Published:Updated:

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி நிலையம்...

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி நிலையம்...

Published:Updated:

மிழகத்தின் பெரும்பான்மை விவசாயம் வானம் பார்த்த பூமி எனப்படும் மானாவாரி நிலங்களில்தான் மேற்கொள்ளப்படுகிறது. ‘இறவையில் மேற்கொள்ளப்படும் பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மானாவாரி பயிர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.’ என்ற குற்றசாட்டும் இருக்கிறது.

ஆனால், இந்தக் கருத்தை தவிடுபொடியாக்கும் விதத்தில் மானாவாரி பயிர்களுக்காகவே இயங்கிவருகிறது, ஓர் ஆராய்ச்சி நிலையம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகேயுள்ள செட்டிநாடு கிராமத்தில் அமைந்துள்ளது மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்.

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

செம்மண் நில மேம்பாட்டு உத்திகள்!

மானாவாரி சிறப்பிதழுக்காக ஆராய்ச்சி நிலையத்தில் ஆஜரானோம். நம்மை வரவேற்று ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய பேராசிரியர் மற்றும் தலைவர் மெர்டில் கிரேஸ், ‘‘இது முழுக்கமுழுக்க மானாவாரி வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சி நிலையம். கரிசல் மண்ணில் மானாவாரி பயிர்கள் குறித்த ஆராய்ச்சிக்காக கோவில்பட்டியில் ஓர் ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது.

தமிழகத்தில் 65 சதவிகிதம் செம்மண்ணில்தான் மானாவாரி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் செம்மண் மானாவாரி பயிர்கள் ஆராய்ச்சிக்காக இந்த மையத்தை 2008-ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த ஆராய்ச்சி நிலையம் மொத்தம் 317 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரிக்கு ஏற்ற உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்குதல், மண்வளம் மற்றும் உரமேலாண்மை நுட்பங்கள், வெற்றிகரமான இயந்திரப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றவர், உதவிப் பேராசிரியர் கண்ணனை அறிமுகப்படுத்தி, பண்ணையைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்தார்.

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

விதை முதல் விதை வரை இயந்திரங்கள்!

பண்ணையில் நடைபோட்டுக்கொண்டே நம்மிடம் பேசிய கண்ணன், ‘‘இந்த ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய நோக்கம், செம்மண் நில மேம்பாட்டுக்கான உத்திகளைக் கண்டுபிடிப்பது, வானிலைக்கு ஏற்ற பயிர் திட்டங்களை உருவாக்குவதுதான்.

மானாவாரி விவசாயப் பரப்பு சுருங்கி வருவதற்கு முக்கிய காரணம்... வேலையாட்கள் கிடைக்காததுதான். அதற்கு மாற்று ஏற்பாடாக மானாவாரியில் இயந்திரப் பயன்பாடுகளை அதிகரித்து, வேலையாட்கள் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சியை சில பயிர்களில் பயன்படுத்தி வெற்றியும் அடைந்திருக்கிறோம். உதாரணமாக, நிலக்கடலையில் ‘விதை முதல் விதை’, வரை என்ற திட்டத்தில் கடலையில் இருந்து விதையைப் பிரித்தெடுப்பது முதல், விதைப்பு, அறுவடை என அனைத்து கட்டங்களிலும் இயந்திரங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம். சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மானாவாரி விவசாயத்தில் 80 சதவிகிதம் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

சிங்கம்புணரி வட்டாரத்தில் பல்வேறு குழுக்கள் மூலமாக கடலை உடைப்பு, விதைப்பு, களைஎடுப்பு, அறுவடை என இயந்திரங்களைக் கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். இது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

பண்ணைக் குட்டை நுட்பங்கள்!

அடுத்தாக, மண்ணின் ஈரப்பதத்தைக் காப்பதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகிறோம். உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் பெய்ய வேண்டிய ஆண்டு சராசரி மழையளவு நமக்கு கிடைத்தாலும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அதற்காக பண்ணைக்குட்டை அமைத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்பு உணர்வை விவசாயிகளுக்கு அளித்து வருகிறோம். பொதுவாக, அதிகாரிகள் சொல்லும் அளவில் ஒரு குட்டையை அமைத்தால் போதும், அதுதான் பண்ணைக்குட்டை என நினைக்கிறார்கள். ஆனால், பண்ணைக்குட்டை அமைப்பதிலும், சில நுட்பங்கள் இருக்கின்றன. மணல்சாரி நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்தால் நீர் முழுவதும் வடிந்துவிடும். ‘‘அதற்காக என்ன செய்வது என்னிடம் உள்ளது மணல்சாரி நிலம்தானே?’’ என கேட்பவர்களுக்கு சில நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறோம்.

மானாவாரியிலும் பாசனம் செய்யலாம்!

நீர்வடியும் நிலங்களில் பாலித்தீன் விரிப்பை குட்டையின் அடிப்பகுதியில் விரிக்கலாம். அல்லது கரம்பை மண்ணை அடிப்பகுதியில் கொட்டி பரப்பி விடுவதன் மூலமும் நீர்கசிவைத் தடுக்கலாம். முறையாக அமைக்கப்பட்ட ஒரு பண்ணைக்குட்டை, 12 தெளிப்புநீர்க் கருவிகள், 20 ஹெச்.டிபி.சி குழாய், 5 ஹெச்.பி. டீசல் மோட்டார் மட்டும் இருந்தால் போதும், மானாவாரி விவசாயியும் பாசன விவசாயியாக மாற முடியும். அதற்கான சோதனை வயலை இங்கே அமைத்திருக்கிறோம். இதைப் பார்த்து பல விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதேபோல மானாவாரியாக நேரடி நெல் விதைப்பில் இயந்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் பயிர்களின் எண்ணிக்கையை சீராகப் பராமரிக்க முடிகிறது. மகசூல் அதிகரிக்கிறது. வறட்சியான காலங்களில் பயிர்களை வாடவிடாமல் காப்பாற்றும் பி.பி.எப்.எம் (PINK PIGMENTED FACULLATIVE METHYLOTROPHS) நுண்ணுயிரி தெளிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்கிறோம். நெல் பயிரில் 1,500 ஏக்கரில் செயல்விளக்கம் கொடுத்துள்ளோம். இதைத் தவிர, மானாவாரியில் கொத்தவரை, செடி அவரை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி தொடர்பான ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. தற்போது விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குக் கற்றுகொடுப்பதற்காக உணவுப் பதப்படுத்துதல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமும் இங்கு செயல்படுகிறது. இதன் மூலமாக விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் நுட்பங்களையும் கற்றுக்கொடுக்கிறோம். எண்ணெய் வித்துப் பயிர்களில் கந்தகக் குறைபாடு அதிகம் காணப்படும். இதைக் களைவதற்கான தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொடுத்து வருகிறோம்.

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

நிலக்கடலை, குதிரைவாலியில் புதிய ரகம்!

மானாவாரியில் அதிகம் விளைவிக்கப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களான எள், சூரியகாந்தி, மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய பயிர்களை குறித்த ஆராய்ச்சிகளுடன் சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சி, கால்நடைகளுக்கான தீவனப் பயிர்கள் மற்றும் தீவன மரங்கள் குறித்த ஆராய்ச்சி, அதிக வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களை அறிமுகப்படுத்தும் ஆராய்ச்சிகள் என ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

நிலக்கடலையில் ஒரு ரகத்தையும், குதிரைவாலியில் ஒரு ரகத்தையும் கண்டறிந்து சோதனை அடிப்படையில் வெற்றிபெற்று, இந்தாண்டு அறிமுகப்படுத்த இருக்கிறோம். ஆராய்ச்சிகள் மட்டும் இல்லாமல் விவசாயிகளுக்குப் பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். துல்லிய கரும்பு சாகுபடி பற்றி 125 ஏக்கரில் செயல்விளக்கம், திருந்திய நெல் சாகுபடியில் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேல் செயல் விளக்கம் என குறுகிய காலத்தில் பல சாதனைகளைத் தொட்டிருக்கிறது இந்த நிலையம். மொத்தத்தில் மானாவாரி விவசாயிகளுக்கு தங்கள் விவசாயம் தொடர்பாக எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் இங்கு விடை கிடைக்கும்’’ என்றார்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
செட்டிநாடு
தொலைபேசி: 04565-283080
கண்ணன், உதவிப் பேராசிரியர்
செல்போன்: 99764-06231

கந்தகக் குறைப்பாட்டைப் போக்கும் ஜிப்சம்!

மானாவாரி எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடி நிலங்களில் கந்தகச்சத்துக் குறைபாடுகளைக் களைவது தொடர்பாக பேசிய கண்ணன், ‘‘எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யும் நிலங்களில் கந்தகச்சத்துக் குறைபாடு இருக்கும். எண்ணெய் வித்துப் பயிர்களில் புரோட்டின் அளவை அதிகரிக்க இது உதவுகிறது. புரோட்டின் அதிகம் இருந்தால்தான் எண்ணெய் வித்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும்.

பெரும்பாலும், மானாவாரி விவசாயிகள் இதை சரிசெய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதை சரிசெய்வதற்காக எண்ணெய் வித்து சாகுபடி வயல்களில், ஜிப்சம் இட பரிந்துரைக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சத்தை எடுத்து, அடியுரமாக 200 கிலோவையும், 35 முதல் 50 நாட்களுக்குள் கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி மீதமுள்ள 200 கிலோவையும் தூவ வேண்டும். இதில் கால்சியம் சத்து இருக்கிறது.

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

பொதுவாக செம்மண் நிலங்களில் கால்சியம் குறைபாடு இருக்கும். ஆனால், ஜிப்சத்தை இடும்போது கால்சியம் சத்துக் குறைபாடு நீங்குவதுடன் கந்தகச்சத்துக் குறைபாடும் நீங்குகிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதால், மகசூல் ஏக்கருக்கு 300 கிலோ வரை அதிகரிக்கிறது. ஒரு கிலோ ஜிப்சம் 2 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஏக்கருக்கு 800 முதல் ஆயிரம் ரூபாய் செலவு செய்வதன் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் பார்க்கலாம்’’ என்றார்.

பயோசார்!

மானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...

தாவர மற்றும் வேளாண்மைக் கழிவுகளை எரித்துக் கரியாக்கிப் பயன்படுத்தும் முறையை உயிர் கரிப்பொருள் எனவும், ஆங்கிலத்தில் பயோசார் (Biochar) எனவும் அழைக்கிறார்கள். நெல் உமி, மரத்தூள், சீமைக்கருவேல் உள்ளிட்ட தாவரக்கழிவுகள் மற்றும் பருத்திமார், துவரைமார், சோளத்தட்டை உள்ளிட்ட வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி பயோசார் தயாரிக்கலாம்.

உற்பத்தி செய்யும் முறை!

தாவர மற்றும் வேளாண் கழிவுகளை இறுக்கமாக அடைத்து, ஆக்சிஜன் இல்லாத சூழலில் 3 மணி நேரம் 450 டிகிரி வெப்பநிலையில் சூடுபடுத்தினால், கழிவுகள் கரியாக மாறியிருக்கும். இந்தக் கரியைப் பரப்பி, அதன் மீது டிராக்டர் அல்லது உருளைகளை வைத்து உருட்டி தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

நிலத்தை நன்றாக உழுத பிறகு, இந்த உயிர் கரிப்பொருளை நிலத்தின் மேற்பரப்பில் தூவி, மீண்டும் நிலத்தை உழவு செய்ய வேண்டும். இதனால் கரித்தூள் காற்றில் பரவாமல் மண்ணோடு மண்ணாக ஒட்டிக்கொள்ளும். ஒரு ஏக்கருக்கு 2 டன் உயிர் கரிமத்தூளைத் தூவ வேண்டும். இதைப் பயன்படுத்துவதால், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். அமிலத்தன்மை உள்ள மண்ணில் இடும்போது, கார அமிலத்தன்மை சமனடையும். மண்ணின் கரிமச்சத்து, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவை கூடும். நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பயிர்களின் இலைகளில் பச்சையத்தின் அளவு அதிகரிக்கும். வேரின் எண்ணிக்கை கூடி, பயிர் விளைச்சல் அதிகமாகும். விதையின் தரம் மேம்படும்.

இதைத் தயாரிக்கும் இயந்திரத்தின் விலை 70 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஆகிறதாம். இன்னும் குறைந்தசெலவில் இந்த இயந்திரத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இந்த நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இது நடைமுறைக்கு வந்தால் பயோசார் பயன்பாடு அதிகமாகும்.

ஈரப்பதம்!

சிறுசிறு பாத்திகளை அமைத்தல், பயிர் கழிவுகளை மூடாக்காகப் பரப்புதல், உயிர்மூடாக்கு அமைத்தல் ஆகியவற்றின் மூலம் மானாவாரி நிலங்களில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஆர்.குமரேசன்

படங்கள்: சாய்தர்மராஜ்