Published:Updated:

மண்புழு மன்னாரு: சோலைக்காடு!

மண்புழு மன்னாரு: சோலைக்காடு!

ரங்கள் அடர்த்தியா வளர்ந்திருக்கிற இடத்துக்கு ‘மாஞ்சோலை’, ‘புளியஞ்சோலை’னு பேரு உண்டு. இதேமாதிரி மலைப்பகுதியில சூரியஒளி உள்ளே நுழைய முடியாத அளவுக்குச் செடி, கொடி, மரங்கள் வளர்ந்திருந்தா அந்த இடத்துக்குச் சோலைக்காடுனு சொல்லுவாங்க.

உலத்திலேயே பெரிய சோலைக்காடு, தென் அமெரிக்கக் கண்டத்துல இருக்கிற அமேசான் காடுதான். இந்தக் காடு, பல நாடுகளுக்கும் பரந்து, விரிஞ்சி கிடக்குது. இந்தக் காட்டுல ஓர் அதிசயம் இருக்கு. இங்க எப்பவும் மழையோ, தூறலோ இருந்து கொண்டே இருக்கும். இதனாலதான், இந்தக் காட்டை ‘மழைக்காடு’னும் சொல்றாங்க.

மண்புழு மன்னாரு: சோலைக்காடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அமேசான் காட்டுல மட்டும் எப்படி மழை விடாம பெய்யுதுனு, ஆராய்ச்சி செய்ய ‘எனியஸ் சலாதி’ங்கிற விஞ்ஞானி பல ஆண்டுகளுக்கு முன்ன புறப்பட்டுப் போனார். சும்மா, பேருக்கு ஆராய்ச்சி பண்ணாம, காட்டிலேயே மாசக் கணக்குல தங்கி இருந்தாரு.

அமேசான் காட்டுக்குக் குறுக்கே, 2,000 மைல் தூரத்துக்கு ஆங்காங்கு காட்டின் மேல் சஞ்சரிக்கும் மேகத்தைச் சில கருவிகளை வைச்சு, ஆராய்ச்சி செஞ்சாரு. அந்த மேகத்தில் நீர்தான் இருந்திருக்கு. அந்த நீர் ஒரு ஆக்ஸிஜன் அணுவும், இரண்டு நைட்ரஜன் அணுக்களும் இணைந்த ஒரு கூட்டுப் பொருளாதான் இருந்திருக்கு. ஆனா, இந்த ஆக்ஸிஜன் அணுவுல ஒரு வித்தியாசத்தைக் கண்டுபிடிச்சார். கடல் நீரிலிருந்து உருவாகும் ஆக்ஸிஜனுக்கும், தாவரங்கள் இலைகள் மூலம் வெளியிடும், ஆக்ஸிஜனுக்கும், இடையே அணுத் திறனில் ஒரு வேறுபாடு இருந்திருக்கு.

கடல் பகுதி பக்கத்துல இருந்த, அமேசான் காட்டுக்கு மேல் இருந்த மேகத்துல கடல் நீரோட ஆக்ஸிஜன் இருந்திருக்கு. கடற்கரையிலிருந்து தள்ளிப் போக, போகத் தாவரங்கள் வெளியிடும் நீரிலுள்ள ஆக்ஸிஜன் அணு அதிகமா இருந்திருக்கு. அதாவது, அமேசான் காட்டுக்கு உட்பகுதியில இருக்கிற மேகம் தாவரங்களின் நீரை வைச்சு உருவாகுதுனு கண்டுபுடிச்சார். ஆனா, ஒரு பெரும் மழையை உருவாக்குற அளவுக்கு மரங்களால நீரை வெளியிட முடியுமா?னு கண்டுபுடிக்க இறங்கினாரு. அந்த ஆராய்ச்சி விவரத்தைப்பத்தி அவரே சொல்றதைக் கேளுங்க.

‘‘சாதாரணமாக மரங்கள் அபரிமிதமாக நீரை உறிஞ்சும் வல்லமை கொண்டவை. எல்லா தாவரங்களுமே ஒரு காலத்தில் கடலில் இருந்து உருவானதுதான். கடலில் இருக்கும்போது, கடல் நீரில் மிக நுண்ணிய அளவில் கரைந்திருக்கும் சத்துக்களைப் பெற, பெருமளவில் நீரை உறிஞ்சி வெளியிட வேண்டிய அவசியம் இருந்தது. நிலத்துக்கு வந்த பிறகு கூட, இந்த இயல்பைத் தாவரங்கள் மறக்கவில்லை. மண்ணில் இருக்கிற சத்துக்களை நீராதாரமாகவே பெறுகின்றன. இதனால் பெருமளவுல நீரை உறிஞ்சி இலைகளின் துவாரங்கள் வழியே நீரை வெளியிடுகின்றன. இதில் அவற்றின் உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் தக்க வைக்கும் நீரின் அளவு 1% ஆகும். எஞ்சியதெல்லாம் இலைத் துவாரங்கள் வழியே வெளியேறும். மற்றொரு பகுதி இலைகளிலிருந்து நேரடியாவும் ஆவியாகும். இந்த நீர் வெளியீட்டின் மூலம், தாவரங்கள் வெப்பத்திலும் வாழ்ந்திருக்கின்றன. அடர்ந்த சோலைக்காடுகளில் மரம், செடி, கொடி என மண்டிக் கிடக்கும் சூழ்நிலையில், இலைப்பரப்பு மிகவும் கூடுதலா இருக்கும். சாதாரண சோளப்பயிரே, 4.5 சதுர மீட்டர் பரப்புக்கு இலைப்பரப்புடன் இருக்குமென்றால், சோலைக்காட்டைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

அமேசான் காடுகளில் பெய்யும் மழையில் 49% அளவு நீர், காட்டுத் தாவரங்களின் இலைகளின் மூலம் விண்ணிலே வெளியிடப்படுகிறது. மற்றும் ஒரு 24% அளவு நீர், காட்டிலிருந்து ஆவியாகிறது. எஞ்சியதில் ஒரு பெரும்பகுதி ஆற்று நீரோட்டமாகிறது. மிகச்சிறு பகுதி மட்டும்தான், தாவரங்களின் உறுப்புக்களில் தங்குகிறது. மொத்தத்தில் அமேசான் காடுகளில் பெய்யும் 2,000 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் உள்ள மழையில் 74% மழைநீரை, இக்காடுகளே விண்ணில் மேகமாக உருவாக்குகிறது. இந்த மேகக் கூட்டம் ஏற்கெனவே காற்றிலுள்ள நீராவியுடன் இணைந்து பெரும் மேகக் கூட்டமாகிறது. விண்ணிலே மிதந்து சென்று, அடுத்தடுத்து காடுகளில் மழை பெய்விக்கின்றது’’னு எனியஸ் சலாதி ரொம்ப கஷ்டப்பட்டு இந்த உண்மைய கண்டுப்புடிச்சு சொல்லியிருக்காரு.

ஆனா, இதே விஷயத்தை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னயே மழை பெய்யுறதுக்குக் காடுங்கதாண்டா, முக்கியம்னு வள்ளுவர் தாத்தா சொல்லி வைச்சிருக்காரு.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.’

அதாவது, மணி நீர்னா, மணி மாதிரி நிறத்தை உடைய நீர். அணிநிழற் காடுனா, குளிர்ச்சியான நிழல் உள்ள காடு. இதைச் சோலைக்காடுனும் சொல்லலாம். ஒரு நாட்டுக்குப் படை வீரர்கள் மட்டுமல்ல, நீரும், மண்ணும், மலையும், இந்த மூணுக்கும் அவசியமான காடும் கட்டாயம்! காடுங்க... வெறும் மரங்கள் மட்டுமல்ல, மழையை உருவாக்குகிற அமுதசுரபிங்க. சுருக்கமா சொல்லணும்னா, காடுங்க செல்போன் பேலன்ஸ் மாதிரி. பேலன்ஸ் தீர்ந்து போயிடுச்சுன்னா, பூமியில எந்த வேலையும் நடக்காது, அதனால, காடுங்க பேலன்ஸ் தீர்ந்து போகாம பார்த்துக்குவோம்.