Published:Updated:

உயிரிழந்த சினைமாடுகள்... அலைக்கழிக்கும் அதிகாரிகள்...

உயிரிழந்த சினைமாடுகள்... அலைக்கழிக்கும் அதிகாரிகள்...

உயிரிழந்த சினைமாடுகள்... அலைக்கழிக்கும் அதிகாரிகள்...

உயிரிழந்த சினைமாடுகள்... அலைக்கழிக்கும் அதிகாரிகள்...

Published:Updated:

‘‘தடுப்பூசி முகாமில் ஊசி போடப்பட்ட இரண்டு சினை மாடுகள் இறந்து போக... அதற்கான நியாயம் கேட்டு ஆறு மாதங்களாகப் போராடி வருகிறேன். பசுமை விகடன்தான் எனக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும்’’ என்று திருவாரூர் மாவட்டம், வெள்ளைஅதம்பார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகேஷ், நம் அலுவலகத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இதையடுத்து நேரில் சந்தித்தபோது குமுறித் தீர்த்தார் முகேஷ். ‘‘என்கிட்ட மொத்தம் நாலு மாடுகள் இருந்துச்சு. அதுல ரெண்டு மாடுகள் எட்டு மாச சினை. ரெண்டுமே ஆரோக்கியமாதான் இருந்துச்சு. எங்க பகுதியில கோமாரி நோய்க்கு தடுப்பூசி முகாம் நடத்துனப்போ என்னோட சினை மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டாங்க. வழக்கமா டாக்டர்தான் ஊசி போடணும். ஆனா, கால்நடை மருத்துவமனை துப்புரவுப் பணியாளர் மீராதான் ஊசி போட்டாங்க. வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போன அடுத்த சில மணிநேரத்துலயே ரெண்டு மாடுகளுக்குமே காய்ச்சல் வந்து, தீவனம் எடுத்துக்காம இறந்துடுச்சு.

உயிரிழந்த சினைமாடுகள்... அலைக்கழிக்கும் அதிகாரிகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே, அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னேன். கால்நடை டாக்டர்கள் குழு வந்து போஸ்ட்மார்டம் செஞ்சுது. ஆனா, ஆறு மாசமாகியும் ரிப்போர்ட்டை கொடுக்க மறுக்குறாங்க. ‘அது இன்னும் வரவே இல்லை’னு வாய் கூசாம பொய் சொல்றாங்க. டாக்டர் நளினியோட அலட்சியத்தால்தான் என்னோட மாடுகள் இறந்துடுச்சு. ஆனா, அவங்க மேல நடவடிக்கை எடுக்கத் தயங்கிறாங்க. அவர், உணவு அமைச்சர் காமராஜோட உறவினராம். அதனாலதான் இந்தப் பிரச்னையில இருந்து அவங்கள தப்பிக்க வைக்கப் பார்க்கிறாங்க. என்னோட ரெண்டு சினை மாடுகளும் ஒரு லட்சம் ரூபாய் விலை மதிப்புடையது. இழப்பீடு கூட முக்கியமில்லை, நாங்க பாசத்தோட வளர்த்த மாடுகளோட மரணங்களுக்குக் காரணமானவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்ங்கிறதுதான் என் கோரிக்கை” எனக் கொந்தளித்தார்.

முகேஷின் குற்றச்சாட்டுகள் குறித்து மருத்துவர் நளினியிடம் கேட்டபோது, ‘‘சினைமாடுகளுக்கு எட்டு மாசம் வரைக்கும் தடுப்பூசி போடலாம்னு கால்நடைத்துறையின் சுற்றறிக்கையிலயே சொல்லப்பட்டிருக்கு. முகேஷின் சினைமாடுகளுக்கு மீரா தடுப்பூசி போடவில்லை. கால்நடை ஆய்வாளர் முருகேசன்தான் போட்டார். இதில் அவர் நன்கு அனுபவம் மிக்கவர். அமைச்சர்

உயிரிழந்த சினைமாடுகள்... அலைக்கழிக்கும் அதிகாரிகள்...

காமராஜ் என்னுடைய உறவினர் என்பதும் பொய்யான தகவல்” என்று அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணனிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ‘‘நாகப்பட்டினத்தில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு மையத்தின் மருத்துவர்கள் குழு, இறந்து போன அந்த சினை மாடுகளை போஸ்ட்மார்டம் செய்தது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை ஆய்வகத்தில் ஆய்வுகள் நடைபெற்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தீவனத்தில் பூஞ்சணத்தாக்குதல் இருந்ததால்தான் அந்த மாடுகள் இறந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சினை மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டாம் என உத்தரவு போட்டுள்ளேன். தடுப்பூசி போடப்பட்ட மாடுகள், சினையாக இருந்ததா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது” என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

அடுத்து திருவாரூர் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டேவிட்டிடம் சென்றபோது, ‘‘சினைமாடுகளுக்கு தடுப்பூசி போடக்கூடாதுனு அறிவுறுத்தப்பட்டிருக்கு. முகேஷோட மாடுகளுக்கு தடுப்பூசி போட்டது தவறுதான். ஆனால், அதனால்தான் அந்த மாடுகள் இறந்ததாகச் சொல்வது தவறான தகவல்” என்று சொன்னார் படு அசத்தலாக.

உயிரிழந்த சினைமாடுகள்... அலைக்கழிக்கும் அதிகாரிகள்...

“போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை முகேஷிடம் கொடுக்காமல் ஏன் அலைய வைக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு, ‘‘அவரிடம் கொடுக்க முடியாது. நீதிமன்ற விவகாரங்களுக்கு மட்டுமே அதைச் சமர்ப்பிக்க முடியும்” என்றார் டேவிட். நம்முடைய தொடர் முயற்சிகளுக்குப் பிறகு போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை விவசாயி முகேஷிடம் வழங்க சம்மதம் தெரிவித்த டேவிட், ‘‘மருத்துவர் நளினி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, கால்நடைத்துறை உதவி இயக்குநர் மூலம் முதல்கட்ட விசாரணை நடத்தப்படும்” என்றார்.

இதற்கிடையே நம்மை மீண்டும் தொடர்பு கொண்ட முகேஷ், “நான் நீதிமன்றத்துல வழக்குத் தொடரப் போறேன். ஆறு மாசமா இழுத்தடிச்சி, அதுவும் பசுமை விகடனோட நிர்பந்தத்துனாலதான் இப்பதான் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டையே கொடுக்க சம்மதிச்சிருக்காங்க. இந்த ரிப்போர்ட் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. தில்லுமுல்லு நடந்திருக்கலாம்னு சந்தேகப்படுறேன். மருத்துவப் பயிற்சியே இல்லாத கடைநிலை ஊழியர் மீராதான் தடுப்பூசி போட்டார் என்பதற்கான வீடியோ ஆதாரம் என்கிட்ட இருக்கு. கண்டிப்பா எனக்கு நீதி கிடைக்கும்னு நம்புறேன்” என்றார்.

நியாயம் வெல்லட்டும்!

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: க.சதீஸ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism