Published:Updated:

மரத்தடி மாநாடு: ஃபாரின்காரனுக்கு பட்டுக்கம்பளம்...பட்டிக்காரனுக்கு கந்தல் கம்பளம்!

மரத்தடி மாநாடு: ஃபாரின்காரனுக்கு பட்டுக்கம்பளம்...பட்டிக்காரனுக்கு கந்தல் கம்பளம்!

மரத்தடி மாநாடு: ஃபாரின்காரனுக்கு பட்டுக்கம்பளம்...பட்டிக்காரனுக்கு கந்தல் கம்பளம்!

மரத்தடி மாநாடு: ஃபாரின்காரனுக்கு பட்டுக்கம்பளம்...பட்டிக்காரனுக்கு கந்தல் கம்பளம்!

Published:Updated:

ங்கிக்குச் சென்றிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வேலைகளை முடித்துவிட்டு ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தின் தோட்டத்துக்கு நடக்க ஆரம்பித்தார். இடையில், அவரோடு சேர்ந்து கொண்டார், ‘காய்கறி’ கண்ணம்மா. ஓடைப்பாதையில் இருவரின் தலைகளும் தெரியவும், வேகமாக ஏறி வந்து குளத்தில் கை, கால்களைக் கழுவ ஆரம்பித்தார், ஏரோட்டி.

மூவரும் ஆல மரத்தடியில் வந்து அமர்ந்தவுடன், ‘‘நாட்டு நடப்பு என்னானு சொல்லுங்கய்யா’’ என்று கேட்டு, அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார், காய்கறி.

மரத்தடி மாநாடு: ஃபாரின்காரனுக்கு பட்டுக்கம்பளம்...பட்டிக்காரனுக்கு கந்தல் கம்பளம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இயற்கை வளங்கள் நிறைஞ்ச கன்னியாகுமரி மாவட்டத்துல கொஞ்ச வருஷத்துக்கு முன்ன, மலைகள் குவாரி அமைச்சு, மணல் தயாரிச்சிக்கிட்டிருந்தாங்க. மாவட்ட கலெக்டரா இருந்த நாகராஜன், ‘குவாரிகள் விதியை மீறி செயல்படுது’னு சொல்லி 28 குவாரிகளுக்குத் தடை விதிச்சதோட, 57 கோடி ரூபாய் அபராதமும் போட்டார். இப்போ கலெக்டரா இருக்குற சஜ்ஜன் சிங் ஆர்.சவான், கோர்ட் உத்தரவைக் காரணம் காட்டி தடையை நீக்கிட்டார். இப்போ, மணல் தயாரிப்பு படுஜோரா நடக்குதாம். பெரியளவுல கேரளாவுக்குத்தான் அனுப்புறாங்களாம். இப்படியே போனா, இயற்கை வளம் சுத்தமா அழிஞ்சிடும்னு மாவட்ட மக்கள் பயப்படுறாங்க. அரசாங்கம்தான் கண்டுக்க மாட்டேங்குது’’ என்றார், ஏரோட்டி.

‘‘அதெப்படி கண்டுக்குவாங்க... இந்நேரம் ‘டீல்’ பேசி முடிச்சிருப்பாங்க. உள்ளூர்க்காரன் செத்தா அவங்களுக்கு என்ன? அவனவனுக்கு கமிஷன் வந்தா சரிதான். இப்ப பாரு, இறக்குமதி வரியை 13 சதவிகிதத்துல இருந்து, 5 சதவிகிதமா மத்திய அரசு குறைச்சிட்டதால, பட்டுக்கூடுகள் அதிகளவுல இறக்குமதியாகுது. அதனால உள்நாட்டுல பட்டுக்கூடுக்கு விலை இறங்கிப் போச்சு. முன்னாடி வெள்ளைப்பட்டுக்கூடு கிலோ 380 ரூபாய்னு விற்பனையாச்சு. இப்போ, 250 ரூபாய்க்குதான் விற்பனையாகுது. மஞ்சள் பட்டுக்கூடு 280 ரூபாய்னு விற்பனையாச்சு. இப்போ, 150 ரூபாய்க்குத்தான் விற்பனையாகுது. ஆனா, வெளிநாட்டுக்காரன் நல்லா சம்பாதிக்கிறான். அவனுங்க டாலர்ல தூக்கிப்போடுற கமிஷனுக்கு ஆசைப்பட்டு நம்ம அமைச்சர்கள் இப்படி செய்றாங்க’’ என்று ஆத்திரப்பட்டார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: ஃபாரின்காரனுக்கு பட்டுக்கம்பளம்...பட்டிக்காரனுக்கு கந்தல் கம்பளம்!

‘‘நம்ம ஊர்லதான் ஃபாரீன்காரன்னா பட்டுக்கம்பளத்தை விரிப்பாய்ங்க... பட்டிதொட்டி ஆளுனா கந்தல் கம்பளத்தை வீசுவாய்ங்க. இதுக்காக நீங்க ஏன் சூடாகுறீங்க?’’ என்று கேட்ட காய்கறி, தான் கொண்டு வந்திருந்த கேழ்வரகுக்கூழை ஆளுக்கு கொஞ்சமாகக் கொடுத்துவிட்டு... ‘‘பசு மோர் ஊத்தி, நிறைய சின்ன வெங்காயம் போட்டு கரைச்சிருக்கேன். உடம்புக்கு ரொம்ப நல்லது’’ என்று சொன்னார்.

‘‘ரொம்ப அருமையாத்தான் இருக்கு’’ என்று சொல்லி, இருவரும் கூழைப் பருக ஆரம்பித்தனர். அப்படியே ஒரு செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்துல 2013-14ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்குறாங்க. அதுல முறைகேடுகள் நடந்துடக்கூடாதுனு செக் போட்டுதான் கொடுக்கிறாங்க. ஆனாலும், நிறைய கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் 10 சதவிகிதம் கமிஷனை முன்கூட்டியே வாங்கிட்டுத்தான் செக்கையே கொடுக்குறாங்க.

விவசாயிகளெல்லாம் புலம்பிக்கிட்டு இருக்குறாங்க’’ என்றார்.

‘‘இந்தப் பஞ்சக்காசுல கை வெக்கிறவன் குடும்பமெல்லாம் விளங்கவே விளங்காது’’ என்று சாபமிட்டார், காய்கறி.

‘‘சரி நான் ஒரு நல்ல சேதி சொல்றேன்’’ என்று தொண்டையைக் கனைத்துக் கொண்ட வாத்தியார்,

‘‘நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள்ல உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் உட்பட்ட பல வகை காய்கறிகள் பிரபலம். மழை பொழிவு அதிகமா இருக்கிறதால உருளைக்கிழங்கில், ‘பின் கருகல் நோய்’ தாக்குதலும் அதிகமா இருக்கிறது வாடிக்கை. இதைக் கட்டுப்படுத்த முடியாம திணறிக்கிட்டிருந்த விவசாயிகளுக்குக் கை கொடுக்கிற வகையில இந்த நோய்க்கு எதிரான தன்மை கொண்ட உருளை விதைகளை தோட்டக்கலை மூலமா விற்பனை செய்றதா, ஊட்டி, அரசு ரோஜா பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர் மீரா பாய் அறிவிப்பு கொடுத்திருக்காங்க’’ என்றபடியே அந்த அறிவிப்பைப் படித்தார்.

‘நஞ்சநாடு அரசு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் கோல்கிரைன் ஆகிய இடங்களில் உயர்விளைச்சல் தரக்கூடிய; பின் கருகல் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட கிரிதாரி ரக உருளைக்கிழங்கு விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ விதையின் விலை 30 ரூபாய். நஞ்சநாடு அரசு தோட்டக்கலைப் பண்ணையைத் அலுவலரை நேரிலோ, அல்லது 98659-05505 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம்’

வாத்தியார் படித்து முடிக்க...

‘‘வயல்லகளை எடுக்குற ஆளுங்க வேலையை முடிக்கப் போறாங்க, சம்பளம் கொடுக்கணும். போயிட்டு வந்துடறேன்’’ என்று சொல்லிக் கொண்டே ஏரோட்டி கிளம்ப, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

ஓவியம்: ஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism