Published:Updated:

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

35 சென்ட்... 93 ஆயிரம்...

க்காளி் சாதம், வெஜிடபிள் பிரியாணி, மட்டன் பிரியாணி, புலாவ், குஸ்கா... என மசாலா சேர்த்து சமைக்கப்படும் அத்தனை உணவுகளிலும் புதினா இலை கட்டாயம் இடம்பெறும். அதோடு, இதில் செய்யப்படும் துவையலுக்கு ஊறாத நாக்குகளே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம்.

அந்தளவுக்கு நமது உணவில் ஒன்றிப்போய் இருக்கிறது, மணமும் மருத்துவக் குணமும் நிறைந்த புதினா. உணவுக்கு மணம் சேர்ப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு பணம் சேர்க்கும் பயிராகவும் இருக்கிறது, புதினா. இந்த விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் தொடர்ந்து புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் அதிகளவில் புதினா பயிரிடப்படுகிறது.

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூளகிரி-பேரிகை சாலையில் நான்கு கிலோமீட்டர் சென்று, பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, ஒட்டர்பாளையம். இங்கு மேற்கே உள்ள மேட்டு நிலங்களில் பச்சைப்புல்வெளி போல பரந்து விரிந்து கிடக்கின்றன, புதினா தோட்டங்கள். ஒரு மதிய வேளையில், புதினா வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பனைச் சந்தித்தோம்.

“இந்தப்பகுதி முழுக்க ஒரு காலத்துல மேட்டு நிலங்கள்தான். அவரை, துவரை, சோளம், நிலக்கடலைனு மானாவாரிப் பயிர்களைத்தான் வெள்ளாமை செய்வோம். அதோட ஆடு, மாடுகளையும் மேய்ப்போம். இதுதான் எங்களுக்கு ஜீவாதாரம். இந்தப்பகுதியில மழை குறைவா இருந்தாலும், மிதமான குளிர் இருந்துக்கிட்டே இருக்கும்.

முப்பது வருஷத்துக்கு முன்ன கிழக்கே (வேலூர் மாவட்டம்) இருந்து வந்த ஒரு குடும்பம்தான் இந்தப் பகுதியில முதல்முறையா புதினாவைப் பயிர் செஞ்சாங்க. அதைப்பாத்து மானாவாரி விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்த மத்த விவசாயிகளும், கிணறு தோண்டி பம்ப்செட் வெச்சு புதினாவைப் பயிர் செய்ய ஆரம்பிச்சாங்க. அதுல நல்ல வருமானம் கிடைக்கவும், அப்படியே கொத்தமல்லி, கீரை வகைகளையும் பயிர் செய்ய ஆரம்பிச்சிட்டோம். அப்புறம் மானாவாரி நிலங்கள் எல்லாம் இறவைப் பாசன நிலங்களா மாறிடுச்சு. முன்ன கிணத்துப் பாசனத்துல இருந்த விவசாயம், இப்போ போர்வெல் பாசனத்துல நடந்துக்கிட்டு இருக்கு” என்று முன்னுரை கொடுத்த முனியப்பன், தொடர்ந்தார்.

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

செம்மண் நிலங்களில் செழித்து வளரும்!

“நாங்க அண்ணன், தம்பிகள் நாலு பேரு. மொத்தமா 2 ஏக்கர் நிலமிருக்கு. புதினாவை 20 வருஷமா பயிர் செய்றோம். இப்போ 75 சென்ட்ல புதினா போட்டிருக்கோம். 40 சென்ட்ல நாட்டுப் புதினாவும் (இது ஒரு வகையான ஆராய்ச்சி ரகம்), 35 சென்ட்ல வீரிய ரகமும் இருக்கு. பொதுவா, செம்மண், களிமண் நிலங்கள்ல புதினா நல்லா வளரும். எங்க நிலம் லேசான செம்மண் கலந்த மணல் பகுதி. இதுலயும் நல்ல விளைச்சல் கொடுத்துக்கிட்டிருக்கு. இதை ஒரு முறை நடவு செஞ்சுட்டு முறையா பராமரிச்சா... அஞ்சு வருஷம் வரைக்கும் மகசூல் எடுத்துக்கிட்டே இருக்கலாம்” என்ற முனியப்பன், 35 சென்ட் நிலத்தில் புதினா சாகுபடி செய்யும் முறை பற்றி சொன்ன விஷயங்களைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

25 நாளில் அறுவடை!

‘‘புதினாவுக்கு வைகாசி, கார்த்திகைப் பட்டங்கள் ஏற்றவை. 35 சென்ட் சாகுபடி நிலத்தைக் களைகள் நீங்க நன்கு உழவு செய்து, 10 நாட்களுக்குக் காய விட வேண்டும். பிறகு, ஒரு டிராக்டர் எருவைக் கொட்டி பரப்பி சதுரப் பாத்திகளை அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நான்கு மூட்டை வீரிய ரக புதினா விதைக்குச்சிகளை 2 முதல் 3 அங்குல இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடவு ஈரம் காய்ந்த பிறகு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்குள் துளிர் வரத்துவங்கும். 10-ம் நாள் களையெடுத்து, பரிந்துரைக்கப்படும் உரத்தையும், வளர்ச்சி ஊக்கியையும் இட வேண்டும். புதினா செடி வளர்ந்த பிறகு, இலைகள் மீது ரசாயன உரத்தையோ தொழுவுரத்தையோ தூவக்கூடாது. அப்படித் தூவினால், இலைகள் அழுகிவிடும். வேர் அழுகல், இலை அழுகல் நோய்கள் தாக்கினால், தகுந்த தெளிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

நடவு செய்த 20-ம் நாளுக்கு மேல் தேவைப்பட்டால் களை எடுக்க வேண்டும். 25-ம் நாளில் புதினா அறுவடைக்குத் தயாராகி விடும். நாட்டு ரகமாக இருந்தால், 35-ம் நாளில் அறுவடைக்கு வரும். வளர்ச்சி ஊக்கிக் கொடுப்பதைப் பொறுத்து வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். வீரிய ரகத்தில் 25 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். நாட்டு ரகத்தில் 35 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.’

சாகுபடிப்பாடம் முடித்த முனியப்பன், வருமானம் பற்றிச் சொன்னார்.

5 அறுவடையில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்!

“சூளகிரிதான் புதினாவுக்கு முக்கியச் சந்தை. இந்தச் சந்தையை மையமா வெச்சுதான் சுத்துப்பட்டு கிராமங்கள்ல புதினாவைப் பயிர் செய்றாங்க. சந்தையில மூட்டைக் கணக்குலதான் வியாபாரிகள் புதினாவை வாங்குவாங்க. ஒரு மூட்டை, 400 ரூபாய்க்கு விற்பனையானாலே, லாபம்தான். ஒரு மூட்டைக்கு 400 சின்ன புதினாக்கட்டுகள் பிடிக்கும்.

35 சென்ட்ல வைகாசிப் பட்டத்துல (ஜூன் மாதம்) ஹை-பிரீட் ரகத்தை நடவு போட்டேன். இந்த தை மாசத்தோட 5 அறுப்பு முடிச்சிருக்கேன். தண்ணி பத்தாக்குறையால அறுவடை தாமதமாகிடுச்சு. இல்லாட்டி மாசத்துக்கு ஒரு அறுவடை சரியா வந்திருக்கும்.

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

ஒரு அறுப்புக்கு சராசரியா 35 மூட்டை அளவுல கிடைச்சுது. முதல் அறுவடையப்போ விலை உச்சத்துல இருந்ததால ஒரு மூட்டை 900 ரூபாய்க்கு போச்சு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விலை இறங்கிடுச்சு. இந்த அஞ்சு அறுப்புக்கும் சேத்து, மொத்தமா ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. நடவுல இருந்து இதுவரைக்கும் மொத்தம் 41 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகியிருக்கு. அதுலயே 93 ஆயிரத்து 250 ரூபாய் லாபம் கிடைச்சிருச்சு. இன்னும் தொடர்ந்து அறுவடை பண்ணிக்கிட்டே இருக்கலாம். தோட்டத்துக்குத் தேவையான பாசனத் தண்ணி, எங்க அண்ணன் கிணத்திலிருந்து வர்றதால மூணுல ஒரு பங்கு லாபத்தை அவருக்குக் கொடுத்துடுவேன்” என்று சொல்லி மகிழ்ச்சியோடு விடைகொடுத்தார் முனியப்பன். 
 

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

ஜீரண சக்திக்கு புதினா!

புதினா பற்றிப் பேசிய ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன், “ஜீரண சக்திக்கு ரொம்ப நல்லது புதினா. அதனாலதான் சட்னி அரைச்சு சாப்பிடுறோம். புதினாவிலிருந்து எஸன்ஸ் எடுத்து சோப், சென்ட் கம்பெனிக்காரங்களும் பயன்படுத்துறாங்க. மூலிகை மருத்துவத்துலயும் இது பயன்படுது” என்றார்.

விற்பனைக்கு சூளகிரி சந்தை!

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது, சிறிய நகரமான சூளகிரி. சுற்றுவட்டார விவசாயிகள் கொண்டுவரும் தக்காளி, காய்கறிகள், புதினாவுக்கென்று தனித்தனியாக சாலையோரங்களிலேயே சந்தைகள் இயங்கி வருகின்றன. புதினா,

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

கொத்தமல்லித்தழை, கீரைகளுக்கென்று செயல்படும் சந்தையில் வியாபாரம் செய்து வரும் மாரப்பனிடம் பேசினோம்.

“இந்தச்சந்தை காலை 10 மணிக்கு தொடங்கி, சாயந்தரம் 7 மணி வரை இருக்கும். கொத்தமல்லித்தழை, புதினா, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, சிறுகீரைனு பலவித கீரைகளும் வரும். ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடக்குது. உத்தனப்பள்ளி, பேரிகைனு சூளகிரியைச் சுத்தி இருக்கிற கிராமங்கள்ல இருந்து புதினா வரும். இங்கிருந்து வியாபாரிகள் வாங்கி சென்னை, பெங்களூரு, சேலம், தர்மபுரி, கேரளானு பல இடங்களுக்கு அனுப்புறாங்க’’ என்றார்.


இயற்கையிலும் சாகுபடி செய்யலாம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுக்க முழுக்க ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் புதினா சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், இயற்கை முறையில் புதினா சாகுபடி செய்யும் முறை பற்றி இங்கு விளக்குகிறார், கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், மேலப்புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பிரபாகர்.

மணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..!

“முன்பு நானும் ரசாயன முறையில்தான் புதினாவை சாகுபடி செய்தேன். பிறகு, ‘நல்லகீரை’ அமைப்பில் இயற்கை சாகுபடி பற்றி பயிற்சி எடுத்த பிறகுதான், இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன். புதினா குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் பயிர். இதற்கு உற்பத்திச் செலவும் குறைவு. ஒரு ஏக்கருக்கு 5 லோடு டிராக்டர் எரு என்ற கணக்கில் கொட்டிக் கலைத்து உழ வேண்டும். பிறகு, 70 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூவி விட வேண்டும். விதைக்குச்சிகளை ஜீவாமிர்தத்தில் நனைத்து நடவு செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். தெளிப்புநீர்ப் பாசனம் செய்பவர்கள் ஜீவாமிர்தத்தை வடிகட்டி, தெளிப்புநீர்க் குழாயில் கலந்து விடலாம்.

புதினாவில் இலைப்புழு, அசுவிணிப் பூச்சிகள் தாக்குதல் இருக்கும். வாரம் ஒரு முறை 500 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வந்தால், இவற்றின் தாக்குதல் இருக்காது. முதல் அறுவடை முடிந்த பிறகு ஏக்கருக்கு 3 லோடு எரு, 70 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து வயலில் தூவிவிட வேண்டும். வாய்ப்பிருந்தால் ஏக்கருக்கு 5 லோடு செம்மண்ணையும் தூவி விடலாம். இவற்றை சரியாகக் கடைபிடித்தால், ரசாயன முறையில் கிடைக்கும் விளைச்சலை விட, ஏக்கருக்கு 18 ஆயிரம் கட்டுக்கள் வரை கூடுதலாகக் கிடைக்கும்.

பனிப்பொழிவு அதிகமுள்ள மார்கழி, தை, மாசி மாதங்களில் விளைச்சல் அதிகமாக இருக்கும். ரசாயனத்திலிருந்து இயற்கை முறைக்கு மாறுபவர்கள் பல தானிய விதைப்பு செய்து, மடக்கி உழவு ஓட்டி 15 நாட்கள் நிலத்தைக் காயப் போட்டு, இயற்கை முறை விவசாயத்தை ஆரம்பிக்கலாம்” என்றார், பிரபாகர்.

தொடர்புக்கு, பிரபாகர், செல்போன்: 90038-36427

 நாட்டு ரகமும் வீரிய ரகமும்!

நாட்டு ரகம் தாமதமாக அறுவடைக்கு வந்தாலும், நல்ல வளர்ச்சி இருக்கும். தண்ணீர் தேவை குறைவு. அறுவடை செய்த இலைகள் விரைவில் வாடாது. தண்ணீர் தெளித்து மூட்டை பிடித்தால், மூன்று நாட்கள் வரை வைத்திருக்கலாம்.


வீரிய ரகத்தில் தண்டு பெரிதாகவும், செடி உயரமாகவும் இருக்கும். தண்ணீர் தேவை அதிகம். விரைவாக வளர்ந்தாலும் அறுவடை செய்த இலைகள் விரைவில் வாடி விடும். அதனால், உடனடியாக விற்பனை செய்ய வேண்டும். 

தொடர்புக்கு,
முனியப்பன்,
செல்போன்: 99941-95691.

த.ஜெயகுமார்

 படங்கள்: க.தனசேகரன்