Published:Updated:

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

ஊடுபயிரிலும் உன்னத வருமானம்!

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

ஊடுபயிரிலும் உன்னத வருமானம்!

Published:Updated:

ன்றில் இருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று... எனத் தேடல் தொடர்ந்ததின் விளைவுதான் ரகம் ரகமாக நம்மால் பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது. இதற்காக, விவசாயிகள் பலரும் தங்களின் தோட்டங்களையே ஆய்வுக்கூடங்களாக மாற்றி... சாதனை புரிந்து வருகிறார்கள். அத்தகைய சாதனையில் ஒன்றாக, எலுமிச்சையில் நாரத்தைச் செடியை இணைத்து ஒட்டுக் கட்டி, புதிய ரகத்தை உருவாக்கி, அதிக வருமானம் பார்த்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திர ராஜா.

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு கிராமத்தில்தான், ராமச்சந்திர ராஜாவின் தோட்டம் உள்ளது. இவர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு மதியப்பொழுதில், ராமசாமி ராஜாவை அவருடைய தோட்டத்தில் சந்தித்தோம். ''எங்க பூர்விக தொழிலே விவசாயம்தான். நெல், கரும்பு, தென்னைதான் வழக்கமான விவசாயம். கல்லூரிப் படிப்பை முடிச்சதும் அப்பாவுக்கு உதவியா விவசாயத்துல இறங்கிட்டேன். வழக்கமான விவசாயத்தோட நம்ம பங்குக்கு ஏதாவது செய்யலாம்னு யோசனை வந்தது. தென்னைக்கு ஊடுபயிரா எதாவது போடலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்கும்போது, வாழை, காய்கறிகள், இஞ்சினு ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னாங்க. எனக்கு எலுமிச்சை போடலாம்னு தோணுச்சு. உடனே, தென்காசி, பனையங்குளத்தில் இருக்கிற அப்பாவோட நண்பர் வீட்டுக்குப் போனோம். அவர் வீட்டுல அஞ்சு எலுமிச்சை மரங்கள் இருந்தன. மரங்கள் அபாரமா காய்ச்சிருந்துச்சு. அதைப் பாத்ததும் எலுமிச்சை மேல நல்ல நம்பிக்கை வந்துச்சு.

ஊடுபயிராக எலுமிச்சை!

உடனே,  அந்தச் செடியிலிருந்து 'விண் பதியம்’ மூலமா 50 கன்னுகளை ஒட்டுக்கட்டி ஒரு ஏக்கர் தென்னையில ஊடுபயிரா நடவு செய்தேன். அதை நண்பர்கள்கிட்டயும், வேளாண்துறையிலும் சொன்னேன். 'தென்னைக்கு இடையில எலுமிச்சை வரவே வராது’னு எல்லாரும் சொன்னாங்க. 'சரி, நட்டது நட்டுட்டோம்... வந்தா வரட்டும். போனா போகட்டும்’னு விட்டுட்டேன். அதுக்காக பராமரிப்புல எந்தக் குறையும் வைக்கல. ஆனா, வழக்கமா நாலு வருஷத்துல காய்ப்புக்கு வர்ற எலுமிச்சை, என் தோட்டத்துல மூணு வருஷத்துலயே காய்ப்புக்கு வந்துடுச்சு. அந்த நேரத்துல தென்னையில 'ஈரியோபைட்’ தாக்குதல் இருந்ததால, காசர்கோடு தென்னை வளர்ச்சி வாரியத்துல இருந்து அதிகாரிகள் பார்வையிட வந்திருந்தாங்க, அவங்களே 'தென்னைக்கு இடையில எலுமிச்சை இவ்வளவு சிறப்பா வளருதே’னு ஆச்சர்யப்பட்டாங்க. அந்த வருஷம் பெங்களூருல நடந்த 'தென்னை நாள்’ கருத்தரங்குக்கு கூப்பிட்டு கௌரவப்படுத்துனாங்க.

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

தொடர்ந்து அஞ்சு ஏக்கர்லயும் ஊடுபயிரா எலுமிச்சையை நடவு செய்தேன். இப்போ எட்டு வருஷமா இயற்கை வழிமுறையிலதான் பராமரிச்சுட்டு வர்றேன். எலுமிச்சைக்கு நல்ல விலை, கிடைக்கிறதால தனிப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்னு யோசிச்சேன். அப்போ, என்னோட நண்பர் 'கோவில்பட்டி’ பாஸ்கர், 'எலுமிச்சையையும், நாரத்தையையும் சேர்த்து ஒட்டுக்கட்டிப் போடுங்க. நல்ல காய்ப்பு கிடைக்கும்’னு சொல்லி... அவரே ஒட்டுக்கட்டிக் கொடுத்தாரு. அந்தச் செடிகளை தனிப்பயிராக இரண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இதுலயும் நல்ல காய்ப்பு இருக்குது' என்று பெருமையோடு சொன்ன ராமச்சந்திர ராஜா, தொடர்ந்தார்.    

செடிக்கு 40 கிலோ!

'ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 700 பழங்கள்ல இருந்து 900 பழங்கள் வரை கிடைக்குது. 20 பழங்களே ஒரு கிலோ அளவுக்கு எடை இருக்குது. சராசரியா மரத்துக்கு 800 பழம்னு வெச்சுக்கிட்டாலே, ஒரு மரத்துல வருஷத்துக்கு 40 கிலோ கிடைச்சுடும். ஒரு ஏக்கர்ல 134 மரங்கள் வரை நடவு செய்யலாம். மொத்தம் ரெண்டரை ஏக்கர்ல 335 மரங்கள் இருக்கு. ரெண்டரை ஏக்கர்லயும் சேர்த்து வருஷத்துக்கு 13 ஆயிரம் கிலோவுக்குக் குறையாம எலுமிச்சை மகசூல் ஆகுது. ஒரு கிலோவுக்கு 35 ரூபாய்ல இருந்து 120 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். சராசரியா கணக்கு பண்ணினா 55 ரூபாய் கிடைச்சுடும். வருஷத்துக்கு ரெண்டரை ஏக்கர்ல இருந்து 7 லட்சம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும்.

முதல் மூணு வருஷம் வரை பராமரிப்பு, இடுபொருள் எல்லாத்துக்கும் செலவு பண்ண வேண்டியிருக்கும். ரெண்டரை ஏக்கருக்கும் வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவாகும். நாலாவது வருஷத்துல இருந்து பெரிசா பராமரிப்பு தேவையில்லை. ஊட்டம் மட்டும் கொடுத்தா போதும். இயற்கை விவசாயம்கிறதால அதுக்கும் அதிக செலவு பிடிக்காது.

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

ஊடுபயிரிலும் உன்னத வருமானம்!

மொத்தம் 350 தென்னை மரம் இருக்கு. அதன் மூலமா வருஷத்துக்கு ஒண்ணேகால் லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கிது. அதுல ஊடுபயிரா 300 நாட்டு எலுமிச்சை இருக்கு. ஒரு மரத்துல வருஷத்துக்கு 35 கிலோ பழம் கிடைக்கும். அந்தக்கணக்குல 10 ஆயிரம் கிலோவுக்குக் குறையாம மகசூலாகும். இந்த எலுமிச்சைக்கு சராசரியா ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் கிடைக்கும். அதன் மூலமா,4 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.5 ஏக்கர்ல இருக்கிற தென்னை, எலுமிச்சை ரெண்டுலயும் சேர்த்து எல்லா செலவும் போக 2 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.

இப்போ, ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தையிலதான் எலுமிச்சையை விற்பனை செய்துட்டு வர்றேன். காய்கறிகளைவிட, எலுமிச்சை நிச்சய லாபம் கொடுக்குற பயிரா இருக்குது' என்று சந்தோஷமாகச் சொன்னார், ராமச்சந்திர ராஜா.  

தொடர்புக்கு,
ராமச்சந்திர ராஜா,
செல்போன்: 9443141379
பாஸ்கர்,
செல்போன்: 9585735787

இயற்கை முறையில் எலுமிச்சை சாகுபடி!

எலுமிச்சை சாகுபடி செய்யும் விதம் பற்றி ராமச்சந்திர ராஜா சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

18 அடி இடைவெளி!

'தேர்வு செய்த நிலத்தை நன்றாக உழவு செய்து, ஐந்து நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் உழவு செய்ய வேண்டும். பிறகு, மூன்று நாள் காய விட்டு 18 அடிக்கு 18 அடி இடைவெளியில், ஒன்றரை அடி நீளம், அகலம் மற்றும் ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழியை ஆறவிட்டு மேல் மண்ணை குழியில் பாதி அளவுக்கு நிரப்பி, மையப் பகுதியில் ஒட்டு எலுமிச்சைச் செடியை வைத்து, மண்ணை நிரப்பி தண்ணீர் கொடுக்க வேண்டும். நடவின் போது உரம் எதுவும் போடத்தேவையில்லை. ஏக்கருக்கு 134 கன்றுகள் தேவைப்படும். நடவு செய்ததில் இருந்து 5 மாதங்கள் வரை மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 6-ம் மாதம் முதல் 10-ம் மாதம் வரை நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், 10 மாதங்களுக்கு மேல் காய்ப்புக்கு வரும் வரை ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும் (இவர் சொட்டுநீர்ப் பாசன முறையில் பாசனம் செய்கிறார்).

பூச்சிகளுக்கு வேப்பங்கொட்டை!

நடவு செய்த 15-ம் நாளில் புதிய தளிர்கள் வரும். அந்தச் சமயத்தில் வண்ணத்துப்பூச்சிகள், தளிர்களின் மீது முட்டையிட்டுச் செல்லும். அம்முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளைத் தின்னும். 5 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் தண்ணீர் விட்டு மாவு போல் அரைத்து, 15 லிட்டர் தண்ணீரில் கலந்து ஐந்து நாட்கள் ஊற வைக்க வேண்டும். அந்தக் கரைசலில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பான் மூலமாக 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வந்தால், வண்ணத்துப்பூச்சிகள் வராது.

நடவு செய்த இரண்டு ஆண்டுகள் வரை மாதம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 200 மில்லி நீர்த்த சுண்ணாம்புக் கரைசல் சேர்த்து தண்டுப்பகுதியில் தெளித்து வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். எலுமிச்சை காய்ப்புக்கு வந்த பிறகு இவை தேவையிருக்காது.

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

பூக்களை பறியுங்கள்!

6-ம் மாத தொடக்கத்தில் செடியைச் சுற்றி ஒன்றரை அடி விட்டத்துக்கு வட்டப்பாத்தி எடுத்து... ஒரு செடிக்கு 3 கிலோ என்ற கணக்கில் ஆட்டு எரு இட வேண்டும். 8-ம் மாதத்தில் முதல் பருவப் பூக்கள் பூக்கும். இந்த பூக்களைக் கிள்ளி விட வேண்டும். 10ம் மாதத்தில் 200 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில், 180 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர், 20 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 2 கிலோ சூடோமோனஸ், ஒரு கிலோ பேசிலோமைசஸ் லிலாசினஸ் ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி ஐந்து நாட்கள் வைத்திருந்து... ஒரு லிட்டர் கலவைக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் சொட்டு நீர் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ  செடிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

16 மற்றும் 24-ம் மாதங்களில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் பருவப் பூக்கள் பூக்கும். இவற்றையும் கிள்ளி விடவேண்டும். 31-ம் மாத இறுதியில் 10 நாட்கள் தண்ணீர் விடுவதை நிறுத்தி, செடியை வாடவிட்டு, 11-ம் நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். அடுத்த 8 முதல் 15 நாட்களில் புதிய தளிர்களும், பூக்களும் அதிகம் தென்படும். இந்த சமயத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்சி வந்தால், அடுத்த 60 நாட்களில் அதாவது 34-ம் மாதத்தில் எலுமிச்சை முதல் பறிப்புக்கு வந்து விடும். காய்ப்புக்கு வந்தவுடன், ஒரு செடிக்கு 30 கிலோ ஆட்டுப்புளுக்கை, 5 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 30 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். செடிகளின் வளர்ச்சியைப் பொறுத்து சாணத்தின் அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.’

எலுமிச்சை தாய்ச்செடி... நாரத்தை அடிச்செடி!

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

கோவில்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கர், ''ராமச்சந்திர ராஜா தென்னைக்கு ஊடாக எலுமிச்சையை நட்டு நல்ல மகசூல் எடுத்துக்கிட்டிருந்தார். அவர் தோட்டத்துல இருந்த எலுமிச்சை மரங்கள்லயே 30 மரங்களைத் தேர்ந்தெடுத்து... எலுமிச்சையை தாய்ச் செடியாவும் நாரத்தையை அடிச்செடியாவும் வெச்சு ஒட்டுக்கட்டி பதியம் போட்டு கன்னுகளை உருவாக்கினோம். இந்தக் கன்னுகளை தை, மாசி, பங்குனி மாதங்கள்ல நட்டா நல்ல பலன் கிடைக்கும். அதாவது, பகல் நேரத்துல சுமாரான வெயிலும், இரவு நேரத்துல குளிர்ச்சியாவும் இருக்குற மாதங்கள்ல நடவு செய்யணும். செடி நடவு செய்த 5 மாசத்துக்கு ஆடு, மாட்டுச் சாணம்னு எந்த உரமும் போடக்கூடாது. நிலத்தோட மேல் மண்ணைத்தான் குழிக்குள் போட்டு மூடணும். அந்த மண்ணுல செடிக வளர்றதுக்குத் தேவையான எல்லா நுண்ணூட்டச் சத்துக்களும் இருக்கிறதால வேர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

வாய்க்கால்ப் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம்தான் நல்லது. தண்ணீர் இல்லாத காலங்கள்ல ஈரப்பதம் இருக்கிறதுக்காக மரத்துக்கு அடியில் தென்னைநார்க்கழிவுகள், வைக்கோல் மாதிரி பொருட்களைப் பரத்தி விடலாம். எலுமிச்சை வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர். இந்த ஒட்டு ரகத்துல விதைகள் குறைவா இருக்கும். பழத்தோல் தடிமனாவும், சாறு அதிகமாவும் இருக்கும். அதோட நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா இருக்கும்' என்றார், சிரித்தபடி.

நான் கற்ற பாடம்!

'எலுமிச்சையைப் பொறுத்தவரையில் மழைக்காலங்களில் நடவு செய்யக்கூடாது. கோடை காலத்தில்தான் நடவு செய்யணும். மழைக்காலத்துல நடவு செய்தா களை பிரச்னை அதிகமா இருக்கும். கோடை காலத்துல மூடாக்கு போடலாம். இதனால தண்ணீர்த் தேவை குறையும். எலுமிச்சை சாகுபடியில தவறு பண்ணினது மூலமா இந்த ரெண்டு விஷயத்தையும் அனுபவப்பூர்வமா கத்துக்கிட்டேன்' என்கிறார், ராமச்சந்திர ராஜா.

 இ.கார்த்திகேயன்

 படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism