Published:Updated:

ஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை!

ஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பர்யமாக ஆடிப்பட்டத்தில் நிலக்கடலையைத்தான் அதிகளவில் சாகுபடி செய்வார்கள். ஆனால், சில ஆண்டுகளாக, ‘கம்பெனி’க்காரர்களின் ஆசைவார்த்தைகளுக்கு மயங்கி வீரிய ரக மக்காச்சோளம் உள்ளிட்ட மற்ற பயிர்களில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியதால்... ஆடிப்பட்ட நிலக்கடலை சாகுபடி அருகி வந்தது.

தற்போது சில விவசாயிகள், பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களைக் குறைப்பதற்காக மக்காச்சோள சாகுபடியைக் கைவிட்டு விட்டு... மீண்டும் நிலக்கடலை சாகுபடியைக் கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர், தொண்டைமான்ஊரணி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்.

ஆடிப்பட்ட நிலக்கடலை விதைப்புக்கான ஆரம்பகட்ட வேலைகளில் மும்முரமாக இருந்த முருகேசனைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை!

மக்காச்சோளத்துக்கு மாற்று!

“முன்னாடியெல்லாம் இந்தப்பகுதி விவசாயிகள் எல்லாருமே வெறும் மாட்டு எருவை மட்டுமே போட்டு, நிலக்கடலையை சாகுபடி செஞ்சு உத்தரவாதமான லாபம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனாலும்கூட அதை கைவிட்டுட்டு, ஏதோ ஒரு மோகத்துல வீரிய ரக மக்காச்சோளத்துல இறங்கிட்டாங்க. அதுக்கு ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அதிகமா பயன்படுத்தணும். அதனால, படிப்படியா மண்ணுல உள்ள உயிர்ச்சத்துக்கள் அழிஞ்சிக்கிட்டே வந்துடுச்சு. அதில்லாம, ரசாயன உரங்களோட தேவையும் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. அதேநேரத்துல மகசூல் குறைஞ்சிக்கிட்டே வந்துச்சு.

இப்படியே போனா, நிலம் ஒரேயடியா வீணாப் போயிரும்னு பயம் வந்துருச்சு. அதனாலதான் திரும்பவும் நிலக்கடலை சாகுபடிக்கு மாறிட்டேன். விருத்தாசலம்-2  ரகத்தைத்தான் விதைக்கிறேன். என்னை மாதிரியே யோசிச்ச நிறைய பேர் இப்போ மக்காச்சோளத்தை நிரந்தரமா விட்டுட்டு, நிலக்கடலைக்கு மாறிட்டாங்க. இப்ப நிலக்கடலையோட தேவையும் அதிகரிச்சிக்கிட்டே இருக்கிறதால நல்ல விலை கிடைக்குது” என்ற முருகேசன் தொடர்ந்தார்.

ஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை!

கொஞ்சம் செயற்கை... மீதி இயற்கை!

“எனக்கு முழுமையா இயற்கை விவசாயத்துலதான் சாகுபடி செய்யணும்னு ஆசை. ஆனா, கொஞ்சம் தயக்கம். அதனால, அதிகளவு இயற்கை உரம், கொஞ்சம்போல ரசாயன உரம்னு பயன்படுத்துறேன். ஒரு ஏக்கர் நிலக்கடலைக்குனு பார்த்தா... 5 டன் மாட்டு எரு, 120 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா ஒரு கிலோ சூடோமோனஸ், பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், 30 கிலோ டி.ஏ.பி இதெல்லாம்தான் அடியுரம். டி.ஏ.பிக்குப் பதிலா தக்கைப்பூண்டுகளை விதைச்சு மடக்கி உழுது விடுற யோசனையிலயும் இருக்கேன். மேலுரமா 45-ம் நாள் 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 50 கிலோ ஜிப்சம் கலந்து மண்ல போடுவேன். அவ்வளவுதான். என் நிலத்துல மயில், கொக்கு, நாரை, கோட்டான் எல்லாம் வந்து போறதால இயற்கையாவே பூச்சிக்கட்டுப்பாடு நடந்துடுது. அதனால அதிகமா பூச்சிக்கொல்லியும் அடிக்கிறதில்லை.

எங்க குடும்பத்துக்கு மொத்தம் 40 ஏக்கர் நிலம் இருக்கு. வண்டலும் மணலும் கலந்த இருமண்பாடு. 22 ஏக்கர்ல முந்திரி, 4 ஏக்கர்ல உளுந்து, 3 ஏக்கர்ல மரவள்ளி, 3 ஏக்கர்ல நிலக்கடலை, ஒண்ணரை ஏக்கர்ல வாழை இருக்கு. மீதி நிலத்துல எல்லாம் நெல் சாகுபடி பண்றோம்’’ என்ற முருகேசன், ஆடிப்பட்ட சாகுபடி மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆடிப்பட்டத்தின் அவசியம்!

“கோடை மழை பேஞ்சு, நிலத்தை நல்லா புழுதி உழவு ஓட்டினதுனால, மண்ணுல ஈரப்பதம் ஏறி பக்குவமா இருக்கு. இது நிலக்கடலை சாகுபடிக்குச் சிறப்பா இருக்கும். இது தொண்ணூறுல இருந்து நூறு நாள் வயதுடைய பயிர். ஆடியில விதைச்சோம்னா, ஐப்பசி மாசம் அடைமழைக்கு முன்னயே அறுவடை செஞ்சுடலாம். இந்த இடைப்பட்ட மாதங்கள்ல கிடைக்கிற மிதமான வெயிலும் கடலைக்கு தோதா இருக்கும். 15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுத்தா போதும். பருவமழை பேஞ்சுடுச்சுனா தண்ணீர் செலவு மிச்சம்.

தீபாவளிக்கு முன்னயே அறுவடை செய்றதுனால, நல்ல விலையும் கிடைக்கும். அந்த சமயத்துல கடலை, கடலைமாவு, கடலை எண்ணெய்க்குத் தேவை அதிகமா இருக்கும். கார்த்திகைப் பட்டத்துல தமிழ்நாடு முழுவதுமே பரவலா கடலை விதைப்பாங்க. அதனால, விதைக்கடலைக்கும் தேவை அதிகமா இருக்கும். விதைக்கடலையா விற்பனை செஞ்சா விலையும் கூடுதலா கிடைக்கும்” என்ற முருகேசன்,

“சாதாரணமா ஒரு மூட்டைக்கு (40 கிலோ) 1,800 ரூபாய்ல இருந்து 2 ஆயிரத்து 300 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும். ஆனா, விதைக்கடலைக்கு 3 ஆயிரம் ரூபாய்ல இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை கிடைக்கும். ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டை மகசூல் கிடைக்கும். ஒரு மூட்டை நிலக்கடலைக்கு சராசரியா 2 ஆயிரத்து 500 ரூபாய்னு விலை வெச்சுக்கிட்டாலும் 30 மூட்டைக்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்கும்” என்றார் நிம்மதியான குரலில்.  

ஆடியில் விதைத்தால், நிலக்கடலைக்கு நல்ல விலை!

கால்நடைத் தீவனமாகும் கடலைக்கொடி!

“அறுவடை செஞ்ச பிறகு, கடலைக்கொடிகளை (செடி) நாலு நாள் வெயில்ல காய வச்சு சேமிச்சி வச்சிக்கிட்டா, மழைக்காலத்துல ஆடு, மாடுகளுக்குத் தீவனமா பயன்படும். மாடுகள் இதை விரும்பிச் சாப்பிடும். இதுல புரதச்சத்து அதிகமா இருக்கிறதுனால, பால் கூடும். இயற்கையா விளைவிச்ச தீவனத்தைக் கொடுக்கிறப்போ ஆரோக்கியமான பால் கிடைக்கும்” என்கிறார், முருகேசன்.

பூச்சிகள்... கவனம்!

45 நாட்களுக்குப் பிறகு பூச்சித் தாக்குதல்கள் ஏற்படும். அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நிலக்கடலை விதைக்கும்போதே வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்டவற்றை நெருக்கமாக விதைத்தால், செடிகளைப் பூச்சிகள் தாக்குவதில்லை.

தொடர்புக்கு,
முருகேசன்,
செல்போன்: 97517-90205

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

நிலக்கடலை சாகுபடி குறித்து முருகேசன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

“கோடைமழை பெய்ததும் புழுதி உழவு ஓட்டி ஆறப்போட வேண்டும். சில வாரங்களில் அடுத்த மழை கிடைத்ததும், மறுபடியும் புழுதி உழவு ஓட்ட வேண்டும். மழை கிடைக்கும் அறிகுறி பார்த்து... ஏக்கருக்கு 5 டன் வீதம் மாட்டுஎருவை முட்டு முட்டாக வைக்க வேண்டும். மழை பெய்தவுடன் எருவை நிரவி, அதோடு 120 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, தலா ஒரு கிலோ சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, பரிந்துரைக்கப்பட்ட உரம் ஆகியவற்றைப் போட்டு உழவு ஓட்ட வேண்டும்.

ஆழம்... கவனம்!

5 அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும். ஆறிய சோற்றுக் கஞ்சியில் ஒரு கிலோ விதைக்கடலைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து 4 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை ஓரடி, செடிக்குச் செடி முக்கால் அடி இடைவெளி இருக்குமாறு, களைக்கொத்தியால் 3 அங்குல ஆழத்துக்குக் குழிபறித்து விதைக்க வேண்டும். ஆழம் அதிகம் இருந்தால், விதை முளைக்காது. ஆழம் குறைவாக இருந்தால், பறவைகள் எடுத்து சென்றுவிடும். விதைத்த 9-ம் நாள் முளைப்பு வரும். 20 முதல் 25 நாட்களில் களையெடுக்க வேண்டும். 45-ம் நாள் களையெடுத்து 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கோடு 50 கிலோ ஜிப்சம் கலந்து மண்ணில் தெளித்து மண் அணைக்க வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. 90-ம் நாளுக்கு மேல் ஒரு செடியைப் பிடுங்கி பதம் பார்த்து அறுவடை செய்யலாம்.”

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: கே.குணசீலன்