Published:Updated:

மரத்தடி மாநாடு: கைவிட்ட அரசாங்கம்...கை கொடுத்த விவசாய சங்கம்!

மரத்தடி மாநாடு: கைவிட்ட அரசாங்கம்...கை கொடுத்த விவசாய சங்கம்!

மரத்தடி மாநாடு: கைவிட்ட அரசாங்கம்...கை கொடுத்த விவசாய சங்கம்!

மரத்தடி மாநாடு: கைவிட்ட அரசாங்கம்...கை கொடுத்த விவசாய சங்கம்!

Published:Updated:

றுவடை செய்த நிலக்கடலையில் பெருவெட்டுப் பருப்பாகத் தேர்வு செய்து... அடுத்தபோக விதைப்புக்காக, பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.  அவருக்கு உதவி செய்துகொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அன்று சீக்கிரமே காலை நேர வியாபாரத்தை முடித்துவிட்டு வந்திருந்த ‘காய்கறி’ கண்ணம்மா, நாளிதழைப் புரட்டியபடியே ‘‘அக்னி நட்சத்திரம் கொளுத்தப்போகுதுனு பார்த்தா நல்ல வேளையா தமிழ்நாடு முழுக்க கோடை மழை பேய்ஞ்சு குளிர வெச்சிடுச்சு. நிறைய இடங்கள்ல குளம், குட்டை, அணைகளுக்கெல்லாம் ஓரளவு தண்ணி கிடைச்சுடுச்சாம். இன்னும் ரெண்டு மாசத்துக்குக் குடிநீருக்கு பிரச்னை இருக்காது போல” என்றார்.

மரத்தடி மாநாடு: கைவிட்ட அரசாங்கம்...கை கொடுத்த விவசாய சங்கம்!

‘‘அதெல்லாம் சரிதான்... ‘காய்ஞ்சும் கெடுக்கும், பேய்ஞ்சும் கெடுக்கும்’னு சொல்வாங்க. அதை இந்தக் கோடை மழை நிரூபிச்சுடுச்சு’’ என்ற ஏரோட்டி, தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மானாவாரி விவசாயிகளுக்கும், மரப்பயிர் சாகுபடி பண்ற விவசாயிகளுக்கும் இந்த மழையால சந்தோஷம்தான். மானாவாரி வெள்ளாமைக்குக் கோடை உழவு ஓட்டி வெக்கிறதுக்கு தோதா மழை கிடைச்சிடுச்சு. தண்ணி இல்லாம மரங்கள் காய்ஞ்சுக்கிட்டிருந்த சூழ்நிலையில, கிடைச்ச மழையால மரங்கள் எல்லாம் செழிச்சிடுச்சு. அதேநேரத்துல திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்னு டெல்டா மாவட்டங்கள்ல பல ஆயிரம் ஏக்கர்ல சாகுபடி செய்திருந்த நெல், பருத்திச் செடிகள்லாம் அதிக மழையால தண்ணீர் சூழ்ந்து காலி ஆகிடுச்சு. நெல் மணியெல்லாம் முளைவிட்டுப் போயிடுச்சு.

திண்டுக்கல் மாவட்டத்துல பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகள்ல கிட்டத்தட்ட முன்னூறு, நானூறு ஏக்கர்ல வெங்காயம், தக்காளிச் செடியெல்லாம் அழுகிப் போயிடுச்சாம். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில, பாகல் பயிர் சுத்தமா காலியாகிடுச்சாம்” என்றார், ஏரோட்டி.

தலையாட்டி ஆமோதித்த வாத்தியார், ‘‘மாங்காய் பத்தி சொல்லாம விட்டுட்டியேய்யா... தேனி மாவட்டத்துல பெரியகுளம், தேனி, போடி, கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி பகுதிகள்ல கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர்ல ‘மா’ சாகுபடி நடக்குது. அதேமாதிரி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலயும் ஆயிரக்கணக்கான ஏக்கர்ல ‘மா’ சாகுபடி நடக்குது. இப்போ, பருவம் தப்பி பெய்த மழையால, விளைச்சல் ரொம்ப குறைஞ்சு போச்சாம். பூக்கள், பிஞ்சுகள் எல்லாம் உதிந்துடுச்சாம். விளைஞ்ச காய்களோட தோல்ல கரும்புள்ளிகள் வந்திடுதாம். விளைச்சல் குறைஞ்ச நிலையிலும் அறுவடையாகுற பழங்களும் தரமா இல்லாததால, விலையும் குறைஞ்சு போயிடுச்சாம். மொத்தத்துல இந்த மழையால விவசாயிகள் பாதிக்கப்பட்டதுதான் அதிகம்’’ என்றார்.

மரத்தடி மாநாடு: கைவிட்ட அரசாங்கம்...கை கொடுத்த விவசாய சங்கம்!

அதற்குள் மூட்டை கட்டும் வேலை முடிந்துவிட, வாத்தியாரும், ஏரோட்டியும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். தான் கொண்டு வந்திருந்த தர்பூசணியைத் துண்டு போட்டு இருவருக்கும் கொடுத்தார், காய்கறி.  அதைச் சாப்பிட்டுக்கொண்டே மாநாட்டைத் தொடர்ந்தனர்.

‘‘டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தப் படியா திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள்லதான் அதிகளவு நெல் விளையுது. அதனால, இந்த மாவட்டங்கள்ல அதிகளவு அரிசி ஆலைகள் இருக்குது. வியாபாரிகள், இந்த அரிசி ஆலைகளுக்குத் தேவையான நெல் மூட்டைகளை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்ல இருந்துதான் கொள்முதல் செய்றாங்க.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்ல இருக்குற அதிகாரிகளும், வியாபாரிகளும் கூட்டு வெச்சுக்கிட்டு விவசாயிகள் கொண்டு வர்ற நெல்லுக்கு விலையைக் குறைக்கிறாங்கனு பிரச்னை எழுந்திருக்கு. போன மாசத்துல 75 கிலோ மூட்டை 1,000 ரூபாய்ல இருந்து
1,100 ரூபாய் வரைக்கும் விற்பனையாகியிருக்கு. ஆனா, இப்போ, 750 ரூபாய்க்குதான் எடுக்கிறாங்களாம். இப்படி அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டுச் சேந்துக்கிட்டு கொள்ளை அடிக்கிறதால விவசாயிகள் எல்லாம் நொந்து போய்க் கிடக்கிறாங்களாம்’’ என்றார், வாத்தியார்.

“அடப்பாவிகளா...  நாய் மாதிரி தெருதெருவா சுத்தி சம்பாதிக்கிறோம். அந்தக்காசே நம்மகிட்ட நிலைக்கமாட்டேங்குது. இப்படி அடுத்தவன் வாயில அடிச்சு சம்பாதிக்கிற காசெல்லாம் எப்படி நிலைக்குமோ” என்று ஆவேசப்பட்டார், காய்கறி.

“அப்படியெல்லாம் சொல்லாத... இப்படி சம்பாதிக்கிறவங்ககிட்டதான் சொத்து மேல சொத்து சேருது. இவனுங்க மேல என்ன புகார் கொடுத்தாலும் இவனுங்க காசுக்கு சட்டம் வளைஞ்சு கொடுக்குது. எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான இருக்கோம். இதுல புலம்பறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை’’ என்ற ஏரோட்டி ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘தேனி மாவட்டம், உப்புக்கோட்டை கிராமத்துல வாழை சாகுபடி செஞ்சிருந்த அழகுவேல், வாழைக்கு விலை கிடைக்காததால தற்கொலை பண்ணிக்கிட்டாருல்ல. அதை, குடும்பப் பிரச்னையாலதான் தற்கொலை செஞ்சுக்கிட்டாருனு மூடி மறைச்சிடுச்சு, அரசாங்கம். அதனால, அவர் குடும்பத்துக்கு எந்த உதவியையும் அரசாங்கம் செய்யலை. அதனால தேனி மாவட்டத்துல இருக்கிற விவசாய சங்கங்களைச் சேந்தவங்க, மாவட்டம் முழுக்க இருக்கிற விவசாயிகள்ட்ட கொஞ்சம், கொஞ்சமா பணம் திரட்டி... முதல்கட்டமா 20 ஆயிரம் ரூபாயை அழகுவேல் குடும்பத்துக்குக் கொடுத்திருக்கிறாங்க. இன்னமும் அவங்களுக்காக நிதி திரட்டிக்கிட்டு இருக்காங்களாம்’’ என்றார், ஏரோட்டி.

‘‘நிதி உதவி செய்யாட்டாகூட பரவாயில்லை. உண்மையிலேயே விவசாயப் பிரச்னைக்காக தற்கொலை செஞ்சுக்கிட்டதை எதுக்குத் திட்டம் போட்டு மறைக்கிறாங்கனுதான் தெரியலை. ஊர், உலகத்துக்கே தெரியுற ஒரு விஷயத்தை மறைக்கிறதுல அரசாங்கத்துக்கு என்ன கிடைக்கப்போகுதோ...’’ என்று சூடான வாத்தியார், அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.  
 
‘‘பெரம்பலூருக்குப் பக்கத்துல இருக்குற விஜயகோபாலபுரம் பகுதியில ‘எம்.ஆர்.எஃப்’ டயர் தொழிற்சாலை’ இருக்குது. இந்தத் தொழிற்சாலையில 1,100 மெகாவாட் திறன்ல அனல் மின்சாரம் தயாரிக்கிறதுக்கான வேலை நடந்துக்கிட்டு இருக்குதாம். அதனால, ‘விவசாய நிலங்கள் கெட்டுப்போகும், சுற்றுச்சூழல் மாசுபடும்’னு பொதுமக்கள் போராட்டம் பண்ண களம் இறங்கியிருக்காங்க. ஏற்கெனவே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்துல வர்ற தண்ணீர்ல பெரும்பகுதியை இந்த டயர் தொழிற்சாலைக்கு அரசாங்கம் கொடுத்துக்கிட்டிருக்குதாம். அரசாங்கம் என்ன செய்யப்போகுதோ தெரியலை’’ என்றார்.

‘‘ஆமாய்யா, நானும் கேள்விப்பட்டேன்’’ என்ற ஏரோட்டி, “டெல்டா மாவட்டங்கள் மாதிரியே ஓ.என்.ஜி.சி கம்பெனி இப்போ ராமநாதபுரத்துலயும் முகாம் போட்டிருக்குதாம். அங்க 22 இடங்கள்ல கச்சா எண்ணெய்-எரிவாயுக் கிணறுகளைத் தோண்ட முடிவாகியிருக்குதாம். அதுக்காக கலெக்டர் ஆபீஸ்ல கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்திருக்குது. அதுல, ‘இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தா, ராமநாதபுரம் மாவட்டத்துல மீன்வளமும், விவசாயமும் பெரிய அளவுல பாதிக்கப்படும். நிலமெல்லாம் சுடுகாடா மாறிடும்’னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்தைப் பதிவு செஞ்சிருக்காங்களாம்’’ என்றார்.

அந்த நேரத்தில் மோட்டார் ரூம் விளக்கு எரிய ஆரம்பிக்க, “த்ரீ பேஸ் கரண்ட் வந்துடுச்சு. மோட்டாரை ஓட்டி விட்டுட்டு வந்துடுறேன்” என்று சொன்னபடியே ஏரோட்டி எழுந்து ஓட, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

விவசாயத்துக்கு தனியாக டி.வி. சேனல்!

மத்திய அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, விவசாயிகளுக்கான முழுநேரத் தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற மே 26-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் தொலைக்காட்சிக்கான பணிகளை மத்தியச் செய்தி ஒளிபரப்புத்துறையும் பிரச்சார் பாரதியும் இணைந்து செய்து வருகின்றன.

 ஓவியம்: ஹரன்

 படம்: வீ.சக்தி அருணகிரி