Published:Updated:

மானாவாரிக்கேற்ற குண்டு மிளகாய்...

வறட்சியிலும் வருமானம் தரும் வற்றல்!

புன்செய் நிலங்களையெல்லாம் நன்செய் நிலங்களாக மாற்ற ஆசைப்பட்டு... கிணறு, ஆழ்துளைக்கிணறு என்று தோண்டியதில் நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்குப் போய் விட்டதால், இப்படி மாற்றப்பட்ட நிலங்களெல்லாம் மீண்டும் புன்செய் நிலங்களாக மாறி வருகின்றன. ஆனால், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பல பகுதிகளில் புன்செய் நிலங்கள் இன்றளவும் அப்படியே இருக்கின்றன. கிடைக்கும் மழையை வைத்து மானாவாரிப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள், இப்பகுதி விவசாயிகள். சிறுதானியங்களோடு, காய்கறி, நெல் என்று அனைத்தையும் மானாவாரியாகத்தான் பயிர் செய்கிறார்கள். கிடைக்கும் மழையையும், சுமாரான மண்ணையும் வைத்து சாதனை சாகுபடி செய்யும் இவர்கள் அனைவரையுமே, ‘முன்னோடி விவசாயிகள்’ என்று சொன்னால் மிகையில்லை. அந்த முன்னோடி விவசாயிகளில் ஒருவர்தான்,  தூத்துக்குடி மாவட்டம், வில்வமரத்துபட்டியைச் சேர்ந்த அமுதவள்ளி. இவர், மானாவாரியாக, குண்டு மிளகாய் சாகுபடி செய்து வருகிறார்.

மானாவாரிக்கேற்ற குண்டு மிளகாய்...

விளாத்திகுளத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வில்வமரத்துபட்டியில் தன் தோட்டத்தில் இருந்த அமுதவள்ளியைச் சந்தித்தோம். “பூர்விகமாவே மிளகாய் விவசாயம்தான் செய்றோம். இந்தப்பகுதி வறட்சியான கரிசக்காட்டு பூமி. எவ்வளவு தோண்டுனாலும் தண்ணி வராது. கிடைக்கிற மழையை வெச்சு மிளகாய், கம்பு, சோளம், சூரியகாந்தினு போடுவோம். வேற பயிர்களையும் போடமுடியாது. அதிகமா மிளகாய்தான் போடுவாங்க. கரிசல் மண்ணுக்கும் கோடைமழைக்கும் மிளகாய் நல்லா செழிச்சு வரும். சம்பா மிளகாயை விட குண்டு மிளகாய்ல விதையும், காரமும் அதிகமா இருக்கும். இந்தப்பகுதியில குண்டு மிளகாய்தான் அதிகம். நான் ஒண்ணரை ஏக்கர்ல குண்டு மிளகாய் போட்டிருக்கேன்.

கோடை மழைதான் எங்க குலசாமி!

நானும், ரசாயன உரம் தூவித்தான் மிளகாய் போட்டுக்கிட்டிருந்தேன். மூணு வருஷத்துக்கு முன்ன ஒரு முறை உரம் வாங்க கையில காசு இல்ல. அந்த வருஷம் உரம் போடாம விட்டுட்டேன். ஆனாலும் காய்ப்பு நல்லாத்தான் இருந்துச்சு. கழிவும் நிறைய இல்லை. அதுல இருந்து உரம் போடுறதை விட்டுட்டேன். மானாவாரி பூமிங்கிறதால சித்திரைக் கோடைமழைதான் எங்களுக்கு குலசாமி. சித்திரை எப்போ வரும்னு காத்திருப்போம்” என்று வெள்ளந்தியாகப் பேசிய அமுதவள்ளி, இயற்கை முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் மானாவாரியாக குண்டு மிளகாய் சாகுபடி செய்யும் முறையைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே...

புரட்டாசிப் பட்டம் ஏற்றது!

மானாவாரிக்கேற்ற குண்டு மிளகாய்...

‘சித்திரை மழை பெய்ததும் தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்து பத்து நாட்கள் ஆற விட்டு ஆட்டுக்கிடை போட வேண்டும். மூன்று மாதங்கள் கழித்து (ஆவணி மாதம்), உழவு செய்ய வேண்டும். புரட்டாசி மாதம் மழை பெய்ததும் டில்லர் மூலம்  உழவு செய்து மிளகாய் விதைகளைத் தூவி ஒரு உழவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அளவுக்கு விதை தேவைப்படும். 8 கிலோ மிளகாயை உடைத்தால் சராசரியாக 4 கிலோ அளவுக்கு விதை கிடைக்கும். நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் திடமான மிளகாய்களைத்தான் விதைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரித்தெடுத்த விதையை, நீரில் அலசி ஒரு நாள் முழுவதும் லேசான வெயிலில் காய வைத்து, எடுத்துத்தான் விதைக்க வேண்டும். நீரில் அலசி காய வைக்காமல் விதைத்தால், விதைகளின் வாசம் தும்மலையும், தலைவலியையும் ஏற்படுத்தும். விதைத்த 15-ம் நாளில் முளைப்பு வந்து விடும். தூவி விதைப்பதால் சில இடங்களில் நெருக்கமாவும், சில இடங்களில் இடைவெளியுடனும் பயிர்கள் முளைக்கும். அதனால் முளைப்புக்கு வந்ததும், நெருக்கமாக இருக்கும் நாற்றுகளைப் பறித்து, இடைவெளி அதிகமாக இருக்கும் பகுதிகளில் நடவு செய்ய வேண்டும். 20, 35, 50-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.

