Published:Updated:

”தமிழ்நாட்டில் மண்வளம் குறைகிறது!”

அதிர வைக்கும் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்!

ண்மூடித்தனமாக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும்; தொடர்ந்து ஒரே வகைப் பயிர்களைப் பயிர் செய்வதாலும்; தமிழகத்தின் பல பகுதிகளில் மண்ணில் இயற்கையான சத்துக்கள் அழிந்து வருவதை, மாநில இயற்கை வேளாண்மைக் கொள்கைச் சாசனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாட்டுக் காய்கறிகளில் அதிக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுவதாக சமீபத்தில் கேரள அரசு குற்றம்சாட்டியது. ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் குறித்து விழித்துக்கொண்ட கேரளா, நம்மை எச்சரிக்கை செய்கிறது. ஆனாலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு நின்றபாடில்லை. இதனால், தமிழகம் முழுவதும் மண்வளம் கெட்டு சீரழிவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொண்ட கதையாக, விளைபொருட்களுக்கு நாம் தெளிக்கும் விஷமே மெள்ள நம்மைத் தின்னத் தொடங்கி நாட்களாகிறது.

”தமிழ்நாட்டில் மண்வளம் குறைகிறது!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1971-ம் ஆண்டில் 1.2 சதவிகிதமாக இருந்த மண்ணின் இயற்கை (உயிர்ம) சத்துக்கள் 2002-ம் ஆண்டில் 0.68 சதவிகிதமாக குறைந்துள்ளன. பெரும்பான்மையான மாவட்டங்களில் இயற்கைச் சத்துக்கள் 0.5 சதவிகிதத்துக்குக் குறைந்துள்ளன. கடந்தாண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டதில், ‘மண்ணுக்குத் தேவையான இயற்கைச் சத்துக்கள் விகிதம் 0.80 சதவிகிதத்திலிருந்து 1.3 சதவிகிதம். ஆனால், கிடைத்த புள்ளிவிவரங்கள் இதற்கு எதிராக உள்ளன’ என்கிற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

‘மண்ணில் இயற்கைச் சத்துக்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் மிக மோசமான அளவில் மதுரை (0.23%) மாவட்டம் உள்ளது. அடுத்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டம் (0.36%) இருக்கிறது. ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் எல்லை மீறிய அளவில் மண்ணில் கார்பன் சத்துக்கள் இருந்து வருகின்றன. அதாவது 4.04 மற்றும் 4.2 சதவிகிதமாக உள்ளன. இந்த மண்ணில் உள்ள கார்பன் சத்துக்களின் அளவைச் சரியாகப் பராமரிக்க, மண்ணைப் புதுப்பிப்பது ஒன்றுதான் வழி’ என்கிறார்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

துணைவேந்தர் கு.ராமசாமி, “காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் அறுவடைக்குப் பிறகு நிலத்துக்கு ஓய்வு கொடுப்பதில்லை. நிலத்துக்கு ஓய்வு கொடுக்கும்போதுதான் நிலம், மண்ணில் உள்ள கார்பன் சத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்” என்று எச்சரிக்கிறார்.

”தமிழ்நாட்டில் மண்வளம் குறைகிறது!”

“பூச்சிக்கொல்லிகளையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதால் மண்ணில் இயற்கையாகவே இருக்கும் சத்துக்களின் அளவு குறையும். எந்த ரசாயன உரமாக இருந்தாலும் அது உப்புதான். அந்த உப்பு, மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களை அழிக்கும்” என்று அடித்துச் சொல்கிறார் சூழல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், ‘மண்புழு விஞ்ஞானியுமான டாக்டர்.சுல்தான் அகமது இஸ்மாயில்.

“என்னுடைய பக்கத்து நிலத்து விவசாயி 3 நாட்களுக்கு ஒரு முறை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார். ரசாயன உரம் கொண்டு பயிர் செய்யப்படும் அந்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினால், தண்ணீர் சாம்பல் நிறமாக மாறி விடுகிறது. கிணற்றில் உள்ள தண்ணீரில் உப்பின் அளவு அதிகமாகிவிட்டது. இதேபோன்று நிலத்தடி நீரும் ரசாயன உரங்களால் குடிப்பதற்கு லாயக்கற்றதாக இந்தப் பகுதியில் மாறிவிட்டது” என்று வேதனைப்படுகிறார், திருவண்ணாமலையைச் சேர்ந்த இயற்கை விவசாயி பரசுராம்.

‘‘போனதெல்லாம் போகட்டும்... இந்த நிலையைக் கண்டு கலங்கத் தேவையில்லை’’ என்று சொல்லும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீடித்த இயற்கை வேளாண்மைத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் சோமசுந்தரம், “இயற்கை விவசாயப் பயிற்சி முறைகளைக் கையாண்டால் மண்ணின் வளத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து விட முடியும். எங்களுடைய கணக்கெடுப்பில் இயற்கை விவசாயம் மூலமாக மண்ணில் கார்பன் சத்துக்கள் அதிகரிப்பதைக் கண்டிருக்கிறோம். தொடர்ந்து, இயற்கை விவசாய முறையை வளர்த்தால், மண்ணின் வளம் நீடித்து இருக்கும்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார்.

அரசாங்கம் மனது வைத்தால், ஒரே நாளில் இதை சாத்தியமாக்க முடியும். ஆனால், நமக்கு வாய்த்த அரசாங்கங்கள்தான், பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகளாக இருக்கின்றனவே!

இனி, நீங்களாக நினைத்தால்தான் இதை மாற்ற முடியும். ஆம், இதற்கு உதாரணமாக இயற்கை விவசாயிகள் உங்கள் அருகிலேயே வளர ஆரம்பித்துள்ளனர்.

ரசாயன உரத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கும் எனதருமை தமிழ்க்குடி வேளாண் பெருமக்களே! என்ன செய்வதாக உத்தேசம்?

த.ஜெயகுமார்

படங்கள்: வீ.சிவக்குமார்