Published:Updated:

மரத்தடி மாநாடு: தகவல் கொடுத்தால், நாத்து நடும் எந்திரம் தயார்!

மரத்தடி மாநாடு: தகவல் கொடுத்தால், நாத்து நடும் எந்திரம் தயார்!

மேய்ச்சலில் இருந்த மாடுகளை ஓட்டி வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், அவற்றுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்க...

‘‘மழைக்காலம் ஆரம்பிக்கப் போகுதுய்யா... மறக்காம ஆடு, மாடுகளுக்கு இந்தப் பருவத்துக்கான தடுப்பூசியைப் போட்டுடுய்யா. ஒவ்வொரு பருவம் மாறும் போதும், தடுப்பூசியை மட்டும் போட்டு விட்டுட்டா தொற்றுநோய்களைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று அக்கறையாகச் சொன்னபடியே பிரசன்னமான, “வாத்தியார்” வெள்ளைச்சாமி, கக்கத்தில் இருந்த நாளிதழை விரித்துப் படிக்க ஆரம்பித்தார்.  

‘‘நான் எனக்கு வைத்தியம் பார்க்கிறேனோ இல்லியோ... ஆடு, மாடு, கோழிகளுக்குத் தவறாம செய்ய வேண்டிய சிகிச்சையைச் செஞ்சிடுவேன். நமக்கு அதுகதான சோறு போடுது’’ என்று ஏரோட்டி நெகிழ்ச்சியாகச் சொல்லும்போதே... வந்து சேர்ந்தார் “காய்கறி” கண்ணம்மா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மரத்தடி மாநாடு: தகவல் கொடுத்தால், நாத்து நடும் எந்திரம் தயார்!

‘‘ரொம்ப நல்லதுய்யா...’’ என்றபடியே பேப்பரை மடித்த வாத்தியார்,

‘‘வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்துக்குப் பக்கத்துல இருக்கிற களத்தூர் கிராமத்துல புதுசா மணல் குவாரி அமைக்கிறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னயே பொதுப்பணித்துறை அதிகாரிங்க அனுமதி கொடுத்திருக்காங்க. அந்தப் பகுதியில் இருக்கிற மக்கள், மணல் குவாரி வந்தா நீர் ஆதாரமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்காங்க. ஆனா, அதுக்கு நடவடிக்கை இல்ல. இந்த நிலையில இப்போ மணல்குவாரிக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவே, சாலை மறியல் போராட்டத்துல இறங்கிட்டாங்க மக்கள். உடனே, போலீஸ்காரங்க புகுந்து பொதுமக்களை அடிச்சு விரட்டுனதோட இல்லாம 45 பேர் மேல வழக்கும் போட்டிருக்காங்க. 20 பேரைக் கைது செய்து ரிமாண்ட் செஞ்சிட்டாங்க.

போலீஸ்ல இருந்து எல்லா அதிகாரிகளும், குவாரிக்காரங்களுக்கு ஆதரவா இருக்கிறதால யாராலயும் எதிர்க்க முடியலை. ஊர்க்காரங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஊரை விட்டு வெளியேறி கோவில்ல தஞ்சம் புகுந்திருக்கிறாங்க. மக்களோட போராட்டம் கடுமையானதால... இவங்களுக்கு ஆதரவா விஜயகாந்த், திருமாவளவன், சீமான் என எல்லாரும் களம் இறங்கியிருக்காங்க’’ என்றார்.

‘‘ஏற்கெனவே, மணல் குவாரிகளாலதான் வேலூர் மாவட்டமே வறண்டு கிடக்கு. இதைத்தடுக்கப் போய் நிறைய பேர் உயிரை விட்டிருக்காங்க. ஆனா, இன்னமும் அரசாங்கம் இதை நிறுத்த மாட்டேங்குதே’’ என்ற ஏரோட்டி,

‘‘இதேமாதிரிதான் மீத்தேன் வாயு பிரச்னையும் போயிக்கிட்டிருக்கு. இதுவரைக்கும், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்ல மட்டும்தான் கிணறுகள் அமைச்சு எரிவாயு எடுத்துக்கிட்டு இருந்தாங்க. இப்போ, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்ல 35 இடங்கள்ல எரிவாயு எடுக்கிறதுக்கு ஓ.என்.ஜி.சி கம்பெனிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கு. இதுக்காக ஜூலை 8-ம் தேதி காட்டுமன்னார்குடியில கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்போறாங்க.

35 இடத்துல எண்ணெய் எடுக்கப்போறாங்க. ஆனா, ஒரே ஒரு இடத்துல மட்டும்தான் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. மத்த இடங்கள்ல அனேகமா கூட்டமே நடக்காதுனு சொல்றாங்க.

ஏற்கெனவே, அரியலூர் மாவட்டம் சிமென்ட் ஆலைகளால பாழ்பட்டுக் கிடக்குது. கடலூர் மாவட்டத்துல நெய்வேலிப் பகுதி நிலக்கரிச் சுரங்கத்தால வறண்டு போய்க் கிடக்குது. 1,000 ஆண்டுகள் பழமையான கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்குப் பக்கத்துல ஒரு இடத்துல எரிவாயுக் கிணறுக்கு இடம் குறிச்சிருக்காங்க. அதனால கோவிலுக்கு பாதிப்பு வரலாம்னும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்றாங்க” என்று கவலையோடு சொன்னார்.

‘‘தமிழ்நாட்டைச் சுடுகாடு ஆக்காம விட மாட்டாய்ங்க போல இருக்கே’’ என்று கோபமாகச் சொன்ன காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு கொய்யாப்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார். ‘‘குறுவை சாகுபடிக்காக தொகுப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிவிச்சிருக்குதுல்ல. டெல்டா மாவட்டங்கள்ல, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துறக்கு வேளாண் பொறியியல் துறையில போதுமான அளவுக்கு அதிகாரிங்க இல்லையாம். அதனால, வெளிமாவட்டங்கள்ல இருந்து 100 அதிகாரிகளைத் தற்காலிகமா வரவழைச்சிருக்காங்க. அப்படி வந்திருக்கிற அதிகாரிகள், அவங்களோட தொடர்புல இருக்கிற, ‘நடவு நடும் இயந்திரங்கள் வைச்சிருக்கிற குழு’க்களையும் அழைச்சிக்கிட்டு வந்திருக்கிறாங்க. அதே மாதிரி நிறைய டிராக்டர்களையும் வரவழைச்சிருக்காங்க. தேவைப்படுற விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையிலயோ, அல்லது வேளாண்மை அலுவலகத்திலயோ தகவல் கொடுத்தா போதுமாம். உடனே உழவு ஓட்டறதுக்கும் நாத்து நடவு செய்யறதுக்கும் இயந்திரங்களை அனுப்பிடுவாங்களாம்’’ என்றார்.

‘‘கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா, எந்த அளவுக்குச் செயல்படுத்துவாங்கனு தெரியலையே’’ என்றார், காய்கறி.

‘‘நல்லது நடந்து, விவசாயமும், விவசாயிகளும் செழிக்கட்டும்’’ என்ற ஏரோட்டி,

“வெங்காய வயலுக்குத் தண்ணி கட்டணும்’’ என்று கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.

ஓவியம்: ஹரன்