Published:Updated:

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

Published:Updated:
நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

‘‘மலைவேம்பு மரத்தை மானாவாரியில் வளர்த்து வருகிறோம். ஆனால், வளர்ச்சி குறைவாக உள்ளது. நல்ல வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?’’

ஏ.சிவா, திருப்பூர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரியின் வனவியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர். பார்த்திபன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

‘‘மலைவேம்பு மரம் வேகமாக வளரக்கூடிய மர வகைகளில் ஒன்று. சில ஆண்டுகளாக இந்த மரத்தை சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்களின் ஆராய்ச்சியில், மலைவேம்பு மரம் நன்றாக நீர்வளம் உள்ள பகுதியில் மட்டுமே நல்ல வளர்ச்சியைக் கொடுக்கிறது. மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரத்தைச் சாகுபடி செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்காது. மரங்களின் வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும். எதிர்பார்க்கும் அளவுக்குப் பருமன் இருக்காது. எனவே, புதிதாக மலைவேம்பு சாகுபடி செய்ய நினைக்கும் விவசாயிகள்,

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

மானாவாரியில் மலைவேம்பு சாகுபடி செய்வதைத் தவிர்க்கவும். மானாவாரியில், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மலைவேம்பு ரகத்தை உருவாக்கும் ஆராய்ச்சியைச் செய்து வருகிறோம். இந்த ரகத்தை வெளியிடுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். ஆகையால், நன்றாக நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே மலைவேம்பு சாகுபடி செய்யும்படி பரிந்துரை செய்துவருகிறோம்.

எங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றி விவசாயி ஒருவர் 6X6 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 1,200 மலைவேம்பு கன்றுகளை நடவு செய்தார். மண்ணில் ஈரம் காயாமல், பாசனம் செய்து வந்தார். மரங்களின் வளர்ச்சிக்கு உரங்களைக் கொடுத்து வந்தார். இதனால், 18 மாதங்களில் 30 அடி உயரத்தில் வளர்ந்தன மரங்கள். ஒவ்வொரு மரமும் 30 முதல் 40 கிலோ எடையில் இருந்தன. மொத்தம் இருந்த 1,200 மரங்களில், 600 மரங்கள் மட்டும் அறுவடை செய்யப்பட்டன. இதன் மூலம் 25 டன் மகசூல் கிடைத்தது. ஒரு டன் 4 ஆயிரத்து 400 ரூபாய் என்று விலைக்கு வாங்கி கொண்டார்கள். இதன்படி 1 லட்சத்து10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

மீதியுள்ள மரங்களை இன்னும் 18 மாதங்கள் கழித்து விற்பனை செய்யும்படி சொல்லியிருக்கிறோம். அப்போது, மரத்தின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் கூடுதல் எடை கிடைக்கும். இதன் மூலம் 2 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கூடுதல் வருமானம் வேண்டும் என்றால், இன்னும் சில ஆண்டுகள் மரத்தை வளர்த்தால் போதும். ஆக, மலைவேம்பு மரம் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு நாளும் வருமானம் வளர்ந்துகொண்டே இருக்கும். இப்படி வருமானம் எடுக்க வேண்டும் என்றால், தென்னை, வாழை சாகுபடிக்கு பாசனம் செய்வதுபோல மலைவேம்புக்கும், பாசனம் செய்ய வேண்டும்.’’

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

தொடர்புக்கு, தொலைபேசி: 04254-222010.

‘‘பண்ணைக் குட்டைக்கும், கசிவுநீர்க் குட்டைக்கும் என்ன வித்தியாசம்?’’

ஆர்.சிந்தாமணி, புதுக்கோட்டை.

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறையின் பேராசிரியர் முனைவர் ந.அசோகராஜா பதில் சொல்கிறார்.

‘‘நிலத்தில் மழைநீர் செல்லும் பாதையில், குழியைத் தோண்டி, குட்டைகளை ஏற்படுத்துவதை ‘பண்ணைக் குட்டைகள்’ என்கிறோம். இதன் மூலம் நிலத்தில் விழும், ஒவ்வொரு சொட்டு மழைநீரும் மண்ணுக்குள் செல்லும். இதனால், நிலத்தடிநீர் வளம் பெருகும். மண் அரிப்பும் ஏற்படாது. வறட்சியான காலங்களில், இந்தப் பண்ணைக் குட்டையில் உள்ள நீர், பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் உதவும். சில விவசாயிகள், பண்ணைக் குட்டையில், மீன் வளர்த்தும் வருமானம் எடுத்து வருகிறார்கள். பண்ணைக் குட்டையில் அசோலா வளர்த்து, அதை ஆடு, மாடு, கோழிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். இப்படி பல வகையில் பண்ணைக் குட்டையைப் பயன்படுத்த முடியும்.

அடுத்து, கசிவுநீர்க் குட்டை பற்றி பார்ப்போம். நீர் செல்லும் ஓடைகள் முடியும் இடத்தில் கசிவுநீர்க் குட்டைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், ஓடைகளில் அடித்து வரும் நீர் வீணாகாமல் தேக்கி வைக்கப்படுகின்றது. இதனால், கீழ் மட்டத்திலுள்ள கிணறுகளுக்கு தண்ணீர் கசிந்து சென்று, அதன் நீர் வளத்தை அதிகரிக்கச்செய்யும். மண்ணில், நீர் கசிந்து செல்லும் தன்மை அதிகமாக இருந்தால், கூடுதலான கிணறுகளுக்கும் நீர்மட்டம் உயரும். மழைநீரைச் சேகரிக்கவும், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கவும், பண்ணைக்குட்டையும், கசிவு நீர்க்குட்டையும் கட்டாயம் தேவை.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611246.

‘‘மாட்டுப் பண்ணை வைக்க கடனுதவி கிடைக்குமா? யாரை அணுக வேண்டும்?

சரவணபவன். கவுந்தப்பாடி.

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளரும், கால்நடை மருத்துவருமான ஓ.ஹென்றி ஃபிரான்சிஸ் பதில் சொல்கிறார்.

‘‘பால் பண்ணையை முழு நேரத்தொழிலாக செய்ய விரும்புபவர்களுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கடன் உதவி வழங்கி வருகின்றன. குறிப்பாக, பாரத ஸ்டேட் வங்கியில் ‘டெய்ரி பிளஸ்’ என்ற திட்டம் செயல் படுத்தப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு மாடுகள் கொண்ட சிறிய பால் பண்ணை முதல், நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்ட பெரிய அளவு பால் பண்ணை அமைப்பது வரையிலும் கடன் உதவி பெறலாம்.

கடன் பெறும் விவசாயிகள், கடன் தொகைக்கு ஈடாக, சொத்து அடமானம் வழங்க வேண்டும். பால் பண்ணை அமைக்க கடன் கொடுக்கும்போது, ஒரே நேரத்தில் முழுத்தொகையும் வழங்க மாட்டார்கள். உதாரணத்துக்கு 10 மாடுகள் கொண்ட பண்ணை தொடங்க விண்ணப்பித்தால், முதலில் 5 மாடுகளுக்கு கடன் கொடுப்பார்கள். அடுத்து, ஆறு மாதம் கழித்து, 5 மாடுகளுக்குக் கடன் கொடுப்பார்கள். இதற்குக் காரணம், ஆண்டு முழுக்க பண்ணையில் உள்ள மாடுகள் கறவையில் இருந்தால், ஆண்டு முழுக்க வருமானம் கிடைக்கும். அப்போதுதான் தவணையை ஒழுங்காகச் செலுத்த முடியும் என்பதுதான்.

நீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா?

10 மாடுகளுக்கு, ஒரு ஏக்கர் அளவில் பசுந்தீவன உற்பத்தி செய்ய வேண்டும். உங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலைக் கொள்முதல் செய்வதற்காக ஆவின் அல்லது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். வாய்ப்பு இருந்தால், நீங்களேகூட நேரடியாக விற்பனையில் ஈடுபடலாம்.’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும்
pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.

புறா பாண்டி

 படங்கள்: க.தனசேகரன், வீ.சிவக்குமார்