Published:Updated:

காட்டுயானம், காலா நமக்... பாரம்பர்ய ரகத்தில் சாதனை படைக்கும் இளைஞர்கள்!

காட்டுயானம், காலா நமக்... பாரம்பர்ய ரகத்தில் சாதனை படைக்கும் இளைஞர்கள்!

“விவசாயம்னா என்னான்னுகூட தெரியாத நகரப் பகுதியில வளர்ந்த நாங்க, இன்னைக்கு பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செஞ்சி வெற்றிகரமா மகசூல் எடுத்திருக்கோம். இந்த முயற்சிக்கு வழிகாட்டியாவும், தூண்டுதலாவும் இருந்தது ‘பசுமை விகடன்’தான்” என்று பெருமை பொங்கப் பேசுகிறார்கள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் கார்த்திக் மற்றும் ராம்குமார்.

படித்தோம்... பயனடைந்தோம்!

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஏழாவது கிலோமீட்டரில் இருக்கும் களக்காட்டூர் என்ற கிராமத்தில் இருக்கிறது, இவர்களது பண்ணை. ஒரு காலை வேளையில் அவர்களைச் சந்தித்தோம். இன்முகத்தோடு வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர். முதலில் பேசியவர் கார்த்திக்.

காட்டுயானம், காலா நமக்... பாரம்பர்ய ரகத்தில் சாதனை படைக்கும் இளைஞர்கள்!

“காஞ்சிபுரம் டவுன், ரெங்கசாமி குளம் பகுதிலதான் நான் பிறந்து வளந்தது எல்லாம். எம்.எஸ்.சி பயோ-கெமிஸ்ட்ரி படிச்சிட்டு, சென்னையில் ஊட்டச்சத்து உணவுகளை விற்பனை செய்ற நிறுவனத்துல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆரோக்கியமான உணவு பத்துன தேடுதல்ல எதேச்சையா படிக்கத் தொடங்கினதுதான் பசுமை விகடன். அதுல இருந்த பல விஷயங்கள் என்னைத் தொடர்ந்து படிக்க வெச்சது. ஒரு கட்டத்துல நிறுவனத்திலிருந்து விலகி, விவசாயம் செய்யலாம்னு வந்துட்டேன்.

எங்க தெருவுலதான் ராம்குமாரும் இருக்கார். அவர் பி.சி.ஏ முடிச்சிருக்கார். என்னோட விவசாய ஐடியாவைத் தெரிஞ்சுக்கிட்டதும், அவரும் என்கூட சேந்துக்கிட்டார். பல இடங்கள்ல குத்தகைக்கு இடம் தேடி அலைஞ்சப்போதான், இந்த இடம் கிடைச்சது (களக்காட்டூர் கிராமத்தில் உள்ள நிலம்). ஒன்பது வருஷமா விவசாயம் செய்யாம சும்மா போட்டு வெச்சிருந்த நிலம் இது. ‘இயற்கை விவசாயம் செய்ய போறோம்’னு சொல்லி நாங்க கேட்டதும் பணத்தைப் பத்தியே பேசாம சும்மாவே நிலத்தைக் கொடுத்துட்டாங்க, இந்த நிலத்தோட சொந்தக்காரங்க.

இதுக்கு முன்ன விவசாய வேலைகள் எதுவும் செஞ்சதில்ல. பசுமை விகடன் படிச்சது, சில பண்ணைகளைப் போய் பாத்தது... இந்த அனுபவங்களை வெச்சே விவசாயத்துல இறங்கிட்டோம். முதல்ல பூங்கார் ரக நெல்லை 17 சென்ட்ல பயிர் செஞ்சு பாத்தோம். நல்லா வளந்து நாலரை மூட்டை நெல் மகசூல் கிடைச்சுது” என்று கார்த்திக் பெருமை பொங்கச் சொல்லி நிறுத்த, தொடர்ந்தார், ராம்குமார்.

காட்டுயானம், காலா நமக்... பாரம்பர்ய ரகத்தில் சாதனை படைக்கும் இளைஞர்கள்!

உதவி செய்த உயர்ந்த உள்ளங்கள்!

“இயற்கை விவசாயம்னதும் ஆரம்பத்துல கிராமத்துக்காரங்க ஒரு மாதிரியாத்தான் பாத்தாங்க. ‘ஏக்கருக்கு 10 மூட்டை கூட தேறாது’னு சொன்னாங்க. அவங்ககிட்ட நிரூபிக்கணுங்கிறதுக்காகவே இந்தப் பகுதியில அதிகமா பயிர் செய்ற ஏ.டி.டி-45 ரகத்தை பயிர் செய்து, ஏக்கருக்கு 23 மூட்டை (80 கிலோ மூட்டை) நெல்லை அறுவடை செஞ்சோம். விவசாயத்துல இது எங்களுக்கு முதல் முயற்சி. அதோட, பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்யலாம்னு காட்டுயானம், காலா நமக் நெல் ரகங்களைப் பயிர் செஞ்சோம். காட்டுயானம் விதையை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாரதிகிட்ட வாங்கினோம். காலா நமக் விதையை உத்திரமேரூரைச் சேர்ந்த விவசாயி தணிகைவேலன்கிட்ட வாங்கினோம். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஐயா, இடுபொருட்கள், இயற்கை முறைப் பராமரிப்புக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செஞ்சாரு. வாலாஜாபாத் பக்கத்துல கோசாலை வெச்சிருக்கிற நிரஞ்சன், இயற்கை இடுபொருட்களுக்காக ரெண்டு மாடுகளை இலவசமா கொடுத்தாரு.

அதிக வைக்கோல்!

மொத்தம் 9 ஏக்கர் நிலம். இதுல 40 சென்ட்ல காட்டுயானம், 40 சென்ட்ல காலா நமக், ஒரு ஏக்கர்ல ஏ.டி.டி-45 போட்டோம். காட்டுயானம் 160 நாள் பயிர். காலா நமக் 120 நாட்கள் பயிர். காட்டுயானம் 8 அடி உயரத்துக்கு வளர்ந்து நின்னுச்சு. காலா நமக் 6 அடி உயரத்துக்கு வளந்துச்சு. இந்த பயிர்கள்ல வைக்கோல் அதிகமா கிடைச்சது” என்றார், ராம்குமார்.

கன்னி முயற்சியிலேயே கணிசமான வருமானம்!

வருமானம் பற்றிப் பேசிய கார்த்திக், காலா நமக்கை அறுவடை செய்ததுல 8 மூட்டை (80 கிலோ) நெல் கிடைச்சது. விதைக்கு 2 மூட்டை எடுத்து வெச்சோம். மீதி 6 மூட்டை(480 கிலோ) நெல்லை அரிசியாக்குனதுல 288 கிலோ அரிசி கிடைச்சது. ஒரு கிலோ 90 ரூபாய்க்கு வித்தோம். இதுமூலமா 25 ஆயிரத்து 920 ரூபாய் கிடைச்சது. விதைநெல் ஒரு கிலோ 30 ரூபாய்னு 160 கிலோ வித்தது மூலமா 4,800 ரூபாய் வருமானம். மொத்தம் 30 ஆயிரத்து 720 ரூபாய் வருமானம். இதேமாதிரி காட்டுயானத்துல 560 கிலோ நெல் கிடைச்சது. இத அரிசியாக்குனதுல 336 கிலோ கிடைச்சது. ஒரு கிலோ 100 ரூபாய்னு வித்ததுல 33 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம் வந்தது. நாற்றங்கால், உழவு, அறுவடை, அரிசியாக்குனதுனு 80 சென்ட் நெல்லுக்கு 16 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சிருக்கோம். 64 ஆயிரத்து 320 ரூபாயிலிருந்து, செலவு 16 ஆயிரம் போக, 48 ஆயிரத்து 320 ரூபாய் லாபமாக நின்னது” என்றவர்

காட்டுயானம், காலா நமக்... பாரம்பர்ய ரகத்தில் சாதனை படைக்கும் இளைஞர்கள்!

அதிகம் கிடைத்த அனுபவங்கள்!

நிறைவாக, “எங்க கன்னி முயற்சியிலேயே நெல் மூலமா கணிசமான லாபம் கிடைச்சிருக்கு. கிடைச்ச வைக்கோலை மாடுகளுக்கு வெச்சிருக்கோம். ஆரம்பகட்ட செலவுகளுக்கு பூங்கார் நெல்லுல வந்த வருமானம் சரியா போச்சு. இந்த ஒரு வருஷத்துல வருமானத்தோட, நடவு முதல் அறுவடை வரை விவசாயம் சம்பந்தமா நிறைய அனுபவங்கள் கிடைச்சிருக்கு. இந்த முயற்சியை ஒரு பயிற்சியாகவே பார்க்கிறோம். விவசாயத்துலயும் நல்ல லாபம் எடுக்க முடியுங்கிற நம்பிக்கையும் வந்திருக்கு. எங்களை விவசாயியா மாத்துன பசுமை விகடனுக்கு நன்றி” என்றபடி மகிழ்ச்சியோடு விடைகொடுத்தனர் இருவரும்.  

நாட்டு மாடுகள் இலவசம்!

காட்டுயானம், காலா நமக்... பாரம்பர்ய ரகத்தில் சாதனை படைக்கும் இளைஞர்கள்!

வாலாஜாபாத் அருகில்  கோசாலை நடத்தி வரும் நிரஞ்சன், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு நாட்டு மாடுகளை இலவசமாகக் கொடுத்து வருகிறார். அவரிடம் பேசிய போது, இயற்கை விவசாய இடுபொருட்களைத் தயாரிக்கவும், மற்றும் உழவுத் தேவைக்காகவும் நாட்டு மாடுகளை எங்கள் கோசாலையிலிருந்து இலவசமாகக் கொடுத்து வருகிறோம். இதுவரை 100 மாடுகளுக்கு மேல் கொடுத்திருக்கிறோம். இப்போது பசுமாடுகள் குறைவாகவே இருக்கின்றன. காளைமாடுகள்தான் அதிகம் இருக்கின்றன. இயற்கை விவசாயம் செய்ய நாட்டு மாடுகள் தேவைப்படுவோர் எங்கள் கோசாலையை அணுகலாம். இப்படி எங்களிடம் இருந்து மாடுகளை வாங்கிச் செல்பவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் மாடுகளை விற்கக்கூடாது. மாடுகளைப் பயன்படுத்தவில்லையென்றால், திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்” என்ற நிபந்தனையோடு அழைப்பு விடுக்கிறார்.

தொடர்புக்கு, நிரஞ்சன், செல்போன்: 94440-34723

காலா நமக்!

40 சென்ட் நிலத்தில் 8 மூட்டை (80 கிலோ) மகசூல். இதில் 6 மூட்டை அரிசியாக அரைக்கப்பட்டதில் 288 கிலோ அரிசி கிடைத்தது. ஒரு கிலோ 90 ரூபாய் வீதம், 25,920 ரூபாய் வருமானம். மீதி 2 மூட்டைகள் விதைநெல் கிலோ ரூ.30 என்ற அளவுக்கு விற்பனையானது. இதன் மூலம் 4,800 ரூபாய்.   மொத்தம் 30,720 ரூபாய்.

காட்டுயானம்!

40 சென்ட் நிலத்தில் 7 மூட்டை (80 கிலோ) மகசூல். இதில் அரிசியாக அரைக்கப்பட்டதில் 336 கிலோ கிடைத்தது. ஒரு கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்ததில், 33 ஆயிரத்து 600 ரூபாய். மொத்தம் 64 ஆயிரத்து
320 ரூபாய் வருமானம். மொத்தச் செலவு, 16 ஆயிரம் ரூபாய். மீதி 48 ஆயிரத்து 320 ரூபாய் லாபம்.

ஏ.டி.டி-45!

1 ஏக்கரில் 23 மூட்டை ஏ.டி.டி-45. இதில் 22 மூட்டையை அரிசியாக அரைத்ததில் 1,144 கிலோ கிடைத்தது. கிலோ 45 ரூபாய் வீதம் விற்பனை செய்ததில் 51 ஆயிரத்து 480 ரூபாய் வருமானம்.   மீதி ஒரு மூட்டை விதை நெல். இதற்கான தொகை 2,500 ரூபாய். ஆக மொத்தம் 53,980 ரூபாய். இதில் செலவு 21,000 போக 32 ஆயிரத்து 980 ரூபாய் லாபம்.

பனிக்காலப் பூச்சித்தாக்குதலைச் சமாளிக்க!

“ஏ.டி.டி-45 பயிரிட்ட வயல்களில் பனிக்காலத்தின் துவக்கத்தில் பூச்சித்தாக்குதல் தென்பட்டது. எருக்கு 15 கிலோ (இலை, பூ, தண்டு), வேலிப்பருத்தி 10 கிலோ (இலை, கொடிகளோடு), அரளி விதை 10 கிலோ, துமட்டிக்காய் 15 கிலோ (இலை, கொடி, காய்களோடு) ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து... ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி கலக்கி, ஒரு வாரம் ஊறவிட்டு வடிகட்டி பயிர்களுக்குத் தெளித்தோம். அதில் நல்ல பலன் கிடைத்தது” என்கிறார், கார்த்திக்.

 த.ஜெயகுமார்

 படங்கள்: அ.பார்த்திபன்

அடுத்த கட்டுரைக்கு