Published:Updated:

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

Published:Updated:

யற்கை விவசாயத்துக்கு மாறும் பலரும் பாரம்பர்ய ரகங்களைத்தான் தேடித்தேடி சாகுபடி செய்து வருகிறார்கள். இருந்தாலும், பலருக்கும் உள்ள ஒரு சந்தேகம்... ‘பாரம்பர்ய ரகங்களில் அதிக மகசூல் கிடைக்குமா?’ என்பதுதான். வீரிய ரகங்களுக்கு இணையாக பாரம்பர்ய ரகங்களிலும் மகசூல் கிடைக்கும் என்பதைப் பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். அது பற்றிய செய்திகளை அவ்வப்போது ‘பசுமை விகடன்’ தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இணைகிறார், தஞ்சாவூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களின் எல்லையில் குத்தாலம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீராம்.

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

‘இருப்பதைக் கொண்டே வயலை வளமாக்க வேண்டும். தனித்துவமான தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும்’ என்ற இந்த இரண்டு விதிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீராம், மிகக்குறைந்த செலவில், பாரம்பர்ய நெல் ரகங்களில் ஏக்கருக்கு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 800 கிலோ மகசூல் எடுத்திருக்கிறார். இதை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள், சுற்று வட்டார விவசாயிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயலில், பெரும்பகுதி அறுவடை முடிந்த நிலையில், ஒரு பகல் பொழுதில் ஸ்ரீராமை சந்தித்தோம். அவரது தந்தை ராமமூர்த்தியும் உடனிருக்க, இருவரும் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். தலைமுறை இடைவெளி அதிகமாக இருந்தும் கூட... கரம் கோர்த்து மிகுந்த நேசிப்போடு இருவரும் இயற்கை விவசாயத்தில் தீவிரம் காட்டி வருவதை அவர்களின் பேச்சில் உணரமுடிந்தது.

உரமாகும் சாண எரிவாயு சிலரி “எங்க குடும்பத்துக்கு 60 ஏக்கர் நிலம் இருக்கு. இது வண்டலும் களியும் கலந்த இருமண்பாடு. போன வருஷம் வரைக்கும் 40 ஏக்கர்ல கரும்பும், 20 ஏக்கர்ல நெல்லும் சாகுபடி செஞ்சிக்கிட்டு வந்தோம். இதுல 6 ஏக்கர்ல மட்டும் மூணு வருஷமா இயற்கை முறையில நெல் சாகுபடி செய்றோம். இந்த வருஷத்துல இருந்து 60 ஏக்கர்லயுமே இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டோம். கரும்போட பரப்பை பாதியா குறைச்சி, நெல்லோட பரப்பை இருமடங்கா அதிகமாக்கிட்டோம்’’ என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்த ஸ்ரீராம், தொடர்ந்தார்.

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

“40 ஏக்கர் கரும்பு வயல்ல, 20 ஏக்கர்ல மட்டும் மூணு போகம் முடிஞ்சிருந்துச்சு. அதை நாலாவது போகமா வளர விட்டோம். அதுக்கு எந்த ஒரு இடுபொருளும் கொடுக்கல. தானாகவே வளர்ந்துச்சு. 4 மாச வயசுல 7 அடி உயரத்துக்கு கரும்பை வளர விட்டு, கீழே சாய்ச்சி மூழ்குற அளவுக்கு தண்ணீர் கட்டினோம். அதை மட்க வைக்கிறதுக்காக ஒவ்வொரு ஏக்கருக்கும் ஒரு வாய்மடை அமைச்சி, அதுல 50 லிட்டர் கோபர் கேஸ் சிலரியை (சாண எரிவாயுக் கலனில் வெளியாகும் சத்துக்கள் நிறைந்த பொருள்) ஊத்தி தண்ணீர் பாய்ச்சினோம்.

15 நாட்களுக்கு ஒரு முறைனு மூணு முறை இப்படி செஞ்சோம்.

