Published:Updated:

திருப்தியான மகசூல் கொடுக்கும் தினை!

85 நாட்கள்... 60 சென்ட்... `30 ஆயிரம்

“ஒரு ஏக்கர்ல நெல் விவசாயம் பார்க்குற தண்ணீரை வெச்சு, நாலு ஏக்கர்ல தினை சாகுபடி செய்யலாம். அதேசமயம் வருமானத்துலயும்  விட்டுக்கொடுக்காது தினை” என கட்டை விரல் உயர்த்திப் பேசுகிறார், திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்.

குமரிப் பெண்ணைப் போல நாணப்பட்டுத் தலைகுனிந்த தினைக் கதிர்கள், தவழ்ந்து வரும் காற்றில் சங்கீதம் பாடிக்கொண்டிருந்த மாலைவேளையில் கார்த்திகேயனைச் சந்தித்தோம்.

திருப்தியான மகசூல் கொடுக்கும் தினை!

வழிகாட்டிய ஆராய்ச்சி நிலையங்கள்!

“எங்க அப்பா எட்டாவதுக்கு மேல என்னைப் படிக்க வெக்கல. எங்க அண்ணன்ங்க கூட சேர்ந்து, நானும் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். இலைதழைகள், எருனு போட்டு, நெல், மணிலா (நிலக்கடலை), கரும்புனு சாகுபடி செய்வோம். முழுக்க முழுக்க இலைதழைகளை மட்டும் போட்டா மகசூல் குறைவாத்தான் கிடைக்குது. அதனால, கொஞ்சமா  (20% அளவு) ரசாயன உரங்களைப் பயன்படுத்துறேன். ஆனா, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துறதேயில்லை. இப்ப ஆறு ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்கிறேன். புதுமையான தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்க தமிழ்நாட்டுல இருக்குற பல ஆராய்ச்சி நிலையங்களுக்குப் போய் பயிற்சி எடுத்திக்கிட்டு வந்திருக்கேன். ‘பசுமை விகடன்’ இதழ் மூலமாவும் பலவிதமான தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும், என்னோட நிலத்துக்கு ஏத்த தொழில்நுட்பங்களை மட்டும்தான் பயன்படுத்துவேன்” என்று முன்னுரை கொடுத்த கார்த்திகேயன் தொடர்ந்தார்.

50 கிராம் விதையில் 40 கிலோ மகசூல்!

“கல்தூண் பந்தல் அமைச்சுக்கொடுக்குற வேலையும் செய்யுறதால, ஜவ்வாது மலைக்கு அடிக்கடி போவேன். அங்க சாமை, தினை சாகுபடி செய்வாங்க.

ஒரு முறை திருவண்ணாமலையில நடந்த சிறுதானியங்கள் சம்பந்தமான பயிற்சியில கலந்துக்கிட்டு... 100 கிராம் தினை விதையை வாங்கிட்டு வந்தேன். அதுல 50 கிராம் விதையை 3 சென்ட் நிலத்துல விதைச்சப்போ, 40 கிலோ மகசூல் கிடைச்சுது. இதைத் தொடர்ந்து, இந்த போகத்துல 60 சென்ட் நிலத்துல விதைச்சிருக்கேன். சில இடங்கள்ல நெருக்கமா இருந்த பயிர்களைப் பிடுங்கி வேற இடத்துல நட்டேன். அப்படி பிடுங்கி நட்ட பயிர்கள்ல கதிர் பெருசா வந்திருக்கு. அதனால, வாய்ப்பு இருந்தா இனிமே நாத்து விட்டு நடலாம்னு இருக்கேன்” என்று அனுபவம் சொன்ன கார்த்திகேயன், ஒரு ஏக்கர் நிலத்துக்கான சாகுபடி முறையைப் பாடமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

திருப்தியான மகசூல் கொடுக்கும் தினை!

ஏக்கருக்கு 3 கிலோ விதை!

‘தேர்வு செய்த நிலத்தை இரண்டு சால் கொக்கிக் கலப்பை உழவு செய்து, 2 டன் எருவைக் கொட்டி கலைத்து விட வேண்டும். பிறகு, ஒரு சால் ரோட்டோவேட்டர் மூலமாக உழவு செய்து... 3 கிலோ தினை விதையோடு 6 கிலோ மணலைக் கலந்து தூவி ஒரு சால் உழவு செய்ய வேண்டும்(இவர் 60 சென்ட் நிலத்துக்கு 2 கிலோ விதையும், 4 கிலோ மணலும் பயன்படுத்தி இருக்கிறார்).

வறட்சியைத்  தாங்கும் தினை!

விதைத்தவுடன், உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். மானாவாரி என்றால், நிலத்தில் ஈரம் இருக்கும்போது விதைக்க வேண்டும். மூன்று நாட்களில் முளைப்பு எடுக்கும். அதன் பிறகு, 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டினால் போதுமானது. தினை, வறட்சியைத் தாங்கி வளரும். 20-ம் நாளில் ஒரு முறை மட்டும் களை எடுத்து, தேவையான உரம் கொடுக்க வேண்டும். அதற்குமேல் எந்தவிதமான உரமோ, பூச்சிக்கொல்லியோ தேவையில்லை.

திருப்தியான மகசூல் கொடுக்கும் தினை!

85 நாளில் அறுவடை!

60-ம் நாளில் கதிர் வந்து, 65 முதல் 70 நாட்களில் பால் பிடித்து, 80 முதல் 85 நாட்களில் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும். நெல் கதிர் அறுக்கும் இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம்”

60 சென்டில் 30 ஆயிரம் ரூபாய்!

சாகுபடிப் பாடம் முடித்த கார்த்திகேயன் நிறைவாக, “60 சென்ட் நிலத்தில் இருந்து சராசரியா 600 கிலோ அளவுக்கு தினை கிடைக்கும். விதைக்காக விற்பனை செய்யும்போது, ஒரு கிலோ 50 ரூபாய் அளவுக்கு விற்பனையாகுது. இந்த விலை கிடைச்சா 600 கிலோவுக்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எல்லா செலவுகளும்  போக, 25 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார். 

தொடர்புக்கு,

கார்த்திகேயன்,

செல்போன்: 95663-38472.

களர்மண்ணில் வராது!

தினையின் வயது 80 முதல் 85 நாட்கள். ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை), கார்த்திகைப் பட்டம் (நவம்பர்-டிசம்பர்), தைப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி), சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே) ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தினைக்கு களர்மண் தவிர அனைத்து மண் வகைகளும் ஏற்றவை.

ஆடிப்பட்டம்!

தினை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போது கிடைக்கும் கோடை மழையைப் பயன்படுத்தி, சாகுபடி நிலத்தை நன்கு உழவு செய்து வைத்தால், அடுத்து வரும் ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பட்டத்தில் ஓரளவு மழை கிடைக்கும் என்பதால், பயிர் வளர்ச்சி பாதிக்காது.

தினை பிஸ்கெட்!

தினையை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். தேனும் தினை மாவும் கலந்து சாப்பிடலாம். தினைப் பணியாரம், தினைப் பொங்கல், தினைக் கஞ்சி, தினை பிஸ்கெட் எனப் பல விதமான பலகாரங்கள் செய்யலாம். தற்போது கடைகளில் தினை பிஸ்கெட்கள்  தாராளமாக கிடைக்கின்றன.

தினை விதை எங்கே கிடைக்கும்?

தினை விதை பரவலாக விவசாயிகளிடம் கிடைக்கிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் உள்ள விதைகள் விற்பனை மையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் உள்ள சிறுதானிய மகத்துவ மையத்திலும் தினை விதை கிடைக்கும்.

தினை ரகங்கள்!

தினை ரகங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றி பேசிய திருவண்ணாமலையில் உள்ள சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயசந்திரன், “சிறுதானியங்களில் ஒன்றான தினையில் அதிகமான விளைச்சல் கொடுக்கும் கோ-6, கோ-7 என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் தற்சமயம் விவசாயிகள், அதிகமாக விரும்பிப் பயிர் செய்வது கோ-7 தினை ரகத்தைத்தான். தவிர, பாரம்பர்யமாக பாலன் தினை, பெருந்தினை, செந்தினை, மஞ்சள் தினை என பல ரகங்களும் பயிர் செய்யப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட தினை, தற்சமயம் கிலோ 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. தீட்டப்பட்ட தினை அரிசி 70  ரூபாய் முதல் 90 ரூபாய் வரை சூப்பர் மார்க்கெட் மற்றும் இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புக்கு,

தொலைபேசி: 04175- 298001

தலைவர் மற்றும் பேராசிரியர்,

சிறுதானிய மகத்துவ மையம்,

அத்தியந்தல், திருவண்ணாமலை.

 காசி.வேம்பையன்

 படங்கள்: கா.முரளி

அடுத்த கட்டுரைக்கு