Published:Updated:

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

75 சென்ட்... 8 மாதங்கள்... ரூ.2 லட்சத்து 80 ஆயிரம்...!

த்திரிக்காய் சாம்பார் இல்லாத கல்யாணமோ, விசேஷ நிகழ்ச்சிகளோ கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, நாம் உணவில் பயன்படுத்தும் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது, கத்திரிக்காய். அதேநேரத்தில் அதிகளவு நோய் தாக்குலுக்கு உள்ளாகும் காய்கறிகளிலும் கத்திரிக்கு இடமுண்டு. இதன் காரணமாக, ரசாயன விவசாயிகளே கத்திரி பயிரிடத் தயக்கம் காட்டும் நிலையில்... இயற்கை முறையில் பயிரிட்டு சோதனை முயற்சியிலேயே லாபத்தை லட்சங்களில் அறுவடை செய்திருக்கிறார், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள இலுப்புலி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி, நாகராஜன்.

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

இயற்கை ஆர்வமூட்டிய பசுமை விகடன்!

காலைவேளையில் கத்திரி அறுவடையில் முனைப்பாக இருந்தவரைச் சந்தித்தோம். “எங்களுக்கு 30 ஏக்கர் நிலமிருக்கு. பூர்விகமா விவசாயம்தான் தொழில். ரசாயன உரங்களைப் போட்டுத்தான் விவசாயம் செஞ்சேன். அதுல வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு. அந்த நேரத்துல ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சேன். அதுல இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு. அதோட நம்மாழ்வார் பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, இப்போ, சோதனை முயற்சியா நண்பர்கிட்ட இருந்து பூனைத்தலைக் கத்திரி நாத்து வாங்கி... முக்கால் ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன் (2,500 நாற்றுகள்). கத்திரியைப் பொருத்தவரை, வருஷம் முழுவதும் பயிரிடலாம். குறிப்பா, தண்ணி வசதி குறைச்சலா இருக்கற விவசாயிங்க கத்திரியை சாகுபடி பண்ணலாம். நான் இப்போ கிணத்துப் பாசனம்தான் செய்துக்கிட்டு இருக்கேன். ஒருநாள் விட்டு ஒருநாள் அரைமணி நேரம் தண்ணீர் விடுவோம். சொட்டு நீர்ப் பாசனம் மூலமா தண்ணீர் விடுறதால, அதிகம் தண்ணி செலவாகுறதில்லை. நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்கு” என்ற நாகராஜன், தொடர்ந்தார்.

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

இனி எல்லாமே இயற்கைதான்!

“இயற்கை உரங்களைக் கொடுக்கிறதால மண்ணுல மண்புழு அதிக அளவுல உற்பத்தியாகுது. அதனால பயிர் வளர்ச்சி நல்லா இருக்குது. நோய்த் தாக்குதலும் குறையுது. கத்திரியை இயற்கை முறையில வெற்றிகரமா சாகுபடி செஞ்சிட்டா, வேற எந்தப் பயிரையும் இயற்கை முறையிலயே சாகுபடி செய்ய முடியும். இனி, எந்தப் பயிரா இருந்தாலும், நான் இயற்கை முறையிலதான் விவசாயம் செய்வேன். இயற்கை முறையில சரியா விவசாயம் செஞ்சா, ரசாயன உரம் போட்டு செய்றதைக் காட்டிலும் நல்ல லாபம் பாக்க முடியும். அதுக்கு நானே உதாரணம். இயற்கை முறையில விவசாயம் செய்ய, என்னுடைய நண்பர்கள் செந்தில்குமார், ரங்கநாதன், சென்னியப்பன் ஆகியோர் எனக்கு ரொம்பவே உதவியா இருந்தாங்க” என்று பெருமிதப்பட்ட நாகராஜன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

ஆறு மாதம், 20 டன்!

“இயற்கை முறையில விளைஞ்ச கத்திரிங்கிறதால விற்பனைக்கு பிரச்னையில்லை. ஆனா, அதிக விலை வெச்சு விற்பனை செய்றதில்லை. சந்தை விலைக்குத்தான் விற்பனை செய்றேன். தினமும் சராசரியா 120 கிலோவுல இருந்து 150 கிலோ வரைக்கும் அறுவடையாகுது. இதுல தினம் 15 கிலோ வரைக்கும் சொத்தைக் கத்திரிக்காய் இருக்கும்.

ஒரு பருவத்துக்கு 20 டன் அளவுக்கு தரமான காயும், 2 டன் அளவுக்கு சொத்தைக் காயும் அறுவடை செய்யலாம். நான் அறுவடை ஆரம்பிச்சு ரெண்டு மாசமாகுது. இதுவரைக்கும் ஆறரை டன் அளவுக்கு மகசூல் எடுத்திருக்கேன்.

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

ஒரு கிலோ கத்திரிக்காயை 15 ரூபாய்ல இருந்து 25 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்திருக்கேன். சராசரியா 20 ரூபாய்னு வெச்சுக்கலாம். சொத்தைக் காய்களை கிலோ 5 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். இதுவரை ஆறரை டன் கத்திரிக்காயை விற்பனை செய்தது மூலமா 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இன்னமும் 14 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். மொத்த மகசூல் 20 டன், சராசரி விலை 20 ரூபாய்னு வெச்சுக்கிட்டா... மொத்தமா 4 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும். எல்லா செலவும் போக, ரெண்டே முக்கால் லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும். இதுல நல்ல லாபம் கிடைச்சிருக்கிறதால அடுத்து அதிகப் பரப்புல சாகுபடி செய்யலாம்னு இருக்கேன்” என்று சொல்லி விடை கொடுத்தார்.   

தொடர்புக்கு,

நாகராஜன், செல்போன்:

99654 -63999.  

காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த...

அசுவிணி, இலைப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த... புளித்த மோர்க்கரைசலை, பூச்சிவிரட்டியுடன் சம அளவு கலந்து தெளிக்கலாம். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த... அக்னி அஸ்திரத்துடன், தலா அரை கிலோ பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் தண்டுப்புழு, காய்ப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப்பொறி, விளக்குப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

இனக்கவர்ச்சிப் பொறி கவனம்!

இனக்கவர்ச்சிப் பொறிக்குள் பெண் பூச்சியின் வாசனை அடைத்த குப்பி இருக்கும். இந்தக் குப்பியில் உள்ள வாசனைக்கு ஆண் பூச்சி வந்து உள்ளே விழும். இந்த வாசனைக்கு ஆயுள் 21 நாட்கள். அதுவும் வெயில் படாமல் வைத்திருக்க வேண்டும். வெயிலில் வைத்தால், 15 நாட்களில் வாசனை போய் விடும். அதன் பிறகு அதனால் எந்தப் பயனுமில்லை.

21 நாட்களுக்கு ஒருமுறை குப்பியை மாற்ற வேண்டும் என்பது முக்கியம். இனக்கவர்ச்சிப் பொறி வைப்பவர்கள், மாலை வேளைகளில் வைத்து, காலை 8 மணிக்கு எடுத்து விட வேண்டும். பயிரின் மட்டத்துக்குப் பொறியை வைக்க வேண்டும். பயிரை விட உயரமாகவோ, தாழ்வாகவோ வைத்தால் பூச்சிகள் அதில் சிக்காது. ஒரு ஏக்கருக்கு மூன்று இடங்களில் வைத்தால் போதுமானது.

நன்றாக பூ பூக்க மீன் அமிலக் கரைசல்!

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

பூ எடுக்க ஆரம்பித்த நாள் முதல், 10 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமினோ அமிலத்தைத் தெளிக்க வேண்டும். இயற்கைப் பூச்சிவிரட்டியை வாரத்துக்கு ஒரு முறை தெளித்தால், பூக்கள் நன்றாகப் பூக்கும். தவிர, ஒரு கிலோ பெருங்காயத்தை 10 லிட்டர் மோரில் கலந்து தெளித்தால், நோய் தாக்குதல் குறைந்து பூக்கள் நன்றாக பூக்கும்.

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

இயற்கை இருக்க செயற்கை எதற்கு?

செயற்கை முறையில கத்திரியைப் பயிரிட்டு பெரும் நஷ்டத்தைச் சந்தித்த, நாகராஜனின் உறவினர் ஜெயபால், “நான் தொடர்ந்து ரசாயன விவசாயம் செய்துக்கிட்டு இருக்குறேன். இப்போ ஒரு ஏக்கர்ல கத்திரியை பயிரிட்டு, பெரிய அளவுல நஷ்டம் ஆகிடுச்சி. இதுக்கான காரணம், அதிகமான ரசாயன உரத்தை போட்டதுதான். இதனால, பூச்சி-, நோய் தாக்குதல் வழக்கத்தைவிட அதிகமாகிடுச்சி. குறிப்பா தண்டுப்புழு, இலைப்பேன் தாக்குதல் மூலமா, மொத்த வருமானத்துக்கும் பாதிப்பு வந்திடுச்சி. ஆனா, இயற்கை முறையில சாகுபடி செஞ்ச நாகராஜன் நல்ல லாபம் எடுத்திருக்காரு... இனி, நானும் இயற்கை முறையில சாகுபடி செய்யலாம்ங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்” என்கிறார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் முறை பற்றி நாகராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே... 

‘தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் தொழுவுரத்தைச் செழிம்பாக இறைத்து, மண் பொலபொலப்பாகும் வரை உழவு செய்து... பார் பாத்தி அமைத்து 3 அடி இடைவெளியில் கத்திரி

இயற்கையில் இனிக்கும் கத்திரி!

நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நான்கு வரிசைகளுக்கும் இடையில் 6 அடி அகல நடைபாதை விட வேண்டும். இதுபோல நடவு செய்தால், ஏக்கருக்கு 3 ஆயிரத்து 500 நாற்றுகள் வரை தேவைப்படும். நடவு செய்த 7-ம் நாள் ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி ஜீவாமிர்தக் கரைசலை வேர் அருகே கொஞ்சம் மண்ணைப் பறித்து, ஊற்றி மண் அணைக்க வேண்டும். இதேபோல வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப அளவை அதிகரித்துக் கொள்ளலாம். 10-ம் நாள் முதல், வாரம் ஒரு முறை, இயற்கைப் பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும்.

15-ம் நாள் வேப்பம் பிண்ணாக்கு கலந்த தொழுவுரத்தைத் (ஏக்கருக்கு 400 கிலோ தொழுவுரம்+70 கிலோ பிண்ணாக்கு) தூவி, மண் அணைக்க வேண்டும். 20-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக்  கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாள் தேவையைப் பொறுத்து களை எடுக்க வேண்டும். 30-ம் நாள் இனக்கவர்ச்சிப் பொறி அமைக்க வேண்டும். 45 நாளுக்கு மேல் பூக்கள் பூக்கும்.

50-ம் நாள், செடிக்கு 100 கிராம் வீதம் பிண்ணாக்குக் கலவையை (வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு நான்கையும் சம அளவு கலந்த கலவை) வைத்து மண் அணைக்க வேண்டும். 60-ம் நாள், காய்க்க ஆரம்பிக்கும். அதிலிருந்து 6 மாதம் வரை மகசூல் கிடைக்கும்.

 கு.ஆனந்தராஜ்

 படங்கள்: அ.நவின்ராஜ்

அடுத்த கட்டுரைக்கு