Published:Updated:

மரத்தடி மாநாடு: இறக்குமதி யூரியாவில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்!

மரத்தடி மாநாடு: இறக்குமதி யூரியாவில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்!

மரத்தடி மாநாடு: இறக்குமதி யூரியாவில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்!

மரத்தடி மாநாடு: இறக்குமதி யூரியாவில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்!

Published:Updated:

விதைப்பதற்காக வாங்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளை, மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு,மிதி வண்டியில் கழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வழியில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘காய்கறி’ கண்ணம்மாவும் நடந்து செல்வதைப் பார்த்த ஏரோட்டி, ‘காய்கறி’யை வண்டியில் ஏற்றிவிட்டு, வாத்தியாரை மிதி வண்டியில் ஏற்றிக் கொண்டார்.

‘‘என்னய்யா மழை வர்ற மாதிரி இருக்குது... ஆனா, வர மாட்டேங்குது. நேத்து சாயங்காலம் நல்லா இருட்டிக்கிட்டு வந்துச்சு. இடியும், மின்னலும் வெட்டுனதைப் பாத்தா, மழை பின்னி எடுக்கப்போகுதுனு நினைச்சேன். ஆனா, ஒண்ணுமே இல்லை. ரெண்டு தூறல் விழுந்ததோட சரி. புஸ்னு போயிடுச்சு’’ என்றார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு: இறக்குமதி யூரியாவில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஆமாய்யா, நமக்கு கோடை மழை வெளுத்து வாங்கியும் பல இடங்கள்ல விவசாயிகளுக்கு பிரயோஜனம் இல்லாமப் போயிடுச்சு. தென்மேற்குப் பருவமழையாவது நல்லபடியா கிடைச்சா சரிதான். கேரளாவுல பருவமழை தொடங்கிடுச்சுங்கிறாங்க. எப்படி இருக்கும்னு தெரியலை’’ என்றார், வாத்தியார்.

அதற்குள்ளாக மூவரும் கழனிக்கு வந்து சேர்ந்து விட, மூட்டைகளை இறக்கி பத்திரப்படுத்தி விட்டு, கல்திட்டில் வந்து ஏரோட்டி அமர்ந்தார்.

தொண்டையைக் கனைத்துக்கொண்ட வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பிக்க, அன்றைய மாநாடு ஆரம்பமானது.

‘‘தமிழ்நாட்டுக்கு ஒரு வருஷத்துக்கு, 8 லட்சம் டன் வரைக்கும் யூரியா தேவைப்படுதாம். வெளிநாடுகள்ல இருந்துதான் பெரும்பாலும் இறக்குமதி பண்றாங்களாம். மத்திய அரசோட ‘கிரிப்கோ’ கூட்டுறவு நிறுவனம்தான் இறக்குமதி செய்து விநியோகம் பண்ணுது. சமீபத்துல, ஓமன் நாட்டுல இருந்து 42 ஆயிரத்து 360 டன் யூரியா கப்பல் மூலமா தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்திருக்கு. ‘எக்ஸ்பிரஸ் கிளீனிங் ஏஜென்ஸி’ங்கிற தனியார் நிறுவனம், கிரிப்கோ நிறுவனத்தோட மேற்பார்வையில யூரியாவை 50 கிலோ மூட்டைகளா பேக்கிங் செய்யுற வேலையைச் செஞ்சிருக்கு. இதுல, 100 கிலோவுக்கு 10 கிலோ அளவுல கழிவுனு கணக்கு காட்டியிருக்காங்களாம். வழக்கமா 100 கிலோவுக்கு 2 கிலோ அளவுல இருந்து 3 கிலோ வரைதான் கழிவு வருமாம். கழிவுனு சொல்லி கணக்குக் காட்டி அந்த யூரியாவை வெளிச்சந்தையில விற்பனை செஞ்சு கொள்ளை லாபம் அடிக்கிறாங்களாம், அதிகாரிகள். இதுபத்தின விவகாரம் வெளிய கிளம்புனதும், இப்ப ‘தராசுலதான் கோளாறு. பெரியளவுல கழிவு இல்லை’னு சாக்குப்போக்கு சொல்லி சமாளிக்கப் பாக்கறாங்களாம், அதிகாரிகள். 2009-ம் வருஷத்துலயும் இதே மாதிரி யூரியா பேக்கிங் செய்யுறதுல ஒரு மோசடி நடந்துச்சாம்’’ என்றார், வாத்தியார்.

‘‘அடப்பாவிகளா, எதையுமே விட்டு வைக்க மாட்டாங்களா இவங்க’’ என்று எரிச்சலாகச் சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே பேசிய ஏரோட்டி, ‘‘மேட்டூர் அணையில இருந்து ஒவ்வொரு வருஷமும் வழக்கமா ஜூன் மாசம் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவாங்க. ஆனா, நாலஞ்சு வருஷமா சரியான நேரத்துல தண்ணீர் திறக்காததால, பெரியளவுல விவசாயம் பாதிச்சது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விவசாயிங்க தற்கொலை செய்துகிட்ட சம்பவம் கூட நடந்துச்சு. இந்த வருஷமும் அதுக்காக தமிழக அரசு இதுவரைக்கும் எந்த முயற்சியும் எடுக்கலை. அதனால டெல்டா விவசாயிகள் கவலையில இருக்காங்க’’ என்றார்.

‘‘இப்போ நம்ம மாநில முதல்வருக்கு விவசாயிகள் பிரச்னையா முக்கியம்? என்னய்யா புரியாத ஆளா இருக்குற. நாட்டு நடப்பைப் பாத்துக்கிட்டுதானே இருக்கிற’’ என்ற வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘முட்டை, கோழி, ஆடு, காய்கறி, பால் எல்லாத்துக்கும் நம்ம தமிழ்நாட்டு விவசாயிகளை நம்பித்தான் இருக்கு கேரளா. ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி முல்லை-பெரியாறு அணை பிரச்னை தீவிரமானதுல இருந்து இதெல்லாத்தையும் தமிழ்நாட்டுல இருந்து கொள்முதல் பண்றதைக் குறைக்கிறதுக்காக பல முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்கு, கேரள அரசாங்கம். இப்போ, அவங்க மாநிலத்துலேயே காய்கறிகளை அதிகளவு உற்பத்தி பண்றதுக்கான முயற்சிகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கிறாங்க. அதோட தமிழ்நாட்டு காய்கறிகளை மக்களை வாங்க விடாம இருக்கணுங்கிறதுக்கான வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க.

தமிழ்நாட்டுல இருந்து வர்ற காய்கறிகள்ல அதிக பூச்சிக்கொல்லி தெளிக்கிறாங்கனு சொல்லி... அதை ஆய்வு பண்ண அந்த மாநில உணவுப் பாதுகாப்புத்துறை இணை ஆணையர் தலைமையில நிறைய அதிகாரிகளை தமிழ்நாட்டுக்கு அனுப்பினாங்க. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, நீலகிரினு காய்கறிகள் விளையுற பகுதிகள்ல ஆய்வு செய்து அறிக்கை கொடுத்திருக்கிறாங்க.

அதுக்குப் பிறகு, கேரள உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அனுபமா, தமிழக வேளாண் உற்பத்தித்துறை ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அதுல, ‘தமிழகத்தில் விளைவிக்கப்படுற காய்கறிகளில் அதிக விஷத்தன்மை இருக்கு. இது புற்றுநோயை உருவாக்கும். விவசாயத்தில் வழக்கத்தை விட 10 மடங்கு கூடுதலாக ரசாயன உரத்தைப் பயன்படுத்துறாங்க. வெள்ளரியில் மட்டும் 12 வகையான பூச்சிக்கொல்லிகள் தெளிக்கிறாங்க. இதேமாதிரிதான் எல்லா காய்கறி, பழங்கள்லயும் பூச்சிக்கொல்லி தெளிக்கிறாங்க. இந்த விவசாய முறைகளை மாத்தலனா, கொள்முதல் செய்றதைக் குறைப்போம். அதனால, இரு மாநிலங்களின் உறவும் பாதிக்கும்’னு எழுதியிருக்காராம்’’ என்றார், வாத்தியார்.

‘‘நல்ல விஷயம்தானே இது. அவங்க மக்கள் மேல அக்கறையோட இருக்கிறாங்க. நம்ம விவசாயிகள் இயற்கை விவசாயம் பண்றதுக்கு இதுகூட தூண்டுகோலா இருக்க வாய்ப்பு இருக்குதுல்ல’’ என்றார், காய்கறி.

“நான் இதைத் தப்பா சொல்லலை... நம்ம விவசாயிகள்தான் புரிஞ்சுக்கணும். எப்படியும் அவங்க எதாவது காரணம் காட்டி காய்கறிக் கொள்முதலைக் குறைப்பாங்க. அதுக்குள்ள நாம சுதாரிச்சுக்கணும். அதேமாதிரி, நுகர்வோருக்குத் தேவையானதை அதாவது இயற்கைக் காய்கறிகளை உற்பத்தி பண்ண ஆரம்பிக்கணும்னு சொல்றேன். இல்லாட்டி விற்க முடியலையேனு பின்னாடி நஷ்டப்பட வேண்டியதில்லையே’’ என்று வாத்தியார் சொல்லும்போதே தூறல்கள் விழ ஆரம்பிக்க, அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.

வாரம் தோறும் வானிலை...!

மரத்தடி மாநாடு: இறக்குமதி யூரியாவில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்!

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மண்டல வானிலை மையம் இணைந்து, தமிழக விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக வழங்கி வருகிறது. இந்தத் தகவல், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் விவசாயிகளின் செல்போனுக்குச் சென்றடையும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெயர், வட்டாரம், மாவட்டம், செல்போன் எண் போன்ற தகவல்களோடு பயிர் பற்றிய நான்கு கேள்விகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தபாலிலோ அல்லது இ-மெயில் மூலமாகவோ அனுப்பி வைத்தால், தேவையான தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்புவார்கள். 

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003

 ஓவியம்: ஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism