Published:Updated:

பஞ்சமில்லா பண்ணைக்குட்டை... ஊடுபயிருக்கு உதவிய சோலார்!

பஞ்சமில்லா பண்ணைக்குட்டை... ஊடுபயிருக்கு உதவிய சோலார்!

மாதம் மும்மாரி பெய்த காலங்களில் மானாவாரி விவசாயம் கொழித்து... கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை என்று சிறுதானியங்கள் செழித்திருந்தன. பசுமைப் புரட்சி வந்து, பணப்பயிர்கள் பல தந்தாலும்... அதனால், மோசமான விளைவுகள்தான் அதிகம். பயிர்களுக்குத் தண்ணீரின் தேவை அதிகரித்தது, பசுமைப் புரட்சியின் முக்கிய விளைவு. அதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து போனது. காலப்போக்கில் பருவமழையும் பொய்த்துப் போனபிறகு விழித்துக்கொண்ட அரசாங்கம், மழைநீர்ச் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்பு உணர்வுப் பிரசாரங்களையும் பரப்புவதோடு சில திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் பண்ணைக்குட்டை. மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்கும் இந்தக் குட்டைகள், விவசாயிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

பஞ்சமில்லா பண்ணைக்குட்டை... ஊடுபயிருக்கு உதவிய சோலார்!

அரசு உதவியில் பலரும் தற்போது பண்ணைக்குட்டை அமைத்து வருகிறார்கள். அவர்களின் வரிசையில், பண்ணைக்குட்டை அமைத்ததோடு மானிய உதவியுடன் சோலார் பம்ப்செட்டையும் பொருத்தி பாசனம் மேற்கொண்டு வருகிறார், முன்னோடி விவசாயி கோரைச்செல்வன் என்கிற செல்வராஜ்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, ஜலத்தூர் பிரிவு. அதை ஒட்டிய அழகுச் சூழலில் இருக்கிறது, கோரைச்செல்வனின் பண்ணை. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள், ஊடுபயிராக வாழை, கோக்கோ, தீவனப்புல், தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள், பச்சைப்புல் மேயும் பசு மாடுகள், மோதி விளையாடும் ஆட்டுக்குட்டிகள், நீர் ததும்பும் பண்ணைக்குட்டை, சூரிய நமஸ்காரம் செய்யும் சோலார் பேனல்கள்... என ரம்மியமான காட்சிகள் கண்ணைக்கவர்ந்தன, கோரைச்செல்வனின் தோட்டத்தில்.

பஞ்சமில்லா பண்ணைக்குட்டை... ஊடுபயிருக்கு உதவிய சோலார்!

“நாங்க பரம்பரையா விவசாயக் குடும்பம்தான். எனக்கு தமிழ் ஆர்வம் அதிகம். பொள்ளாச்சியில் இளங்கலை பொருளாதாரம் படிச்ச கையோட முதுகலை தமிழ் இலக்கியத்தை சென்னை பச்சையப்பன் கல்லூரியில படிச்சேன்.

1982-ம் வருஷம் பட்டம் வாங்குன கையோடு ‘மலர்கள் பறிப்பதற்கல்ல’, ‘பூங்காற்று’ ஆகிய ரெண்டு கவிதைத் தொகுப்புகளை கோரைச்செல்வன் என்கிற பெயரில் எழுதி வெளியிட்டேன்.

எங்க தோட்டத்தை கிராமத்தில் கோரைக்காடுனு சொல்வாங்க. அதையே புனைப்பெயரா வெச்சிக்கிட்டேன். அதேசமயம் படிப்புக்கு ஏத்த வேலை கிடைச்சும் குடும்பச்சூழல் காரணமா விவசாயத்துக்கே வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த கோரைச்செல்வன், பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

பாசனம் கொடுக்கும் பண்ணைக்குட்டை!

பஞ்சமில்லா பண்ணைக்குட்டை... ஊடுபயிருக்கு உதவிய சோலார்!

“மொத்தம் 12 ஏக்கர். வடிகால் வசதியுள்ள வளமான செம்மண் பூமி. 12 ஏக்கர்லயும் தென்னை இருக்கு. அதுல, நேந்திரன், பூவன் வாழைங்க ஊடுபயிரா இருக்கு. 8 அடிக்கு 8 அடிங்கிற அளவுல 4 ஆயிரம் வாழை நட்டிருக்கேன். மூணாவது ஊடுபயிரா இப்ப கோக்கோ நடவு செய்திருக்கேன். கறவை மாடு 10 இருக்கு, 4 ஆயிரம் கறிக்கோழியும் பண்ணையில வளருது. ஒரு ஏக்கர்ல தீவனப்புல் வெச்சு பட்டாம் பூச்சி பாசனம் அமைச்சிருக்கேன். முழுக்க முழுக்க என்னோட பண்ணையில் கிடைக்கிற கழிவுப் பொருட்களைத்தான் பயிர்களுக்கு உரமா கொடுத்துட்டு வர்றேன். தென்னை தண்ணீர் அதிகம் தேவைப்படுற பயிர். மொத்த நிலத்துக்கும் சேர்த்து ஒரு கிணறு மட்டும்தான் இருக்கு.

பண்ணைக்குட்டை அமைக்கிறதுக்கு முன்ன, பல சமயம் தென்னைக்குத் தேவையான அளவுல தண்ணி கொடுக்க முடியாம போயிடும். இந்த மாதிரி சூழ்நிலையிலதான், வேளாண் பொறியியல் துறை மூலமா 100 அடி நீளம், 100 அடி அகலம், 5 அடி ஆழத்துல பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தாங்க. அதை, நான் 150 அடி நீளம், 150 அடி அகலம், 40 அடி ஆழம்னு பெரிய குட்டையா மாத்திக்கிட்டேன்.

மழைக்காலங்கள்ல நிலத்துல விழுற தண்ணீர் முழுசும் இந்தக் குட்டைக்குள்ள போற மாதிரி வாய்க்கால்கள் அமைச்சுட்டேன். பாசனக்கசிவு நீரும் இந்த வாய்க்கால்கள்ல போயிடும். தென்மேற்குப் பருவமழை எங்க பகுதியில கொஞ்சம் கூடுதலாவே கிடைக்கும். அதனால, இந்தக் குட்டையில எப்பவுமே தளும்பத் தளும்ப தண்ணீர் ஊறிக் கிடக்குது. இப்ப என்னோட பழைய கிணத்துலயும் தண்ணீர் மட்டம் உயர்ந்திடுச்சு. தோப்புக்குத் தேவையான பாசன தண்ணீரும் தொய்வில்லாமல் கிடைக்குது. இந்தப் பண்ணைக்குட்டையால அக்கம்பக்கத்துல இருக்கும் பாசனக்கிணறுகள்லயும் தண்ணீர் நிக்கிது” என்று புளகாங்கிதப்பட்ட கோரைச்செல்வன், தொடர்ந்தார்.

சோதனைகளை வெல்ல சோலார்!

‘‘போதுமான அளவுக்கு தண்ணீர் இருந்ததால தென்னையில் ஊடுபயிராக வாழை போடலாம்னு நினைச்சேன். அதுக்கு தனியா கரண்ட் வாங்குறது உடனடியா சாத்தியமில்லைனு தோணுச்சு. அந்த சமயத்துலதான் மானிய விலையில் சோலார் பம்ப்செட் கொடுக்குற திட்டம் பத்தி தெரிய வந்துச்சு. உரிய ஆவணங்களோட பொள்ளாச்சி வேளாண் பொறியியல்துறையில விண்ணப்பிச்சேன்.

பஞ்சமில்லா பண்ணைக்குட்டை... ஊடுபயிருக்கு உதவிய சோலார்!

5 ஹெச். பி மோட்டார் ஓடுற அளவுக்கான சோலார் பேனல்கள், மோட்டார், இடிதாங்கி எல்லாம் அமைக்கிறதுக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இதுக்கு செலவாகும். நம்மளோட பங்களிப்பா 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் கொடுக்கணும். உடனடியா பணத்தைக் கட்டிட்டேன். அதிகாரிகள் வந்து பாத்துட்டு சில நாட்கள்லயே சோலார் பம்ப்செட்டை பொருத்திக் கொடுத்துட்டாங்க. காலை 8 மணியில இருந்து சாயங்காலம் 4.30 மணி வரை சோலார் மோட்டார் ஓடுது. இது மூலமா பாசனம் பண்ணிதான் வாழை, கோக்கோ இரண்டையும் சாகுபடி செய்திருக்கேன்” என்ற கோரைச்செல்வன் நிறைவாக,

“ஒவ்வொரு விவசாயப் பண்ணையிலும் பண்ணைக்குட்டைகள் அவசியம் இருக்கணும். நிலத்துல ஒவ்வொரு மழைத்துளியும் சேமிக்கப்படணும். மழைக்காலங்கள்ல இதைச் செய்தால் போதும், வறட்சிக் காலங்களில் தண்ணீருக்கு திண்டாட வேண்டிய அவசியம் ஏற்படாது. அதேபோல் ஒவ்வொருத்தரோட நிலத்துலயும் சோலார் கருவிகளைப் பொருத்திக்கிட்டா, மின் பற்றாக்குறை பத்தி கவலைப்படாம விவசாயம் செய்யலாம்” என்று தன் அனுபவத்தையே அறிவுரையாகச் சொன்னார்.

பஞ்சமில்லா பண்ணைக்குட்டை... ஊடுபயிருக்கு உதவிய சோலார்!

தொடர்புக்கு,

கோரைச்செல்வன்,

செல்போன்: 97157-87777.

 ஜி.பழனிச்சாமி

 படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

அடுத்த கட்டுரைக்கு