Published:Updated:

ஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்!

ஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்!

ஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்!

ஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்!

Published:Updated:

கிணறுகள், குழாய்க்கிணறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால்... மானாவாரி நிலங்களில் பெரும்பகுதி இறவை நிலங்களாக ஆக்கப்பட்டு பணப்பயிர் சாகுபடிக்கு மாறிவிட்டன. இதனால், புன்செய் நிலங்களில் விளைந்த தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் பலவும் புழக்கத்தில் குறைந்து விட்டன. இந்நிலையில், மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணவு பற்றிய விழிப்பு உணர்வு சிறுதானியங்களுக்கான மதிப்பையும், தேவையையும் அதிகப்படுத்தி இருக்கிறது. இதை உணர்ந்து நம் முன்னோர்கள் செய்த பாரம்பர்ய தொழில்நுட்பங்களுடன், நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து, மானாவாரியில் கலப்புப் பயிர் சாகுபடி செய்தால், நல்ல லாபம் நிச்சயம் கிடைக்கும்” என்கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவண்ணாமலையில் இயங்கி வரும் சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியர் நிர்மலக்குமாரி.

ஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்!

மானாவாரிக்கு ஏற்ற இரண்டு பட்டங்கள்!

மையத்தில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுப்பட்டிருந்த பேராசிரியர் நிர்மலக்குமாரியைச் சந்தித்தோம். ‘‘தமிழ்நாட்டில் மானாவாரி விவசாயம் குறைந்துகொண்டே வருகிறது. சுதந்திரம் வாங்கிய பிறகு, 80 சதவிகிதமாக இருந்த மானாவாரி நிலங்கள், 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளன. இறவைப் பாசனப் பரப்பு அதிகரிக்கவும், மானாவாரிப் பயிர்களுக்கான முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மானாவாரியில் வருமானம் குறைவு, சரியான சந்தை வாய்ப்பு இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால், மானாவாரி விவசாயத்தையும் லாபகரமாகச் செய்யமுடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு பருவமழைகள் கிடைக்கின்றன. ஒன்று ஆடிப்பட்டத்தில் (ஜூன் முதல் ஜூலை வரை) வரும் தென்மேற்குப் பருவமழை. மற்றொன்று புரட்டாசிப் பட்டத்தில் (செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை) வரும் வடகிழக்குப் பருவமழை. தமிழ்நாட்டை தட்பவெட்ப நிலையின் அடிப்படையில் 7 மண்டலங்களாகப் பிரித்திருக்கிறோம். இதில் தெற்கு மண்டலத்தில் புரட்டாசிப் பட்டத்திலும், வடகிழக்கு மண்டலத்திலும், மலை மண்டலத்திலும் இரண்டுப் பருவங்களிலும் மானாவாரிப் பயிர்களை சாகுபடி செய்யலாம். மேற்கு மண்டலத்திலும், வடமேற்கு மண்டலத்திலும் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம்” என்ற நிர்மலக்குமாரி தொடர்ந்தார்.

வீட்டுத்தேவையைப் பூர்த்திச் செய்யும் கலப்புப் பயிர்!

“மானாவாரிக்குத் தேர்ந்தெடுக்கக்கூடிய பயிர் மற்றும் ரகங்கள்தான் விளைச்சலையும், லாபத்தையும் தீர்மானிக்கின்றன. பொதுவாகவே, மானாவாரிப் பயிர்களைத் தனிப்பயிராக சாகுபடி செய்யும் பழக்கம் நம் விவசாயிகளிடம் குறைவு. இரண்டு மூன்று வகையான பயிர்களுடன் கலந்து சாகுபடி செய்யும் கலப்புப் பயிர் சாகுபடிதான் வழக்கத்தில் இருந்தது. இந்த முறையில் விதைக்கும்போது, வீட்டுக்குத் தேவையான தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துத் தானியங்கள் கிடைத்து விடும். ஆனால், நவீன வேளாண்மையில் கலப்புப் பயிர் சாகுபடியை அவ்வளவாக உற்சாகப்படுத்துவதில்லை. காரணம் வேலையாட்கள் பிரச்னை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு நவீன கருவிகளையும், ஊடுபயிர் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, எட்டு வரிசைக்கு இரண்டு வரிசை அல்லது எட்டு வரிசைக்கு நாலு வரிசை என்ற கணக்கில் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். இப்படி வரிசை முறையில் விதைக்கும்போது, விதைப்பு இயந்திரங்களையும் அறுவடை இயந்திரங்களையும் பயன்படுத்த முடியும்.

ஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்!

பயிர் தேர்வில் கவனம்!

சாமை, தினை, பனிவரகு போன்ற தானியப்பயிர்கள் அனைத்தும் வலை பின்னியது போன்ற சல்லிவேர்களைக் கொண்டிருக்கும். இவை, மேல்பகுதியில் இருக்கும் தண்ணீரையும், சத்துக்களையும் எடுத்துக்கொள்ளும். பயறு வகைப் பயிர்களில் துவரை, மொச்சை, அவரை மாதிரியான பயிர்கள் ஓர் அடி முதல் இரண்டு அடி ஆழம் வரை செல்லக்கூடிய ஆணிவேர்களைக் கொண்டிருக்கும். இவற்றின் மூலம் அவை தண்ணீரையும், சத்துக்களையும் எடுத்துக் கொள்ளும். பேய் எள், கடுகு மாதிரியான எண்ணெய் வித்துப் பயிர்களிலும் ஆணி வேர் உண்டு. ஆகையால், கலப்புப் பயிர், ஊடுபயிர் என எதைச் செய்தாலும், நாம் விதைக்கும் பயிர்களுக்கிடையிலும், மண்ணுக்கு மேலேயும் மண்ணுக்குள்ளே வேர்களுக்கிடையிலும் போட்டி இருக்கக் கூடாது. இதற்கு நாம் விதைக்கும் பயிர்களின் வளர்ச்சி, வயது போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்ற நிர்மலக்குமாரி, கலப்புப் பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி முறைகளை விளக்க ஆரம்பித்தார்.

காப்பீடு கொடுக்கும் கலப்புப் பயிர்!

“கலப்புப் பயிர் சாகுபடி செய்யும் போது சாமை, தினை, கேழ்வரகு, குதிரைவாலி ஆகிய சிறுதானிய ரகங்களில் ஒரு தானியத்தையும்; மொச்சை, அவரை, கொள்ளு மாதிரியான பயறு வகைகளில் ஒன்று; பேய் எள், எள், கடுகு மாதிரியான எண்ணெய் வித்துப் பயிர்களில் ஒன்று; கீரை விதைகள் என நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப பல பயிர்களைக் கலந்து விதைக்கலாம். இப்படி விதைக்கும் போது போதுமான மழை கிடைத்தால், எல்லாப் பயிர்களும் வளர்ந்து மகசூல் கொடுத்துவிடும். மழை சரியான முறையில் இல்லாதபட்சத்தில், ஏதாவது ஒரு பயிராவது மகசூல் கொடுத்துவிடும். பொதுவாகவே சிறுதானியங்களுக்கு வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையும், போதுமான மழை கிடைத்ததும் விரைவாக வளரும் தன்மையும் உண்டு. கலப்புப் பயிர் செய்வது காப்பீடு செய்வது போன்றது.

போட்டி இல்லாத ஊடுபயிர்!

ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்ய சிறுதானிய ரகங்களை முக்கால் அடி முதல் ஓர் அடி இடைவெளியில் எட்டு வரிசைகள் விதைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து பயறுவகைப் பயிர்களை ஓர் அடி முதல் ஒன்றரை அடி இடைவெளியில் இரண்டு வரிசைகள் விதைக்க வேண்டும். தேவைப்பட்டால், நான்கு வரிசைகள் கூட விதைக்கலாம். இப்படி விதைக்கும்போது தானியப் பயிர்கள் விரைவாக வளர்ந்து மகசூல் கொடுத்துவிடும். தானியப் பயிர்களின் அறுவடைக்குப் பிறகு, பயறுவகைப் பயிர்கள் நன்றாக வளர்ந்து மகசூல் கொடுக்கும்.
மழை அதிக நாட்கள் கிடைக்கும் என்கிற பட்சத்தில், அதிக வயதைக் கொண்ட தானியப் பயிர்களையோ அல்லது பயறுவகைப் பயிர்களையோ விதைக்கலாம். மானாவாரிப் பயிர்களுக்கு எருவைப் போட்டாலே போதுமானது. 20 முதல் 30 நாட்களில் ஒருமுறை மட்டும் களை எடுக்க வேண்டி இருக்கும். இப்படி சாகுபடி செய்யும்போது பூச்சி, நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. முதல் போக சாகுபடி முடிந்ததும், மீதம் இருக்கும் பனியில் பேய் எள், கொள்ளு மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யலாம்” என்ற நிர்மலக்குமாரி, நிறைவாக, மகசூல் மற்றும் பற்றிச் சொன்னார்.

விற்பனை வாய்ப்புகளைக் கண்காணிக்க வேண்டும்!

‘‘எந்தப்பயிர் சாகுபடியாக இருந்தாலும், நமக்கு அருகில் உள்ள விற்பனை வாய்ப்புகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். பச்சை துவரைக்கு அதிகமான விலை கிடைக்கும்போது, பச்சையாகப் பறித்து விற்பனை செய்ய வேண்டும். இதுபோன்ற விற்பனை முறைகளைக் கடைப்பிடிக்கும் போது கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

ஊடுபயிர் சாகுபடியில் கேழ்வரகு, தினை மாதிரியான சிறுதானியங்களில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 800 கிலோ மகசூல் கிடைக்கும். துவரை மாதிரியான பயறு வகைப் பயிர்கள் 150 கிலோ அளவுக்குக் கிடைக்கும். சிறுதானியங்கள் குறைந்தபட்சம் கிலோ 20 ரூபாய் அளவில் விற்பனை ஆகும். துவரை, கிலோ 50 ரூபாய் வரை விற்பனை ஆகும். மானாவாரி சாகுபடியில் கிடைக்கும் லாபம் பலருக்குக் குறைவாகத் தோன்றலாம், நெல், கரும்பு மாதிரியான பயிர்களுடன் ஒப்பிட்டு விதை முதல் அறுவடை வரை நாம் செய்த செலவு, இந்த சாகுபடிக்காக நம்முடைய உழைப்பு, மெனக்கடல் என அனைத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் இது நல்ல லாபமாகத்தான் இருக்கும்’’ என்றவர் இறுதியாக,

‘‘எங்கள் மையத்தில் சிறுதானியம் குறித்த அனைத்து விதமான ஆலோசனைகளும் வழங்கப்படும். சிறுதானிய விதைகளையும் இருப்புக்குத் தக்கப்படி முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்” என்றார். 

தொடர்புக்கு,
பேராசிரியர்,
சிறுதானிய மகத்துவ மையம்,
அத்தியந்தல், திருவண்ணாமலை.
தொலைபேசி: 0417-5298001

மானாவாரிக்கு ஏற்ற சிறுதானிய ரகங்கள்...

மானாவாரியில் விதைப்பதற்கு ஏற்ற சிறுதானிய ரகங்களைப் பற்றிச் சொன்ன பேராசிரியர் நிர்மலக்குமாரி, “சிறுதானிய ரகங்களை மானாவாரியில் சாகுபடி செய்யும் போது, நிலத்தில் கார-அமிலத்தன்மை பிரச்னை இருக்காது. அதோடு குறைந்த அளவுக்கு நீர்ச்சத்துகளைக் கொண்டு வளருவதால் தானியங்கள் சுவை மிக்கதாகவும், மணமாகவும் இருக்கும்.

கேழ்வரகில் 100 முதல் 105 நாட்கள் வயது கொண்ட கோ-13, பையூர்-2, 120 முதல் 125 நாட்கள் வயதுகொண்ட கோ-15 ஆகிய ரகங்கள் ஏற்றவை. 85 முதல் 90 நாட்கள் வயது கொண்ட கோ-4, பையூர்-2 ஆகிய சாமை ரகங்களும்; 80 முதல் 85 நாட்கள் வயது கொண்ட கோ-7 தினை ரகமும்; 70 நாட்கள் வயது கொண்ட கோ-5 பனிவரகு ரகமும்; 85 நாட்கள் வயது கொண்ட கோ-2 குதிரைவாலி ரகமும்; 120 முதல் 125 நாட்கள் வயது கொண்ட கோ-3 வரகு ரகமும்; 85 முதல் 90 நாட்கள் வயது கொண்ட கம்பு ரகமும்; 95 முதல் 105 நாட்கள் வயது கொண்ட கோ-28, கோ-30 ஆகிய சோள ரகமும் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றவை.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு கேழ்வரகு விதை 6 முதல் 8 கிலோ வரை தேவைப்படும். சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, கம்பு ஆகியவற்றுக்கு 4 முதல் 5 கிலோ விதை வரை தேவைப்படும்” என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள 7 தட்பவெட்பநிலை மண்டலங்கள்!

வடகிழக்கு மண்டலம்:

திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகள்.

வடமேற்கு மண்டலம்:

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி தர்மபுரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்.

மேற்கு மண்டலம்:

கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் (சில பகுதிகள்), தேனி, மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை.

காவிரி டெல்டா மண்டலம்:

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி.

தெற்கு மண்டலம்:

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகள்.

அதிகமழை பெறும் மண்டலம்:

கன்னியாகுமரி

மலை மண்டலம்:

நீலகிரி மலை, கொல்லி மலை, சேர்வராயன் மலை, ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, ஆனை மலை, பழனி மலை, பொதிகை மலை.

காசி.வேம்பையன்

படங்கள்: கா.முரளி