Published:Updated:

பூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு!

பூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு!

‘‘ஆபத்தானது என்று ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருக்கும் பூச்சிக்கொல்லியைத் தடை செய்யச் சொல்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய (ஐ.சி.ஏ.ஆர்) இயக்குநரிடம் சொன்னேன். அதற்கு, ‘பி.டி. பருத்தி பயிர் செய்பவர்கள்தான் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்’ என்றார். ‘பி.டி. பருத்தி அனைத்துவித பூச்சித்தாக்குதல்களையும் தாங்கி வளரும் என்று சொல்லித்தானே இங்கே கொண்டு வந்தீர்கள்’ என்றேன். அதற்கு மவுனம் காக்கிறார். விவசாயிகள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

-இப்படி பேசி அதிர வைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.

பூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐந்தாவது தேசிய இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கு, சண்டிகர் நகரில் பிப்ரவரி 28 ம் தேதி தொடங்கி, மார்ச் 2-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் என கோலாகலத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தமிழகத்திலிருந்து ஈரோடு, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டனர்.

துவக்க நிகழ்வில் பேசிய, இந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் (Organic Farming Association of India-OFAI) தகவல் தொடர்பாளர், கபில் ஷா, ‘‘இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவர் தோன்றி, இயற்கை விவசாயத்தைப் புதுப்பித்தார்கள். கிளாடு ஆல்வாரிஸ், ‘ஓபாய்’ அமைப்பின் மூலமாக இந்தியா முழுவதும் இயற்கை விவசாயத்தை ஒருங்கிணைத்து வருகிறார். கடந்த 10 வருடமாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த தேசிய கருத்தரங்கை நடத்தி வருகிறார்’’ என்று சொன்னார்.

பூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு!

அடுத்து, நாட்டு மக்களை கேன்சர், நீரிழிவு நோயிலிருந்து காக்கவேண்டியும், நாட்டுப்பற்றைப் பெருமைப்படுத்தும்விதமாக பஞ்சாபி மொழிப் பாடல் ஒன்று பாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து பேசிய ஐ.எஃப்.ஒ.எம் தலைவர் ஆண்ட்ரு லே, ‘‘நான் 39 ஆண்டுகளுக்கு முன்னர் உங்கள் நாட்டுக்கு (இந்தியா) வந்தபோதுகூட உங்களிடம் பழமையான, உயர்வான நாகரிகம் இருந்தது. அதுதான் உலகளவில் உங்கள் நாட்டுக்கான ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது. இதேபோன்றுதான் இயற்கை வேளாண்மையும் உங்களுடைய கலாசாரத்திலிருந்தே வந்தது. இதை நான் சொல்லவில்லை, 90 வருடங்களுக்கு முன்பே பிரிட்டிஷ் பேரரசுக்கு இதைத் தெரியப்படுத்தியிருக்கிறார் ஆல்பர்ட் ஹோவர்ட். ஆக, உலகின் இயற்கை விவசாய முன்னோடிகளே நீங்கள்தான். இதைப் பின்பற்றிதான் இன்றைக்கு இயற்கை விவசாய இயக்கம் உலகளவில் 130 நாடுகளில் இயங்கி வருகிறது. எனவே, இயற்கை விவசாயத்தை நாம் மீண்டும் பெரிதாக முன்னெடுக்க வேண்டும்’’ என்று அழைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியானா மாநில முதல்வர் எம்.எல்.கட்டார் பேசும்போது, “இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக கிராமங்களின் நிலைமை மிக மோசமாக இருந்து வருகிறது.

பூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு!

3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 10 ஆண்டுகளாக விதர்பா பகுதி விவசாயிகளுக்கு உதவி வருகிறேன். மகாராஷ்டிரா மாநில உயர்நிலைக் குழுவிலும் பங்காற்றியிருக்கிறேன். ரசாயன விவசாயம் செய்கிற விவசாயிகள் மத்தியில்தான் தற்கொலை அதிகமாக இருந்துவருகிறது. இயற்கை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை. நிலைத்த வேளாண்மை, சுற்றுச்சூழல், நீடித்த பொருளாதாரம் இது மூன்றும் நடைபெற வேண்டுமானால், அது இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும். இது ஏதோ இயற்கை விவசாயக் குழுக்களால் எனக்குச் சொல்லப்பட்ட தகவல் அல்ல. 400 விஞ்ஞானிகள் அடங்கிய குழு, உலக வங்கிக்குப் பரிந்துரைத்திருக்கும் தகவல் இது. சுற்றுச்சூழலுக்குப் பொருந்திப் போகும் தன்மையும், உணவுப் பாதுகாப்பும், பொருளாதாரப் பாதுகாப்பும் இயற்கை விவசாயத்தில்தான் உள்ளது” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு துறை அமைச்சர் மேனகா காந்தி, கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்தபோது, பசுமை விகடன் அரங்குக்கும் வருகை தந்தார். அரங்கைப் பார்வையிட்ட மேனகா காந்தி, “இந்த இதழ் ஆங்கிலத்திலும் வருகிறதா?” என்று ஆர்வத்துடன் கேட்டார். “தமிழ் மொழியில் மட்டுமே வருகிறது” என்று பதிலளித்தோம்.

பூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு!

தொடர்ந்து பல அரங்குகளைப் பார்வையிட்ட பின் கருத்தரங்கில் பேசிய மேனகா காந்தி, “இந்தக் கருத்தரங்கு மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராக வலிமையான கருத்துகளை முன்வைத்து வருகிறது. பி.டி. பருத்தி பயிர் செய்து வருவோர்களுக்கு இந்தப் பூச்சிக்கொல்லிகள் போதுமானதாக இல்லை. இன்னும் புதிதாக ஏதாவது பூச்சிக்கொல்லிகள் கொண்டு வரப்படுமா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது.

நியோ நிக்கோட்டினாய்டு என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கும் தனியார் நிறுவனம், பொய்யான தகவல்களைச் சொல்லி பல நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இதைக் கண்டறிந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், அந்தப் பூச்சிக்கொல்லிக்குத் தடை விதித்துள்ளன. அந்த நிறுவனத்தின் மீது விசாரணையும் நடத்தி வருகிறது.

இந்த விஷயம் தெரிந்ததும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய (ஐ.சி.ஏ.ஆர்) இயக்குநரிடம் இந்தப் ‘பூச்சிக்கொல்லியைத் தடை செய்யுங்கள்’ என்றேன். அதற்கு அவர், ‘பி.டி. பருத்தி பயிர் செய்பவர்கள்தான் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்’ என்றார்.

‘பி.டி.பருத்தி அனைத்துவித பூச்சித்தாக்குதல்களையும் தாங்கி வளரும் என்று சொல்லித்தானே இங்கே கொண்டு வந்தீர்கள்’ என்றேன். அதற்கு மவுனம் காக்கிறார். நிலைமை இப்படி இருக்கும்போது விவசாயிகள்தான் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

பூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு!

கருத்தரங்கின் மற்றொரு அமர்வில் பேசிய ஐ.சி.ஏ.ஆரின் முன்னாள் வேளாண் விஞ்ஞானியும், தெலுங்கானா மாநிலத்தின் இயற்கை வேளாண் வல்லுநருமான ராமஆஞ்சநேயலு, “ஆபத்தை விளைவிக்கும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் குறித்து வயல்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த சோதனைகளின் அனுபவங்கள், புள்ளிவிவரங்கள் எதையும் அரசு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.

கடந்த காலத்தில் எண்டோசல்பானைத் தடை செய்யச் சொல்லியபோதும் இதுதான் நடந்தது. பிறகு நீதிமன்றம் தலையிட்டதால் அது நடந்தேறியது” என்று பூச்சிக்கொல்லி விஷயத்தில் அரசின் மெத்தனப்போக்கினைத் தோலுரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மாநில பாரம்பர்ய உணவுகள் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளும் வழங்கப்பட்டன. பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், மதிப்புக் கூட்டிய பொருட்கள் என்று பல அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

 த.ஜெயகுமார்