Published:Updated:

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா!

குறுந்தொடர்-2

‘தண்ணீருக்கான நோபல் பரிசு’ என்றழைக்கப்படும், ‘ஸ்டாக்ஹோம் நீர் விருது’, 2015-ம் ஆண்டுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் ‘தருண் பாரத் சங்’ அமைப்பின் தலைவர், ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தின், டௌலா கிராமத்தைச் சேர்ந்தவரான இவருக்கு... ராஜஸ்தான் மாநில குக்கிராமங்களில் மக்களுடன் சேர்ந்து தண்ணீருக்காக வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? எந்த சம்பவம் அவரை பொது வாழ்வுக்கு இழுத்தது?

1974-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் ராஜேந்திர சிங். அப்போது, காந்தி அமைதி அறக்கட்டளையைச் சேர்ந்த, அவரது குடும்ப நண்பரான ரமேஷ் சர்மா, மீரட் வந்திருந்தார். அவர், மக்களுடன் சேர்ந்து கிராமத்தில் செய்த பொதுத்தொண்டு, ராஜேந்திர சிங்கை வெகுவாக பாதித்தது. பள்ளியில் ஆங்கில ஆசான் பிரதாப் சிங், பாடவேளைக்குப் பிறகு பேசும், சமூக, அரசியல் விஷயங்கள், சமூகத்தில் தன் கடமை என்ன என இவரை யோசிக்க வைத்தது. இந்தத் தருணத்தில்தான், 75-ம் ஆண்டு, இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த எமர்ஜென்ஸியை எதிர்த்து, ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதில் தானும் ஒருவராகக் கலந்துகொண்டார்.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா!

ராஜஸ்தானை நோக்கிப் பயணம்!

கல்லூரி படிப்பை முடித்ததும், 80-ம் ஆண்டு, மத்திய அரசின் ‘நேரு யுவ கேந்திரா’ அமைப்பில், தேசிய பொதுச் சேவை தன்னார்வலராக சேர்ந்தார், ராஜேந்தர். உத்தர பிரதேசத்திலிருந்து, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு அவரின் பயணம் தொடங்கியது. மத்தியக் கல்வித்துறையின் கீழ், அதே மாநிலத்தின் தௌசா மாவட்டத்தின் ‘இளைஞர் கல்வி’ திட்ட அதிகாரியாக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். ஜெய்ப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் தொடங்கப்பட்ட, ‘தருண் பாரத் சங்’ அமைப்பில் இணைந்து செயல்படத் தொடங்கினார். அந்த அமைப்பின் பொதுச் செயலாளராகவும் ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மேலதிகாரிகளின் அக்கறையின்மையும், அரசுப் பணியில் அர்த்தமுள்ளதாக எதுவும் செய்ய முடியாத சூழலும் அவருக்குள் அதிருப்தியை அதிகப்படுத்தின. கடைசியில், தான் பார்த்துக்கொண்டிருந்த அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.

உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு கையில் 23,000 ரூபாயுடன், தருண் பாரத் சங் அமைப்பின் நான்கு நண்பர்களுடன் பஸ் ஏறினார். பஸ் கடைசியாக எந்த ஊரில் நிற்கிறதோ, அந்த ஊரில் இறங்கி வேலை செய்வது என முடிவு செய்திருந்தது அந்த ஐவர் குழு! பஸ் கடைசியாக நின்றது, அல்வார் மாவட்டத்திலுள்ள, தானாகாஜி தாலூகாவிலிருக்கும் கிஷோரி கிராமம். அவர்கள் அங்கே கால் வைத்த நாள்... 1985-ம் ஆண்டு அக்டோபர் 2.

கோபால் புராவில் திருப்புமுனை!

கிஷோரி கிராமத்தினர், முதலில் அவர்களைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தனர். “நாங்கள் இந்தக் கிராமத்திலேயே தங்கி கிராம முன்னேற்றத்துக்கு உழைக்கிறோம்” என்று இளைஞர்கள் சொன்னதை யாரும் நம்பத் தயாராக இல்லை. அதனால் பக்கத்திலிருந்த பிக்கம்புரா கிராமத்துக்குச் சென்றனர். அங்கு தங்குவதற்கு இடமளித்தனர். ராஜேந்தருக்கு ஆயுர்வேதம் தெரியுமென்பதால், பக்கத்திலிருக்கும் கோபால்புரா கிராமத்தில் ஒரு சிறிய மருத்துவ மையத்தைத் தொடங்க, நண்பர்கள் நால்வரும், கிராம சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கினர்.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா!

அப்போதுதான் ராஜேந்திர சிங்கின் வாழ்வைப் புரட்டிப் போட்ட ஓர் ஆலோசனை அவருக்குக் கிடைத்தது. கோபால்புராவைச் சேர்ந்த முதியவர் மங்கு லால் படேல், “கோபால்புராவின் தேவை படிப்பல்ல, தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ளும் ஜோஹாட் ஏரி. படித்தவன் மாதிரி மூளையைக் கொண்டு யோசிக்காமல், கைகளால் வேலை செய்யப் பழகு! நீ இந்த ஊருக்கு ஏதாவது செய்ய நினைத்தால், ஊர்க் குளத்தைத் தூர்வாரி, ஆழப்படுத்தும் முயற்சியில் இறங்கு!” என்று பொட்டில் அறைந்தாற் போல் சொல்ல, ராஜேந்தரால் அன்று தூங்க முடியவில்லை. நண்பர்களிடம் இதை அவர் பகிர, அவர்கள் யாருமே களத்தில் இறங்கி உடல் உழைப்பைக் கொடுக்கத் தயாராக இல்லை.

விடாப்பிடியாக யோசித்த ராஜேந்தர், கிராம இளைஞர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, பல ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாமலிருந்த ‘கோபால்புரா’ குளத்தைத் தூர்வாரத் தொடங்கினார். நண்பர்கள் நால்வரும், ‘இது நமக்கு வேலைக்கு ஆகாது’ என சொந்த ஊர்களை நோக்கித் திரும்பிச் சென்றனர். அந்த ஆண்டு பெய்த மழையில், குளம் நிரம்ப, சுற்றியிருந்த கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதைப் பார்த்து உற்சாகமான கிராம மக்கள், அடுத்த கோடையில், குளத்தை இன்னும் ஆழமாக்க, ராஜேந்திர சிங்குடன் இறங்கி வேலை செய்தனர். இப்படியாக, மக்கள் பங்கேற்புடன் கோபால்புராவில் முதல் குளம் பெருகியது. அன்று ‘கைகளால் வேலை செய்வது’ என கோபால்புராவில் ராஜேந்திர சிங் எடுத்த முடிவுதான், இன்று அவருக்கு உலக விருதை வாங்கித் தந்திருக்கிறது.

ஆனால், இந்த முடிவினால் ஏற்பட்ட விளைவுகள்?

அடுத்த இதழில்...

 க.சரவணன்

அடுத்த கட்டுரைக்கு