Published:Updated:

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

குறுந்தொடர்-6

தமிழகத்தின் தேவை... தண்ணீருக்கான மக்கள் இயக்கம்!

முப்பது வருடங்களுக்கு முன், ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்தில், மங்குலால் படேல் என்ற முதியவரின் ஆலோசனையால் ராஜேந்திர சிங்குக்கு பற்றிக்கொண்ட தண்ணீர் நெருப்பு, இன்னும் அடங்கவில்லை. அவரது சீரிய தலைமையின் கீழ் செயல்படும் ‘தருண் பாரத் சங்’ அமைப்பு, ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் பங்கேற்புடன், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ‘ஜோஹாட்’ என்றழைக்கப்படும் குளங்கள், ஏரிகள், ஓடைகள் மற்றும் சிறு நதிகளுக்குக் குறுக்கே தடுப்பணைகளையும் உருவாக்கியுள்ளது.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதன் மூலம் அந்த அமைப்பு, 8 ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீரை அதிகரித்து, ராஜஸ்தானில் உள்ள 7 நதிகளை மீண்டும் ஓட வைத்த மகத்தான பணி குறித்து கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். ராஜேந்திர சிங் மற்றும் தருண் பாரத் சங் பணிகளிலிருந்து தமிழகம் கற்றுக் கொள்ளவேண்டிய படிப்பினைகளென்ன, நாம் பயணிக்க வேண்டிய திசை எது, செய்ய வேண்டிய பணிகளென்ன... போன்றவைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மல்லுக்கட்டும் பருவமழை!

தமிழகத்தில் தண்ணீரின் இன்றைய நிலை என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம். ஆண்டு சராசரி மழையளவு, ராஜஸ்தானைவிட (50-60 சென்டி மீட்டர்) தமிழகத்தில் (92.5 சென்டி மீட்டர்) சற்று அதிகம்தான். ஆனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே, மழையளவு குறைந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். புவி வெப்பமடைவதால், பருவம் தப்பியும், அளவு மாறியும் மழை பொழிகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதும், காடுகள் அழிக்கப்படுவதும், சில இடங்களில், மழையைப் பிடித்து நிலத்துக்கு அனுப்பும் மலைகள் காணாமல் போவதும் தமிழகத்தில் தொடர் நிகழ்வாகி விட்டன.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்!

மழையளவு குறைவது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தடியில் சேகரிக்கப்பட்டுள்ள நீர் விவசாயத்துக்கும், தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கும் தொடர்ந்து உறிஞ்சப்படுகிறது. தமிழகத்திலுள்ள 385 ஒன்றியங்களில், 138 ஒன்றியங்களில் நிலத்தடி நீர், 100 சதவிகிதத்துக்கும் மேல் உறிஞ்சப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறையின் அரசாணை தெரிவிக்கிறது. ஏறத்தாழ 62 சதவிகித ஒன்றியங்களில் நிலத்தடி நீர் 70 சதவிகிதத்துக்கும் மேல் உறிஞ்சப்பட்டுள்ளது. இவை அனைத்தும், 2009 -ம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்கள்தான். இப்போது நிலைமை இன்னும் மோசமாக இருக்கக்கூடும். ஆக, நிலத்தடி நீரைப் பொறுத்தவரை, தமிழகம் மோசமான ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அழிந்துகொண்டிருக்கும் நீர்நிலைகள்!

நிலத்தடி நீரின் நிலைமை இப்படியிருக்க, நில மேற்பரப்பு நீரின் நிலையும் கவலைக்குரியதாகவே உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகளில், தண்ணீர் ஓடி பல ஆண்டுகள் ஆகி விட்டன. நீரோடும் நதிகளும், தொடர்ந்து கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடைகின்றன. கர்நாடகா மாநிலத்தில், காவிரியில் கழிவுநீர் கலப்பதைக் காரணம் காட்டி, நீதிமன்றத்துக்குச் செல்லும் தமிழக அரசு, தமிழகத்தில், காவிரியும், மற்ற ஆறுகளும் மாசடையாமலிருக்க என்ன செய்துள்ளது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ஆற்றுமணல் கொள்ளையோ, அரசு ஆதரவுடன் அமோகமாக நடக்கிறது. சுற்றியுள்ள மாநிலங்களுக்கும் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

ஆந்திரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக அதிகம் ஏரிகளிருக்கும் மாநிலம் தமிழகம்தான். இந்தியாவின் 17% ஏரிகள் தமிழகத்தில்தான் இருந்தன. ஆனால், எத்தனையோ ஏரிகள்... பேருந்து நிலையங்கள், அரசு அலுவலங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், நினைவுச்சின்னங்கள், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்காகத் தூர்க்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் தற்போது 39 ஆயிரத்து 202 ஏரிகளிருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஊராட்சிகள் மற்றும் பொதுப்பணித்துறை வசமிருக்கும் இந்த ஏரிகள், எந்தவிதமான பராமரிப்புமில்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கின்றன.

வரத்துக்கால்வாய்கள், பாசனக் கால்வாய்களும் கூட பராமரிப்பில்லாமல் பாழாகின்றன. ஏரிகளும், கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்கிறது. நூறு நாள் வேலை திட்டத்தில் ஏரிகள் எந்த அழகில் தூர்வாரப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். உலக வங்கியின் நிர்பந்தத்தால் பொதுப் பணித்துறையின் கீழ் வரும் ஏரிகளை நிர்வாகம் செய்யத் தொடங்கப் பட்ட ‘நீர் பயன்பாட்டாளர் சங்கங்கள் (நீர்ப்பாசனச் சங்கங்கள்) பெயரளவுக்குக்கூட செயல்படவில்லை. அதைப் பற்றிய அக்கறையும் அரசுக்கில்லை. மேலும், கிரானைட் வேட்டைக்காக, தமிழகத்தின் சில பகுதிகளில் பல கண்மாய்கள் காணாமல் போன வரலாறு இங்குண்டு. தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஊரணிகள், கண்மாய்கள், குளங்கள், 2 ஆயிரத்து 359 கோயில் குளங்கள் எனப் பராமரிக்க வேண்டிய நீர்நிலைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கின்றது.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

முன்னோர்கள் கற்றுத் தரும் பாடம்!

மழை மறைவுப் பிரதேசமான தமிழகத்தில், இங்குள்ள பருவநிலை, புவியியல் அமைப்பு ஆகியவற்றை உணர்ந்து, விழும் மழையின் ஒவ்வொரு துளியையும் சேகரிக்கும் பணியை, மிகுந்த அக்கறையுடன் செய்துள்ளனர், நம் முன்னோர்கள். தமிழகத்தின் மையப் பகுதியிலிருந்து, வங்காள விரிகுடா வரை, தொடர் சங்கிலியாய் ஏரிகள் அதாவது, ஒரு ஏரியிலிருந்து வடியும் நீர் அடுத்த ஏரியை நிரப்பும் வகையில் உருவாக்கப்பட்டு, உபரி நீர் மட்டுமே, கடலில் சென்று கலக்கும்படி ஏற்படுத்தபட்டிருக்கும் அமைப்பு ஒன்றும் தற்செயலான நிகழ்வில்லை. நில அமைப்பை ஆய்வு செய்து, எங்கே எந்த ஏரியை உருவாக்க வேண்டும், அவை எவ்வாறு இணைக்கப்பட வேண்டுமென திட்டமிட்டு, பொறியியல் நுட்பத்துடனேயே இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

வரலாறு தொலைத்த அவலம்!

இப்படி உருவாக்கப்பட்ட ஏரிகளை பெரும்பாலும், அவற்றால் பயனடைந்த உள்ளூர் மக்களே பராமரித்துள்ளனர். கோடைகாலத்தில், மராமத்துப் பணிகளில் ஈடுபடுவது, கிராமங்களில் இயல்பாக நடந்த விஷயம். ஆனால், சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும், இந்தப் பொறுப்பையும், அதிகாரத்தையும் அரசே எடுத்துக் கொண்டதன் விளைவு... மக்களுக்கும், நீர்நிலைகளுக்குமிருந்த ஒரு உணர்வுப் பூர்வமான தொடர்பு அறுந்து போனது.

தமிழகத்திலும் முடியும்!

நமக்கு திசைகாட்டும் வகையில் மழைநீர்ச் சேகரிப்பிலும், ஏரிகள் பராமரிப்பிலும் மக்கள் பங்கேற்புடன் சிறந்து விளங்கும் உதாரணங்கள் தமிழகத்திலும் இல்லாமலில்லை. ‘நீர்ப் பயன்பாட்டாளர்கள் சங்கம்’ என்ற யோசனை, அரசுக்கு உதிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் அப்படி ஓர் அமைப்பை உருவாக்கி விட்டார்கள். 78-ம் ஆண்டில், பரம்பூர் ஊராட்சியில் விவசாயிகளே சேர்ந்து தொடங்கிய ‘பரம்பக் கண்மாய் நீர்ப்பாசன சங்கம்’, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ராமநாதபுரத்தின் முதுகுளத்தூர் வட்டம், மைக்கேல்பட்டணம் ஊராட்சியில்... 96-ம் ஆண்டிலிருந்து பஞ்சாயத்துத் தலைவராக உள்ள ஜேசுமேரியின் முயற்சியில், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்ச் சேகரிக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, தண்ணீர் பைப்புகள் நிலத்துக்கடியில் இணைக்கப்பட்டு, அனைத்து நீரும் ஊருணியில் சேர்கிறது. இதனால், அந்த ஊராட்சியின் குடிநீர்ப் பிரச்னை தீர்ந்ததுடன், மற்ற ஊராட்சிகளைச் சார்ந்த மக்களும் இங்கிருந்தே குடிநீர் எடுத்துச் செல்கின்றனர்.

ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

தர்மபுரியில் மக்கள் மன்றம் என்ற பெயரில் இலக்கியம்பட்டி ஏரியைப் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளில் மாணவர்கள், இளைஞர்கள், டாக்டர் என்று பலரும் பங்கு கொள்கின்றனர்.

இவையெல்லாம் நமக்குத் தெரிந்த ஒரு சில உதாரணங்கள்தான். தமிழகத்தில் இன்னும் வெவ்வேறு இடங்களில், மக்கள் பங்கேற்புடன் நீர்ச் சேகரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கலாம். ராஜஸ்தானில் நடந்ததைப் போல, தமிழகத்திலும் சிறந்த முறையில் நீர் மேலாண்மை செய்ய முடியும் என்பதைக் காட்டவே இந்த உதாரணங்கள்.

செய்ய வேண்டியது என்ன?

தண்ணீரைப் பொருத்தவரை இன்றைய நிலை தொடர்ந்தால்... எதிர்காலத்தில் தமிழகம் ஒரு பாலைவனமாக வறண்டு போகும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க வெகுஜன மக்கள் போராட வேண்டும். தண்ணீர் வணிகமயமாவதிலுள்ள சிக்கல்கள் குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள், நீர் உறிஞ்சும் பயிர்களைக் குறைப்பதோடு, சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகிய நீர் மேலாண்மை உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். பண்ணைக் குட்டைகள் அமைத்து, நிலங்களிலும் மழைநீரைச் சேகரிக்க வேண்டும்.

தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற மரங்களை பெருமளவு நடப்படவேண்டும். அவை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக நடந்த அழிவிலிருந்து மீள வேண்டுமானால்... இந்தப் பணிகள் அத்தனையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். அரசும், எதிர்கால சந்ததியின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளை மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

ஆர்வமும், அக்கறையும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பொறியாளர்கள், தொண்டு அமைப்புகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள்... என அனைத்துத் தரப்பும், ஒரு மக்கள் இயக்கமாகக் களத்தில் இறங்கினாலொழிய, தண்ணீர் பிரச்னையில், ஆண்டவனே நினைத்தாலும், தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது!

தொடர்புக்கு

Maulik Sisodia
TARUN BHARAT SANGH
Village: Bheekampura – Kishori,
Block: Thanagazi, District: Alwar
State: Rajasthan, PIN: 301022.
cell 094 14 019456

ஜேசு மேரி, மைக்கேல் பட்டணம்
செல்போன்: 94422-56233.

சுப்பிரமணியன், பரம்பூர்
செல்போன்: 91598-58275.

பாலா, தருமபுரி மக்கள் மன்றம்
செல்போன்: 72994-28570.

முற்றம்...

க.சரவணன்

படங்கள்: கே.குணசீலன், அ.பார்த்திபன்