளுமோ?

ஜி.பழனிச்சாமி

படங்கள்: க.தனசேகரன்

மின்சாரம் தயாரித்தால் நிரந்தர விலை!

வீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்!

இந்தப் பிரச்னை பற்றிப் பேசிய ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வையாபுரி, ''தண்ணீர்தான் சேகோ ஃபேக்டரி ஓடுவதற்கு பிரச்னை என்றால், குறைந்த நீரில் மாவு அரைப்பது, நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களைப் பின்பற்றலாம். மேலும், மரவள்ளிக்கிழங்கின் கழிவுகளில் இருந்து அதிக ஆற்றல் கொண்ட மீத்தேன் வாயு வெளிவருகிறது. இதைப் பயன்படுத்தி சில ஃபேக்டரிகள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதியைத் தயாரித்துக் கொள்கின்றன. பெரிய அளவில் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, விளையும் மரவள்ளிக்கிழங்கின் ஒரு பங்கை மின்சார உற்பத்திக்காக அரசாங்கம் பயன்படுத்தினால், விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்கும். விவசாயிகள் தனியார் ஃபேக்டரி வாசலில் தவம் கிடக்க மாட்டார்கள்'' என்கிற மாற்று யோசனையை முன்வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism