Published:Updated:

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

குறுந்தொடர்-4

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

குறுந்தொடர்-4

Published:Updated:

ராஜஸ்தானிலேயே முடியுமென்றால், தமிழ்நாட்டிலும் முடியும்!

ந்தக் குறுந்தொடரில் ராஜேந்திர சிங், வறண்ட பகுதிகளையும் செழிக்க வைத்த வரலாற்றை விலாவாரியாகப் பார்த்தோம். தொடரின் முத்தாய்ப்பாக, தொடரின் நாயகன் ராஜேந்திர சிங் பசுமை விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இந்த இதழில் இடம் பெறுகிறது.

“ஸ்டாக்ஹோம் நீர் விருது... எப்படி உணர்கிறீர்கள்?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நீர்ச்சேகரிப்பில் நம் நாட்டின் பாரம்பர்ய அறிவைப் பயன்படுத்தியதற்காகவும், நீர்ப்பயன்பாட்டில் ஒழுங்குமுறையைக் கொண்டு வந்ததற்காகவும், நீர்ச்சேகரிப்பு மற்றும் பயன்பாட்டில் நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றியதற்காகவும் வழங்கப்படுகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.”

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

“ராஜஸ்தானில் 7 நதிகளை மீட்டெடுத்தது, எப்படி சாத்தியமாயிற்று?”

“மழைநீர் விழும் இடமெல்லாம் மக்களின் ஒத்துழைப்புடன் அதைப் பிடித்து, மண்ணுக்குள் அனுப்பினோம். இந்த நதிகள் உள்ள 1,200 கிராமங்களில், 8 ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 11 ஆயிரம் நீர் சேகரிக்கும் அமைப்புகளை (தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள்) உருவாக்கியுள்ளோம். நிலத்தடியில் உள்ள நீரோட்டமும், நீர்த்தேக்கமும் இதனால் பெருகின. நதியிலிருந்து நீர் ஆவியாவது குறைந்தது. ராஜஸ்தானில் அர்வாரி, ரூபாரெல், சர்ஸா, பகானி, ஜாஜ்வாலி, மகேஷ்வரா போன்ற 7 நதிகள் மீண்டும் ஓடத்தொடங்கின.”

“இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இது சாத்தியமா?”

“குறைந்த மழை பெறும் ராஜஸ்தானிலேயே முடியுமென்றால், மற்ற இடங்களில் முடியாதா என்ன? எங்கள் பகுதிகளில் மக்கள் அடர்த்தியும் பிற பகுதிகளைப் போலத்தான். அதனால், முயற்சி செய்தால், தமிழ்நாடு உள்பட இந்தியாவின் மற்ற இடங்களிலும் நதிகளை மீட்டெடுத்தல் சாத்தியமே.”

“தேசிய அளவில் நதிகளை இணைப்பது பலனளிக்குமா?”

“அடிக்கடி பேசப்படும் நதிகள் இணைப்புக்குப் பின்புலமாக தனியார் கம்பெனிகள் பெருத்த லாபம் அடையும் திட்டமும், நதிகளை தனியார் மயமாக்கும் திட்டமும் ஒளிந்திருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வறட்சியைப் போக்கவோ, விவசாயத்தை மேம்படுத்தவோ நதிகள் இணைப்பு பயன்படாது. நதிகள் மீதான உரிமையை மக்கள் இழக்கும் நிலையே இந்தத் திட்டத்தால் உருவாகும். அந்தந்தப் பகுதிகளில், மக்கள் பங்கேற்புடன் நீர்ச்சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவதும், பராமரிப்பதுமே தண்ணீர் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வாக இருக்க முடியும்.”

“தேசிய கங்கை நதி வடி நில ஆணையத்தில் உறுப்பினராக இருந்த நீங்கள், 2012-ம் ஆண்டில் அதிலிருந்து விலகக் காரணம் என்ன? ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் செயல்பாடு எப்படி உள்ளது?”

“அரசுக்கோ, இந்த ஆணையத்துக்கோ கங்கையைப் பற்றி அக்கறையில்லை. நதியை மீட்டெடுக்க வேண்டுமென்றோ, அதில் தூய்மையான நீரோட்டம் ஓடவேண்டும் என்றோ, இந்த ஆணையம் செயல்படவில்லை. கங்கை நதியை மீட்டெடுக்கும் திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினேன். அவர்கள் கேட்பதாக இல்லை. அதனால், விலகினேன்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இந்த அரசு கங்கை நதி மீட்பில் அக்கறை கொண்டதாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆணையத்தின் செயல் திட்டம் காண்ட்ராக்ட் காரர்களுக்குப் பயனளிப்பதாகவே உள்ளது. இதனால், சிலரின் பாக்கெட் நிரம்புமேயொழிய, கங்கை நதிக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த அரசு நிறைய பேசும் அரசாக உள்ளது. பேசுவதற்கு எதிராகவே செயல்படும் அரசாகவும் உள்ளது.”

“நீர் மேலாண்மையில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”

“நிலத்தடி நீர்த்தேக்கத்தை, நிலத்தடி நீரோட்டத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு முதலில், இந்தியா முழுக்க நிலத்தடி நீர்த்தேக்கங்களை வரைபடமாக்க வேண்டும். அவற்றை வளப்படுத்த, ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் போன்ற நீர்ச்சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்த முயற்சிகளில் மக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். சக தோழர்களைப் போல், அரசும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.”

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

“தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தமிழக மக்கள் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். தடுப்பணைகள் கட்டி நதிகளை மீட்டெடுக்க வேண்டும். ஏரிகள், குளங்கள் போன்ற நீர்ச்சேகரிக்கும் அமைப்புகளைத் தகுந்த இடங்களில் உருவாக்கிப் பராமரிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தாலே சில பகுதிகளிலிருக்கும் ஃப்ளூரைட் பிரச்னை தீர்ந்து விடும். குடிநீருக்கும் பிரச்னை இருக்காது.

அதேபோல், மழையளவுக்குத் தகுந்தவாறு தமிழக விவசாயிகள் பயிர் வகைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களில் நீர்ச்சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும். விழும் ஒவ்வொரு துளி மழையையும் சேகரிக்க வேண்டும். நாங்கள் பணிபுரியும் ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், விவசாயிகள் நீர்ச்சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகளும் அவ்வாறு ஈடுபட வேண்டும்.”

“ஆற்று மணல் கொள்ளை இங்கு அதிகம் நடக்கிறது. ஆற்றில் மணல் எடுப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?”

“ஆற்று மணல், ஒரு வடிகட்டியைப் போல செயல்பட்டு நீரைச் சுத்திகரித்து, மண்ணுக்குள் அனுப்புகிறது. மேலும் அது நீரை உடனடியாக ஓட விடாமல் தன்னுள் தக்க வைக்கிறது. ஆறு ஆரோக்யமாக இருக்க வேண்டுமானால், ஆற்றில் மணல் இருப்பது அவசியம். இல்லையென்றால் சுற்றியுள்ள பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் குறையும். என்னுடைய 30 ஆண்டு கால அனுபவத்தில் எந்த நதிகளில் ஆற்று மணல் கொள்ளை நடக்கிறதோ... அந்த நதிகள் வறண்டு போவதையும், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குச் செல்வதையும் கண்கூடாகக் கண்டுள்ளேன்.”

“எதிர்காலத் திட்டம்?”

“21-ம் நூற்றாண்டில் தண்ணீருக்கான போர் மூளும் என்கிறார்கள். நாங்கள் அதை மாற்றி ‘தண்ணீர் அமைதி’யை உருவாக்க விரும்புகிறோம். மழைநீரைச் சேகரித்தல், சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்கள் மூலமே, ‘தண்ணீர் அமைதி’யை உருவாக்கமுடியும். இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், உலகம் தழுவிய, ‘தண்ணீர் அமைதிப் பேரணி’யை நடத்த உள்ளோம். விழிப்பு உணர்வை உருவாக்குதுதான் இதன் முக்கிய அம்சம்.”

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையத்தில்... பல்வேறு மத்திய அமைச்சர்களும்; கங்கை பாயும் 11 மாநிலங்களில், உத்தர்காண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில முதல்வர்களும்; அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளார்கள். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் நடந்தது. 2010-ம் ஆண்டு பட்ஜெட்டில் 500 கோடி ரூபாயும், 2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டில் 1,500 கோடியும், இந்த ஆண்டு மே மாதத்தில் 20 ஆயிரம் கோடியும் (2020 வரை) கங்கையைத் தூய்மைப்படுத்தவும், அதை மீட்டெடுக்கவும் இந்த ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

-அடுத்த இதழில் தொடர் முடியும்....

க.சரவணன்

படங்கள்: அ.பார்த்திபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism