Published:Updated:

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

Published:Updated:

ழையை நம்பி மட்டும் சாகுபடி செய்யும் மானாவாரி விவசாயிகள் சிறுதானியங்கள், சூரியகாந்தி, உளுந்து, பாசிப்பருப்பு, கொத்தமல்லி, மிளகாய்... போன்ற பயிர்களில் அவரவர் மண்ணுக்கேற்ற பயிரைத் தேர்வு செய்து சாகுபடி செய்வார்கள். இவற்றில் கரிசல் பகுதி விவசாயிகளின் முக்கிய தேர்வாக இருப்பது, கொத்தமல்லி. சாகுபடிச் செலவு குறைவாக இருப்பதும், நல்ல வருமானம் ஈட்டித் தருவதும்தான் கொத்தமல்லியைத் தேர்வு செய்யக் காரணம். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவு கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

காரியாப்பட்டி தாலூகாவிலுள்ள மேலத்துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமியை மானாவாரி சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். அறுவடை செய்த மல்லியை (தனியா) மூட்டை பிடித்துக் கொண்டிருந்தவர், வேலையை முடித்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“விவசாயம்தான் பூர்வீகத்தொழில். அப்பா, மானாவாரியா பருத்தி, வரகு, குதிரைவாலி, துவரை, மல்லியெல்லாம் சாகுபடி செய்துட்டு இருந்தார். நான் பத்தாவது முடிச்ச சமயத்துல அப்பா இறந்துட்டார். நான்தான் வீட்டுக்கு மூத்தவன்கிறதால, படிப்பை விட்டுட்டு விவசாயம் பாக்க ஆரம்பிச்சேன். அப்பா, பாரம்பர்ய விவசாயம்தான் செய்தார். நான் விவசாயத்துக்கு வந்தப்பறம், அதிகாரிகள் சொல்ற எல்லா ரசாயனத்தையும் ஒண்ணு விடாம வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிச்சேன்.

ஆறு வருஷத்துக்கு முன்னால என் நிலத்துலயும், தம்பி நிலத்துலயும் மல்லி விதைச்சேன். அந்த வருஷம் உரத்தட்டுப்பாட்டுனால, உரம் கிடைக்கலை. வீட்டுல வெச்சிருந்த உரத்தை என்னோட நிலத்துல மட்டும் தூவிட்டு தம்பியோட நிலத்துல எதுவுமே போடாம விட்டுட்டேன். ஆனா, என் நிலத்துல விதைச்ச மல்லியை விட தம்பி நிலத்துல விதைச்ச மல்லி செழிப்பா வளர்ந்து நின்னுச்சு. காயும் நல்லா பிடிச்சது. தம்பி நிலத்துல விளைஞ்ச மல்லி, பளபளப்பா கறுப்புப் புள்ளி ஏதும் இல்லாம நல்ல சைஸா இருந்துச்சு. ‘இனிமே ரசாயன உரம் போடக்கூடாது’னு அப்போ எடுத்த முடிவுதான். இப்போ ஆறு வருஷமா இயற்கை முறையிலதான் மல்லி சாகுபடி செய்றேன். இது கரிசக்காட்டு பூமி. கரிசல் மண்ணுல மல்லி செழிப்பா வளரும். ஒரு ஏக்கர்ல மல்லிக்கு ஊடுபயிரா ஓமம், நித்யகல்யாணி ரெண்டையும் போட்டு அறுவடை செய்திட்டேன்”  என்று முன்னுரை கொடுத்த குமாரசாமி, தொடர்ந்தார்.

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

ஏக்கருக்கு 240 கிலோ!

“ஒரு ஏக்கர்ல 240 கிலோ மல்லி, 50 கிலோ ஓமம், 200 கிலோ நித்யகல்யாணி கிடைச்சுது. ஒரு கிலோ மல்லிக்கு இப்போதைய விலை 80 ரூபாய். ஓமம் கிலோ 120 ரூபாய். நித்யகல்யாணி கிலோ 35 ரூபாய். 240 கிலோ மல்லி மூலமா 19 ஆயிரத்து 200 ரூபாய்;50 கிலோ ஓமம் மூலமா 6 ஆயிரம் ரூபாய்; 200 கிலோ நித்யகல்யாணி மூலமா 7 ஆயிரம் ரூபாய்னு மொத்தம் 32 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 14 ஆயிரம் ரூபாய் செலவு போக, 18 ஆயிரத்து 200 ரூபாய் லாபமா கிடைச்சிடும்’’ என்ற குமாரசாமி நிறைவாக,

“விருதுநகர் கமிஷன் கடையிலதான் விற்பனை செய்றேன். ரசாயனமில்லாத மல்லிங்கிறதால கூடுதல் விலையெல்லாம் கிடைக்கிறதில்லை. தண்ணீர் படாமல் இருப்பு வெச்சு... விலை ஏறுறப்ப கூட விற்பனை செய்யலாம். இயற்கை முறையில சாகுபடி செய்யப்பட்ட மல்லிங்கிறதுனால எவ்வளவு நாளானாலும் கெடாம இருக்கும். ஓமமும், நித்யகல்யாணியும் தண்ணீர் இல்லாமலும் வரும். மானாவாரியில் மழை சரியா பெய்யாமல் மல்லி சரியா வளரலேன்னா கூட ஓமம், நித்யகல்யாணி மூலமா ஓரளவு வருமானம் கிடைச்சிடும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
குமாரசாமி,
செல்போன்: 94437-36500

சாகுபடி சூத்திரம்!

சாகுபடி செய்யும் முறை பற்றி குமாரசாமி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

செம்மறி ஆட்டுக்கிடையே சிறந்தது!

“பொலபொலப்பான நிலத்தில் மல்லியை விதைக்க வேண்டும். நிலம் இறுகலாக இருந்தால், விளைச்சல் குறையும். ஏப்ரல் மாதம் சட்டிக்கலப்பை மூலம் மண்ணைப் புரட்டிப் போட வேண்டும். மழைபெய்த பிறகு களைகள் போக, கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்து, நான்கு நாட்கள் ஆட்டுக்கிடை போட வேண்டும். செம்மறி ஆட்டுக்கிடை போடுவது சிறப்பு. செம்மறி ஆடு கிடைக்காத பட்சத்தில் வெள்ளாட்டுக் கிடை போடலாம். பிறகு, ஆட்டுச்  சிறுநீர், ஆட்டு எரு போன்றவற்றை மண்ணில் கலக்குமாறு கொக்கிக்கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும்.

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத தொடக்கம் (ஐப்பசிப் பட்டம்) மல்லிக்கு ஏற்ற பட்டம். மே மாதம் ஆட்டுக்கிடை போட்டு, அக்டோபர் மாதம் மல்லி விதைப்பு என்பதால், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாத இடைவெளியில், மழை பெய்தால் பாசிப்பயறு, உளுந்து போன்றவற்றை விதைப்பார்கள். ஆனால், இப்படிச் செய்தால் மல்லியில் மகசூல் குறையும். அதனால், மல்லிக்கு முன் மற்ற பயிர் சாகுபடியைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம்.

செப்டம்பர் மாதம் மழை வரும் அறிகுறி அறிந்து இரண்டு உழவு செய்து காத்திருக்க வேண்டும். மழை பெய்ததும் ஓர் உழவு ஓட்டி பத்து நாட்கள் ஆற விட்டு... ஏக்கருக்கு 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து தூவி கலந்து வைத்த விதைகளை (மல்லி, ஓமம், நித்தியகல்யாணி) தூவ வேண்டும். முதல் ஆள் பிண்ணாக்கைத் தூவ பின் செல்லும் ஆள் விதையைத் தூவ வேண்டும். பிறகு, விதைகளை மண் மூடும் அளவுக்கு கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும்.

95-வது நாளில் அறுவடை!

விதைத்த 12-ம் நாள் முதல் 15-ம் நாளுக்குள் முளைப்பு தெரியும். 25-ம் நாள் களை எடுக்க வேண்டும். மண்ணின் ஈரத்திலும், மழைச் சாரலிலும், பனியிலுமே இவை வளர்ந்து விடும். 60 முதல் 65 நாட்களில் மல்லியில் பூ பூக்கும். 75 முதல் 80 நாட்களில் பச்சைக்காய்கள் தென்படும். 85 முதல் 90 நாட்களில் இலைகள் மஞ்சளாகத் தெரியும். இலைகள் மஞ்சள் நிறமாகத் தென்படுவதுதான் அறுவடைக்கான அறிகுறி. 90-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

வெயிலுக்கு முன் அறுவடை அவசியம்!

வெயில் வருவதற்கு முந்தைய பனிப்பதத்தில் தான் அறுவடை செய்ய வேண்டும். அதாவது காலை 7 மணிக்குள் அறுவடை செய்து விட வேண்டும். வெயிலில் அறுவடை செய்தால் மல்லி உதிரும். அறுவடை செய்தவற்றை வெயிலில் காய விட்டு, மூன்றாவது நாள் அள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், மல்லி கறுப்பு நிறமாக மாறிடும். பிப்ரவரி மாதம் ஓமச் செடிகள் காய்ந்து இருக்கும். அப்படியே அறுவடை செய்து விடலாம். நித்யகல்யாணி மார்ச் மாதம் அறுவடைக்கு வந்து விடும். நித்யகல்யாணியை அறுவடை செய்து, மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

கலப்பு விதை!

8 கிலோ மல்லி விதையை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து ஒலைப்பாயில் நிழலில் உலர்த்த வேண்டும்.

200 கிராம் ஓமம் விதை மற்றும் ஒரு கிலோ நித்யகல்யாணி விதை ஆகியவற்றை உலர்ந்த மல்லி விதை மேல் போட்டு மூன்றையும் ஒன்றாகக் கிளற வேண்டும். மல்லி ஈரப்பதத்துடன் இருப்பதால், அதோடு இந்த விதைகள் ஒட்டிக்கொள்ளும். அப்படியே பதினைந்து நிமிடங்கள் விட்டு எடுத்து விதைக்கலாம். இவை ஒரு ஏக்கருக்குப் போதுமானதாக இருக்கும். மல்லி, இறவையிலும் வரும். மானாவாரியில் கரிசல் மண்ணும், இறவையில் செம்மண்ணும் ஏற்றவை. மானாவாரியை விட இறவையில் இரட்டிப்பு மகசூல் கிடைக்கும். விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்தான் அதிகளவில் மல்லி சாகுபடி செய்யப்படுகிறது.

கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

விதை கவனம்!

விதைமல்லி, உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தண்டு தடிமனாகவும், வளர்ச்சி நன்றாகவும் இருக்கும். உடைந்த மல்லியை விதைத்தாலும் செடி வளரும். ஆனால், தண்டு தடிமன் குறைவாக இருப்பதோடு, மகசூல் வராது. ஓமம், நித்யகல்யாணி விதைகளில் இந்தப் பிரச்னை இல்லை. நாம் அறுவடை செய்ததும் அதிலிருந்தே விதையைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

மருத்துவகுணம் மிக்க மல்லி!

சமையலுக்கு மட்டுமல்லாமல், சித்த மருத்துவத்திலும் மல்லி பயன்படுத்தப்படுகிறது. இதை ‘அகட்டு வாய்வகற்றி’ என்றும் சொல்வார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மல்லி விதைச்சாறு நல்ல பயன் தரும். மல்லி இலை, காய் எல்லாமே மருத்துவ குணமுடையவை.

 இ.கார்த்திகேயன்

 படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்