மண்ணோடு மண்ணா கரும்பு நல்லா மட்கி வளமான உரமா மாறிடுச்சு. இன்னொரு 20 ஏக்கர் நெல் சாகுபடிக்கும் கூட அடியுரத்துக்குக் கொஞ்சமும் செலவு செய்யல. 8 ஏக்கர்ல புதுசா சாகுபடி செஞ்சிருந்த கரும்பில... களைகளைக் கட்டுப்படுத்தறதுக்காக ஏக்கருக்கு 30 கிலோ வீதம் சணப்பு தெளிச்சிருந்தோம். 45 நாள் வயசுல சணப்பை வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து, அடியுரமா 20 ஏக்கர் நெல் வயல்லயும் பரவலா போட்டோம். கரும்பை மட்க வைத்தது போலவே, கோபர் கேஸ் சிலரியைப் பயன்படுத்தி, சணப்பையும் மட்க வெச்சோம்.

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

ஏக்கருக்கு ரூ.48 ஆயிரம் லாபம்!

35 ஏக்கர்ல சேத்துழவு செஞ்சு வரிசை நடவு முறையில கயிறு புடிச்சு குத்துக்குக் குத்து அரையடியும், வரிசைக்கு வரிசை ஒரு அடியும் இடைவெளி விட்டு நடவு செஞ்சோம். ஒவ்வொரு குத்துலயும் 2 நாத்து அல்லது 3 நாத்து வெச்சோம்.

6 ஏக்கர்ல தூயமல்லி, 5 ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, 5 ஏக்கர்ல வெள்ளைப் பொன்னி, 4 ஏக்கர்ல இலுப்பைப்பூ சம்பா, 4 ஏக்கர்ல சீரகச்சம்பா, 2 ஏக்கர்ல மைசூர்மல்லி, 2 ஏக்கர்ல கிச்சடிச்சம்பா, 1 ஏக்கர்ல சூரக்குறுவை, 1 ஏக்கர்ல சிகப்புக் கவுனி, 1 ஏக்கர்ல தேங்காய்ப்பூச்சம்பா, 1 ஏக்கர்ல வாலான், 1 ஏக்கர்ல பாஸ்மதி, 1 ஏக்கர்ல கருப்புக் கவுனி, 1 ஏக்கர்ல பூங்கார்னு விதைச்சோம். நடவிலிருந்து 3-ம் நாள், ஏக்கருக்கு 200 கிலோ அளவுக்கு செறிவூட்டப்பட்ட கரும்பு சக்கைகளைப் போட்டோம். 15-ம் நாள் 80 லிட்டர் தண்ணீர்ல இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி, இரண்டரை லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து தெளிச்சோம். 30-ம் நாள் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யாவை 80 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிச்சோம். 45-ம் நாள் 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர்ல கால் லிட்டர் புங்கன் எண்ணெய், கால் லிட்டர் வேப்பெண்ணெய், கால் கிலோ சீயக்காய் கலந்து தெளிச்சோம். 15 நாட்களுக்கு ஒரு தடவை பாசன நீர்ல 50 லிட்டர் கோபர் கேஸ்  சிலரியைக் கலந்து பாய்ச்சினோம்.

இந்த மாதிரி இயற்கை ஊட்டமா கொடுத்ததுல பயிர் நல்லா செழிப்பா வளர்ந்துச்சு. ஒரு குத்துக்கு 30, 40 தூர்கள் இருந்துச்சு. பயிரோட உயரமும் அதிகமா இருந்துச்சு. மோட்டா ரகத்துல ஏக்கருக்கு 1,700 கிலோ அளவுலயும், சன்னரகத்துல ஏக்கருக்கு 2 ஆயிரத்து 300 கிலோ அளவுலயும் மகசூல் கிடைச்சுது. நெல்லை அறுவடை செஞ்சு அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்தோம். எல்லா செலவும் போக, சராசரியா ஏக்கருக்கு 48 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சது. ஆக, 35 ஏக்கர்ல 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நின்னுது” என்ற ஸ்ரீராம், தொடர்ந்தார்.

35 ஏக்கர்... ரூ.16 லட்சம்...பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்...

அதிக இடைவெளி... கூடுதல் மகசூல்

“சோதனை முயற்சியா 5 ஏக்கர்ல மட்டும் ஒவ்வொரு குத்துக்கும் 50 சென்டிமீட்டர் இடைவெளிவிட்டு ஒவ்வோர் ஏக்கர்லயும் இலுப்பைப்பூச் சம்பா, கிச்சடிச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, சிவப்புக் கவுனினு விதைச்சோம். வரிசை முறை நடவை விட இதுல செலவு குறைவு. ஆனால், பலன்கள் அதிகம். ஏக்கருக்கு 3 சென்ட்ல நாற்றங்கால் அமைச்சி, அரை கிலோ விதை தெளிச்சாலே போதுமானது. நாற்றுப் பறிப்பு நடவு எல்லாத்துக்கும் சேர்த்தே ஏக்கருக்கு 1,800 ரூபாய்தான் செலவாச்சு (இதுவே வரிசை முறை நடவுக்கு, 8 சென்ட்ல நாற்றங்கால் அமைச்சு, 20 கிலோ விதை தெளிச்சோம். அதுல, நாற்றுப் பறிப்பு, நடவுக்குனு சேர்த்து ஏக்கருக்கு 3 ஆயிரத்து 800 ரூபாய் வரை செலவு செஞ்சோம்).

இயற்கை இடுபொருட்கள் கொடுத்ததோட, தாராள இடைவெளியும் இருந்ததுனால, வேர் வரைக்கும் சூரிய ஒளி கிடைச்சுது. இதனால் பயிர் நல்லா வளந்துச்சு. ஒவ்வொரு குத்துக்கும் 80 தூர்ல இருந்து 150 தூர்கள் வரை இருந்துச்சு. தண்டும் நல்லா தடிமனா இருந்துச்சு. பூச்சி, நோய்த்தாக்குதல் கொஞ்சம் கூட இல்லை. இந்த சோதனை முயற்சியில மோட்டா ரகத்துல 2 ஆயிரத்து 700 கிலோவும், சன்ன ரகத்துல 2 ஆயிரத்து 800 கிலோவும் மகசூல் கிடைச்சுது” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார் ஸ்ரீராம்.

களைகளை கட்டுப்படுத்திய அசோலா!

“நாற்று நடவு செய்த 3-ம் நாள் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் அசோலா தெளித்தோம். இது செழிப்பாக வளர்ந்து, களைகளை முழுமையாக கட்டுப்படுத்தியது. ஒரு மாதத்தில் நெற்பயிர்கள் உயரமாக வளர்ந்ததும், நிழல் படிந்தது, அசோலா தானாகவே மடிந்து மண்ணுக்கு உரமானது” என்கிறார், ஸ்ரீராம்.

செறிவூட்டப்பட்ட கரும்புச் சக்கை!

சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்திக்காக எரியூட்டப்பட்ட, கரும்புச் சக்கைகள் ஒரு டன் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை கொண்டு வந்து திறந்தவெளியில் வைத்திருக்க வேண்டும். ஓர் ஆண்டுக்குப் பிறகு இவை நனையும் அளவுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கோபர் கேஸ் சிலரியை ஊற்றி, கரும்புத் தோகைகளைப் போட்டு மூடிவிடவேண்டும். இதுபோல் மூன்று தடவை செய்ய வேண்டும். இத்துடன் தலா 20 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் கலந்து நன்கு கிளறி விட்டு, கரும்புத் தோகைகளைக் கொண்டு மூடி ஒரு மாதம் வைத்திருந்தால், செறிவூட்டப்பட்ட கரும்புச் சக்கை தயார்.

கோபர் கேஸ் கலன்!

“எங்க வீட்ல 8 ஆயிரம் ரூபாய் செலவுல கோபர் கேஸ் கலன் அமைச்சிருக்கோம். தினமும் 6 நபர்களுக்கு இந்த அடுப்புலதான் சமையல் செய்றோம். எங்ககிட்ட உள்ள 4 மாடுகளின் கழிவை மட்டும்தான் இந்தக் கலனுக்குப் பயன்படுத்துறோம். இதுல 3 நாட்களுக்கு ஒரு முறை 600 லிட்டர் சிலரி வெளியாகுது. இது வயலுக்கு நல்ல உரமா பயன்படுது” என்கிறார், ஸ்ரீராம்.

தொடர்புக்கு,

செல்போன்: 94867-18853

 கு.ராமகிருஷ்ணன்

 படங்கள்: க.சதீஸ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism