Published:Updated:

பாரம்பர்ய உணவும், புதுப்பானைத் தண்ணியும்!

பாரம்பர்ய உணவும், புதுப்பானைத் தண்ணியும்!

பாரம்பர்ய உணவும், புதுப்பானைத் தண்ணியும்!

பாரம்பர்ய உணவும், புதுப்பானைத் தண்ணியும்!

Published:Updated:

பாரம்பர்ய உணவு சம்பந்தமா நிறைய விழாக்கள் நாடு முழுக்க நடக்குது. இந்த விழாக்களை நடத்தறவங்க, இயற்கை மேல இருக்கிற ஆர்வத்துல, கம்பு, கேழ்வரகுனு விதவிதமா ருசியா சமையல் பண்ணி அசத்துறாங்க. அதே நேரம் முக்கியமான ஒரு விஷயத்துல கோட்டை விட்டுப்புடறங்க.

பாரம்பர்ய உணவும், புதுப்பானைத் தண்ணியும்!

அதாவது, பாரம்பர்ய உணவு சாப்பிடும்போது, மண்பானைத் தண்ணி வைக்கிறதுதான் பொருத்தம்னு நினைச்சு, புது மண்பானையில தண்ணியை வெச்சிடறாங்க. இங்கதான் பிரச்னையே தொடங்குது. புது மண்பானையில தண்ணி ஊத்தி வெச்சி உடனே குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் 24 மணி நேரம் கழிச்சுத்தான் குடிக்கணும். வழக்கமா புதுப்பானையில தண்ணியை ஊத்தி வெச்சா, உடனே அந்தத் தண்ணியை பானை இழுத்துக்கும். திரும்பத் திரும்ப ரெண்டு மூணு தடவை தண்ணியை நிரப்பி வெச்சி, அதை கீழ ஊத்திப்புடணும். இப்படி செய்றதால, மண்பானையில  இருக்கிற தீமை செய்யுற கசடுங்க வெளியேறிடும். இந்த சங்கதி தெரியாம, புதுப்பானையில தண்ணி ஊத்தி வெச்சி, உடனே குடிச்சா தொண்டை கெட்டு, சளி, காய்ச்சல்னு பல விதமான தொந்தரவுக்கு அழைப்பு வெச்ச மாதிரி ஆயிடும். அதனால பானைத் தண்ணி விஷயத்துல உஷாரா இருங்க. அண்மையில நடந்த பாரம்பர்ய உணவுத் திருவிழாவுக்குப் போய், பானைத் தண்ணி குடிச்சு காய்ச்சல்... வந்து, கத்துக்கிட்ட ‘பானைப் பாடம்’ இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செக்கு ஆட்டுற இடத்துக்குப் போய் பார்த்தோம்னா, எண்ணெய் டின்னுக்கு மூடியா, பெரும்பாலும், வாழைத்தாரின் தண்டுப்பகுதியை நறுக்கி மூடியிருப்பாங்க. மத்த, எதையும் விட, வாழைத்த்தார்த் தண்டு மூடிப்போட்டா, ஒரு சொட்டு எண்ணெய் கூட கசியாது. இந்த நுட்பம், கப்பல் ஓட்டுற கம்பெனிகளுக்கு எப்படித் தெரிஞ்சதுனு தெரியுல. கப்பல்ல எண்ணெய் எடுத்துக்கிட்டு போகும்போது, எண்ணெய் கசியாம இருக்க, வாழைத்தார் நார் மூலம் செய்த கார்க் மூடியைத்தான் பயன்படுத்துறாங்க.

நவீன முறையில கம்ப்யூட்டர் மூலமா தயாரிச்ச கயிறுனு, கண்ட, கண்ட பிளாஸ்டிக் கயிறுகளை கப்பலுக்குக் கட்டிப்பார்த்தாங்க. கடல் தண்ணியில இருக்கிற உப்புக்கு, அதெல்லாம் ஒரு சுத்துக்குக்கூட நிக்காம மக்கியிருக்கு. அதனால, கப்பல்ல கட்டுற கயிறுகளும் கூட வாழைநார் மூலமாதான் தயாரிக்கிறாங்க. வாழைநார்க் கயிறுங்க, கடல்தண்ணியில இருக்கிற உப்பு பட்டாலும், அறுந்து போகாம உறுதியா இருக்குதாம். வாழைநாருக்கு மதிப்பு கூடிக்கிட்டே இருக்கு.

இப்போ சொல்ல போற தகவல் அமெரிக்க நாட்டு சங்கதி. நம்ம ஊர்ல, மண்ணை வளப்படுத்த சணப்பு, தக்கைப்பூண்டு... மாதிரியான பசுந்தழைப் பயிர் வகையை விதைச்சு விடுவோம். ஆனா, அமெரிக்காவுல முள்ளங்கியை வயல் முழுக்க விதைச்சு விடறாங்க. முள்ளங்கி, வேர் மூலம் உணவு சேமிக்கிற தாவரங்கிறதால மண்ணுல இருக்கிற சத்தை இழுத்து, கிழங்குல வெச்சிடுது. முள்ளங்கியை அறுவடை செய்யாம விட்டுப்புட்டா, வளர்ந்துக்கிட்டே போகும். இதனால, அடி ஆழத்துல இருக்கிற சத்துங்க, மேல்மட்ட மண்ணுக்கு வந்துடும். அடுத்தமுறை பயிர் செய்யும்போது, முள்ளங்கியைப் புரட்டிப் போட்டு, உழவு பண்ணி பயிர் செய்தா, நல்ல விளைச்சல் கிடைக்கும். முள்ளங்கியோட தழைங்க அருமையான கால்நடைத் தீவனமும் கூட. இப்படி முள்ளங்கியைப் பயிர் செய்யும்போது, மண்ணு பொலபொலப்பா மாறிடுதாம். களைகளும் அதிகமா முளைச்சு தொந்தரவு கொடுக்கிறது கிடையாதாம். அதனால, அமெரிக்காவுல முள்ளங்கியைச் சாப்பிடறதுக்குப் பயிர் செய்றதை விட, மண்ணை வளப்படுத்தத்தான் அதிகமா சாகுபடி செய்யுறாங்களாம்.

பருத்தி சாகுபடி செய்யுற விவசாயிங்க கவனத்துக்கு...

பருத்தி அறுவடை முடிஞ்ச கையோட, பருத்திச் செடியை(மிளார்) வயல்ல இருந்து அப்புறப்படுத்தணும். அறுவடைதான் முடிஞ்சு போயிடுச்சியில்ல... மெதுவா  அப்புறப்படுத்தலாம்னு நினைக்க வேணாம். ஏன்னா, காய்ஞ்சி போன பருத்திச் செடியில பூச்சி-நோய்க்கிருமிங்க தங்கி இருக்கும். அதனால, அதை நிலத்துலேயே விட்டு வெச்சிருந்தா, பூச்சி-நோய்ங்க பல மடங்கா பெருகி, அடுத்த வருஷத்து வருமானத்துக்கு சேதம் உண்டு பண்ணிடும். இது உங்கள மட்டுமில்லீங்க, ஒட்டுமொத்தமா அந்தப் பகுதிக்கே சேதாரத்தை ஏற்படுத்தும். இதனாலதான், வெள்ளக்காரன் நம்ம நாட்டை ஆண்ட சமயத்துல ‘கட்டைப் பருத்திச் செடி’ வயல்ல இருந்தா ஜெயில் தண்டனை கூட கொடுக்கலாம்னு கடுமையா சட்டம் போட்டிருந்தான். இதிலிருந்தே இந்த விஷயம் எவ்வளவு முக்கியமானதுனு நீங்களே புரிஞ்சுக்குங்க!

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்