Published:Updated:

கறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்!

கறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்!

புளிக்குழம்பு, குருமா, கருவாடு மொச்சைக் குழம்பு, மொச்சைக் கறிக்கூட்டு, பொரியல்... எனத் தமிழகத்தின் ஏகப்பட்ட உணவு வகைகளில் மொச்சை பயன்படுத்தப்படுவதால், சமையல் பட்டியலில் அதற்கு தனி இடமுண்டு. கறுப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் இருந்தாலும், கறுப்பு மொச்சையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இப்படி அதிகத் தேவை இருப்பதால், பெரும்பாலான மானாவாரி விவசாயிகளின் ஆடிப்பட்டத் தேர்வாக இருக்கிறது, மொச்சை.

பல ஆண்டுகளாக இயற்கை முறையில் மானாவாரியில் மொச்சை சாகுபடி செய்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராமலு. வத்திராயிருப்பிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வ.புதுப்பட்டியில் இருக்கிறது, ஸ்ரீராமலுவின் தோட்டம். ஆடிப்பட்டச் சிறப்பிதழுக்காக அவரைச் சந்திக்கச் சென்றபோது, வெயிலில் காய வைத்திருந்த மொச்சை விதைகளைக் கையில் அள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

கறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“நான் பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கு மேல படிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா, விவசாயத்தைப் பார்க்க ஆளில்லாததால, காலேஜுக்குப் போகாம கழனியில இறங்கிட்டேன். ஒரு மாசம் வருத்தமா இருந்துச்சு. அப்புறம், விவசாயத்துல ஈடுபாடு வந்துடுச்சு. நெல், தென்னைதான் முக்கிய விவசாயமா அப்பா செய்துக்கிட்டு இருந்தாங்க. முழுக்க ரசாயன முறை விவசாயம். தொடர்ந்து ரசாயனம் கொட்டுனதால தென்னையில காய்கள் சிறுத்து, சொரசொரனு இருந்துச்சு. என் கைக்கு தோட்டம் வந்தப்போ, தென்னை மரமெல்லாம் பட்டுப்போக ஆரம்பிச்ச நிலையில இருந்தது. வயலுக்குள்ள கால் வச்சாலே உப்பைக் கொட்டுன மாதிரி அங்கங்க ரசாயன உரம் பரவி கிடக்கும்.

ரசாயனத்துனால கெட்டுப்போன நிலத்துல, இனியும் அதைக் கொட்டக் கூடாதுங்கிற முடிவுக்கு வந்தேன். அதுக்கு பதிலா அடியுரமா மாட்டுச் சாணத்தைப் போட ஆரம்பிச்சேன். சாணம் போட்ட ரெண்டு மாசத்துல இருந்து கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சுது. மரம் வளர்ச்சி செழுமையா இருந்துச்சு. காய் பெருக்கல. ஆனாலும், ரசாயன உரம் போடக்கூடாதுங்கிற முடிவுல உறுதியா இருந்தேன்” என்ற ஸ்ரீராமலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

கறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்!

“பூச்சித் தாக்குதலுக்கு இயற்கையில என்ன செய்றதுனு தெரியல. இருந்தாலும், கிடைச்ச வரைக்கும் போதும்னு பூச்சிக்கொல்லி அடிக்காம அப்படியே விட்டுடுவேன். அப்புறம், ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை விவசாயத்தைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன். அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், இயற்கைப் பூச்சிவிரட்டினு பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல பலன் கிடைக்குது.

அப்பா காலத்துல இருந்தே ஒவ்வொரு வருஷமும் ஆடிப்பட்டத்துல மட்டும் தவறாம மொச்சை விதைச்சிடுவோம். மொச்சைக்குக் குறைவான பராமரிப்பு போதும். அதிக கூலியாட்கள் தேவையில்லை. வெள்ளை மொச்சையை விட கறுப்பு மொச்சைதான் ருசி. இதுக்குத்தான் தேவையும் அதிகமா இருக்கும்.

இது வண்டல் கலந்த மணல். ஒரு தடவ மழை பெய்தாலே 30 நாள் வரை மண்ணுக்குள்ள ஈரம் காயாம அப்படியே இருக்கும். இதனாலேயே மழை அதிகம் பெய்யாட்டாலும் இந்த வகை மண், பயிர் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும். மொச்சையை எப்பவும் ஒரு ஏக்கர்லதான் போடுவேன். இந்த வருஷமும் ஒரு ஏக்கர்லதான் போடப் போறேன்” என்ற ஸ்ரீராமலு நிறைவாக,

கறுப்பு மொச்சை...மானாவாரியிலும் குறைவில்லா லாபம்!

“மானாவாரி விவசாயத்துக்கு ஆடிப்பட்டத்துக்கு ஏற்ற அருமையான பயிர் மொச்சைதான். பெருசா செலவில்லாம, நிச்சய லாபத்தைக் கொடுக்கும்” என்று சொன்னார்.

தொடர்புக்கு,
ஸ்ரீராமலு,
செல்போன்: 97891-03795

சாகுபடிப்பாடம், இதோ...

ஆனியில் உழவு... ஆடியில் விதைப்பு!

ஒரு ஏக்கர் நிலத்தில் மொச்சை சாகுபடி செய்யும் விதம் மற்றும் வருமானம் குறித்து ராமலு சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

“ஆனி மாதத் துவக்கத்தில் ஒரே நாளில் இரண்டு முறை  டிராக்டரில் 5 கலப்பை உழவு போட்டு ஒரு வாரம் வரை நிலத்தைக் காய விட வேண்டும். அடுத்து, இரண்டு நாட்கள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். மானாவாரி நிலத்துக்கு வெள்ளாட்டுக்கிடையை விட செம்மறி ஆட்டுக்கிடையே சிறந்தது. ஆடி மாதம் மழை பெய்த நான்காம் நாளில் ஒரு டில்லர் உழவு ஓட்டி... மாட்டு ஏர் மூலமாக, கிழக்கு-மேற்காக 6 அடிக்கு ஒரு சால் வீதம், ஏக்கருக்கு 30 சால் போட வேண்டும். முதல் ஆள் ஏர் மாட்டைப் பிடித்து சால் ஓட்டும்போதே, இரண்டாவது ஆள் வேப்பம்பிண்ணாக்கைத் தூவி வர வேண்டும் (ஏக்கருக்கு 25 கிலோ தேவைப்படும்). அவரைத் தொடர்ந்து மூன்றாவது ஆள் விதையைத் தூவி வர வேண்டும். அடியுரமாக வேப்பம்பிண்ணாக்கு போடுவதால் வேர்ப்புழு கட்டுப்படும். கறுப்பு மொச்சையாக இருந்தால் 5 கிலோ விதையும், வெள்ளை மொச்சையாக இருந்தால், 4 கிலோ விதையும் தேவைப்படும்.

ஒரே ஒரு களை எடுப்பு!

விதைத்த 6-ம் நாளில் முளைப்புத் தெரியும். 45 முதல் 50-ம் நாட்களுக்குள் ஏக்கருக்கு 40 கிலோ கடலைப்பிண்ணாக்கை செடிகளின் தூர்களில் தூவிவிட்டு... ஒரு சாலுக்கும் அடுத்த சாலுக்கும் இடையில் உள்ள 6 அடி இடைவெளியில் ஏர் மாடு வைத்து, இடைஉழவு செய்ய வேண்டும். பவர் டில்லர் வைத்தும் உழலாம். ஆனால், ஏர் மாடு வைத்து உழவு செய்தால், களைகளை மடக்கித் தூரோடு உழுது விடலாம். தவிர, இடை உழவு செய்யும் போதே, கடலைப்பிண்ணாக்கும் மண்ணோடு கலந்து விடுவதால் செடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும். ஒரே ஒரு முறை களை எடுத்தாலே போதும், அடுத்த முறை எடுக்கத் தேவையில்லை. 60 முதல் 65 நாட்களுக்குள், மொச்சை படர்ந்து கொடி வீசத் தொடங்கி விடும். 75 முதல் 80 நாட்களில் பூப்பூக்கத் தொடங்கும். 80 முதல் 90 நாட்களில் காய் காய்க்கும். 95-ம் நாளில் இருந்து காய் பறிக்கலாம்.

“ஏக்கருக்கு என்ன லாபம்?”

விதைத்த 95-ம் நாளில் இருந்து 180-ம் நாள் வரை (கார்த்திகை மாதம் முதல் வாரத்திலிருந்து மாசி முதல் வாரம் வரை) காய்ப்பு சீராக இருக்கும். 6 நாட்களுக்கு ஒரு பறிப்பு வீதம், சராசரியாக மொத்தம் 15 பறிப்புகள் வரும். ஒரு பறிப்புக்கு 60 கிலோ மூட்டையில் 2 மூட்டை வீதம் 15 பறிப்புக்கும் சேர்த்து, மொத்தம் 1,800 கிலோ மொச்சைக்காய் கிடைக்கும். ஒரு கிலோ மொச்சை 30 ரூபாயில் இருந்து 35 ரூபாய் வரை விலை போகும். குறைந்தபட்சமாக ஒரு கிலோ 30 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலே... 1,800 கிலோவுக்கு
54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

தை மாதம் பச்சை மொச்சை சீசன் முடிந்து விடும். ஆனாலும், மாசி மாதம் காய்ந்த நெத்து கிடைக்கும். நெத்து மூலம் சராசரியாக 200 கிலோ அளவுக்கு மொச்சை கிடைக்கும். காய்ந்த மொச்சை சராசரியாக குவிண்டால் 3 ஆயிரம் ரூபாய் அளவில் விற்பனையாகும்.
2 குவிண்டாலுக்கு 6 ஆயிரம் ரூபாய் கிடைத்து விடும். ஆக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் மொத்த வருமானமாகக் கிடைக்கும். இதில், அனைத்துச் செலவுகளும் போக, 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்”.

ஊற வைத்து விதைப்பு!

மானாவாரியாக விதைப்பதால், விதைப்பதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் (8 மணி நேரம்) மொச்சை விதையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி விதைத்தால் மண்ணின் ஈரப்பதத்தில், விதையின் ஈரப்பதமும் சேர்வதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஆனால், இறவையில் விதைக்கும்போது ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.

பூச்சிகளை விரட்டும் வேப்பெண்ணெய்க்கரைசல்!

பூப்பூக்கும் நேரத்தில் இலையில் கரும்புள்ளியாக இலைப்பேன் மற்றும் அசுவிணிப் பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் அதிகம் இருக்கும். விதைத்த 75-ம் நாள் முதல் 80-ம் நாளுக்குள் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வேப்பெண்ணை, கால் ‘பார்’ அளவு காதி சோப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கித் தெளித்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.  
 
காய் காய்க்கத் தொடங்கியதிலிருந்து காய்ப்புழுத்தாக்குதல் இருக்கும். ஒரு கிலோ நொச்சி இலையுடன், தலா 150 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து உரலில் இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 300 மில்லி எடுத்து, 120 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்தால், காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம். 85-ம் நாளில் இருந்து பறிப்பு முடியும் வரை, வாரம் ஒரு முறை இந்தக் கரைசலைக் கட்டாயம் தெளித்தால் மட்டுமே காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த முடியும்.
  
நான்காம் பறிப்பில் விதை!

மூன்றாம், நான்காம் பறிப்பில் கிடைக்கும் காய்ந்த நெத்துகளை விதைக்காகத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பம் மற்றும் கடைசிப் பறிப்புகளில் நெத்து எடுத்தால் விதையின் தரம் குறைவாக இருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மொச்சை விதைகளை ஒரு நாள் முழுவதும் வெயிலிலும், அடுத்தநாள் முழுவதும் இரவிலும் உலர்த்தி காய வைத்து எடுத்து வைக்க வேண்டும். தனியாக விதைநேர்த்தி செய்யத் தேவையில்லை.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மொச்சை!

புரதச்சத்து மிகுந்துள்ள மொச்சை, நாம் உண்ட உணவை ஜீரணிக்க உதவுவதுடன் ஜீரண நீர் சுரப்புக்கும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. வாரம் இரு முறை மொச்சையை உணவில் சேர்த்து வந்தால் சத்துக்குறைவு காரணமாக உடல் இளைப்பது தடுக்கப்படும். தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட மொச்சைக் கொட்டைகளை தினமும் அவித்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம் குறையும்.

இ.கார்த்திகேயன்

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்