Published:Updated:

கொளுத்துது கோடை... கால்நடைகளைக் காப்பாற்றும் எளிய வழிகள்!

கொளுத்துது கோடை... கால்நடைகளைக் காப்பாற்றும் எளிய வழிகள்!

ழைக்காலத்தை விட வெயில் காலத்தில்தான் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகம் இருக்கும். எனவே, இந்தக் காலகட்டத்தில் கால்நடைப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது, அவசியம். இதைப் பற்றி இங்கு விளக்குகிறார், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருக்கும் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி

கொளுத்துது கோடை... கால்நடைகளைக் காப்பாற்றும் எளிய வழிகள்!

மையத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர்.கதிர்வேல்.

“கோடை மழை பெய்யும் போது மழையில் ஆடு, மாடுகள் நனைந்தால் இரண்டாவது நாளே காய்ச்சல் வந்துவிடும். நாள் முழுவதும் வெயிலில் நின்று மழையில் நனைவதால், இந்தக் காய்ச்சல் வருகிறது. இதற்கு கோடை காய்ச்சல் அல்லது மூன்று நாள் காய்ச்சல் என்று பெயர். சில விவசாயிகள் ஆடு, மாடுகளை உச்சிவெயில் நேரத்தில் குளிப்பாட்டுவார்கள். இது தவறான முறை. இப்படிச் செய்வதால் கால்நடைகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட்டு, தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும். நாட்டு ரக ஆடு, மாடுகளுக்கு வெயில் தாக்கத்தைத் தாங்கும் சக்தி அதிகம். ஆனால், கலப்பின ஆடு, மாடுகள் வெப்பத்தைத் தாங்காமல் இறந்துவிடும். எனவே, கோடை காலத்தில் கால்நடைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.

கொட்டகை கவனம்!

கால்நடைகளுக்கான கொட்டகையை கிழக்கு மேற்காகத்தான் அமைக்க வேண்டும். கொட்டகையின் உயரம் குறைந்தபட்சம் 12 அடிக்கு மேல் இருக்க வேண்டும். கொட்டகையின் மேல்பகுதியில் தென்னை, பனை ஓலைகளைப் போட்டு காலையிலும் மாலையிலும் தண்ணீர் தெளித்துவிட வேண்டும். செயற்கை முறையிலும் குளிரூட்டலாம். தரைப்பரப்பு தண்ணீர் தேங்காதவாறு சற்று சரிவாக இருக்க வேண்டும். கொட்டகை இல்லாமல் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள், மாடுகளை நிழல் உள்ள மரத்தடியில் பகல் முழுவதும் வைத்திருக்கலாம்.
பகல் மேய்ச்சல் கூடாது!

அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் என வெயிலின் தாக்கம் குறைவான நேரங்களில் மட்டும் மேய்ச்சலுக்கு விடலாம். இந்த நேரங்களில்தான் குளிப்பாட்ட வேண்டும். சினை மாடுகள், ஆடுகள் பகல் மேய்ச்சலுக்குச் சென்றால் கன்றின் வளர்ச்சி பாதிக்கப்படும். சில சமயங்களில் கரு கலையவும் வாய்ப்புண்டு. சினை சேர்த்தலும் வெயிலுக்கு முன்பு வைத்துக் கொள்வது நல்லது.

கொளுத்துது கோடை... கால்நடைகளைக் காப்பாற்றும் எளிய வழிகள்!

தாராளமாகத் தண்ணீர்!

கால்நடைகள், வழக்கமாக குடிக்கும் தண்ணீரை விட கோடை காலங்களில் 50 சதவிகிதம் அதிக தண்ணீர் குடிக்கும். வழக்கமாக தண்ணீர் வைக்கும் தொட்டியுடன் கூடுதலாக இரண்டு மூன்று இடங்களில் குளிர்ச்சியான நீரை வைக்க வேண்டும். இந்த நீரை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை மாற்றும் போதும் தொட்டியைச் சுத்தப்படுத்தி மாற்றினால் நல்லது. தண்ணீர் அளவு குறைவாக இருந்தால் உடலில் வெப்பநிலை அதிகரித்து ரத்தம் கெட்டிப்படும். சோர்வு, நரம்புத்தளர்ச்சி ஏற்படுவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படும். நாக்கு வறண்டு சில சமயங்களில் இறந்தும் போகலாம். எனவே தண்ணீர் விஷயத்தில் அதிக கவனம் தேவை” என்று எச்சரிக்கை கொடுத்த கதிர்வேல், “தீவனச்சோளம், வேலிமசால், அகத்தி, அசோலா ஆகிய பசுந்தீவனங்களைக் கொடுத்தால் வெயில் அயற்சியைத் தடுப்பதுடன் பால் உற்பத்தியும் கூடும். மக்காச்சோளம், பிண்ணாக்கு, பருத்திவிதை ஆகிய எளிதில் செரிமானம் ஆகக்கூடிய தீவனத்தைக் கொடுக்கலாம். கால்நடைகள் தீவனம் எடுத்த உடனே தீவனத்தட்டுகளைக் கழுவி வைத்து விட்டால் தொற்றுநோய்களைத் தடுக்கலாம். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக்கட்டிகளை கொட்டகையில் கட்டி தொங்க விட்டால் ஆடு, மாடுகள் தேவையானபோது இக்கட்டியை நக்கிக் கொள்ளும். இதனால் செரிமானமும் நன்றாக நடக்கும். தண்ணீரும் அதிகம் குடிக்கும். வாழ்நாள் முழுவதும் நமக்காக உழைக்கும் கால்நடைகளை வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

கொளுத்துது கோடை... கால்நடைகளைக் காப்பாற்றும் எளிய வழிகள்!

ஆடு, மாடுகள் நகராமல் ஒரே இடத்தில் சோர்வாக இருத்தல், எப்போதும் நின்றுகொண்டே இருத்தல், வாயைத் திறந்து அதிகமாக சுவாசித்தல், அதிக அளவு உமிழ்நீர் சுரந்து வடிதல், தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் என ஏதேனும் ஒரு அறிகுறி தென்பட்டாலும் தாமதப்படுத்தாமல் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால், அவர் உரிய சிகிச்சை அளிப்பார்” என்று அக்கறையோடு சொன்னார்.

தொடர்புக்கு,
முனைவர். கதிர்வேல்,
செல்போன்: 94437-32225,

தாகம் தீர்க்கும் எலுமிச்சை-நெல்லிச்சாறு!

காலையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 100 மில்லி நெல்லிக்காய்ச் சாறு; மாலையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 100 மில்லி எலுமிச்சைச்சாறு என்கிற விகிதங்களில் கலந்து கால்நடைகளுக்குக் கொடுத்து வந்தால்... வெப்ப அயற்சி குறையும். ஒரு கிலோ மக்காச்சோளத்துக்கு 50 கிராம் வெந்தயம் என்ற விகிதத்தில் கலந்து கொடுத்தால் சூடு தணியும்.

ஊறுகாய்ப்புல்... தயாரிப்பது எப்படி?

“கோடை காலத்தில் பசுந்தீவனம் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு. அதனால், பசுந்தீவனம் கிடைக்கும் காலத்தில் ஊறுகாய்ப்புல் தயாரித்து வைத்துக் கொண்டால், கோடை கால பசுந்தீவன தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம்.

கொளுத்துது கோடை... கால்நடைகளைக் காப்பாற்றும் எளிய வழிகள்!

நிழற்பாங்கான பகுதியில் 2.5 மீட்டர் சுற்றளவும், 3 மீட்டர் ஆழமும் உள்ள ஒரு குழிதோண்ட வேண்டும். குழியில் காற்றுப் புகாதவாறு குழியின் அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை பிளாஸ்டிக் தாள் விரித்துக் கொள்ள வேண்டும். வேலிமசால், கோ-4 புல், தீவனச்சோளம் ஆகிய பசுந்தீவனங்களில் 700 கிலோ அளவு எடுத்து... கட்டர் மூலம் ஓர் அங்குல அளவு இருக்கும் வகையில் அவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். 5 கிலோ வெல்லத்தை, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து, வெல்லக்கரைசலைத் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 100 மில்லி எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாகக் கலக்க வேண்டும். நறுக்கி வைத்திருக்கும் பசுந்தீவனத்தை, குழியின் அடியில் ஓர் அடி உயரத்துக்கு பரப்பி, அதன் மீது சர்க்கரைக் கரைசலை லேசாகத் தெளிக்க வேண்டும். பின், சிறிய பிளாஸ்டிக் டிரம் அல்லது உருளை வடிவ கருவியால் உருட்ட வேண்டும். இதனால் கலவை கெட்டிப்படும். பின், இரண்டாவது அடுக்காக ஓர் அடி உயரத்துக்கு பசுந்தீவனத்தைப் பரப்பி, கரைசலைத் தெளித்து பின் உருளையால் உருட்ட வேண்டும். இவ்வாறு குழி நிரம்பும் வரை மாற்றி மாற்றி அடுக்கிக் கொண்டே வர வேண்டும். குழி முழுவதும் நிரம்பியவுடன் பிளாஸ்டிக் தாளால் காற்றுப் புகாதவாறு மூடி, அதன் மீது செம்மண் கலவையால் மேடு போல அமைத்துவிட வேண்டும். ஒரு மாதம் கழித்து எடுத்தால், இதுதான் ஊறுகாய்ப்புல்!

இதைத் தீவனமாகக் கொடுக்கலாம். இதை ஓர் ஆண்டு வரை வைத்துப் பயன்படுத்தலாம். குழிக்குள் காற்றுப் புகாதவாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம். ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மாறுவதில்லை. பசுந்தீவனத்தைப் போலவே ஊறுகாய்ப்புல்லையும் மாடுகள் விரும்பி உண்ணும்.

இ.கார்த்திகேயன்

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

அடுத்த கட்டுரைக்கு