Published:Updated:

”கரும்பு பயிரிடாதே!”

மிரட்டும் ஆலைகள்... வேடிக்கை பார்க்கும் அரசுகள்!

”கரும்பு பயிரிடாதே!”

மிரட்டும் ஆலைகள்... வேடிக்கை பார்க்கும் அரசுகள்!

Published:Updated:

சில மாதங்களுக்கு முன் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில், கரும்பு விவசாயிகளுக்கு விலை குறைவாகக் கிடைப்பதற்கும், ஆலைகளால் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலை இருப்பதற்கும் தமிழக அரசுதான் காரணம் என்ற ரீதியில் சொல்லப்பட்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து விவசாயிகள் மீள்வதற்குள், இன்னொரு விளம்பரம் மூலமாக அடுத்த குண்டை வீசியிருக்கிறது, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம்.

”கரும்பு பயிரிடாதே!”

‘நாட்டின் அனைத்துக் கரும்பு விவசாயிகளுக்கும் ஒரு செய்தி’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அந்த விளம்பரத்தில், ‘இந்தப் பருவத்தில் (2015-16-ம் ஆண்டு) கரும்புகள் அறுவடை செய்யப்பட மாட்டாது’ என திட்டவட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கெனவே நொந்து போய்க் கிடக்கும் விவசாயிகளை இன்னமும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது, இந்தச் செய்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்பிரச்னை பற்றி நம்மிடம் பேசினார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவீந்திரன். ‘‘இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கொடுத்திருக்கும் விளம்பரம், ஏற்கெனவே தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கொடுத்த விளம்பரங்களின் தொடர்ச்சிதான். சில மாதங்களாகச் சந்தையில் சர்க்கரை விலை வீழ்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். ஆனால், சர்க்கரை 30 ரூபாய், 32 ரூபாய் என்று விலை உயர்ந்தபோதுபோது கூட, சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை.

ஆலைகள் முழுக்க நஷ்டத்தில் இயங்குவதாக, முதலாளிகள் புலம்பிக்கொண்டே இருக்கின்றனர். இந்த நஷ்டத்துக்கு யார் காரணம் என்பதை வெளிப்படையாகப் பேச மறுக்கின்றனர். ஆலைகளின் நஷ்டத்துக்கு முக்கிய காரணம், ஆலை முதலாளிகள் சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் வருமானத்தை வேறு துறைகளில் முதலீடு செய்து நஷ்டப்பட்டதுதான். அதோடு, மத்திய அரசின் தவறான கொள்கைகளால், பேராசை பிடித்த ஆலை முதலாளிகள் வெளிநாடுகளில் இருந்து மூலச்சர்க்கரை இறக்குமதி செய்ததும் நஷ்டத்துக்கு இன்னொரு காரணம்.

”கரும்பு பயிரிடாதே!”

தமிழ்நாட்டில், தனியார் சர்க்கரை ஆலைகளில் அரவை செய்யப்படும் ஒரு டன் கரும்புக்கு எல்லா செலவுகளும் போக, சராசரியாக 1,200 ரூபாய் லாபம் கிடைக்கிறது. தற்போது உள்ள விலை வீழ்ச்சியின் காரணமாக, 400 ரூபாய் முதல் 500 ரூபாய் லாபக் கணக்கில் குறைந்துள்ளது. ஆனால், நஷ்டம் கிடையாது. விவசாயிகள் வைக்கும் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத மத்திய-மாநில அரசுகள், ஆலை முதலாளிகளுக்கு 17 மாதங்களில் 17 ஆயிரம் கோடி ரூபாயை வட்டி இல்லாமல் கடனாக வழங்கியிருப்பதுடன், பல சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளன” என்று சீறிய ரவீந்திரன், தொடர்ந்தார்.

“தற்போது இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளதன் நோக்கம், ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரையான ‘கரும்பு-சர்க்கரை விலை இணைப்பு ஃபார்முலா மட்டுமே ஒரே தீர்வு’ என்பதை வலியுறுத்தத்தான். இந்த ஃபார்முலா செயல்பாட்டுக்கு வந்தால், ஆலை முதலாளிகள் லாபத்தில் குளிப்பார்கள். விவசாயிகள் கடன் தொல்லையால், உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.

கையாலாகாத மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக கரும்பு விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இந்த நிலை தமிழ்நாட்டுக்கும் வர வாய்ப்புள்ளது. ‘கரும்பு அறுவடை செய்யப்படமாட்டாது’ என விளம்பர வாசகம் மூலம் விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1966-ன் படி விவசாயி, தான் சாகுபடி செய்துள்ள கரும்பைப் பதிவு செய்த ஆலைக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்காத பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, ஒப்பந்தம் செய்த கரும்பை சர்க்கரை ஆலைகள் அறுவடை செய்யாத பட்சத்தில் ஆலைகள் மீதும் வழக்குத் தொடுக்கலாம். அப்படி இருக்கும் நிலையில், ‘கரும்பு அறுவடை செய்யப்படமாட்டாது’ எனச் சொல்வது சட்டப்படி குற்றம்.

ஆகஸ்ட் மாதம் அரவை துவங்க உள்ள நிலையில், இதுபோன்ற நெருக்கடியான நிலையைக் காரணம் காட்டி, கரும்புக்கான மத்திய அரசின் பரிந்துரை விலையைக் குறைக்க முயற்சி செய்கின்றனர். பல மந்திரிகளும் சர்க்கரை ஆலைகளை நடத்துவதால், இதில் மிகப்பெரிய அரசியல் நடக்கிறது. அதனால்தான், பல கோடி விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதைவிட, சில நூறு முதலாளிகள் மீது அக்கறை காட்டி வருகிறது, மத்திய அரசு” என்று சாடினார்.

‘‘சர்க்கரை ஆலை முதலாளிகள் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன’’ என்று சொல்லும் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன், ‘‘தொடர்ந்து சர்க்கரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், உற்பத்தி செய்த சர்க்கரையும் பெரிய அளவில் தேக்கம் கண்டுள்ளது. குறைவான வரி காரணமாக அண்டை மாநிலங்களில் உற்பத்திச் செய்யப்படும் சர்க்கரை, தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளுர் சர்க்கரையை விற்பனை செய்வதற்கும், வெளிமாநில சர்க்கரையைத் தடுப்பதற்கும் ஒரே வழி... வெளிமாநில சர்க்கரைக்கான நுழைவு வரியை 2 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். அதோடு, தற்காலிகமாக, மதிப்புக்கூட்டு வரியை (வாட்) 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக மாற்ற வேண்டும். இந்த மதிப்புக்கூட்டு வரி மூலம் கிடைக்கும் பணத்தை விவசாயிகளின் கரும்புக்கான விலையாகக் கொடுக்கலாம். இந்த வரியால் சர்க்கரை விலை ஒரு ரூபாய் 50 காசுகள் முதல் இரண்டு ரூபாய் வரை அதிகரிக்கும். இதனால், பெரிய அளவில் மக்களுக்குப் பாதிப்பு இருக்காது.

”கரும்பு பயிரிடாதே!”

அதோடு, மத்திய-மாநில அரசுகள், நெல், கோதுமையை வாங்கி இருப்பு வைப்பது போன்று ஆலைகளிடம் இருக்கும் சர்க்கரையில் ஒரு பகுதியை அரசு உற்பத்தி விலையில் கொள்முதல் செய்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்கலாம். தேவையான அளவு மட்டும் சர்க்கரை உற்பத்தி செய்து கொண்டு எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது, ஆலைகளுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதால், கரும்புக்குச் சரியான விலை கொடுக்க முடியும்.

தற்போதுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மொத்த உற்பத்தியில் 30 சதவிகித கரும்பை அரவை செய்யலாம். ஆலைகளைப் பழுது பார்த்து, முழுவீச்சுடன் இயக்கினால், தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த கரும்பையும், அரசு ஆலைகளிலேயே அரவை செய்து விட முடியும். தனியார் ஆலைகளின் மிரட்டல்களால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள்” என்று ஆக்கப்பூர்வமான யோசனகளை முன் வைத்தார்.

‘காலைச்சுற்றும் கரும்பு’ என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்கட்டுரை ஒன்றை பசுமை விகடனில் எழுதி வந்தோம். அதன் முக்கியமான கருப்பொருளே... கரும்பு விவசாயத்தை விவசாயிகள் குறைத்துக்கொண்டு, வேறு பயிர்களுக்கு மாறவேண்டும் என்பதுதான். இதுதான் ஆலைகளின் கடினப் போக்குக்குக் கடிவாளம் போடுவதாக இருக்கும் என்கிற வகையில் எழுதப்பட்ட குமுறல் கட்டுரை. இப்போது, ஆலைகளே விவசாயிகளைப் பார்த்து, ‘கரும்பைப் பயிரிடாதே’ என்று மிரட்டலாகச் சொல்ல ஆரம்பித்திருப்பது, இது விவசாயிகளுக்கு மோசமானதொரு காலகட்டம் ஆரம்பமாகியிருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

இந்த நிலையிலும், கரும்பு விவசாயிகளை வைத்து மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தால்...

மன்மோகன் சிங் தோண்டத் தொடங்கிய குழியில், இந்திய விவசாயத்தைப் புதைத்த பெருமை மோடிக்கு வந்து சேர்ந்துவிடும்!

காசி.வேம்பையன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism