Published:Updated:

மனித சிறுநீரில் மரம் வளர்க்கிறேன்...

மத்திய அமைச்சர் பேச்சும்... அறிவியல் உண்மையும்!

“டெல்லியில் எனக்கு ஒரு பங்களா இருக்கிறது. அங்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் ஏராளமான மரங்களையும் செடிகளையும் வளர்த்து வருகிறேன். எனது சிறுநீரை ஒரு பிளாஸ்டிக் கேனில் சேமித்து, அது 50 லிட்டர் அளவுக்கு வந்தவுடன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு மட்டும் பாய்ச்சினேன். மற்ற செடிகளைவிட, சிறுநீர் ஊற்றப்பட்ட செடிகள், ஒன்றரையடி உயரம் கூடுதலாக வளர்ந்துள்ளன. இதை ஒரு சோதனை முயற்சியாகவே செய்து வருகிறேன். நீங்களும் உங்கள் சிறுநீரை சேமித்து மரம் செடிகளுக்குப் பயன்படுத்துங்கள். இதனால் ஏற்படும் வளர்ச்சியை கண்கூடாகப் பார்க்கலாம்”- என்று டெல்லியில் நடைபெற்ற நீர்ப்பாசனக் கருத்தரங்கத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன தகவல், நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதையொட்டி ஒரு விவாதமும் கிளம்பியிருக்கிறது. பலரும், அமைச்சரைத் திட்டித் தீர்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இது, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பத்தாம்பசலித்தனமான விஷயம் என்றுகூட விமர்சிக்கிறார்கள்.

மனித சிறுநீரில் மரம் வளர்க்கிறேன்...

ஆனால், அமைச்சர் சொல்வதுதான் நிஜம். இதைப் பற்றி, 7 ஆண்டுகளுக்கு முன்பே விரிவான, ஆதாரப்பூர்வமான தகவல்களோடு, ‘பசுமை விகடன்’ பதிவு செய்திருக்கிறது. 10.9.2008 தேதியிட்ட இதழில் ‘நீங்களும் ஓர் உரத்தொழிற்சாலைதான்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு  இருந்தோம். ‘இந்த பூமியில் கழிவுகள் என்று எதுவுமில்லை. ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு. மனிதக் கழிவுகளை முறையாகப் பராமரித்தால்... துர்நாற்றமே இல்லாத உரமாக மாற்றிப் பயன்படுத்த முடியும்’ என்பதை நிரூபிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் முசிறியில் பிரத்யேகமான கம்போஸ்ட் கழிவறைகளை உருவாக்கியிருந்தது, ‘ஸ்கோப்’ தொண்டு நிறுவனம். அதன் இயக்குநர் சுப்பராயன் ‘கம்போஸ்ட்’ கழிவறைகள் மற்றும் அதன் விவசாயப் பயன்பாடுகள் பற்றிச் சொன்ன விரிவான தகவல்களை அந்தக் கட்டுரையில் பதிவு செய்திருந்தோம்.

‘‘சிறுநீரையும் மலத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பயன்படுத்தினால் அவை மிகச்சிறந்த உரம். சிறுநீர், மலம், கழிவுநீர் இவை மூன்றும் ஒன்றாகக் கலப்பதால்தான் கொடிய கிருமிகள் உருவாகி நோய்கள் உண்டாகின்றன. குறிப்பாக, சிறுநீரில் எந்த துர்நாற்றமும் இருக்காது. அதோடு காற்றும் தண்ணீரும் கலப்பதால்தான் நாற்றம் வருகிறது. சிறுநீரில் உள்ள அமோனியாவை காற்று வெளியில் கிளப்புவதால்தான் துர்நாற்றம் வருகிறது.

மனித சிறுநீரில் மரம் வளர்க்கிறேன்...

மனிதர்களின் சிறுநீரை சேமித்து, 20 நாட்கள் வரை காற்றும் தண்ணீரும் கலக்காமல் பாதுகாத்து, அதன் பிறகு ஒரு லிட்டர் சிறுநீருக்கு 10 லிட்டர் வீதம் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். சிறுநீரின் கடினத்தன்மையைப் போக்கவே தண்ணீர் சேர்க்கிறோம். சிறுநீர் உரத்தில் நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதைப் பயன்படுத்துவதால் வாழை, கொய்யா, நெல் உள்ளிட்ட பயிர்கள் செழிப்பாக விளைகிறது” என அந்தக் கட்டுரையில் சுப்பராயன் சொல்லியிருந்தார்.
 
தற்போது, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி இதேவிஷயத்தைத் தொட்டு, பரபரப்பு கிளம்பியிருக்கும் சூழலில், சுப்பராயனைத் தொடர்பு கொண்டபோது, “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஒரு மத்திய அமைச்சரே சொல்லும்போது இதுக்கு கூடுதல் வலிமை கிடைக்குது. முசிறி மற்றும் திருச்சி பகுதிகள்ல நாங்கள் அமைச்சிருக்குற கம்போஸ்ட் கழிவறைகளில் இருந்து கிடைக்கக்கூடிய சிறுநீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்றோம். அந்தப் பயிர்களோட வளர்ச்சியைப் பார்த்து பலரும் பிரமிச்சு போனதோடு, அவங்களும் இதைப் பின்பற்றிக்கிட்டு இருக்காங்க.

வாழை, கொய்யா மாதிரியான பயிர்களுக்கு ஒரு மரத்துக்கு வருஷத்துக்கு 50 லிட்டர் சிறுநீர் பயன்படுத்தலாம். இதனை 5 தவணையா கொடுக்கலாம்.

10 லிட்டர் சிறுநீரோடு 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கணும். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு, சாகுபடி காலம் முழுமைக்கும்8 ஆயிரத்து 500 லிட்டர் சிறுநீர் தேவைப்படும். தினமும் பாசன நீரோடு இதனைக் கலந்து பாய்ச்சலாம். இதனால் சாகுபடி செலவில்
25 சதவிகிதம் மிச்சமாவதோடு மட்டுமில்லாமல் 30 சதவிகிதம் கூடுதல் மகசூலும் கிடைக்கும்” என்கிறார், சுப்பராயன்.

இதற்கிடையே, நிதின் கட்காரியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது ஆர்க்யம் அறக்கட்டளை. ஆதார் அட்டை வழங்கும் பணியின் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணியின் மனைவி, ரோகிணி நடத்தும் அமைப்புதான் இது. ‘‘பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் முன்பு நடத்திய ஆய்வின் மூலமாக மனித சிறுநீர் உரமாகப் பயன்படும் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறியிருக்கிறது இந்த அமைப்பு.

தொடர்புக்கு,

சுப்பராயன்,

செல்போன்: 94431-67190

 கு.ராமகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு