Published:Updated:

கரும்பு பிரச்னைக்கு காரணம், தமிழக அரசா?

கரும்பு பிரச்னைக்கு காரணம், தமிழக அரசா?

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘சர்க்கரை ஆலைகளின் சங்கட நிலை-சில உண்மைகள்’ என்ற தலைப்பிட்டு முன்னணி நாளிதழ்களில் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் சார்பில் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அபினாஷ் வர்மா, சென்னையில் பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக சில விஷயங்களைச் சொல்ல, இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

கரும்பு பிரச்னைக்கு காரணம், தமிழக அரசா?

இதுபற்றி கடந்த இதழில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன், ‘‘கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு மூட்டைக்கு 200 ரூபாய் செலவு செய்து தமிழ்நாட்டில் சர்க்கரையை விற்பனை செய்கின்றனர். இறக்குமதிக்கும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கும் இருக்கும் வரி முரண்பாட்டை சரி செய்தால், வெளிமாநில சர்க்கரை தமிழ்நாட்டுக்கு வராது. மேலும், எரிசாராயத்தில் இருக்கும் வரி முரண்பாட்டையும் சரி செய்ய வேண்டும். அத்துடன், 6 முதல் 8 மாதங்கள் ஆலைகள் இயங்காமல் இருக்கும்போது, நிலக்கரி மூலமாக இணை மின்சார உற்பத்தியை அரசு ஊக்கப்படுத்தினால், சர்க்கரை ஆலைகளுக்கு வருமானத்தில் பிரச்னை இருக்காது. இதன் மூலம் ஆலைகள் நஷ்டம் இல்லாமல் இயங்கும்’’ என்று ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் பகிர்ந்தார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், “சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவது உண்மையாக இருந்தால், ஒவ்வொரு முதலாளியும் இரண்டு, மூன்று என கூடுதலான சர்க்கரை ஆலைகளைத் திறந்திருக்க முடியாது. தற்காலிகமாக இந்த ஆண்டு சர்க்கரையின் விலை மட்டும்தான் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இதற்கு சர்வதேச, இந்திய இறக்குமதிக் கொள்கைகளும் ஒரு காரணம். ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகள் இதைக் காரணம் காட்டி விவசாயிகளுக்கு அரசு அறிவித்த விலையைக் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்கின்றன.

கடந்த ஆண்டு தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் சார்பில், ‘மாநில அரசுக்கு பரிந்துரை விலை அறிவிக்க உரிமை இல்லை’ எனத் தொடரப்பட்ட வழக்கில், ‘மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது’ என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, எப்படி ரெங்கராஜன் கமிட்டியின் வருவாய் பகிர்மான முறை அமலுக்கு வந்திருக்க முடியும். இந்தியாவில் எந்த மாநிலமும் ரெங்கராஜன் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வோர் ஆலையும் எடையிலும், ரெக்கவரியிலும் மோசடிகள் செய்கின்றன. லாபம் அதிகமாக இருக்கும்போது, அதைப் பற்றி பேச மறுக்கும் ஆலைகள், ஓர் ஆண்டில் நஷ்டத்தை சந்திக்கும் நிலை வந்ததும், அந்தச் சுமையை விவசாயிகள் தலையில் ஏற்ற நினைப்பது வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுவதற்கு சமம்’’ என்று சீறினார்.

இதுதான் ஆலைகளின் தரப்பு!

கரும்பு பிரச்னைக்கு காரணம், தமிழக அரசா?

சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அபினாஷ் வர்மா, ‘‘கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய அரசினால் நிர்ணயிக்கப்படும் கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை (Fair and Remunerative Price - FRP) 55 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஆனால் சர்க்கரை விலையோ, கடுமையாக சரிந்து வருகிறது. இது தவிர, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கும் அதிகமான ‘பரிந்துரை விலை’யை அறிவித்து வருகின்றன. சர்க்கரையை விலைச் சரிவால், நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கரும்புக்கான விலை தர முடியாமல் திணறுகின்றன.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசுகள் வருவாய் பகிர்மான கொள்கையை அமுல்படுத்தி உள்ளன. அதாவது சர்க்கரையின் விற்பனை விலையில் 75% தொகையை கரும்பின் விலையாக அல்லது சர்க்கரை மற்றும் முதன்மை துணைப்பொருட்களின் விற்பனை விலையில் 70% தொகையை வருவாய் பகிர்வு மாதிரியை உருவாக்கியுள்ளது. சர்க்கரை மற்றும் அதன் உப பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது கரும்புக்கான விலையும் அதிகரிக்கும். சர்க்கரை விலை சரிவின் பொழுது, விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் நியாயமான மற்றும் ஆதாய விலை கிடைக்கும்.

ஆனால், தமிழகத்தில் நடப்பு சர்க்கரைப் பருவத்தில் கரும்புக்கான பரிந்துரை விலையாக டன் ஒன்றுக்கு போக்குவரத்துச் செலவு உட்பட 2,650 ரூபாய்- என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரும்புக்கான பிழிதிறன் 9%. ஒரு டன் கரும்பில் இருந்து 90 கிலோ சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சர்க்கரையின் கடந்த ஆறு மாத சராசரி ஆலை விற்பனை விலையாக ஆலைகளுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய்- மட்டுமே கிடைத்துள்ளது. அதன்படி பார்த்தால், கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் 75% விலையாக டன் ஒன்றுக்கு 1,900 ரூபாய்- மட்டுமே தர வேண்டும். ஆனால், 2,450 ரூபாயைத் தந்து வருகின்றன ஆலைகள். இது தவிர, ஆலைகள், கரும்பை சர்க்கரையாக மாற்றுவதற்கான உற்பத்திச் செலவும், ஆலைகளின் நஷ்டத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கொடுக்க அரசாங்கம் விரும்பினால், நேரடி மானியமாக விவசாயிகளுக்கு அரசாங்கமே வழங்க வேண்டும். தற்சமயம் மகாராஷ்டிராவில் கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், நவம்பர் 2014 முதல் சர்க்கரை விற்பனை மீது 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில், இந்த வரி இல்லாததால், தமிழகத்துக்கு அதிக அளவில் சர்க்கரை அண்டை மாநிலங்களில் இருந்து வருகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் சர்க்கரை தமிழகத்திலேயே விற்பனை செய்ய முடியாத ஒரு இக்கட்டான நிலை.

கரும்பு பிரச்னைக்கு காரணம், தமிழக அரசா?

அதேபோன்று தமிழகத்தில் உற்பத்தியாகும் எரிசாராயத்துக்கு 14.5% மதிப்புக் கூட்டுவரி செலுத்த வேண்டும். ஆனால், அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி தமிழகத்தில் விற்பனையாகும் எரிசாராயத்துக்கு 2% வரி மட்டுமே செலுத்த வேண்டும். தமிழக சர்க்கரை ஆலைகளில் எரிசாராய விற்பனையில் கடுமையான தேக்க நிலை நிலவி வருகிறது.

மற்ற மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத ‘பசுமை மின்சார’த்துக்கு யூனிட் ஒன்றுக்கு 6 ரூபாய் வரை வழங்கும்போது, தமிழகத்தில் 3.15 ரூபாய் முதல் 4.27 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சர்க்கரைத் தொழில் சிறக்க, சர்க்கரை விற்பனை மீதான ‘வாட்’ வரி நீக்கப்பட வேண்டும். எரிசாராயத்துக்கான ‘வாட்’ வரி குறைக்கப்பட வேண்டும். சர்க்கரை ஆலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு ஆதாய விலை வழங்கப்பட வேண்டும்’’ என்று சொன்ன அபினாஷ் வர்மா,

‘‘தமிழகத்தில் சர்க்கரைத் தொழிலைச் சார்ந்துள்ள 3.5 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையும், ஆலைகளின் செயல்பாடும் தமிழக அரசு எடுக்க போகும் முடிவில்தான் உள்ளது’’ என்று விவசாயிகளின் கோபத்தை அரசாங்கத்தின் மீது திருப்பப் பார்த்திருக்கிறார்.
பார்ப்போம் என்னதான் நடக்கிறதென்று?

 காசி.வேம்பையன்

 படம்: தி.ஹரிஹரன்

அடுத்த கட்டுரைக்கு