Published:Updated:

மனிதர்களுக்கு உணவு... மாட்டுக்குத் தீவனம்!

லாபம் கொட்டும் சோளம்!

மனிதர்களுக்கு உணவு... மாட்டுக்குத் தீவனம்!

லாபம் கொட்டும் சோளம்!

Published:Updated:

ம்முடைய பாட்டன், பூட்டன்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருந்தவை, சிறுதானியங்கள்தான். நெல் சோறு கௌரவத்தின் அடையாளமாக மாறிப்போன பிறகு... திருவிழா, விருந்தினர் உபசரிப்பு என முக்கிய நாட்களில் மட்டும் நெல் சோறு சமைக்கப்பட்டது. காலப்போக்கில், விருந்தாளியாக வந்தவன், வீட்டுக்காரனை விரட்டி விட்ட கதையாக, சிறுதானியங்களைப் புறந்தள்ளி முழுமையாக மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டது, அரிசி. கூடவே, மனிதஉடலில் சர்க்கரை உள்ளிட்ட பல பிணிகளும் குடியேற ஆரம்பித்தன. விளைவு, மீண்டும் சிறுதானியங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

மனிதர்களுக்கு உணவு...  மாட்டுக்குத் தீவனம்!

இன்றைக்கு அரிசிக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைப் போல, அன்றைக்கு மதிக்கப்பட்ட தானியம்... சோளம். சோளச்சோறு சாப்பிடும் மனிதர்களுக்கு சர்க்கரை நோய் வருவதில்லை. இதில் குளுக்கோஸின் அளவு மிகக் குறைவாக இருப்பதுதான் காரணம். இதை நவீன மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். அவ்வளவு சிறப்புமிக்க, தமிழர்களின் பண்டைய உணவுப்பொருளான சோளம், பெரும்பாலும் மானாவாரியாகத்தான் பயிரிடப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதன் சாகுபடிப் பரப்பு குறைந்து வந்தாலும், அருமை தெரிந்த விவசாயிகள் சோளத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்துள்ள பெரியவீரசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நல்லசிவம்.

மானாவாரிச் சிறப்பிதழுக்காக நல்லசிவத்தைச் சந்தித்தோம். ‘‘அடி காட்டுல... நடு மாட்டுல... நுனி வீட்டுல... இந்த விடுகதைய நம்மாழ்வார் அய்யா கலந்துக்கிற எல்லா நிகழ்ச்சியிலும் சொல்லுவாரு. அந்த முறையிலதான் முன்னோருங்க விவசாயம் செஞ்சு வந்தாங்க. ஆனா, பசுமைப் புரட்சி, பம்ப்- செட்னு வந்த பிறகு எல்லாமே தலைகீழா மாறிப்போச்சுங்க. மஞ்சள், வாழைனு பணப்பயிர் பக்கம் போயிட்டாங்க. சிறுதானிய வெள்ளாமையும் குறைஞ்சு போச்சு. இந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ வந்துச்சு. அதைப் படிக்கத் தொடங்கினேன்.

மனிதர்களுக்கு உணவு...  மாட்டுக்குத் தீவனம்!

கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, ஊத்துக்குளினு எங்க பகுதியில நடந்த நம்மாழ்வார் கூட்டங்கள்ல கலந்துக்கிட்டு விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா சிறுதானியங்களோட மகிமைகள் பற்றியும், அதை அழிய விடக்கூடாதுனும் அய்யா சொல்லுவார். அந்த வகையில எங்க பகுதியில பிரபலமா இருந்த சோளத்தை பயிர் செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதற்கு தோதான பருவமழை இந்த வருஷத்துலதான் கிடைச்சுது” என்ற நல்லசிவம், மானாவாரிப் பயிராக நான்கு ஏக்கரில் வெள்ளைச் சோளத்தை விதைத்துள்ளார். இந்தப் பகுதியில் இதை ‘மஞ்சள் சோளம்’ என்கிறார்கள்.

ஆட்டுக்கிடை அடியுரம்!

“45 செம்மறி ஆடுகளை வெச்சிருக்கேன். சுழற்சி முறையில நாலு ஏக்கர் நிலத்திலும் கிடை போடுறதால, அடியுரமா மண்ணுல ஆட்டு எரு மண்டிக்கிடக்கு. போன சித்திரை மாசத்துல ரெண்டு முறை கோடை உழவு செஞ்சு, மண்ணைப் புரட்டிப்போட்டேன். அடிச்ச வெயில் தீமை செய்யும், புழு பூச்சிகள், புதைந்து கிடக்கும் களைச்செடி விதைகளை அழிச்சிடுச்சு.

காங்கேயத்துல ஒருத்தர்கிட்ட இருந்து விதை வாங்கிட்டு வந்து விதைச்சேன்.

130 நாள்ல விளைஞ்சிடுச்சு. சோளத்தை அறுவடை செய்றப்போ, தட்டையின் அடிப்பகுதியில் ரெண்டு அடியை விட்டுட்டு, அறுத்து கத்தைக் கட்டணும். கதிர்களை அறுத்து களத்துமேட்டில் கொட்டி நல்லா காய வெச்சு அடிக்கணும். இப்படி தூற்றி எடுத்தா, ஒரு ஏக்கருக்கு சராசரியா 500 கிலோ சோளம் கிடைக்கும். இப்போதைக்கு ஒரு கிலோ சராசரியா 50 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதன் மூலமா 25 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். 6 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். மீதி 18 ஆயிரத்து 500 ரூபாய் லாபம். இந்த லாபத்தை விட, மாடுகளுக்கு உலர்தீவனமா கிடைக்குற தட்டைகளைத்தான் நான் பெரிய லாபமா நினைக்கிறேன். கிட்டத்தட்ட அடுத்த போகம் வரைக்கும் தீவனம் கிடைச்சுடும். இதோட மதிப்பு 8 ஆயிரம் ரூபாய்” என்ற நல்லசிவம் நிறைவாக, 

“தட்டைகளைக் கத்தையா கட்டி நிலத்துலயே செங்குத்தாக நிறுத்தி வைக்கணும். 50 கட்டுக்களைச் சேர்த்து நிறுத்தி வைப்போம். இதை ‘குச்சு ஊனுதல்’னு சொல்வாங்க. நிலத்துல நிறுத்தி வெச்சிருக்கிற தட்டைகளை, பத்து நாளைக்குப் பிறகு, வண்டியில ஏத்தி, வசதியான இடத்துல போர் அமைச்சுக்கலாம். கரையான் பிடிக்காத அளவுக்கு தரையில இருந்து இரண்டு அடி உயரத்துல போர் அமைச்சு, பிளாஸ்டிக் பேப்பர் போட்டு மூடி வெச்சிட்டா.... அடுத்த போகம் வரை தீவனம் கிடைக்கும். நிலத்துல விட்ட தூரை மடக்கி உழவு செஞ்சா, அது மட்கி அடுத்த போகத்துக்கு உரமாகிடும். அய்யா சொன்ன ‘அடி காட்டுல... நடு மாட்டுல... நுனி வீட்டுல...’ பழமொழி எனக்கு சரியா பொருந்துது” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.      

பசுமைத்தாய் உழவர் மன்றம்!

நபார்டு வங்கியின் உதவியுடன் ‘பசுமைத்தாய் உழவர் மன்றம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்,  நல்லசிவம். விவசாயிகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ‘பசுமை விகடன்’ உள்ளிட்ட பத்திரிகைகளை இலவசமாகக் கொடுத்து விவசாயிகளுக்கு எளிய தொழில்நுட்பங்கள் கிடைக்க வழி செய்கிறார்.

கல் அடைப்பு சரியாகும்!

பொதுவாக எல்லா சோளமும் மருத்துவ குணம் கொண்டவை. நீரழிவு, செரிமானம், ரத்தசோகை போன்ற நோயுள்ளவர்கள் தொடர்ந்து சோளச்சோறு, கூழ் இவைகளை வெதுவெதுப்பான இளஞ்சூட்டுப் பக்குவத்தில் சாப்பிடலாம். சிறுநீரைப் பெருக்கி கல் அடைப்புக்களை நீக்கும். கண் குறைபாடுகளைச் சரி செய்யும். மூலநோய் உள்ளவர்கள் சோள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சாகுபடிக் குறிப்புகள்!

சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, ஏக்கருக்கு 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, இரண்டு உழவு செய்ய வேண்டும்.

பாத்தி, வரப்புத் தேவையில்லை.

ஏக்கருக்கு 25 கிலோ விதை தேவை.

விதையை நேரடியாகத் தூவி, உழவு செய்யவேண்டும்.

30-ம் நாள் களை எடுத்து, அடர்த்தியான பயிர்களைக் கலைத்துவிட வேண்டும்.

சாகுபடிக் காலம் 130 நாட்கள்.

விதைநேர்த்தி...விளைச்சல் பூர்த்தி!

அடுத்த போக விதையைப் பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை. நமது நிலத்தில் விளையும் சோளத்தில் தேவையான விதைச் சோளத்தை எடுத்து, 3% பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, நிழலில் நன்கு உலர்த்தி சேமித்துக் கொள்ளவேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்வதன் மூலம் விதைகள் முளைப்புத்திறன் குறையாமல் நீண்ட நாட்கள் வரை இருக்கும். பூச்சி, பூஞ்சணம் தாக்குதல் இன்றி தரமான விளைச்சலை, சோளம் கொடுக்கும்.

பால் பிடிக்கும் பருவத்தில், பஞ்சகவ்யா!

30-ம் நாள் களை எடுத்துப் பயிர்களைக் கலைத்து விட்டதும், ஒரு லிட்டர் நீரில், 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, பயிர் பால் பிடிக்கும் பருவத்தில் ஒரு முறை இதேபோல பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.

பஞ்சகவ்யா கரைசலில் உள்ள பால், தயிர், நெய் ஆகியவற்றில் உள்ள கொழுப்பு, இலைகளின் மேல் மெல்லிய எண்ணெய்ப் பூச்சாக இருப்பதால், இலைத் துவாரங்கள் அடைக்கப்பட்டு இலைகளில் உள்ள நீர், ஆவியாகி வெளியேறுவதைத் தடுக்கிறது. இதனால், இலைகள் வாடாமல் தளதளப்புடன் நின்று, பயிருக்குத் தேவையான உணவைச் சமைத்து அனுப்பும். போதிய மழை கிடைக்காத போதும், இருக்கிற ஈரப்பதத்தைக் கொண்டு வாட்டமில்லாமல் வளர்ந்து குறைவில்லாத விளைச்சலைக் கொடுக்கும்.

பூச்சிகளை விரட்டும் புகையிலைக் கரைசல்!

60 முதல் 80 நாட்களில் பிஞ்சுக் கதிர்கள் பூத்து நிற்கும். இந்தச் சமயத்தில் பயிர்களின் பச்சை நிறம்... சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவிணி போன்ற தீமை செய்யும் பூச்சிகளை ஈர்க்கும். அவற்றை உடனே கட்டுப்படுத்தி விரட்டி அடிக்கவேண்டும்.

இஞ்சி, பூண்டு, புகையிலைக் கரைசல் மூலமாகக் கட்டுப்படுத்தலாம். தலா 500 கிராம் இஞ்சி, பூண்டு, காய்ந்த புகையிலை இம்மூன்றையும் நசுக்கி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊற வைத்து நன்றாகக் கலக்கிவிட்டு, 2 நாள் நல்ல வெயிலில் வைக்கவேண்டும். பிறகு, அந்தக் கரைசலை வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்கிற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அதிகாலை அல்லது மாலைநேரங்களில் பயிர்கள் நனையும்படி தெளிக்கவேண்டும். இதன் மூலமாக தீமை செய்யும் பூச்சிகளை வயலை விட்டு விரட்ட முடியும்.

தொடர்புக்கு,
எஸ்.நல்லசிவம்,
செல்போன்: 98422-48693

 ஜி.பழனிச்சாமி

 படங்கள்: ரமேஷ் கந்தசாமி