ஏக்கருக்கு 3 குவிண்டால்!

மார்கழி மாதம் பூ பூத்து தை மாதம் காய் காய்க்கும். தை மாதக் கடைசியில் பச்சையும் சிவப்பும் கலந்த நிறத்தில் பழுக்கத் தொடங்கும். மாசி மாதம் தோட்டம் முழுவதும் செக்கச்செவேல் என மிளகாய்ப் பழங்கள் காய்த்துத் தொங்கும். மாசி கடைசியில் ஒரு பறிப்பு, பங்குனியில் இரண்டு பறிப்பு என மொத்தம் மூன்று முறை அறுவடை செய்யலாம். களத்தில் நல்ல வெயிலில் இரண்டு நாட்கள் காய வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய் வற்றலை சணல் சாக்கில் நிரப்பி இறுக்கமாகக் கட்டி வைத்து வசதிக்கு ஏற்ப விற்பனை செய்துகொள்ளலாம். வற்றலை அள்ளும் போதே சோடை வற்றலைத் (கழிவு வற்றல்) தனியாகப் பிரித்து விட வேண்டும். போதுமான மழை கிடைத்தால், ஏக்கருக்கு 3 குவிண்டால் அளவுக்கு வற்றல் கிடைக்கும். இதில் குவிண்டாலுக்கு 10 கிலோ அளவுக்கு சோடை வற்றல் இருக்கும்.’
 
கழிவைக் குறைக்கும்

சாகுபடிப் பாடம் முடித்த அமுதவள்ளி, நிறைவாக விற்பனை பற்றி பேசத் தொடங்கினார். “விளாத்திகுளத்துலயே வத்தலுக்கு மார்க்கெட் இருக்குறதுனால விற்பனை செய்றதுக்கு பிரச்னையே இல்லை. உடனே விற்பனை செய்யணும்னு அவசியமில்லை. விலை அதிகமாகும் போது விற்பனை செய்யலாம். ஒரு குவிண்டால் வத்தல் 9 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. சராசரியா குவிண்டாலுக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். அந்தக் கணக்குல பார்த்தா, 3 குவிண்டாலுக்கு 21 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். உழவு, களை, பறிப்பு செலவுனு 7 ஆயிரத்து 500 ரூபாய் போக  13 ஆயிரத்து 500 ரூபாய் லாபம். கழிவு வத்தலை மொத்தமா சேர்த்து வெச்சு விக்கிறப்போ... அதுக்கும் குவிண்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார், அமுதவள்ளி.

மானாவாரிக்கேற்ற குண்டு மிளகாய்...

• குண்டு மிளகாய் கரிசல் மண்ணிலும், வண்டல் மண்ணிலும் வளரும் என்றாலும், கரிசல் மண்தான் இதற்கு ஏற்ற மண். சம்பா மிளகாய் எல்லா மண்ணிலும் வரும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரிசல் மண்ணில் குண்டு மிளகாயை சாகுபடி செய்யலாம் என்றாலும், தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் இது அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

• குண்டு மிளகாயை இறவையில் சாகுபடி செய்யும்போது, இரண்டு மடங்கு அதிக மகசூல் கிடைக்கும். தண்ணீர் வசதி உள்ளவர்கள் இறவையில் சாகுபடி செய்யலாம்.

• சாகுபடி செய்த மிளகாயில் இருந்தே பெரும்பாலும் விவசாயிகள் விதைகளை எடுத்துக் கொள்வதால், விதைக்காக அலைவதில்லை. புதிதாக விதைப்பவர்கள் விலைக்கு வாங்கி விதைக்கலாம். ஒரு கிலோ விதை 300 ரூபாய். இறவையில் நடவு செய்பவர்கள் நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.

• குண்டு மிளகாயை ‘முண்டு வத்தல்’ என்றும் சம்பா மிளகாயை  ‘நீளவத்தல்’ என்றும் அழைக்கிறார்கள்.

செலவைக் கூட்டும் ரசாயனம்!

வில்வமரத்துபட்டியைச் சேர்ந்த வீரைய்யா ரசாயன உரம் போட்டு மிளகாய் சாகுபடி செய்து வருகிறார். “போன புரட்டாசியில ரெண்டு ஏக்கரில் குண்டு வத்தல் விதைச்சேன். மூணு நாள் ஆட்டுக்கிடை போட்டேன். சொந்தமா ஆடுகள் இருக்குறதுனால கிடைச் செலவு இல்லை. அடியுரமா ரசாயன உரம் போட்டு உழுதுட்டு அப்படியே விதைச்சுடுவேன். தேவைப்படும் போது மேல் உரம் தூவுவேன். ஏக்கருக்கு 4 குவிண்டால் வத்தல் கிடைக்கும். ஆனா, குவிண்டாலுக்கு 20 கிலோ வரைக்கும் சோடை வத்தல் கழியும். உரம் போடுறப்போ ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் செலவாகுது. ஆனா, இம்புட்டு செலவு செஞ்சு நான் எடுக்குற லாபத்தை செலவே செய்யாம, அமுதவள்ளி அக்கா எடுத்துடுறாங்க. அதனால இந்த வருஷம் ரசாயனம் போடாம விதைக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்” என்கிறார், வீரைய்யா.

தொடர்புக்கு, வீரைய்யா, செல்போன்: 98432- 28592

 இ.கார்த்திகேயன், பா.சிதம்பரபிரியா

 படங்கள்: ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு