Published:Updated:

‘சோழமண்டல ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’

நேரடி விற்பனையில் நெகிழும் விவசாயிகள்!

டந்த எட்டு ஆண்டுகாலமாக தமிழக விவசாயிகளுக்குப் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது ‘பசுமை விகடன்’. அந்தப் பயிற்சிகளில் கலந்து கொண்டு பயனடைந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கானோர். அப்படி ஒரு பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, ‘சோழமண்டல இயற்கை வேளாண் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனம்’ என்ற பெயரில் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.      

‘சோழமண்டல ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’

இதன் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான தேனாம்படுகை பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘2008-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூர்ல பசுமை விகடன் நடத்திய, நம்மாழ்வாரின் ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சி முகாம்ல கலந்துக்கிட்ட விவசாயிகள்ல பெரும்பாலானவர்கள், அடிக்கடி சந்திச்சுப் பேசுவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதே வருஷம் ஏப்ரல் 26-ம் தேதி கும்பகோணம் பக்கத்துல இருக்கிற தாராசுரம் ஐராதீஸ்வரர் ஆலயத்தில் நாங்க எல்லாரும் ஒண்ணா கூடி, சோழமண்டல இயற்கை வேளாண் விவசாயிகள் கூட்டமைப்பைத் தொடங்குனோம். தொடர்ச்சியா கூட்டங்கள் நடத்தினோம்.

‘பசுமை விகடன்’ மூலமா இயற்கை விவசாய நண்பர்கள் பலர், புதுசு புதுசா தொடர்ச்சியா கிடைச்சிக்கிட்டே இருந்தாங்க. அதோட அடுத்த கட்ட வளர்ச்சிதான், ‘சோழமண்டல ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’.

இயற்கை விவசாயிகள் ஒருத்தருக்கு ஒருத்தர் எந்த ஒரு தொடர்பும் இல்லாம பிரிஞ்சு கிடந்ததால வாழ்க்கையில வெற்றி பெற முடியலை. கூட்டு நடவடிக்கைகள் இருந்தாதான் நிலையான, நீடித்த, உத்தரவாதமான பலனையும் வெற்றியையும் அடைய முடியும்ங்கிறத புரிஞ்சு ஒண்ணு சேர்ந்திருக்கோம். எங்க நிறுவனத்தோட இயக்குநர்கள், பங்குதாரர்கள், குழு உறுப்பினர்கள் எல்லாருமே... இயற்கை விவசாயிகள்தான். 

‘பாரம்பர்ய ரக அரிசி கிடைக்கும்!’

கூட்டுமுயற்சி என்பது வெறும் சங்கம், கூட்டமைப்பு நிலையிலேயே நின்னுடக்கூடாது... சட்டப்பூர்வமான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்ட கம்பெனியா உருவாக்கப்பட்டாதான், மத்த விவசாயிகளுக்கும் நம்பிக்கை உருவாகும்; பரவலான தொடர்பு உருவாகும். விற்பனைக்கான வாய்ப்புங்க பெரிய அளவுல விரிவடையும்; தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்ட முடியும். எந்த ஒரு தனிநபரும் ஆதிக்கம் செலுத்தாம இருக்கவும், தவறுங்க நடக்காம இருக்கவும், இது

‘சோழமண்டல ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’

மாதிரியான புரொடியூசர் கம்பெனி அவசியம். இதுக்கான பலன் கண்கூடாகத் தெரிய தொடங்கியிருக்கு.

மாப்பிள்ளைச் சம்பா, வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஏ.டீ.டி-43, ஏ.டீ.டி-49, சி.ஆர்.-1009, ஐ.ஆர்.-20, சீரகச்சம்பா, தூயமல்லி... நெல் வகைகளைக் கொள்முதல் செய்து, நாங்களே அரைச்சு, எங்க கம்பெனி பேர்ல பேக்கிங் பண்ணி, கடந்த ஒரு வருஷத்துல 40 டன் அரிசிக்கு மேல விற்பனை செஞ்சிருக்கோம். இப்ப எங்கக்கிட்ட 100-க்கும் மேல நிரந்தரமான நேரடி வாடிக்கையாளர்கள் இருக்காங்க. இதைத் தவிர, 50-க்கும் மேற்பட்ட இயற்கை விளைப்பொருட்கள் அங்காடிகள் எங்களோட தொடர்புல இருக்கு. இந்திய அங்கக விவசாயிகள் கூட்டமைப்புல, எங்களோட புரொடியூசர் கம்பெனி அங்கம் வகிக்கிறதுனால, வெளிமாநிலங்கள்லயும் தொடர்புகள் கிடைச்சிருக்கு.

மூன்றரை லட்சம் ரூபாய் முதலீடு!

கடந்த வருசம் அக்டோபர் 13-ம் தேதி கும்பகோணத்துல இந்த கம்பெனியைத் தொடங்குனோம். முதல்கட்டமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் இதைப் பதிவு செஞ்சோம். இதுல பதிவு செய்யணும்னா, ஆரம்ப கட்ட பங்கு மூலதனமா ஒரு லட்சம் ரூபாய் நிதி இருக்கணும். குறைஞ்சபட்சம் 20 பேர் இதுல பங்குதாரர்களா இருக்கணும். எங்க கம்பெனியில 34 பேர் பங்குதாரர்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப, 1,000, 2000, 10,000னு கொடுத்திருக்காங்க. மொத்தம் மூணரை லட்சம் ரூபாய் பங்கு மூலதனமாக முதலீடு செய்யப்பட்டிருக்கு.

எதிர்காலத்துல இந்த கம்பெனி பெரிய அளவுல வளர்ச்சி அடையறப்போ, பங்குதாரர்களுக்கு லாப பகிர்வு கிடைக்கும். ஆனா, பங்குதாரர்களோட முதன்மையான எதிர்பார்ப்பு இது கிடையாது. தங்களோட விளைபொருட்களுக்கு நிலையான சந்தையும், நியாயமான விலையும் கிடைக்கணும். இதுல பங்குதாரர்களாக இல்லாத மற்ற இயற்கை விவசாயிகளும் கூட, இந்த புரொடியூசர் கம்பெனி மூலமா பலன் அடையலாம். இயற்கை விவசாயம் பரவலா வளர்ச்சி அடைஞ்சு, பெரும்பாலான மக்களுக்கு நஞ்சு இல்லாத உணவு கிடைக்கணும்ங்கிறதுதான் எங்க குறிக்கோள்.

‘உத்தரவாதத் திட்டம்’

இயற்கை விவசாயத்து மேல ஆழ்ந்த நேசிப்பும், ஆர்வமும் உள்ள இயற்கை விவசாயிகளை அடையாளம் கண்டு 9 குழுக்களை அமைச்சிருக்கோம். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள்ல, இந்த இயற்கை விவசாயக் குழுக்கள் இயங்கிக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு குழுவுலயும் 5 லிருந்து 20 பேர் வரை உறுப்பினர்களாக இருக்காங்க. அனைத்துக் குழுக்களையும் சேர்த்து மொத்தம் 101 உறுப்பினர்கள் இருக்கிறாங்க.

ஒரு குழுவுல உள்ள விவசாயியோட பயிரை, இன்னொரு குழு விவசாயிங்க ஆய்வு செய்வாங்க. தங்களுக்குத் தெரிஞ்ச தொழில்நுட்பங்களையும் பகிர்ந்துக்குவாங்க. உலகம் முழுவதும் உள்ள அங்கக விளைப்பொருட்களின் தர நிர்ணயத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கிற இஃபாம் (IFOAM - International fedaration for organic agricaltural movement) அமைப்பில அங்கம் வகிச்சு, முழுமையான இயற்கை விவசாயிகளுக்கு ஆர்கானிக் சர்டிபிகேட் கொடுக்குறதுக்கானஅங்கீகாரம் பெற்றிருக்கிற கீஸ்டோன் (Keystone) மற்றும் டி.இ.டி.இ (TEDE) நிறுவனங்களிடமிருந்து எங்க குழுவுல இருக்கிறவங்களுக்கு ஆர்கானிக் சர்டிபிகேட் வாங்கித் தர்றோம். இதுக்கு ‘பங்கேற்போர் உத்தரவாதத் திட்டம்’னு பேரு.

இயற்கை விவசாயிகள் இணையலாம்!

எங்க கம்பெனியில பங்குதாரர்களாவும், குழு உறுப்பினர்களாவும் இருக்குற விவசாயிகள் அவங்களுடைய நெல்லை அறுவடை செஞ்சு, காய வெச்சி சரியான பதத்துல தயார் செஞ்சு, நிர்வாகிங்களுக்குத் தகவல் தெரிவிப்பாங்க. நாங்க அவருடைய ஊருக்குச் போய், அந்தப் பகுதியில் உள்ள தரமான அரவை ஆலையைத் தேர்வு செஞ்சு நெல்லை அரைப்போம். அங்கேயே பேக்கிங் செய்து, வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை விளைப்பொருள் அங்காடிங்களுக்கு அனுப்பி வைப்போம். தூயமல்லி, வாசனைத் தூயமல்லி, பாசுமதி... மாதிரியான உயர் பாரம்பர்ய நெல் வகைகளை கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரை கொள்முதல் விலையா கொடுக்கிறோம். மற்ற பாரம்பர்ய ரகங்களுக்கு கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் விலை கொடுக்கிறோம். நவீன ரக நெல்லுக்கு கிலோவுக்கு 17 முதல் 20 ரூபாய் கொள்முதல் விலையா விவசாயிங்களுக்குத் தர்றோம்.

உழைப்பின் முழு பலன் எங்களுக்கே!

நெல்லுக்கான விலை, போக்குவரத்துச் செலவு, அரவைக் கூலி, பேக்கிங் செலவு இவற்றோடு கூடுதலா 20 சதவிகிதம் விலை வைத்து அரிசியை விற்பனை செய்யுறோம். உதாரணமா, ஒரு மூட்டை (60 கிலோ) நெல்லின் கொள்முதல் விலை (20 ரூபாய்x60 கிலோ) 1,200 ரூபாய், உள்ளூர் அளவிலான போக்குவரத்துச் செலவு, அரவைக் கூலி, பேக்கிங் உள்ளிட்ட செலவுகள் 200 ரூபாய்.

60 கிலோ நெல் அரைக்கும் போது, 35 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 50 ரூபாய் வீதம் மொத்தம் 1,750 ரூபாய் விலை கிடைக்கும். இதுல செலவு 1,400 ரூபாய் போக, 350 ரூபாய் கம்பெனிக்கு லாபமாக கிடைக்கும்.

எங்க புரொடியூசர் கம்பெனியில் குழு உறுப்பினர்களாகப்  பதிவு செய்ய பங்குத்தொகை எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. இயற்கை விவசாயத்தை தீவிரமா கடைபிடிக்கக்கூடிய விவசாயிகளா இருந்தா போதும், இயற்கை விவசாயிகள் உடனே எங்களை அணுகலாம்’’ என்ற பாஸ்கரன்,

‘‘விவசாயிகள், நேரடி வியாபாரிகளாகவும் மாறினால்தான் உழைப்பின் முழுமையான பலனை அடைய முடியும்னு ‘பசுமை விகடன்’ தொடர்ந்து கொடுத்த ஊக்கம்தான் எங்க வெற்றிக்கு அடிப்படை. இயற்கை விவசாயிங்களான எங்களை இணைச்ச பசுமை விகடனுக்கு நன்றி!’’ என்றார் நெகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
‘தேனாம்படுகை’ பாஸ்கரன்,
செல்போன்: 94428-71049

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: கே.குணசீலன்