Published:Updated:

பலே வருமானம் கொடுக்கும் ‘பச்சை’...!

50 சென்ட்... மாதம் ` 30 ஆயிரம்..!

பலே வருமானம் கொடுக்கும் ‘பச்சை’...!

50 சென்ட்... மாதம் ` 30 ஆயிரம்..!

Published:Updated:

யிர்கள் அனைத்தையும் பரவசம் கொள்ளச் செய்யும் பச்சை நிறம், வளர்ச்சியின் அடையாளம். இங்கே மதுரைப்பகுதி விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது பச்சை என்கிற ஒரு பயிர். ஆம், இந்தப்பயிரின் பெயரே ‘பச்சை’தான். பச்சை என்று அழைக்கப்படும் இதன் முழுப்பெயர் ‘மாசிப் பச்சை’. இது, மாலைகட்டப் பயன்படும் இலையாகும்.

ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை!

சிறு விவசாயிகள் பலரும், தங்களின் வருமானத்துக்கான வாயிலாக இருக்கும் இந்த மாசிப் பச்சையைப் பயிரிட்டு, நிறைவான லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர், மதுரை மாவட்டம், க.நல்லொச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சி.மாயி. காலைவேளையில் அறுவடையில் முனைப்பாக இருந்த மாயியைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலே வருமானம் கொடுக்கும் ‘பச்சை’...!

‘‘விவசாயத்தைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. பெரிய அளவுல விவசாயம் பண்ற அளவுக்கு வசதி வாய்ப்பும் இல்ல. வசதி இருந்தாலும், எங்க பகுதியில பண்ணையாள் கிடைக்கிறது கஷ்டம். ‘ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை’னு சொல்ற மாதிரி, என்னை மாதிரி சின்ன விவசாயிகளுக்கான பயிர்தான் இந்த மாசிப் பச்சை. நான் 50 சென்ட் இடத்துல இதை சாகுபடி செஞ்சிருக்கேன்’’ என்று முன்னுரை கொடுத்த மாயி, மாசிப் பச்சை பயிரை சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஒரு முறை நடவு! மூன்று ஆண்டுகள் அறுவடை!

‘‘சாகுபடி நிலத்தை நன்றாக உழுது, பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். மாசிப் பச்சைக்கு விதையோ, நாற்றோ தேவையில்லை. தண்டுப் பகுதியை நடவு செய்தால் போதும். கொஞ்சம் நிழல் பாங்கான இடம் தேவை என்பதால், பாத்திகளின் கரைகளிலும், வாய்க்கால் கரைகளைச் சுற்றியும் அகத்தியை நடவு செய்ய வேண்டும். ஒரு முறை நடவு செய்தால் மூன்று ஆண்டுகள் வரை, இலையை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம். அதன் பிறகு நடவு செய்யத் தேவையான தண்டை அதில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் வசதியைப் பொறுத்து நிலத்தைக் காய விடாமல் பாசனம் செய்தால் போதுமானது.

நடவு செய்த 20-ம் நாள் கைகளால் களை எடுக்க வேண்டும். செடிகளின் வளர்ச்சிக்காக மாதம் இரு முறை உரம் இட வேண்டும். அவரவர் வசதியைப் பொறுத்து இயற்கை உரமோ செயற்கை உரமோ இட்டுக்கொள்ளலாம் (இவர் ரசாயனம் உரம் பயன்படுத்துகிறார்). பெரும்பாலும் பூச்சிகள் தாக்குவதில்லை. அப்படித் தாக்கினால், இயற்கைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லியாக இருந்தால், குறைவான வீரியத்தில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், இலைகள் கருகி விடும்.

நடவு செய்த 45-ம் நாளில் இருந்து அறுவடை செய்யத் தொடங்கலாம். ஒரு கைப்பிடி அளவு பறித்தவுடன், தண்ணீரில் ஊற வைத்த தென்னை ஓலையில் வைத்து, முடியாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அரை ஏக்கர் அளவு நிலத்துக்கு அதிகமாக பயிர் செய்தால், ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் அறுவடை செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்.’
 
தினமும் 300 கட்டு!

சாகுபடிப் பாடம் முடித்து தொடர்ந்த மாயி, ‘‘நான் 50 சென்ட்ல போட்டிருக்கேன். தினமும் 300 முடிப் பச்சையை அறுத்து... மதுரை, உசிலம்பட்டி, நிலக்கோட்டை பூ மார்க்கெட்களுக்கு அனுப்புறேன். அறுவடை செய்றதுக்கு வேலையாட்களை வெச்சுக்கிறதில்லை. ஒரு முடி குறைந்தபட்சமா 5 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். திருவிழா சமயங்கள்ல 15 ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகும். அதிகபட்சமா 20 ரூபாய்க்கு கூட விலை போயிருக்கு. பூ மார்க்கெட்ல நானே கடை விரிச்சு நேரடியா விற்பனை செய்றதால கமிஷன் காசும் மிச்சம். எனக்கு உக்கார அனுமதி கொடுக்கும் பூக்கடைக்காரருக்கு மட்டும் தினமும் 50 ரூபாய் கொடுத்துடுவேன். எனக்கு, போக்குவரத்து, உரம்னு எல்லா செலவும் போக, மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்ல இருந்து முதல் 45 ஆயிரம் வரைக்கும் லாபம் கிடைச்சுடுது.

எங்களைப் பொறுத்த வரைக்கும் ஏக்கர் கணக்குல விவசாயம் செஞ்சு, ஆள் அம்பு வெச்சு பாத்து பாத்து பண்ணையம் பண்றதைவிட, எங்க வீட்டு ஆளுங்களை வெச்சு சமாளிக்கிற அளவுக்குச் சின்ன அளவுல பண்ற இந்தப் பச்சை விவசாயமே திருப்தியா இருக்கு. இதுல வர்ற வருமானத்தை வெச்சுதான் என் மூணு பசங்களையும் படிக்க வெச்சுக்கிட்டிருக்கேன். என்னோட ரெண்டாவது பையன் பாரதி, விவசாயம் பார்த்துக்கிட்டே பயோ-டெக்னாலஜி முதுகலை கடைசி வருஷம் படிச்சிக்கிட்டு இருக்கான்’’என்று பெருமிதப்பட்டுக் கொண்டதோடு,

‘‘இந்த பச்சையைப் பொறுத்தவரைக்கும் நஷ்டங்கிற பேச்சுக்கே இடமில்லை’’ என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

மாலைகளை அலங்கரிக்கும் மாசிப் பச்சை!

பலே வருமானம் கொடுக்கும் ‘பச்சை’...!

மாசிப் பச்சையின் பயன்பாடுகளைப் பற்றி மதுரை, மாட்டுத்தாவணியில் பூ மாலை தொடுக்கும் திருப்பதியிடம் பேசினோம்.

‘‘மாசிப் பச்சையோட ஸ்பெஷல், பச்சை கலர்தான். மாலையில பச்சை கலருக்காக பயன்படுத்துற மருதாணி, சவுக்கு, துளசி இலைகளை விட மாசிப் பச்சையோட விலை கம்மி. அதோட இது மாலை தொடுக்குறதுக்கும் சுலபமா இருக்குங்கிறதால கல்யாண மாலை தவிர்த்து, மத்த எல்லா மாலைகள்லயும் பயன்படுத்துவோம். இதுக்குத் தேவை தினமும் இருக்கும். வைகாசி மாசத்துல பச்சையோட வரவு கம்மியா இருக்கும். மதுரையைச் சுற்றியிருக்கிற குருவித்துறை, உசிலம்பட்டி, செக்கானூரணி, மேலக்கால் பகுதிகள்ல இதை அதிகளவு சாகுபடி செய்றாங்க’’ என்றார்.

 சி.சந்திரசேகரன்

 படங்கள்:  நா.ராஜமுருகன், மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism