Published:Updated:

90 ஏக்கர் இயற்கைப் பண்ணை... ஆண்டுக்கு 5,400 மூட்டை நெல்!

டெக்ஸ்டைல் நிறுவனத்தின் அசத்தல் விவசாயம்!

னிப்பட்ட விவசாயிகளை மட்டுமல்ல, பெரிய நிறுவனங்களையும்கூட இயற்கை விவசாயம் வசீகரித்து வருகிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கோவில்பட்டி, சாத்தூர், சிவகங்கை, கடலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நெசவு, நூற்பு, பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு ஆலைகளையும்... தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் மற்றும் தியாகராஜர் மாடல் ஸ்கூல் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் இயக்கி வரும் லாயல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், தற்போது இயற்கை விவசாயத்திலும் வெற்றிகரமாக நடைபோடுகிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமான இயற்கை விவசாயப் பண்ணை, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம் அருகில் அசிக்காடு கிராமத்தில் பரந்து விரிந்து 60 ஏக்கரில் செழிப்பாக காட்சி அளிக்கிறது.

90 ஏக்கர் இயற்கைப் பண்ணை... ஆண்டுக்கு 5,400 மூட்டை நெல்!

வழிகாட்டிய பசுமை ஒலி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேடிச் சென்ற நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்ற பண்ணையின் மேலாளர் கணேசன், ‘‘பசுமை விகடன்தான் இந்தப் பண்ணையின் வழிகாட்டி. நீங்கள் நடத்தும் தொலைபேசி சேவையான ‘பசுமை ஒலி’க்கு போன் செய்துதான் பஞ்சகவ்யா, தேமோர்க் கரைசல், மூலிகைப்பூச்சி விரட்டி, ஜீவாமிர்தம் எல்லாம் தயாரிக்கக் கற்றுக் கொண்டோம். இங்கு விளையக்கூடிய பயிர்கள் நோய், பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்க முதன்மையான... முழுமையான காரணம், பசுமை விகடன்தான். இந்த ஆண்டு, எங்கள் பகுதியில் புகையான் தாக்குதல் அதிகமாக இருந்தது.  இயற்கை இடுபொருட்களைத் தெளிப்பதால், எங்கள் வயலுக்கு வந்த புகையான், வந்த வழியே, திரும்பி ஓடிவிட்டது. இதை பக்கத்து நிலத்து விவசாயிகள் எல்லாம் ஆச்சர்யமாக பார்த்தார்கள்’’ என நெகிழ்ச்சி அடைந்தவர், தொடர்ந்தார்.
 
‘‘எங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மாணிக்கம் ராமசாமி, இயற்கை விவசாயத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டவர். எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் சுமார் இரண்டாயிரம் பேர் ஆலை விடுதிகளிலேயே தங்கிப் பணியாற்றக்கூடியவர்கள். இவர்களுக்கெல்லாம் கட்டணம் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது. இது ஆரோக்கியமான உணவாகவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இயற்கை விவசாய நெல் உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் எங்கள் நிறுவனத்தின் தலைவர். இங்குள்ள 60 ஏக்கர், இதே மாவட்டம் கடக்கம் என்ற இடத்தில் 19 ஏக்கர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 11 ஏக்கர் என மொத்தம் 90 ஏக்கரில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது’’ என்று சொன்ன கணேசன், அசிக்காடுப் பண்ணை குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

90 ஏக்கர் இயற்கைப் பண்ணை... ஆண்டுக்கு 5,400 மூட்டை நெல்!

உரம் கொடுக்கும் காளைகள்!

‘‘இது லேசான உவர் கலந்த களிமண் பூமி. 2011-ம் ஆண்டிலிருந்து இந்தப் பண்ணையில் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு 72 காளைமாடுகள் உள்ளன. எங்களுடைய ஆலைகள் இயங்கக்கூடிய பகுதிகள் அனைத்திலும் பால் தேவைக்காக மாட்டுப் பண்ணைகள் இருப்பதால், அங்கு கிடைக்கக்கூடிய காளை கன்றுக்குட்டிகளை மட்டும் இங்கு கொண்டு வந்துவிடுவோம். இவற்றுக்குக் கொஞ்சம்கூட தீவனச்செலவு கிடையாது. பண்ணையிலேயே மேய்ச்சல் மூலமாக பசுந்தீவனம் கிடைத்துவிடுகிறது.

60 ஏக்கர் நெல் சாகுபடி மூலமாக, தாராளமாக வைக்கோல் கிடைக்கிறது. எங்களுடைய ஆலைகளில் பஞ்சு பிரிக்கப்பட்ட பருத்தி விதைகளை அடர்தீவனமாக மாடுகளுக்குக் கொடுக்கிறோம். தினமும் கன்றுக்குட்டிக்கு 1 கிலோ,  பெரிய மாடுகளுக்கு 2 கிலோவும் பருத்தி விதை கொடுக்கிறோம்.

இங்குள்ள 72 மாடுகள் மூலமாக, தினமும் 360 கிலோ உலர்ந்த சாணம் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி மாதத்துக்கு ஏழரை டன் மண்புழு உரம் தயார் செய்கிறோம். குறுவையில் ஏ.டி.டீ-43, தாளடியில் ஏ.டி.டீ-46 மற்றும் பாப்பட்லா ரக நெல்லும் சாகுபடி செய்கிறோம்.
சாகுபடிப் பரப்பு மிகவும் பெரியதாக இருப்பதால், எளிதாகச் சமாளிக்க, இயந்திர முறையில் நடவு செய்கிறோம். இதற்கு ஏற்ப, ஒரு ஏக்கரில் பாய் நாற்றங்கால் அமைத்து, நாற்றுகளை உற்பத்திசெய்து, 30 ஏக்கருக்கு நடவு செய்கிறோம். இதுபோல் இரண்டு நாற்றங்கால் அமைத்து 60 ஏக்கருக்கு நடவு செய்கிறோம்.

தற்போது 30 ஏக்கரில் ஏ.டி.டீ-46 ரக நெல்லும், இன்னொரு 30 ஏக்கரில் பாப்பட்லாவும் சாகுபடி செய்துள்ளோம். இந்த இரண்டுமே பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாமல் நன்றாக விளைந்திருக்கின்றன. அதிகளவில் தூர்கள் வெடித்து, வாளிப்பாக கதிர்கள் உருவாகி, நெல்மணிகளும் திரட்சியாக இருக்கின்றன’’ என்ற கணேசன், தங்கள் பண்ணையின் நெல் சாகுபடி பற்றிய பாடத்தை ஆரம்பித்தார்.

90 ஏக்கர் இயற்கைப் பண்ணை... ஆண்டுக்கு 5,400 மூட்டை நெல்!

பாய் நாற்றங்கால்!

‘‘ஒரு ஏக்கரில் பாய் நாற்றங்கால் அமைத்து, இதில் 2.5 டன் மண்புழு உரம் இடவேண்டும். சிமென்ட் தொட்டியில் 600 கிலோ விதையோடு, 8 கிலோ சூடோமோனஸ் கலந்து, இவை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் நிரப்பி, ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். மறுநாள் காலை நாற்றங்காலில் விதையைத் தெளிக்க வேண்டும். 10-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 15- முதல் 18-ம் நாள் நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள், 30 ஏக்கருக்குப் போதுமானதாக இருக்கும்.

வரப்பு ஓரங்களில் உள்ள வேம்பு, வாகை, தூங்குமுஞ்சி, எருக்கு உள்ளிட்டவற்றின் கிளைகளை வெட்டி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாகுபடி நிலத்தில் போட்டு, சேற்று உழவு செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து, ஏக்கருக்கு 1 டன் மண்புழு உரத்தோடு தலா 500 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் கலந்து இடவேண்டும்.

ஒரு சால் உழவு ஓட்டி நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 30 சென்டி மீட்டரும், குத்துக்கு 25 சென்டி மீட்டரும் இடைவெளி விட்டு, இயந்திரம் கொண்டு நாற்றுகளை நடவு செய்யவேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 10 மற்றும் 60-ம் நாளில்
200 கிலோ மண்புழு உரத்தோடு, 50 கிலோ வேப்பம்பிண்ணாக்கு கலந்து இட வேண்டும். 12 மற்றும் 40-ம் நாட்களில் பாசன நீரோடு 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். 15 மற்றும் 45-ம் நாட்களில் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 100 லிட்டர் தண்ணிரில் 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 75-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் தேமோர்க்கரைசல் கலந்துத் தெளிக்க வேண்டும்.

இதையெல்லாம் சரிவர கடைபிடித்தால் அதிகளவில் பூக்கள் பூத்து, மணி பிடிக்கும்’’ என்று பாடத்தை முடித்த கணேசன், நிறைவாக மகசூல் பற்றி பேசினார். 

90 ஏக்கர் இயற்கைப் பண்ணை... ஆண்டுக்கு 5,400 மூட்டை நெல்!

கிலோவுக்கு ரூ12 லாபம்!

‘‘ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டை (60 கிலோ மூட்டை) நெல் மகசூலாகிறது. 90 ஏக்கரில் இருந்து குறுவை, தாளடி இந்த இரண்டு போகத்துக்கும் சேர்த்து, ஆண்டுக்கு 5,400 மூட்டை நெல் மகசூலாகிறது. இதனை அரைத்தால், 60 சதவிகிதம் அரிசி கிடைக்கிறது. இதை எங்கள் நிறுவனத்தின் விடுதிகளுக்கு அனுப்பி விடுவோம். ஒரு கிலோ அரிசிக்கு 32 ரூபாய் வீதம் எங்கள் நிர்வாகத்திடம் இருந்து விலை பெற்று வருகிறோம். ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 20 ரூபாய் செலவாகிறது. 12 ரூபாய் லாபம் கிடைக்கிறது’’ என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார் கணேசன்.

நடவுக்குப் பின்னே...

10 மற்றும் 60-ம் நாளில் 200 கிலோ மண்புழு உரத்தோடு, 50 கிலோ வேப்பம்பிண்ணாக்கு.

12 மற்றும் 40-ம் நாளில் பாசன நீரோடு 200 லிட்டர் ஜீவாமிர்தம்.

15 மற்றும் 45-ம் நாளில் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா.

50-ம் நாள் 100 லிட்டர் தண்ணிரில் 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி.

75-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் தேமோர்க் கரைசல்

தொடர்புக்கு,
கணேசன்,
செல்போன் : 94425-20390.

 கு.ராமகிருஷ்ணன்

 படங்கள்: க.சதீஷ்குமார்