Published:Updated:

’ஒரு நாள் விவசாயி!’

பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, 'பசுமை விகடன்’. 'ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

’ஒரு நாள் விவசாயி!’

இந்த முறை நாம் தேர்ந்தெடுத்த இடம்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி கண்ணன்ராஜகோபாலனின் பண்ணை. தென்னை, மா, நெல், கரும்பு, தீவனப் பயிர்கள் என்று 25 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் பண்ணைக்குள் நுழைந்தவுடன் சில்லென்ற காற்று நம்மை வரவேற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பண்ணையின் உரிமையாளர் கண்ணன்ராஜகோபாலன் வெளியில் இருந்ததால், ஒரு நாள் பயிற்சியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீதர், ஜோசப், விஜயா, வித்யா, திவ்யா ஆகிய ஐந்து பேரை, செல்போன் வாயிலாக அறிமுகப்படுத்தினோம்.

’ஒரு நாள் விவசாயி!’

''இந்தப் பண்ணைக்கு வெளியிலிருந்து எந்த இடுபொருட்களையும் கொண்டு வர்றதில்ல. இங்க என்ன கிடைக்குதோ, அதை வெச்சுதான் விவசாயம் செய்றோம். 'பயிரே விளையாது’னு ஒதுக்கி விடப்பட்ட இந்த நிலத்துல, இயற்கை விவசாய முறையில 7 வருஷமா மகசூல் எடுத்துக்கிட்டிருக்கேன். இந்தப் பண்ணையில நீங்க கத்துக்கிறதுக்கு நிறைய விஷயம் இருக்கு. அதைப் பற்றி பண்ணை மேலாளர் கோட்டீஸ்வரன் உங்களுக்குச் சொல்வார்' என்று பண்ணை மேலாளரை அறிமுகப்படுத்தி வைத்தார் கண்ணன் ராஜகோபாலன்.

அறிமுகப்படலம் முடிந்ததும், கரும்பு நடவுக்குத் தயாராக இருந்த நிலத்துக்குச் சென்றோம். விதைக் கரும்பிலுள்ள 'பருப்பகுதி’யை பூமியை நோக்கியவாறு விஜயா வைக்க, ''அப்படி வைக்கக்கூடாது. பருப்பகுதியை மேலே பார்த்தவாறு மெதுவாக பூமியில் அழுத்தி வைத்து, லேசாக மண் மூடி விட்டால் போதும். 10 நாட்களில் முளைப்பு வந்துடும்'' என்று சொல்லிக் கொடுத்தார் கோட்டீஸ்வரன்.

'ஏன் உங்க நிலத்து மண் பாக்கிறதுக்கு வெள்ளையா இருக்கு?' என்ற திவ்யாவின் கேள்விக்கு...

'இது ஒருவகையான உவர்மண். வளம் குறைந்த மண்ணுனு சொல்வாங்க. ஆரம்பத்துல சணப்பு, தக்கைப்பூண்டுனு விதைச்சி மடக்கி உழுதோம். அடுத்தடுத்து இதே மாதிரி செய்யச் செய்ய நிலம் ஓரளவு பக்குவத்துக்கு வந்துடுச்சு. இப்போ, முதன்முறையா சொட்டுநீர்ப் பாசனத்துல கரும்பு நடவு போட்டிருக்கோம். நாத்து நடவு மூலமாவும், விதைக்கரும்பு விதைப்பு மூலவும் நடவு செய்றோம்' என்று பதில் தந்தார் கோட்டீஸ்வரன். அன்னக்கூடையில் விதைக்கரும்புகள் வந்து சேர... சொல்லிக் கொடுத்த மாதிரி அழகாக நடவு செய்தனர், ஒரு நாள் விவசாயிகள்.  

'கரும்புக்கு 4 அடிக்கு 4 அடி இடைவெளியில பார் எடுப்போம். பாரின் மேல் பகுதியில் ஊடுபயிராக வெங்காயத்தை நடவு போடுறப்போ கூடுதல் வருமானம் கிடைக்கும்'' என்ற கோட்டீஸ்வரன், வெங்காய நடவையும் சொல்லிக் கொடுக்க, அதன்படியே செய்து முடித்தனர் ஐந்து பேரும். அடுத்து நெல் வயலுக்கு அழைத்துச் சென்று ஒற்றை நாற்று நடவு பற்றிய வகுப்பை முடித்த கோட்டீஸ்வரன், அப்படியே உளுந்து வயலுக்கு அழைத்துச் சென்றார்.

’ஒரு நாள் விவசாயி!’

'உளுந்துலயும் ரகம் இருக்கா?' என்று ஜோசப் கேட்க... 'இருக்கே... இது, வம்பன்4 என்கிற ரகம். உளுந்தைத் தாக்கும் மஞ்சள் பூச்சிகளோட தாக்குதல் இந்த ரகத்துல குறைவு. ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் கிடைக்கும். நடவு போடுறப்போ எரு கொட்டி ரெண்டு தண்ணி கொடுத்தா போதும். 70 நாள்ல மகசூல் எடுத்துடலாம்' என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, மத்தியான வெயிலுக்கு மாடுகள் கத்த, ஆளுக்கொரு மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்து தண்ணீர் காட்டி, குளிப்பாட்டினார்கள். வேலை முடிந்ததும் பண்ணையிலேயே தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவை அனைவரும் ருசித்து, ரசித்து சாப்பிட்டனர்.  

’ஒரு நாள் விவசாயி!’

உணவுக்குப் பிறகு அனைவரும் தங்களின் விவசாய ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள... இயற்கை இடுபொருள் தயாரிப்பு, வட்டப்பாத்தி ஆகியவைப் பற்றி விளக்கமாகச் சொல்லிய கோட்டீஸ்வரன், 'இந்தத் தோட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு செடிக்கும் தண்ணியை அளந்துதான் கொடுத்துக்கிட்டு இருக்கோம். மொத்தம் 14 ஏக்கருக்கு 9 வால்வுகள் அமைச்சிருக்கோம். எந்த வால்வுக்கு எவ்வளவு தண்ணி போகணுங்கிறதை இந்தக் கருவியில பதிவு செஞ்சுட்டா, அதுபாட்டுக்கு ஓடிட்டு இருக்கும். இடையில் கரன்ட் போயிட்டு வந்தாலும், தானாவே ஆன் ஆகிடும். இதை கம்ப்யூட்டர் வழியாகவும் இயக்கலாம்' என்று சொல்லி முடிக்கவும், சூரியன் மேற்கே மறையவும் சரியாக இருந்தது. பண்ணையில் உள்ள அனைவருக்கும் நன்றி சொல்லியபடியே கிளம்பினார்கள், ஒருநாள் விவசாயிகள்.  

’ஒரு நாள் விவசாயி!’

ஒரே ஊட்டத்தில் நான்கு அறுவடை!

பண்ணையில் கீரை, கொத்தமல்லியை புதிய முறையில் பயிர் செய்து வருகிறார் மேலாளர் கோட்டீஸ்வரன். இதுபற்றி பேசிய அவர், 'பொலபொலப்பாக உழவு செய்த நிலத்தில் சதுர பாத்திகளை அமைத்துகொள்ள வேண்டும். பாத்தியில் உள்ள மண் மீது அடர்த்தியாக தொழுவுரத்தைத் தூவிவிட வேண்டும். பிறகு புங்கன், வேம்பு உள்ளிட்ட இலை, தழைகளை நிரப்பி அதன்மீது லேசாக மண்ணை நிரப்ப வேண்டும். மண்மீது விதைகளைத் தூவி பட்டாம்பூச்சிப் பாசன முறையில் தண்ணீர் இறைத்து வர வேண்டும். இந்த முறையில் ஒரு அறுவடை முடித்த பிறகு, எந்த ஊட்டங்களும் கொடுக்கத் தேவையில்லை. விதைகளை மட்டும் தூவி, தண்ணீர் பாய்ச்சி அறுவடை எடுக்கலாம். இந்த முறையில் 4 அறுவடை எடுக்க முடியும். கீரை, கொத்தமல்லி பறிக்கும் வேலையும் எளிதாக இருக்கும்' என்றார்.

ஒருநாள் விவசாயிகளின் பசுமையான அனுபவங்கள்:

வித்யா, வழக்கறிஞர்:  'இங்க கிளம்பினப்ப, 'உன்னோட வேலைக்கும் விவசாயத்துக்கும் என்ன சம்பந்தம்’னு வீட்ல கேட்டாங்க. ஆனா, இங்க வந்த பிறகு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இந்தப் பண்ணைக்கும், பசுமை விகடனுக்கும் பெரிய சல்யூட்.'

’ஒரு நாள் விவசாயி!’

திவ்யா, ஐ.டி ஊழியர்:  “என் வீட்டு நாய்க்குட்டியைக் கூட அடக்க பயப்படுற நான், இங்க அவ்வளோ பெரிய மாட்டையே அடக்கி குளிக்க வெச்சி வீராங்கனையா மாறிட்டேன். வீட்டுல சொல்லி எப்படியும் நிலம் வாங்கி அதுல இயற்கை விவசாயத்தைக் கண்டிப்பா பண்ணுவேன் பாருங்க.'

’ஒரு நாள் விவசாயி!’

விஜயா, பிஸியோதெரபிஸ்ட்:  'இங்க கத்துக்கிட்ட எல்லா விஷயத்தையும் ஊருக்குப் போய் வீட்ல இருக்கறவங்களுக்குச் சொல்லணும். வீட்டுப் பக்கத்துல இருக்கிறவங்களையும் விவசாயம் செய்ய வைக்கணும். இதுதான் என்னோட ஆசை.'

’ஒரு நாள் விவசாயி!’

ஜோசப், அரிசி மண்டி: 'பணம் செலவு பண்ணிக் கத்துக்க வேண்டிய வட்டப்பாத்தி முறையை எளிமையா சொல்லிக் கொடுத்திருக்காங்க. ’ஒரு நாள் விவசாயி'ங்கற இந்தத் திட்டம் கண்டிப்பா பல வாழ்நாள் விவசாயிகளை உருவாக்கும்.'

’ஒரு நாள் விவசாயி!’

ஸ்ரீதர், அரசு ஊழியர்: 'ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுனு சொல்வாங்க. ஆனா, பசுமை விகடன் மூலமா கரும்பு நடறது, களை பறிக்கிறது தொடங்கி ,வட்டப்பாத்தி வரைக்கும் நிறைய விஷயத்தைக் கத்துக்கிட்டேன். இத வெச்சி ஒரு மாடித்தோட்டம் போடணும்.'

த.ஜெயகுமார், க.தனலட்சுமி

படங்கள்: தி.ஹரிஹரன்

முதல் இதழில் அறிவிப்பு வெளியானதுமே... பல்துறையைச் சேர்ந்தவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களின் பெயர்களைப் பதிவு செய்தவண்ணம் உள்ளனர். இவர்களின் ஆர்வம் எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. இப்படி பதிவு செய்தவர்களை அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று 'ஒரு நாள் விவசாயி’யாக மெருகேற்றும் பணி தொடரும்.

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

'விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே

044-66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, குரல் வழி சேவை மூலம் உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.