Published:Updated:

ஓர் ஏக்கர்... ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்! வெகுமதி கொடுக்கும் கோவைக்காய்!

ஓர் ஏக்கர்... ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்! வெகுமதி கொடுக்கும் கோவைக்காய்!

‘‘மண், தண்ணீர், பட்டம், பருவமழை இதெல்லாம்தான் ஒவ்வொரு பயிரோட மகசூலையும் தீர்மானிக்குது. காய்கறிகளை சாகுபடி செய்ய பல பட்டங்கள் இருந்தாலும், ஆடிப்பட்டம்தான் உகந்த பட்டம். இந்தப் பட்டத்துல, காய்கறி மட்டுமில்ல, வேற எந்தப் பயிர் வெச்சாலும் மகசூலுக்கு பாதகம் இருக்காது. அதிலும், கோவைக்காய் சாகுபடி செய்தா சொல்லி வெச்ச மாதிரி வருமானம் பார்க்கலாம்” என உற்சாகமாகப் பேசுகிறார், திருவண்ணாமலை மாவட்டம், காலானப்பாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த காசிவேல்.

ஓர் ஏக்கர்...  ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்!  வெகுமதி கொடுக்கும் கோவைக்காய்!

சிவந்த கோவைப்பழங்களை கிளிகள் வந்து கொத்திச் செல்ல... வண்டுகள் ரீங்காரம் இட்டு இசைக்கச்சேரி நடத்திக்கொண்டிருந்த ஒரு மாலைவேளையில் கோவைக்காய் தோட்டத்தில் காசிவேலைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“என்னோட அப்பா பெங்களூர்ல லாரி டிரைவரா வேலை பார்த்தார். அதனால அம்மாதான் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டாங்க. எங்க வீட்டுல நானும், அக்காவும் மட்டும்கிறதால எட்டாவதோட படிப்பை முடிச்சிட்டு அம்மாவுக்கு உதவியா ஏர் ஓட்ட வந்துட்டேன். எங்களுக்கு இருந்த மூணு ஏக்கர் நிலத்துல வருஷத்துல ஒரு போகம் ஆடிப்பட்டத்துல மட்டும் மானாவாரியா நெல், வேர்கடலை சாகுபடி செய்வோம். அதுல கிடைக்கிற வருமானமும், அப்பாவோட வருமானமும் இருந்ததால குடும்பம் பிரச்னை இல்லாம ஓடிச்சு. கல்யாணத்துக்குப் பிறகு கடன் வாங்கி, 60 அடி ஆழத்துக்கு கிணறு வெட்டினேன். அந்தக் கிணற்றுத் தண்ணீரை வெச்சு தோட்டக்கால் பயிர் சாகுபடியில இறங்கினேன்.

முதல் ஒரு போகம் நெல், கத்திரி, வெண்டைக்காய் சாகுபடி செய்தேன். அந்த சமயத்துல பக்கத்து ஊர்ல இருக்கிற என்னோட மச்சான் கோவக்காய் போட்டிருந்தார். அவர்தான் ‘கோவக்காய் சாகுபடி செய்தா, வீட்டுல இருக்கிறவங்க பாடுபட்டாலே நல்ல வருமானத்தை எடுக்கலாம்’னு சொன்னார். அதோட, 50 சென்ட் நிலத்துல கோவக்காய் கொடிகளை நட்டு, பந்தலும் போட்டுக் கொடுத்தார். அதை முறையா பராமரிப்பு செஞ்சப்போ, நல்ல விளைச்சல் கிடைச்சிது. அடுத்து 2 ஏக்கர் நிலத்துல பந்தல் போட்டுட்டேன்.

எட்டு வருஷமா கோவக்காய் சாகுபடி செய்றேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மார்க்கெட்டுக்கு காய் பறிச்சு அனுப்பினாலும், 15 நாள், 20 நாள் இடைவெளியில வருமானம் வந்துக்கிட்டே இருக்கும். அதனால பணப் பிரச்னை இல்ல. இன்னும் சொல்லணும்னா ஆபீஸ்ல சம்பளம் வாங்குற மாதிரி கோவக்காய் எங்களுக்கு சம்பளம் கொடுக்குது” என்ற காசிவேல், தொடர்ந்தார். 

ஓர் ஏக்கர்...  ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்!  வெகுமதி கொடுக்கும் கோவைக்காய்!

நண்பர் காட்டிய நல்வழி!

“கோவக்காய் கொடிகளுக்கு உரம் வைக்கும் போது, உரம் வெச்ச இடத்துல இருக்குற மண் சுண்ணாம்பு மாதிரி இருந்துச்சு. அதைப் பார்த்தப்ப வெறும் உரம் மட்டும் வெச்சா மண் கெட்டுப்போகுதுனு தெரிஞ்சிக்கிட்டு உரத்தோட எருவையும் கலந்து வெக்க ஆரம்பிச்சேன். கோவக்காய்க்கு மாசம் நாலு முறை பூச்சிக்கொல்லி அடிக்கணும். ஆனா, நான் ரெண்டு முறை மட்டும்தான் அடிப்பேன். இப்படித்தான் என்னோட விவசாயம் போயிட்டு இருந்துச்சு. இடையில சென்னையில இருக்கிற அக்கா வீட்டுக்குப் போறப்போ... மதன்னு ஒரு நண்பர் அறிமுகமானர். அவர்தான் ‘ரசாயன உரங்களைப் போடாதீங்க. இயற்கை விவசாயத்துக்கு மாறுங்க’னு சொல்லி ‘பசுமை விகடன்’ மூலம் பயிற்சி நடக்கிற இடங்களைத் தெரிஞ்சிக்கிட்டு என்னை அழைச்சிட்டுப் போனார். அங்க பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, ஜீவாமிர்தம்னு பல இடுபொருட்களைத் தயாரிக்கிற முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு வந்த பிறகு இயற்கைக்கு மாறிட்டேன்.

ஒண்ணரை வருஷமா முழுமையா இயற்கை விவசாயம் மட்டும்தான் செய்றேன். நான் தெரிஞ்சுக்கிட்டதை மத்தவங்களும் தெரிஞ்சுக்க, அனுபவ விவசாயிகளை அழைச்சிக்கிட்டு வந்து, எங்க கிராமத்துலேயே ஒரு பயிற்சியை நடத்துனேன். இயற்கை விவசாயத்துக்கு மாறுன பிறகு பூச்சி, நோய்த் தாக்குதல் குறைஞ்சிடுச்சு. உரம், பூச்சிக்கொல்லிச் செலவும் குறைஞ்சிடுச்சு. தற்சமயம் ரெண்டு வருஷமா கோவக்காய் அறுவடையில இருக்கு. அப்பா வெச்சிருந்த மூணு ஏக்கர் நிலத்தோட, கூடுதலா ஒரு ஏக்கர் நிலம் வாங்கினதுல, தற்சமயம் 4 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ரெண்டு ஏக்கர்ல கோவக்காய் பந்தல், ஒரு ஏக்கர்ல பீர்க்கன், 50 சென்ட்ல வெண்டைக்காய் இருக்கு. 50 சென்ட் நிலத்துல வீடு, கொட்டகை இருக்கு” என்ற காசிவேல், கோவக்காய் சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அது, பாடமாக இங்கே...

ஓர் ஏக்கர்...  ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்!  வெகுமதி கொடுக்கும் கோவைக்காய்!

மூன்று ஆண்டுகள் தொடர் பலன்!

‘ஒரு முறை நடவு செய்யும் கோவைக்காய் செடிகளை, மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். வடிகால் வசதியுடன் கூடிய செம்மண், மணல்சாரி, லேசான களிமண் ஆகிய மண்வகைகள் கோவைக்காய்க்கு ஏற்றவை. சித்திரை மாதத்தைத் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்யலாம். ஆனால், ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 2 டிப்பர் எருவைக் கொட்டிக் கலைத்துவிட்டு, மூன்று சால் உழவு செய்து, நான்கு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு முளைத்து வரும் களைகள் நீங்கும் அளவுக்கு உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும்.

முளைப்புத் திறனைக் கூட்டும் சாணிக்கரைசல்!

பிறகு, 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் கிழக்கு-மேற்காக வாய்க்கால் அமைக்க வேண்டும். இந்த வாய்க்காலில் 6 அடி இடைவெளியில் (6X6 அடி) ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து... ஒவ்வொரு குழியிலும், இரண்டு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடி, மூன்று அல்லது நான்கு கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்ய வேண்டும். விதைக்கான கொடித் தண்டுகளைத் தேர்வு செய்யும்போது இரண்டு முதல் இரண்டரை வயதுள்ளவையாக இருக்க வேண்டும். தரையில் இருந்து அரை அடி உயரத்துக்குமேல் இருக்கும் கொடிகளாகப் பார்த்து, அரை அடி துண்டுகளாக வெட்டி, அவற்றை சாணிப்பாலில் நனைத்து நடவு செய்ய வேண்டும் (ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சாணியை, 30 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்).

ஓர் ஏக்கர்...  ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்!  வெகுமதி கொடுக்கும் கோவைக்காய்!

வளர்ச்சியைக் கூட்டும் வைக்கோல் மூடாக்கு!

நடவு செய்த பிறகு குழிகள் மீது வைக்கோல் கொண்டு மூடாக்குப் போட்டு உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஏற்ப 5 நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு பாசன இடைவெளியைக் கூட்டிக் கொள்ளலாம். சாதாரண முறையில் பாசனம் செய்வதைவிட, சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது சிறப்பானது. சாதாரணப் பாசனமாக இருந்தால் 4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறையும், சொட்டு நீர்ப்பாசனமாக இருந்தால், 2 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது. நான்கு நாட்கள் இடைவெளியில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் மற்றும் அமுதக்கரைசல் ஆகியவற்றை மாற்றி மாற்றி தண்ணீரில் கலந்து விட வேண்டும். 15-ம் நாளில் கொடிகள் துளிர்விட்டு வைக்கோலுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் வைக்கோலை அகற்றி விட வேண்டும்.

6 அடி இடைவெளியில் பந்தல்!

பிறகு, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கொம்பு இருக்குமாறு... ஆறடிக்கு ஆறடி இடைவெளியில் ஐந்தரை அடி உயரத்தில் மூங்கில் கொம்புகளையோ அல்லது கல் தூண்களைக் கொண்டோ பந்தல் அமைக்க வேண்டும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் செடியை ஒட்டி குச்சி ஊன்றி, கொடிகளைப் பந்தலில் ஏற்றிவிட வேண்டும். 60-ம் நாளில் கொடிகள் படர ஆரம்பித்து, 70-ம் நாள் முதல் காய்க்க ஆரம்பிக்கும். தொடர்ந்து மாதம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

பூச்சியைக் கட்டுப்படுத்தும் இஞ்சி-பூண்டுக்கரைசல்!

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 2 டன் எருவுடன், தலா 2 லிட்டர் சூடோமோனஸ், டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் தெளித்துக் கிளறி, நிழலான இடத்தில் மூன்று நாட்கள் வைத்திருந்து ஒவ்வொரு குழியிலும், 3 கிலோ அளவுக்கு வைக்க வேண்டும். காய்ப்புழு, சப்பாத்திப் பூச்சி, செம்பேன் ஆகியவை அதிகமான அளவில் தாக்கும். இவற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக...

15 நாட்கள் இடைவெளியில் ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 500 மில்லி இஞ்சி-பூண்டுக்கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும்.

புழுத்தாக்குதல் இருந்தால், டேங்குக்கு 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். துளிர்கள் அதிகமாக வருவதற்கு 15 நாட்கள் இடைவெளியில், டேங்குக்கு 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். இந்தக் கரைசல்கள் அனைத்துக்கும் ஏக்கருக்கு 12 டேங்குகள் தேவைப்படும். 80-ம் நாள் முதல் தொடர்ச்சியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களில் மகசூல் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம்.’

சாகுபடிப்பாடம் முடித்த காசிவேல், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

ஓர் ஏக்கர்...  ஓர் ஆண்டு... `1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்!  வெகுமதி கொடுக்கும் கோவைக்காய்!

“8 மாதங்கள் ஒரு நாள்விட்டு ஒரு அறுவடை செய்யலாம். மீதி நான்கு மாதங்கள் வாரம் ஒரு அறுவடை செய்யலாம். இதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 24 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ 8 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ சராசரியாக 12 ரூபாய் என வைத்துக் கொண்டால்... 24 ஆயிரம் கிலோவுக்கு 2 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு போக 1 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்” என்றார் மகிழ்ச்சியாக!   

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்!

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கோவைக்காய் கட்டுக்குள் வைக்கும். கோவைக்காய் இலைகள் கண் பிரச்னைக்கும், கையில் ஏற்படும் சொறிக்கும், அரிப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. கோவைக்காயில் பொரியல், கூட்டு போன்ற பதார்த்தங்களைச் செய்யலாம். கோவைக்காய்க்கு கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

கோவைக்காயின் வேறு பெயர்கள்!

கோவைக்காயின் அறிவியல் பெயர் ‘காக்சீனியா கிராண்டிஸ்’. இதை ஆங்கிலத்தில் ‘ஐ வி கார்டு’ (Ivy gourd) ‘பேபி வாட்டர் மெலன்’ (baby watermelon) ‘லிட்டில் கார்ட்’ (little gourd) என்றும் அழைக்கிறார்கள். ஹிந்தியில் ‘டிண்டோரா’ என்றும், மராத்தியில் ‘தொந்தேகாயி’ என்றும், தெலுங்கில் ‘தொண்டகாயா’ என்றும், மலையாளத்தில் ‘கோவய்க்கா’ என்றும் அழைக்கிறார்கள்.

 காசி.வேம்பையன்

 படங்கள்: கா.முரளி