Published:Updated:

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

Published:Updated:

“வனத்தைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, சுள்ளி பொறுக்கும் கிராமவாசிகளை அடித்து விரட்டும் வனத்துறையினர்... வசதி படைத்தவர்களை வனப்பகுதிக்குள் அனுமதிப்பதும், வன விலங்குகளை வேட்டையாடத் துணை போவதும் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இயற்கை ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில கறுப்பு ஆடுகளும் ஓசையில்லாமல் இவர்களுடன் சேர்ந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வனத்துக்குள் அழைத்துச்சென்று, குடி, கும்மாளம் எனக் காட்டையே கந்தலாக்கி வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி சொகுசு பங்களாக்கள் கட்டிக்கொண்டு, இரவு நேரத்தில் வனப்பகுதியில் வேட்டையாடுவதையே பலர் தொழிலாக வைத்துள்ளனர்”

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-நீண்ட நாட்களாக, சமூக ஆர்வலர்கள் சிலர் இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருகிறார்கள். இதையெல்லாம் வனத்துறை மறுத்து வந்தாலும்... ‘அது உண்மைதான்’ என உணர்த்தியிருக்கிறது, சமீபத்தில் கோயம்புத்தூரில் மான் இறைச்சி மற்றும் காட்டுப் பன்றி இறைச்சி கைப்பற்றப்பட்ட சம்பவம்.

முன்னாள் வனச்சரகர் நாகராஜன் என்பவருக்கு, கோயம்புத்தூர், வெள்ளியங்கிரிமலை அடுத்துள்ள முள்ளங்காடு வனப்பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலமும், சொகுசு பங்களா ஒன்றும் உள்ளது. அதை இப்பொழுது நாகராஜனின் மருமகனான திருச்சியைச் சேர்ந்த சத்தியநாதன் நிர்வகித்து வருகிறார். இவர் திருச்சி் அரசியல் புள்ளி ஒருவரின் நேர்முக உதவியாளர் என்றும் கூறப்படுகிறது. இந்த சொகுசு பங்களாவில் சமீபத்தில் வனத்துறையினர் சோதனையிட்டபோது, குளிர்பதனப் பெட்டியில் இருந்து மான், காட்டுப் பன்றி இறைச்சியைக் கைப்பற்றினர். அத்துடன் மான்கொம்பு, தோல் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர். இறைச்சிக் கடைக்காரர் போல, வனவிலங்கு இறைச்சியை சத்தியநாதன் விற்பனை செய்து வந்தது, அனைவருக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

இது குறித்து, மாவட்ட வன  அலுவலர் செந்தில்குமாரிடம் பேசினோம். “மான், காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளார் சத்தியநாதன். இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்து இருக்கிறார். எங்கள் சோதனையில் 16 கிலோ மான் இறைச்சியையும், 14 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியையும் கைப்பற்றினோம். மேலும், மான் மற்றும் பன்றி இறைச்சிக்கழிவுகள், தலையுடன் கூடிய கடமான் கொம்புகள், புனுகுப்பூனை, காட்டுக்கோழி இவற்றின் தோல் ஆகியவற்றை வீட்டைச் சுற்றிலும் குவியல் குவியலாக புதைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தோம்.  துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளார், இவருக்கு வனத்துறையினர் அல்லது சமூக சேவகர்களின் தொடர்பு உள்ளதா? என்றெல்லாம் விசாரித்து வருகிறோம் விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும்” என்றார், செந்தில்குமார்.

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

இப்பகுதியில் வசித்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ‘பேரூர்’ ஜெயராமன், “பொழுதுபோக்கு என்ற பெயரில் குடியும், கும்மாளமுமாக இருப்பதற்காக வசதி படைத்தவர்கள் வனத்தை ஒட்டி சொகுசு பங்களாக்கள் கட்டிக்கொள்வது இந்தப் பகுதியில் அதிகரித்திருக்கிறது. இங்கு மான்கறி சுவைப்பதற்காகவே அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் வருகிறார்கள்.

வனத்துறையினர் சிலரின் உதவியுடன் பலர் மான்வேட்டை ஆடுகிறார்கள். அதில் ஒருவர்தான் இந்த சத்தியநாதன். இவரைப் போல இன்னும் ஆயிரம் சத்தியநாதன்கள் மேற்குதொடர்ச்சி மலை முழுவதும் மான் வேட்டையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதைத்தடுக்க, வனப்பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்கள், காட்டேஜ்களுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். புலிகளைக் கணக்கு எடுக்கிறோம்... மலைவாழ் மக்களுக்குச் சேவை செய்கிறோம்... என்று வனத்துறையுடன் கைகோத்துக்கொண்டு சுலபமாக வனத்துக்குள் சென்றுவரும் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் துல்லியமாக கண்காணிக்க வேண்டும். இல்லையேல் வனத்தினுள் மான்கள் மட்டுமல்ல ஒரு குருவி கூட மிஞ்சாது’’ என்று ஆவேசப்பட்டார்.

‘‘இங்கு மான்கறி கிடைக்கும்...!’’ கசாப்புக் கடையா கானகம்..!

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ‘வழுக்குப்பாறை’ பாலு, “வனத்துறையின் கீழ்மட்ட ஊழியர்கள் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை யாருக்கும் தெரியாமல் இது  நடக்க சாத்தியம் இல்லை. இவர் யார் யாருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்திருக்கிறார் எனத் தீவிரமாக விசாரித்தால் பல வி.வி.ஐ.பி.களின் முகத்திரை கிழியும். இந்த வழக்கை வனத்துறை வசம் இருந்து சி.பி.சி.ஐ.டி.பிரிவுக்கு மாற்ற வேண்டும். மலைப்பகுதியில் நடக்கும் கேளிக்கைக் கொண்டாட்டங்களைத் தடை செய்யவேண்டும்” என்றார்.

வனவிலங்குள் ஊருக்குள் வராமல் மின்வேலி அமைத்து தடுப்பது போல, சத்தியநாதனைப் போன்ற, மனித விலங்குகள் வனத்துக்குள் நுழையாமல் காப்பதும் வனத்துறையின் கடமை என்பதை கவனத்தில் கொண்டு... வனத்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

‘வனம் இருந்தால்தான் இனம் இருக்கும்’ என்பதை வனத்துறையினர் நினைவில் வைத்திருந்தால் சரிதான்.

ஜி.பழனிச்சாமி

படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism