Published:Updated:

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

Published:Updated:

‘மதுரை’ மல்லி, ‘சேலம்’ மாம்பழம், ‘ஈரோடு’ மஞ்சள், ‘சிறுமலை’ வாழை, ‘பொள்ளாச்சி’ இளநீர் என்று உலக அளவில் பிரபலமான பயிர்களின் வரிசையில் ‘பண்ருட்டி’ பலாவுக்கு என்றைக்கும் நிரந்தர இடமுண்டு. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பண்ருட்டியைச் சுற்றியுள்ள சாத்திப்பட்டு, மாலிங்கம்பட்டு, கீழ்மாம்பட்டு எனப் பல கிராமங்களில் பலாவைப் பரவலாகப் பயிர் செய்து வருகின்றனர். மானாவாரியாகவும், இறவையிலும் பயிர் செய்யப்படும் இந்தப் பகுதி பலாப்பழத்தின் சிறப்பு... சாப்பிடும்போது மாவு போலவும், நல்ல இனிப்புச் சுவையோடும் இருப்பதுதான்.

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

பண்ருட்டிப் பகுதியில் பலா மரங்களை சாகுபடி செய்திருக்கும் சில கிராமங்களில் வலம் வந்தோம். குடைவிரித்த மரங்களும், அவற்றில் பச்சை நிறப் பானைகளைத் தொங்க விட்டது போல தோற்றம் கொண்ட பலா பழங்களுமாய் காட்சியளித்தன. கீழ்மாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த திருமலையைச் சந்தித்தோம். பலாப்பழங்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர், வேலையை முடித்துவிட்டு உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலையாள் பிரச்னை இல்லாத பலா சாகுபடி!

“பூர்விக விவசாயக் குடும்பம் எங்களுது. அப்பாவுக்கு நாலு பொண்ணுங்க, ரெண்டு ஆம்பளை பிள்ளைங்க. அண்ணன் கவர்மென்ட் டாக்டர். நான், பன்னிரெண்டாவதோட படிப்பை முடிச்சிட்டு, விவசாயத்துக்கு வந்துட்டேன். எங்க குடும்பத்துக்கு மொத்தம் 25 ஏக்கர் நிலமிருக்கு. அதுல 4 ஏக்கர்ல மல்லாட்டை (நிலக்கடலை), 6 ஏக்கர்ல மரவள்ளி, 5 ஏக்கர்ல முந்திரி, 10 ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பு போட்டிருக்கிற 10 ஏக்கர் நிலத்துல 25 அடியில இருந்து 30 அடி இடைவெளியில 250 பலா மரங்கள் இருந்துச்சு. அதுல, 50 பலா மரங்கள், ‘தானே’ புயல்ல சாய்ஞ்சுடுச்சு. இப்போ 200 மரங்கள் இருக்கு. 15 வருஷ மரங்கள்ல இருந்து 100 வருஷ மரங்கள் வரைக்கும் என்னோட நிலத்துல இருக்கு.

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

பலா மரங்கள் வரப்பு ஓரங்கள்ல இருக்கிறதால, பெரிய அளவுல பராமரிக்கிறதில்லை. வருஷம் ஒரு முறை ஆடி மாசத்துல மரத்தோட வளர்ச்சியைப் பொறுத்து சுத்தி குழி எடுத்து எரு போடுவோம். மத்தபடி கரும்புக்குப் பாயுற தண்ணியையும், ஊட்டத்தையும் எடுத்துக்கிட்டு நல்லா வளர்ந்து வந்துடுது. பலாவைப் பொறுத்தவரைக்கும் நட்டு வளர்த்து விட்டா போதும், பராமரிப்பு இல்லாமலே நல்ல வருமானம் கொடுக்கும். வேலையாட்கள் பிரச்னை பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம்” என்ற திருமலை, தொடர்ந்தார்.

200 மரங்களில் ரூ4.5 லட்சம்!

‘‘ஜனவரி மாசத்துல இருந்து மார்ச் வரைக்கும் பிஞ்சு பிடிக்கும். ஒரே இடத்துல ரெண்டும், மூணுமா இருக்கிற பிஞ்சுகளைக் களைச்சு விட்டா, மரத்தோட வயசுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு மரத்துக்கும் 15 லிருந்து 75 பிஞ்சுகள் இருக்கும். பிஞ்சுகள் மூணு மாசத்துல பெருத்து அறுவடைக்குத் தயாராகிடும். காய்களைத் தட்டிப் பார்த்தும், காய்களில் இருக்கும் முள்பகுதி விரிவடைந்திருக்கிறதைப் பார்த்தும் அறுவடைப் பருவத்தைத் தெரிஞ்சிக்கலாம்.

200 பலா மரத்துல இருந்து சராசரியா 3 ஆயிரம் பழங்கள் கிடைக்கும். ஒவ்வொரு பழமும் 15 கிலோ முதல் 45 கிலோ வரைக்கும் எடை இருக்கும். ஒரு பலாப்பழம் 100 ரூபாய்ல இருந்து 400 ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். பழத்தோட அளவையும், எடையையும் பொறுத்து விலை இருக்கும். ஒரு பழம் சராசரியா 150 ரூபாய்னு விற்பனை செய்தா, 3 ஆயிரம் பழத்துக்கும் சேர்த்துக்கு 4 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல 50 ஆயிரம் செலவு போனாலும், 4 லட்சம் நிகர லாபம்.

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

இந்த 200 மரங்களைத் தோப்பா கணக்கிட்டா, மூணு ஏக்கர் அளவுக்கு இருக்கும். அதோட இந்த மரங்கள் ஊடுபயிர் மட்டும்தான். முதன்மைப் பயிர் கரும்பு. அதுல ஒரு வருஷத்துக்கு 50 டன் மகசூல் கிடைக்குது. அந்த வருமானம் தனி” என்றார், மகிழ்ச்சியாக!

அப்பா, தாத்தா வெச்ச மரம்!

அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி ராஜவன்னியரிடம் பேசினோம். “15 வயசுல இருந்து விவசாயம் செய்றேன். ஆரம்பத்துல முழுக்க முழுக்க மானாவாரியில கம்பு, கொள்ளு, கேழ்வரகு, வரகுனு சாகுபடி செய்தேன். கிணறு வெட்டி பாசனம் செய்ய ஆரம்பிச்சதும், எல்லோரையும் போல கரும்பு, மரவள்ளினு சாகுபடி செய்ய ஆரம்பிச்சிட்டேன். நிலத்து ஓரங்கள்ல தாத்தா, அப்பானு வெச்சு காப்பாத்தின பலா மரங்களோட, நான் வெச்ச மரங்களும் சேர்த்து எட்டு ஏக்கர் நிலத்துல மொத்தம் 50 மரங்கள் நிக்கிது. எங்க பகுதிக்கு பலா மரங்கள் வந்து 150 வருஷத்துல இருந்து 200 வருஷங்கள்தான் இருக்கும். ஆரம்பத்துல எங்க கிராமத்துல எங்க குடும்பம் உள்பட நாலு குடும்பத்துல மட்டும்தான் பலா மரங்கள் இருந்துச்சு. பராமரிப்பு பெருசா இல்லாமலே வளர்ந்த பலா மரத்தையும், அதுல கிடைச்ச வருமானத்தையும் பார்த்துட்டு பலரும் நடவு செய்தாங்க. இன்னைக்கு ஊர் முழுக்க பலா மரங்கள் இருக்கு. ஆரம்பத்துல வியாபாரிகளே, எங்க கிராமத்துக்கு வந்து பழத்தை வாங்கி தலையில தூக்கிட்டுப் போவாங்க. பலா மரங்கள் பெருகினதும் பழங்களை வெட்டிட்டுப் போய் பண்ருட்டியில குடோன் வெச்சிருக்கிற வியாபாரிங்ககிட்ட விற்பனை செஞ்சிட்டு வர்றோம். இன்னைக்கும் விற்பனைக்கு பிரச்னை இல்லை” என்றவர், தொடர்ந்தார்.

நிறம் கூட்டும்  வேப்பிலை!

“எங்ககிட்ட இருக்குற மரங்கள்ல பெரிய சுவையான பழம் கொடுக்கிறதோட அதிகமான காய்கள் காய்க்கிற மரங்கள்ல இருந்துதான் செடிகளைத் தேர்வு செய்து நடுவோம். எல்லாம் நாட்டு ரகங்கள்தான். மரங்களில் எவ்வளவு கிளைகள் இருக்குதோ அதைப் பொறுத்துதான் மகசூல் கூடும். அடி வேர்ல இருந்து, நுனிக்கிளை வரைக்கும் பிஞ்சுகள் பிடிச்சிருக்கும். அதுல வயசுக்கு ஏத்த மாதிரி பிஞ்சுகளை விட்டுட்டு, மற்ற பிஞ்சுகளை ஒடிச்சு எடுத்திடணும். போதுமான இடைவெளி விட்டாத்தான் சரியான முறையில பழங்கள் பெருசா வளரும்.

முடிஞ்சா வருஷத்துக்கு ஒரு முறை எரு வைக்கலாம். பிஞ்சு எடுக்கிற சமயத்துல லேசா உரம் வைக்கலாம். அப்படி இல்லாட்டி மற்றப் பயிருக்குக் கொடுக்கிற சத்துகளை எடுத்துக்கிட்டு தானாவே வளர்ந்திடும். வருஷம் ஒருமுறை மட்டும் மரத்துக்கு ஒரு கட்டு அளவுக்கு வேப்பந்தழைகளை வெட்டி மரத்தைச் சுற்றிப் போடணும். இப்படிச் செய்யும்போது சுளைகளுக்கு நல்ல மஞ்சள் நிறம் கிடைக்கும்” என்ற ராஜவன்னியர் நிறைவாக,

“50 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 750 பலாப்பழங்கள் கிடைக்கிது. ஒரு பழம் 150 ரூபாய்ல இருந்து 350 ரூபாய் வரை விற்பனையாகுது. சராசரியா ஒரு பழத்துக்கு 200 ரூபாய்னு கிடைச்சுடும். அந்தக் கணக்குல 750 பலாவுக்கும் 1 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிச்சயமா கிடைக்கும். இதுல 20 ஆயிரம் ரூபாய் செலவானாலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.
   
தொடர்புக்கு,
திருமலை,
செல்போன்: 99765-65462
ராஜவன்னியர்,
செல்போன்: 99654-32753
வெங்கடேசன்,
செல்போன்: 98420-71920
சிவகடாட்சம்,
செல்போன்: 95003-71066

காசி.வேம்பையன்

படங்கள்: எஸ்.தேவராஜன்

ஊடுபயிரிலும் உன்னத வருமானம்!

பலாச் செடிகள் நடவு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகடாட்சம் சொன்ன விஷயங்கள் இங்கே...

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

ஏக்கருக்கு 65 செடிகள்!

‘‘நாட்டுப் பலா மரங்களின் ஆயுள் 100 ஆண்டுகளுக்கு மேல். பலா மரங்களை நடவு செய்வதற்கு செம்மண் பாங்கான பூமியும், அதிகமான வெயிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல சுவைமிக்க பழங்கள் கிடைக்கும். பலாச் செடிகளை 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது, 60 முதல் 65 செடிகள் வரை நடவு செய்யலாம். ஓரங்களில் மட்டும் நடவு செய்யும்போது 15 முதல் 20 செடிகள்தான் தேவைப்படும். பலாச் செடிகளுக்குக் கொடுக்கப்படும் இடைவெளியை பொறுத்துதான் மரம் கிளை பரப்பி வளரும். அதனால் இடைவெளியைக் குறைக்கக் கூடாது. செடிகளை நடவு செய்வதற்கு ஆடிப்பட்டம் ஏற்றது. 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழத்தில் குழி எடுத்து ஒரு வாரம் ஆறப்போட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியையும் இரண்டு கூடை எருவையும், மேல் மண்ணையும் கொண்டு நிரப்ப வேண்டும். மானாவாரியாக இருந்தால், 5 மாதங்கள் வளர்ந்த செடிகளையும், இறவையாக இருந்தால், 5 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை உள்ள செடிகளையும் நடவு செய்யலாம்.

6 அடி வரை கிள்ள வேண்டும்!

மழைக்காலத்தில் நடவு செய்வதால் பாசனம் செய்யாமலே செடிகள் வேர் பிடித்து வளர ஆரம்பிக்கும். ஆனால், ஆடு, மாடுகள் கடிக்க வாய்ப்பிருப்பதால், 6 அடி உயரத்துக்கு செடியைச் சுற்றி கூண்டு வைக்க வேண்டும். 6 அடி உயரம் வளரும் வரை செடிகளில் வரும் கிளைகளை கிள்ளி விட வேண்டும். இப்படி செய்யும்போது, பலா மரங்களை பிற்காலத்தில் பலகைக்குப் பயன்படுத்தலாம். 5 ஆண்டுகள் வரை செடிகளுக்கு இடையில் இருக்கும் இடங்களில் கடலை, உளுந்து, சிறுதானியப் பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.

பூச்சியை விரட்ட வேப்பெண்ணெய்!

ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில், மழைக்கு முன்பு மரத்தைச் சுற்றி வட்டமாகப் பாத்தி எடுத்து... மரத்தின் வயதுக்கு ஏற்ப 50 கிலோ முதல் 250 கிலோ அளவுக்கு எரு வைக்க வேண்டும். பிறகு, பிஞ்சுகள் இறங்க ஆரம்பிக்கும் சமயத்தில் மட்டும் கொஞ்சம் உரம் வைக்க வேண்டும். அதற்குமேல் எதுவும் தேவையில்லை. பிஞ்சுகளின் மீது பூச்சித் தாக்குதல் இருந்தால்... ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 50 மில்லி வீதம் வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

செலவு இல்லாமல் வருமானம்!

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

கீழ்மாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ‘‘எனக்கு 12 ஏக்கர் நிலமிருக்கு. இதுல ஓரப்பகுதியில 120 மரங்கள் இருந்தது. ‘தானே’ புயல்ல 50 மரம் விழுந்திடுச்சு. மீதம் இருக்குற 70 மரங்கள்ல பாதி இறவையிலும், மீதி மானாவாரியிலும் இருக்கு. இந்த மரங்களுக்குத் தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்லை. ஒவ்வொரு வருஷமும் பிஞ்சு விட்டதும், விலை பேசி குத்தகைக்கு விட்டுடுறேன். இந்த வருஷம் ஒரு பிஞ்சு 140 ரூபாய்னு, 1,500 பிஞ்சுகளைக் குத்தகைக்கு விட்டிருக்கேன். 1,500 பிஞ்சுக்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுல செலவேயில்லை. முழுக்கவே லாபம்தான்” என்கிறார்.

5-ம் ஆண்டில் முதல் அறுவடை!

பலாச் செடிகள் வளர்ந்து மரமாவதுடன், மூன்றாவது, நான்காவது ஆண்டுகளிலே பிஞ்சுகள் விட ஆரம்பிக்கும். ஐந்து ஆண்டுகள் வரை காய்க்க அனுமதிக்கக் கூடாது. அதற்குமேல் ஆண்டுக்கு இரண்டு, மூன்று காய்கள் காய்க்க அனுமதிக்கலாம். அதற்குமேல் ஒவ்வோர் ஆண்டும் காய்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் போதுமான அளவுக்கு மரத்தில் பிஞ்சுகளை விட்டு, மற்ற பிஞ்சுகளைக் களைத்து விட வேண்டும். பிஞ்சுகள், காய்களாக மாறி முற்றிய உடன் காய்களை அறுவடை செய்யலாம்.”

ஆண்டுக்கு இரண்டு முறை காய்க்கும் பாலூர்-1

வரப்புப் பயிரிலும் வளமான வருமானம்... ‘பலே பண்ருட்டி பலா!

பலா ரகங்கள் பற்றி பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அனிசா ராணியிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 500 ஹெக்டேரில் ஆண்டுக்கு, 60 ஆயிரம் கிலோ அளவில் பலா உற்பத்தி செய்யப்படுகிறது. பண்ருட்டிப் பலா எனத் தனியாக ரகம் கிடையாது. காலம் காலமாக சாகுபடி செய்து வந்த நாட்டு ரகங்களை மக்களே தேர்வுசெய்து உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். பண்ருட்டிப் பலா சிறப்பாக இருப்பதற்கு காரணம் செம்மண், அதிகமான வெப்பம், கடல்காற்றின் ஈரப்பதம் ஆகியவைதான்.

இந்தப் பகுதியில் கிடைக்கும் மகசூல் அளவு, சுளைகளின் அளவு, சுளைகளின் சுவை போன்றவை மற்ற பகுதிகளை விட மாறுபட்டவை. தவிர, இப்பகுதி மரங்களில் 5 முதல் 7 ஆண்டுகள் கழித்துதான் மகசூல் கிடைக்கிறது. எங்கள் மையத்தில் ஆய்வு செய்து 3 ஆண்டுகளில் காய்க்கும் பாலூர்-1 மற்றும் பாலூர்-2 ஆகிய ரகங்களை உருவாக்கி இருக்கிறோம். பாலூர்-1, ஆண்டுக்கு இரண்டு முறையும்; பாலூர்-2, ஆண்டுக்கு ஒரு முறையும் காய்க்கும்.

8 முதல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சராசரியாக ஒவ்வொரு மரத்தில் இருந்தும் 100 காய்கள் அறுவடை செய்யலாம். செடிகள் தேவைப்படுவோர் எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார், அனிசா ராணி.

தொடர்புக்கு:
முனைவர். அனிசா ராணி,
செல்போன்: 97889-23254
பேராசிரியர் மற்றும் தலைவர்,
காய்கறி ஆராய்ச்சி நிலையம்,
பாலூர், கடலூர் மாவட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism