Published:Updated:

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

7 ஏக்கர்...மாதம் ரூ.98 ஆயிரம்...

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

7 ஏக்கர்...மாதம் ரூ.98 ஆயிரம்...

Published:Updated:

இனிப்பான வருமானம் கொடுக்கும் இளநீர்!

''பசுமை விகடன்ல படிச்சுட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா போய் கன்னு வாங்கிட்டு வந்து நட்டோமுங்க... இப்போ மாசா மாசம் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்குதுங்க' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள எரசனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம்-வஞ்சிக்கொடி தம்பதி.

நுரை ததும்பும் தண்ணீர்... சலசலத்து ஓடும் அமராவதி ஆறு... அதன் கரையில் வளைந்து பிரிந்து போகும் வண்டிப்பாதை. அதில் சில நிமிடங்கள் பயணித்தால் வந்து சேர்கிறது, சுப்பிரமணியத்தின் பண்ணை. எட்டிப் பறிக்கும் உயரத்தில் வளர்ந்து நிற்கும் ஏழு ஏக்கர் தென்னை. அதில் ஆரஞ்சு வண்ணத்தில் அழகு காட்டித் தொங்கும் இளநீர்க்குலைகள் என்று குளுமை சாமரம் வீசும் தோப்புக்குள் இளநீர் பறிப்பில் இருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

''ஜீரோ பட்ஜெட் இளநீருங்க... குடிச்சுப் பாருங்க சும்மா ஜில்லுனு தித்திப்பா இருக்கும்'' என்று சொல்லியபடி இளநீரைச் சீவி நம் கையில் கொடுத்தபடியே பேசத்தொடங்கினார்.

நிரந்தர சாகுபடிக்கு மாற்றிய சூழல்!

''இந்த இடத்துல எனக்கு கிணத்துப் பாசனத்துல 15 ஏக்கர் நிலம் இருக்கு. வெங்காயம், மஞ்சள், குச்சிக்கிழங்கு (மரவள்ளி), கடலைனு எதைப் போட்டாலும் அமோக விளைச்சல் கொடுக்கிற செம்மண் பூமி. பக்கத்துல ஆறு ஓடுது. பருவமழை சரியா பெய்ஞ்சு ஆத்துல தண்ணி வர்றப்போ ஊத்துக்கசிவில பாசனக் கிணறு நொம்பிடும். அந்த சமயத்துல 15 ஏக்கருக்கும் பஞ்சமில்லாம, பாசனம் கிடைக்கும். ஆறு வறண்டுச்சுனா... போர்வெல் காப்பாத்திடும்.

ஆள் பத்தாக்குறை, கட்டுபடியாகாத விலைனு மாத்தி மாத்தி பிரச்னை வந்ததால, நிரந்தர பயிர் சாகுபடிக்கு மாற முடிவெடுத்து... ஏழு ஏக்கர்ல அல்போன்ஸா, செந்தூரா, நீலம், பெங்களூரானு மா ரகங்களை நடவு செஞ்சு, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். ஒரு ஏக்கர்ல களத்துமேடு, தொழுவம் இருக்கு. மீதி ஏழு ஏக்கர்ல மட்டும் வருஷ வெள்ளாமை வெச்சோம். ஆனா, வருஷ வெள்ளாமை தோதா அமையல. அதனால, இந்த ஏழு ஏக்கர்லயும் வேற ஏதாவது நிரந்தர பயிரைப் போடலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான்... 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிட்ட பசுமை விகடன்ல, மாண்டியா இளநீர் பத்தி 'கலர் கலரா இளநீ... கட்டுக்கட்டா பணம்’ங்கிற தலைப்புல செய்தி வந்துச்சு. அதுல, தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவப்பிரகாசம்கிறவரைப் பத்தி எழுதியிருந்தாங்க. சிவப்பிரகாசத்துக்கிட்ட பேசின பிறகு, நாளுக்கு நாள் இளநீருக்கான தேவை அதிகரிச்சுக்கிட்டே வர்ற சூழல்ல, நாமளும் அதை சாகுபடி செய்யுறதுதான் நல்லதுனு முடிவு செஞ்சேன். அடுத்தடுத்து கொஞ்சம் வேலைகள் இருந்ததால உடனடியா செய்ய முடியலை. நடவுக்கு கொஞ்ச வருஷம் தள்ளிப் போயிடுச்சு' என்ற சுப்பிரமணியம் தொடர்ந்தார்.

ஒரு கன்னு 50 ரூபாய்!

'சௌகாட் ஆரஞ்ச் ட்வார்ஃப் (Chowghat Orange Dwar) என்ற ரகத்தைத்தான் சிவப்பிரகாசம் நட்டிருந்தார். சி.ஓ.டினு சொல்லப்படுற அந்த ரக கன்னு, மாண்டியாவில் இருக்குற தென்னை வளர்ச்சி வாரியத்துல கிடைக்கும்கிற தகவலையும் அவரே சொன்னார். நானும் அங்க முறைப்படி பதிவு செஞ்சு 600 கன்னுகள வாங்கிட்டு வந்து நிழலான பகுதியில பதியம் போட்டு நடவு செஞ்சேன். லாரி வாடகை எல்லாம் சேர்த்து ஒரு கன்னுக்கு 50 ரூபாய் அடக்கமாச்சு. வழக்கமா தென்னங்கன்னுகளை 25 அடி இடைவெளியிலதான் நடவு செய்வாங்க. இது குட்டை ரக தென்னைங்கிறதால, மட்டையோட நீளம் குறைவாகத்தான் இருக்கும். அதனால 22 அடி இடைவெளியில நடவு செஞ்சேன்.

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

ஒரு இளநீர் 14 ரூபாய்!

நடவு செஞ்சு நாலு வருஷம் ஆச்சு. போன வருஷத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இளநீர் வெட்ட ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷம் போனாத்தான் முழுமகசூல் கிடைக்கும். இப்போதைக்கு மாசாமாசம் கிடைக்கிறதை மொத்த வியாபாரிக்கே விலை பேசிக் கொடுத்துடறேன். வெட்டுக்கூலி, வேன் வாடகை எல்லாம் அவங்க செலவு. நமக்கு ஒரு இளநீருக்கு 14 ரூபாய் கிடைக்குது. ஏழு ஏக்கர்லயும் சேர்த்து மாசம் 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்த நாலு வருஷத்துல மொத்தம் எனக்கு 90 ஆயிரம் ரூபாய்தான் செலவாகியிருக்கு. காய் வெட்ட ஆரம்பிச்ச ஒரு மாசத்துலயே செலவு செஞ்ச பணம் கிடைச்சுடுச்சு'' என்று பெருமிதப்பட்ட சுப்பிரமணியம்,

''முதல் இதழ்ல இருந்து பசுமை விகடனைக் குடும்பத்தோடு ஆர்வமா படிச்சுக்கிட்டு வர்றோம். அது மூலம் நாங்க கத்துகிட்ட விவசாய வழிமுறைகள் ஏராளம். ரசாயன விவசாயம் செஞ்சுக்கிட்டு வந்த எங்களை ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்தி, நாட்டு மாடு வாங்க வெச்சதோட, 7 வருஷமா தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யுறதுக்கு தூண்டுகோலா இருக்கிற பசுமை விகடன், இப்ப மாசா மாசம் வருமானம் பாக்கறதுக்கும் காரணமா இருக்கு'' என்று நெகிழ்ந்து விடைகொடுத்தார்.

ஏக்கருக்கு 83 கன்றுகள்!

தென்னை சாகுபடி செய்யும் விதம் பற்றி சுப்பிரமணியம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

'தேர்வு செய்த நிலத்தில் 22 அடி இடைவெளியில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் 'ஜிக் ஜாக்’ முறையில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 83 குழிகள் வரை எடுக்கலாம். குழிகள் எடுத்து, மூன்று மாதங்கள் வரை நன்றாக ஆறப்போட வேண்டும். பிறகு, குழிகளில் பாதி அளவு மண் நிரப்பி, கால் பங்குக்கு சலித்த மணல் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றைக் கொட்டி சமன் செய்து... ஒவ்வொரு குழிக்கும் தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை இட்டு கன்றுகளை நடவு செய்து, மீதமுள்ள மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். கன்றுகளை பீஜாமிர்தக் கரைசலில் முக்கி எடுத்து விதைநேர்த்தி செய்த பிறகே நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்தவுடன் பாசனம் செய்து... அதன் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 3ம் ஆண்டில் கொஞ்சமாக இளநீர் காய்ப்பு இருக்கும். தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 5ம் ஆண்டு முதல் முழு மகசூல் கிடைக்கும். மழை இல்லாத நாட்களில், மரம் ஒன்றுக்கு சராசரியாக 100 லிட்டர் பாசன நீர் தினந்தோறும் கொடுக்கக்கூடிய தண்ணீர் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே தென்னை விவசாயம் 100 சதவிகிதம் பொருந்தும். இல்லையேல் பெயர் அளவுக்கே மகசூல் கிடைக்கும்.

ஊட்டத்துக்கு அமிர்தம்...வண்டுகளுக்கு அஸ்திரம்!

தென்னையைப் பொறுத்தவரை தண்ணீர் உட்பட இடுபொருட்களையும் சரியான நேரங்களில் கொடுத்தால் மட்டும்தான் மரம் நமக்கு விளைச்சல் கொடுக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீர் வழியே கொடுத்து வர வேண்டும். பருவமழைக் காலங்களில் (ஆண்டுக்கு இரு முறை) ஒவ்வொரு மரத்துக்கும் 15 கிலோ கோழி எரு இட வேண்டும். வளரும் பருவத்தில் உள்ள தென்னங்குருத்துகளை காண்டாமிருக வண்டு, கூன்வண்டு போன்றவை தாக்கும். சில நேரங்களில் மரங்களின் தண்டுப்பகுதியில் ஓட்டை போட்டு சேதப்படுத்தி அடியோடு சாய்த்து விடும். தென்னை விவசாயத்தின் பெரிய சவாலே இதுதான்.

இந்தச் சிக்கலை அக்னி அஸ்திரம் மூலமாக சமாளிக்கலாம். 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து அதில் 50 மில்லி எடுத்து வண்டு இருப்பதாக உணரும் குருத்துக்குள் ஊற்றினால் உள்ளே இருக்கும் வண்டு வெளியேறி விடும். அல்லது சலித்த மணலில் சிறிது வேப்ப எண்ணெய் சேர்த்துப் பிசைந்து குருத்துக்குள் தூவினால் வண்டுகள் மாண்டு விடும்.

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

மாதம் ஆயிரம் இளநீர்!

குட்டை ரகங்களின் மட்டைகளுக்கு குலைகளைத் தாங்க வலு இருக்காது. அதனால், குலைகள் ஒடிந்து விழுந்து விடும். இதைத்தடுக்க... பாரம் தாங்காமல் கீழ் நோக்கி தொங்கும் குலைகளில் கயிறால் இழுத்து வலுவான மேல்மட்டையில் கட்ட வேண்டும். குறிப்பிட்ட உயரம் மரம் வளர்ந்த பிறகு குலைகளைக் கட்டத் தேவை இருக்காது. இந்த சி.ஓ.டி.ரக தென்னையிலிருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் வெட்டலாம். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் ஒரு மரத்தில் இருந்து 15 இளநீர்கள் வரை வெட்டலாம். சராசரியாக ஒரு ஏக்கரிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஆயிரம் இளநீர் பறிக்கலாம். 5 ஆண்டுகளில் முழு மகசூலுக்கு வரும்போது இளநீர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.''

தொடர்புக்கு,

ஆர்.சுப்பிரமணியம்,  செல்போன்: 9942596971

 இயற்கை இளநீர் சுவை அதிகம்!

இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....

சுப்பிரமணியத்தின் தோப்பில் இளநீர் வெட்டிக்கொண்டிருந்த தாராபுரத்தைச் சேர்ந்த வியாபாரி பழனி, ''தாராபுரம், திருப்பூர்னு பல ஊர்களுக்குக் கொண்டுபோய் விற்பேன். வழக்கமா இந்தக் குட்டைரக ஆரஞ்சு கலர் இளநியில 500 மில்லி வரைதான் இளநீர் இருக்கும். குடிச்சா சப்புனுதான் இருக்கும். ஆனா, இவங்க தோட்டத்து இளநியில 700 மில்லிக்கும் மேல தண்ணி இருக்குது. ருசியும் நல்லா இருக்குனு குடிக்கிறவங்க சொல்றாங்க. தினமும் இந்த இளநீர் வேணும்னு கேட்கிறாங்க. அதனால வாரா வாரம் பறிக்கிற மாதிரி சுழற்சி முறையில ஏழு ஏக்கர்லயும் பறிக்குறேன். இயற்கை விவசாயம் செஞ்சா இளநீர் இப்படி ருசியா இருக்கும்னு பலரும் சொல்றாங்க. எல்லோரும் அதை செஞ்சா எங்களைப் போன்ற இளநீர் வியாபாரிங்க காட்டுல மழைதான்'' என்றார்

அக்னி அஸ்திரம்

புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

 ஜி.பழனிச்சாமி

படங்கள்:  தி.விஜய், த.ஸ்ரீநிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism