Published:Updated:

பண்ணையில் பசுமைத்திருவிழா!

பண்ணையில் பசுமைத்திருவிழா!

சுமை விகடன், நாணயம் விகடன் மற்றும் கே.பி. இயற்கை வேளாண் பண்ணை ஆகியன இணைந்து... திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அடுத்துள்ள எல்லைப்பாளையம் புதூர், கே.பி. பண்ணையில் ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சியை நடத்தின. மார்ச் 1-ம் தேதி நடந்த இந்தப் பயிற்சியில், 150 பெண்கள் உட்பட 700 பேர் கலந்து கொண்டனர்.

பண்ணையில் பசுமைத்திருவிழா!

கருத்தரங்கில் பேசிய கொடுமுடி டாக்டர். நடராஜன், “இயற்கை விவசாயத்தின் மூலாதாரம் பஞ்சகவ்யா. அது பயிர்களுக்கு மட்டுமல்ல. கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கும் நன்மை செய்யும் அற்புத மருந்து. ஒவ்வொரு விவாசாயப் பண்ணையிலும் பஞ்சகவ்யா அவசியம் இருக்கவேண்டும். விதைநேர்த்தி, முளைக்கும் பருவம், பூக்கும் பருவம், காய்க்கும் பருவம் என்று பயிர்களின் அனைத்துப் பருவங்களிலும் பஞ்சகவ்யா கொடுக்க வேண்டும். பாசனம், தெளிப்பு என்கிற இரண்டு முறைகளில் 3 சதவிகித அளவில் மட்டும், தண்ணீரில் கலந்து கொடுத்தால் போதுமானது. தரமான அதிக விளைச்சலைப் பெற இது அவசியம். கால்நடைகளுக்கு ஏற்படும் பலவேறு நோய்களையும் பஞ்சகவ்யா சரி செய்கிறது. வடிகட்டிய பஞ்சகவ்யா கரைசலை இதே அளவில் கால்நடைகளுக்குக் கொடுத்து வந்தால், ஆரோக்கியமுடன் அதிக பால் கொடுக்கும். மலடு, மூலநோய், மூட்டுவாதம், வெண்புள்ளி போன்ற மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களை பஞ்சகவ்யா தீர்க்கும். வருமுன் தடுக்கவும், வந்த பிறகு காக்கவுமான வல்லமை படைத்தது பஞ்சகவ்யா” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பண்ணையில் பசுமைத்திருவிழா!

தொடர்ந்து ‘உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் அமைப்பும் செயல்பாடும்’ என்ற தலைப்பில் பேசிய வேளாண் விஞ்ஞானி டாக்டர் வடிவேல், “விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை இடைத்தரகர் இல்லாமல் விற்பனை செய்வதோடு, சிரமம் இல்லாத விற்பனை வாய்ப்பையும் பெற்றிட உழவர் உற்பத்தியாளர் கம்பெனி உறுதுணை செய்கிறது. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு விளைபொருளுக்கும் இந்த கம்பெனி அமைக்கப்பட வேண்டும். இதற்கான பல சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன” என்றவர், கம்பெனி அமைக்கும் விவரங்களையும், ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் கம்பெனிகளின் செயல்பாடுகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

ரசாயன விவசாயத்தில், தான் பட்ட துன்பங்களையும், இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு, தனக்கு ஏற்பட்ட வளர்ச்சியையும் பற்றி சுவாரஸ்யமாகப் பேசினார், முன்னோடிப் பெண் விவசாயி ‘முத்தூர்’ பரிமளாதேவி.

பண்ணையில் பசுமைத்திருவிழா!

‘செழிக்கும் தென்னையில், கொழிக்கும் ஊடுபயிர்’ குறித்து அழகாக எடுத்துரைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சோமசுந்தரம், நிரந்தர வருமானம் கொடுக்கும் ஜாதிக்காய், பாக்கு, கோக்கோ போன்ற பயிர்களை தென்னையில் ஊடுபயிராக நடவு செய்து கூடுதல் வருமானம் பார்க்கும் வழிமுறைகளை விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து, “விவசாயிகளும் பங்குச்சந்தையில் இணையவேண்டும், அது முதலீடு என்கிற ரீதியில் மட்டுமே இருக்கவேண்டும். மேலும் புதிதாக பங்குச்சந்தையில் நுழையும் விவசாயிகள் எப்படியான கம்பெனிகளின் பங்குகளை வாங்க வேண்டும்” என்று பங்குச்சந்தை பற்றி சுவையாகவும் எளிமையாகவும் விளக்கினார், பங்குச்சந்தை வல்லுநர் டாக்டர். கார்த்திகேயன்.

‘கலப்புப்பயிர் சாகுபடி’ என்ற தலைப்பில் பேசியதோடு, கலப்பு பயிர் சாகுபடியின் நுட்பங்களை வயலுக்கே அழைத்துச் சென்று விளக்கினார், பண்ணையின் உரிமையாளர் கே.பி.சுப்பிரமணியன். தொடர்ந்து ‘சிறுதானியங்களின் மகிமை’ குறித்தும், ‘உணவு உட்கொள்ளும் முறைகள்’ குறித்தும் நகைச்சுவை ததும்பப் பேசி கூட்டத்தைக் கலகலப்பாக்கினார், ‘பாமரதீபம்’ பார்த்திபன்.

பஞ்சகவ்யா, நெல்லி ஆகியவற்றின் பயன்கள் பற்றிய பதாகைகள், செரிவூட்டப்பட்ட மண்புழுஉரம், வேளாண் வெளியீடுகள் ஆகியவற்றை வைத்து சிறிய கண்காட்சியும் பயிற்சி பந்தலில் வைக்கப்பட்டிருந்தது.

 மு.ரமேஷ்

 படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

கேரளாவைக் கலக்கும் ‘ஐஸ்’ நீரா...

கேரளாவில் பதநீருடன், கள் இறக்கி விற்பனை செய்யவும் அனுமதி உண்டு. ஆனால், சமீபகாலமாக கேரளாவில் சக்கைப்போடு போட்டு வருகிறது. ‘ஐஸ்’ நீரா என்கிற பானம். இதுவும் தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் இயற்ைகப் பானம்தான். ஆனால், இது கள்ளுக்கும், பதநீருக்கும் இடைப்பட்ட பானம். அதாவது பானைக்குள் சுண்ணாம்பு பூசுவதற்கு பதிலாக, ஐஸ் கட்டிகள் நிரப்பபட்ட ஐஸ் பாக்ஸை சீவிய பாளையில் கட்டி விடவேண்டும். அந்த ஐஸ் கதகதப்பில் வடியும் பால்தான் ‘ஐஸ்’ நீரா.

பண்ணையில் பசுமைத்திருவிழா!

பதநீரை அப்படியே எடுத்து வடித்துப் பருகலாம். ஆனால், இந்த ‘ஐஸ்’ நீரா பானத்தை 4 டிகிரி செல்ஸியஸ் குளிரில் தொடர்ந்து வைத்திருக்கவேண்டும். வெளியே எடுத்தால், சில நிமிடங்களில் அது போதை தரும் கள்ளாக மறிவிடும். 100 மில்லி 12 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பாலக்காடு தேங்காய் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனம், இந்தப் பானத்தை இறக்கிப் பதப்படுத்தி விற்பனை செய்யும் வேலையைச் செய்துவருகிறது.

ஜி.பழனிச்சாமி படங்கள்: த.ஸ்ரீநிவாசன்