Published:Updated:

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

குறுந்தொடர்-4

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

குறுந்தொடர்-4

Published:Updated:

சத்தமில்லாமல் ஒரு தண்ணீர் புரட்சி!

அற்றுப்போன வறட்சி...அதிகரித்த விளைச்சல்..!

அர்வாரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் போர்வெல்லுக்கு அனுமதியில்லை; இந்தப் பகுதியில் 25 சதவிகிதத்துக்கு மேல், நீர் உறிஞ்சும் பயிர்களைப் பயிரிடக் கூடாது; மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நதியிலிருந்து நீர் எடுக்கக் கூடாது; நதி பயணிக்கும் 405 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை; நதி தோன்றுமிடத்திலுள்ள, (மக்களால் உருவாக்கப்பட்ட) பைரோதேவ் சரணாலயத்தில் மரங்களை வெட்டக் கூடாது; உணவுக்காக மட்டுமே மீன் பிடிக்க வேண்டும்... போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, அர்வாரி நாடாளுமன்றம். கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்குத் தண்டனையும் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதால், அர்வாரி நதி இன்னும் நுரைத்துச் செழித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

தேடி வந்த மகசேசே விருது!

இப்படி மக்களை ஒருங்கிணைத்து, பாரம்பர்ய நீர்ச் சேகரிப்பு முறைகளைச் செயல்படுத்திய காரணத்தால்தான், ‘ஆசியாவின் நோபல்’ என்று அழைக்கப்படும் ‘மகசேசே’ விருது, 2001-ம் ஆண்டு ராஜேந்திர சிங்கைத் தேடி வந்தது. அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டபோது... ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பில், ‘தருண் பாரத் சங்’ வேலை செய்துகொண்டிருந்தது. ராஜஸ்தானில் மட்டும் 11 மாவட்டங்களில், 850 கிராமங்களில், 4 ஆயிரத்து 500 ஜோஹாட்களையும், தடுப்பணைகளையும் மக்கள் ஒத்துழைப்புடன் அமைத்திருந்தது, தருண் பாரத் சங். இதேபோன்ற முயற்சிகளால், அர்வாரியைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் ரூபாரெல், சர்ஸா, பகானி, ஜாஜ்வாலி, மகேஷ்வரா போன்ற நதிகளும் மீண்டும் ஓடத் தொடங்கியுள்ளன. கடந்த 30 வருடங்களில், ராஜேந்திர சிங் தலைமையில் ‘தருண் பாரத் சங்’ அமைப்பு, ராஜஸ்தானின் 19 மாவட்டங்களில், 1,200 கிராமங்களில், 11 ஆயிரம் நீர்ச் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

இவை அனைத்தும் பெரும்பாலும், வறண்ட பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டவை என்பதுதான் இதில் முக்கிய அம்சம். நிலத்தடி நீர் இல்லாமல், கறுப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள், நிலத்தடி நீர் மிகுந்து வெள்ளை மண்டலங்களாக மாறின. சராசரியாக இந்தப் பகுதிகளில், 300 அடி ஆழத்திலிருந்த நீர்மட்டம், இப்போது 30 அடி ஆழத்துக்கு உயர்ந்து விட்டது. இதனால், வறட்சி விரட்டியடிக்கப்பட்டு, விவசாயம் மேம்பட்டிருக்கிறது. விளைச்சல் நிலம் 11 சதவிகிதத்திலிருந்து, 70 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது; பிழைப்புக்காக வெளியூர் சென்றவர்கள், சொந்த ஊருக்குத் திரும்பி வரத்தொடங்கினர். காட்டுப் பரப்பு 7 சதவிகிதத்திலிருந்து லிருந்து 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இப்படி ‘தருண் பாரத் சங்’ பணிகளால் இதுவரை நேரடியாகவும், மறைமுகமாகவும், கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். சத்தமேயில்லாமல், ராஜஸ்தானில் மக்கள் பங்கேற்புடன் ஒரு ‘தண்ணீர் புரட்சி’ நடந்து கொண்டிருக்கிறது!

மிகுந்த தண்ணீர்ப் பிரச்னைகளுக்கு ஆளாகி, வறண்ட பூமியாகிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், காலத்துக்கும் அரசாங்கத்தை நம்பிக் கொண்டிருக்காமல், ராஜேந்திர சிங்கின் பணிகளை முன்மாதிரியாகக் கொண்டு மக்கள் பங்கேற்புடன் ஆர்வமுள்ள அனைவரும் களத்தில் இறங்கினால்தான், வருங்காலத்தில் தண்ணீர்த் தேவையை ஓரளவுக்காவது சமாளிக்கமுடியும். இன்றைக்கு தமிழகத்தின் உடனடித் தேவை ஊருக்கு ஒரு ராஜேந்திர சிங்!

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

ராஜேந்திர சிங் பசுமை விகடனுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி...

விருதுகள்!

94-ம் ஆண்டில் இந்திய அரசின் ‘இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்’; 99-ம் ஆண்டில் டெல்லியின் புலிகள் அறக்கட்டளையின் ‘புலிகள் பாதுகாப்பு விருது’; 2005-ம் ஆண்டில் மகாராஷ்டிர அரசின் ‘ராஜ சாஹு மஹாராஜ் புரஸ்கார்; 2005-ம் ஆண்டில் ‘ஜம்னா லால் பஜாஜ் விருது’ போன்றவை ராஜேந்திர சிங் வாங்கிய சில முக்கியமான விருதுகள்.

தேசிய தண்ணீர் யாத்ரா!

ராஜஸ்தானில் மக்கள் பங்கேற்புடன் நீர்வளம் குறித்த சிறந்த அனுபவத்தையும், தண்ணீர் மீதான மக்களின் கரிசனத்தை அதிகப்படுத்தவும், ராஜேந்திர சிங், 2002-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, டெல்லியிலுள்ள காந்தி சமாதியிலிருந்து ஒரு தண்ணீர்ப் பயணத்தைத் தொடங்கினார். இதில் 30 மாநிலங்களிலுள்ள 144 நதிகளின் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் 22 மாதங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். “நதிகளை இணைக்காதீர்கள், மக்களை நதிகளுடன் இணையுங்கள்” என்றும் இந்தப் பயணத்தின் போது அவர் சொன்னார். மேலும், இந்தப் பயணத்தின் போது 5 தேசிய தண்ணீர் கருத்தரங்குகளையும், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அவர் ஒருங்கிணைத்தார்.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

கற்றுக்கொள்ளும் அதிகாரிகள்!

மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிர மாநில அரசுகள், தங்களது வனத்துறை மற்றும் நீர்த்துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளை ‘தருண் பாரத் சங்’குக்கு அனுப்பி மக்களுடன் சேர்ந்து செயல்படுவது குறித்தும், பாரம்பர்ய நீர்ச் சேகரிப்பு முறைகள் குறித்தும் கற்றுக்கொள்ளச் சொல்கின்றன. ராஜேந்திர சிங், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பயிற்சி அகாடமியிலும், மாநில அளவிலான பயிற்சி அமைப்புகளிலும் அதிகாரிகளுக்குப் பாடமெடுப்பதும் தொடர்கிறது. மேலும், 2005-ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வகுப்பெடுத்தார் ராஜேந்திர.
 
மக்கள் சரணாலயம்!

அர்வாரியின் தோற்றுவாய்ப் பகுதியிலுள்ள பனோதா-கொல்யாலா கிராம மக்கள், ‘தருண் பாரத் சங்’கின் உதவியுடன் 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், ‘பைரோன்தேவ்’ சரணாலயத்தை உருவாக்கியுள்ளனர். கிராம சபைகளால் தேர்ந்தெடுக்கப்படும் கிராம வனக்குழுக்கள் இந்த சரணாலயத்தைப் பாதுகாக்கின்றன. மக்கள்தான் வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த முயற்சி ஒரு சிறந்த உதாரணம்.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

ஸ்டாக்ஹோம் நீர் விருது!

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள, ‘ஸ்டாக்ஹோம் பன்னாட்டு நீர் நிறுவனம்’ ராஜேந்திர சிங்குக்கு ‘ஸ்டாக்ஹோம் நீர் விருதை’ அறிவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ம் தேதியை ஒட்டி, நீர் தொடர்பாக சிறப்பாகச் செயல்படும் தனிநபர் அல்லது நிறுவனத்துக்கு இந்த விருது அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்கும் உலக தண்ணீர் வார விழாவில் ஸ்வீடன் அரசர் கார்ல் 16-ம் குஸ்தாஃப் கைகளால், இந்த விருது வழங்கப்பட உள்ளது. இத்துடன் 1 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலரும் அளிக்கப்படும்.

 க.சரவணன்