Published:Updated:

மாத்தி யோசி

வேங்குழல்... சீங்குழல்!

ப்போ எங்க பார்த்தாலும், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட் கார்னு எல்லாமே ஸ்மார்ட்மயமா இருக்கு. உடனே இப்பதான் இந்த ஸ்மார்ட் சமாச்சாரம் வந்திருக்குனு நினைக்க வேணாம். பல நூறு வருஷத்துக்கு முன்னயே, நம்ம முன்னோருங்க, ஸ்மார்ட்டான விஷயங்களைச் செய்திருக்காங்க.

மாத்தி யோசி

பழைய காலத்து ஓவியத்துல, மாடு மேய்க்கும் கிருஷ்ணன் ஓவியத்தை உத்துப்பாருங்க. ஒரு புல்லாங்குழலை ஊதிக்கிட்டு இருப்பாரு. இன்னொரு புல்லாங்குழலை இடுப்புல சொருகியிருப்பாரு கிருஷ்ணன். இவர் மட்டுமில்லீங்க, அந்தக் காலத்துல மாடு மேய்க்கப் போற எல்லாருமே கட்டாயம் ரெண்டு புல்லாங்குழல் வெச்சிருப்பாங்க. ஒரு புல்லாங்குழலுக்கு 'வேங்குழல்’னும், இன்னொரு புல்லாங்குழலுக்கு 'சீங்குழல்’னும் பேரு. வேங்குழலை ஊதினா, மாடுங்க மேய்ச்சலுக்குப் போகும். சீங்குழலை ஊதினா, மேய்ச்சலுக்குப் போன மாடுங்க, பட்டிக்குத் திரும்பும். ஆக, நூத்துக்கணக்கான மாடுகளை மேய்க்கக்கூட, நிறைய ஆளுங்க தேவைப்படாது. இந்தப் புல்லாங்குழல்களை ஊதியே, மாடுகள 'ஸ்மார்ட்டா’ மேய்ச்சிருக்காங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வண்டி மாடு ஓட்டுற பழக்கம், கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுக்கிட்டு வருது. அந்தக் காலத்துல, உழவு மாட்டையும், வண்டி மாட்டையும் ஓட்ட கத்துகிட்டாத்தான், முழுமையான விவசாயினு சொல்லுவாங்க. மாடுகள வேலைக்குப் பயன்படுத்தும்போது, அதுகளுக்கு ஏத்த ஒலியைக் கொடுக்கணும். உதாரணத்துக்கு மாட்டு வண்டி ஓட்டுறோம்.... வண்டியை வலதுபக்கமா திருப்பணும், அதுக்கு என்ன செய்யணும் தெரியுங்களா? ''மப், மப், மப், மப்னு மப்பு கொட்டணும். இடதுபக்கம் திருப்பணும்னா... நொச், நொச், நொச்னு நொச்சிக் கொட்டினா போதும். மாடுங்க அழகா திரும்பிடும். ஆக, மாடுகளை மேய்க்கவும், வண்டியில பூட்டி ஓட்டவும், அதுகளை சாட்டையால அடிக்க வேணாம், சும்மா ஒலி எழுப்பியே, மாடுகளை வேலை வாங்குன, நம்ம முன்னோருங்க ஸ்மார்ட்டான ஆட்கள்தானே!

உலக அளவுல பசும்பால்தான் அதிகமா குடிக்கிறாங்க. இந்தியாவுல மட்டும்தான், எருமைப்பால் அதிகமா குடிக்கிறோம். இதுக்கு முக்கிய காரணம், பசும்பாலை விட, எருமைப்பால்ல, கொழுப்புச்சத்து அதிகம். சில டீ கடையில காபி குடிச்சா, அந்தச் சுவை, அடுத்த மூணு மணி நேரத்துக்கு நாக்குலேயே இருக்கும். இந்தச் சுவையோட ரகசியத்தை காபி கடையில விசாரிச்சிங்கனா, பளீர்னு சொல்லிடுவாங்க, 'எருமைப் பால்தான் காரணம்’கிறதை!  

இப்போ, பால் பவுடர் தயாரிச்சு, தேவைப்படறப்போ பயன்படுத்துறோம். பல நூறு வருசத்துக்கு முன்னமே, குதிரையோட பாலைக் காய வெச்சு, பசை மாதிரி செய்திருக்காங்க. எப்போ, பால் தேவையோ, அப்போ இந்தப் பசையை எடுத்து, சுடுதண்ணியில போட்டா, பால் ரெடியாகிடும். பொதுவா இந்த முறையை, ரொம்ப தூரம் பயணம் செய்யுற வியாபாரிகளும், படை வீரர்களும்தான் செய்திருக்காங்க.

மாத்தி யோசி

ஆட்டுப்பால்தான் சத்தானதுனு நமக்குத் தெரியும். ஆனா, அதைக் குடிக்கிறதுக்கு மட்டும் மனசு வராது. காரணம், ஆட்டுப்பால் ஒருவிதமான வாடை அடிக்கும். இதை சில பேரு விரும்பமாட்டாங்க. ஆனா, மாட்டுப்பாலைக் காட்டிலும், ஆட்டுப்பால்தான் மனுஷங்களுக்கு ஏத்தது. குடிச்சவுடனே செரிமானம் ஆகிடும். மாடுகளைவிட, ஆடுங்கதான், துளசி, தும்பை, துத்தி, தூதுவளைனு விதம்விதமான மூலிகைகளைத் தின்னும். இதனால, இந்தப்பால் மூலம் மூலிகைச் சத்தும் குடிக்கிறவங்களுக்கு வந்து சேரும். இந்த சங்கதி தெரிஞ்சவங்க, வாய்ப்பு கிடைக்கும்போது ஆட்டுப்பாலைத் தவறாம குடிப்பாங்க.

நம்ம நாட்டு ஆட்டு இனத்துல, ஜமுனாபாரி ரகம்தான் நிறைய பால் கொடுக்கும். வட இந்தியாவுல, இதை பால் உற்பத்திக்காகவே வளர்க்கிறாங்க. ஒரு ஆடு, 2 லிட்டர் பால் கூட கொடுக்கும். 5 ஆடு வெச்சிருக்கிற விவசாயிக்கு தினமும் 10 லிட்டர் பால் கிடைக்கும். இதனால, வட மாநிலத்தில, குறிப்பா உத்தரபிரதேசத்துல ஆட்டுப்பால் விற்பனை ஜோரா நடக்குதுங்க.

செம்மறியாட்டுப் பால்ல, பசும்பாலை விட கொழுப்புச் சத்து அதிகம். செம்மறியாடுங்க குளிர் பிரதேசத்துலயும் வளரும். இதனால, சீஸ் தயாரிக்க, பசும்பாலை விட, செம்மறியாட்டுப் பாலைத்தான் வெளிநாட்டுல பயன்படுத்துறாங்க. சீஸைப் பொறுத்தவரைக்கும், அது எவ்வளவு வருஷம் பழசா இருக்கோ, அப்பதான் அதுக்கு மவுசும், விலையும்கூட. அதனால, சீஸ் செய்தவுடனே, பல வருஷம் பாதுகாப்பா வெச்சிருந்து விற்பனை செய்வாங்க. நம்ம நாட்டுல தயாரிக்கிற சீஸ், பசும்பால் மூலமாத்தான் செய்யுறாங்க.

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்